சந்திரனில் மறைந்திருக்கும் மலைகளோ! – ருவென்ஜோரி (RUWENZORI) (Post No.15,089)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,089

Date uploaded in London –   15 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

18-7-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை!

 உலகின் அதிசய இடங்கள்!

சந்திரனில் மறைந்திருக்கும் மலைகளோ! – ருவென்ஜோரி (RUWENZORI)

ச. நாகராஜன் 

1888ம் ஆண்டு.

சந்திரனில் மறைந்திருக்கும் மலைகளைக் கேள்விப்பட்டிருந்தார் அந்த புதுப் பகுதிகளைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் உள்ள அறிஞரான ஹென்றி ஸ்டான்லி!

கிரேக்கத்தில் வாழ்ந்து வந்த பிரபல கணித மேதையான தாலமி சந்திர மலைகளைப் பற்றிய கதைகளை நிறையவே கூறி இருந்தார். அந்த மலைகளிலிருந்து தான் நைல் நதியே தோன்றியது என்பது அவரது வியாக்கியானம். இதையெல்லாம் படித்து மகிழ்ந்திருந்த ஸ்டான்லி இருண்ட கண்டமான ஆப்பிரிக்காவில் ஆல்பெர்ட் ஏரிக் கரையோரம் நடந்து கொண்டிருந்தார்.

தூரத்தில் ஆகாயத்தில் ஒரே மேக மூட்டம். திடீரென்று அந்த மேகங்கள் சற்று கலைந்து விலகவே அவருக்கு பிரமிக்க வைக்கும் மலைச் சிகரங்கள் கண்ணுக்குத் தெரிந்தன. பிரமித்துப் போனார் அவர். இதுவரை உலகினர் யாரும் அறியாத ருவென்ஜோரி (RUWENZORI)

 மலையைக் கண்டு மகிழ்ந்த அவர் உலகத்திற்கு இது பற்றி முதன் முதலாக அறிவித்தார்.

ஆப்பிரிக்காவின் பழங்குடியினரின் மொழியில் உள்ள ருவென்ஜோரி என்ற வார்த்தைக்கு ‘மழையை உருவாக்குபவர்’ என்று அர்த்தம். உண்மை தான், கொட்டு கொட்டென்று கொட்டிய மழையினால் அற்புதமான ஆப்பிரிக்க காடுகள் உருவாகியிருந்தன. 

ஹென்றியைத் தொடர்ந்து பின்னால் 1906ம் ஆண்டு இத்தாலியில் அப்ருஜ்ஜியின் டியூக்காக இருந்த ல்யூகி அமடியோ டி சவோயா தைரியமாகத் தன் குழுவினருடன் ருவென்ஜோரி மலையில் ஏறினார். அந்த மலைத்தொடரை வரைபடமாக முதன் முதலாக வரைந்தார். 

ஜைரே- உகாண்டா எல்லையில் இருந்த இந்த மலைத்தொடரில் 16000 அடி உயரமுள்ள ஒன்பது சிகரங்கள் இருந்தன. அதிக உயரமுள்ள மலை 16736 அடி கொண்டதாகும். வருடத்திற்கு முன்னூறு நாட்கள் இந்த மலைச்சிகரங்கள் யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்திருக்கும்! 

மீதி நாட்களில் அதிர்ஷ்டம் உள்ளவர்கள் இதைப் பார்ப்பார்கள்.

ருவென்ஜோரி மலைத்தொடர் 75 மைல் நீளமும் 30 மைல் அகலமும் உள்ளது. 

இது எரிமலையினால் உண்டான மலை அல்ல. இருபது லட்சம் வருடங்களுக்கு முன்னால் பாறையினால் உருவான மலையாகும்.

 ஆறரை அடி உயரமுள்ள கோரைப்புல்களின் வழியே யானைகள் வழியை உருவாக்கிச் செல்லும். 

பாலூட்டி விலங்குகளின் ஒன்றான ஹைரக்ஸ் (HYRAX) என்ற விலங்கை இங்கு காணலாம். பார்ப்பதற்கு முயல் போல இருக்கும் இது பன்றியைப் போல குரல் கொடுக்கும். 7000 அடி உயரத்தில் ருவென்ஜோரியின் ஆதி மிருகமான இது காணப்படுகிறது.

ஐந்து அங்குல நீளமே உள்ள மூன்று கொம்புள்ள பச்சோந்தி இங்கு மட்டுமே காணப்படுகிறது.

தாவர வகைகளில் அரிதான லொபிலியா (LOBELIA) 20 அடி உயரம் வரை வளர்ந்து பார்ப்பவரை மலைக்க வைக்கும்.

மழையினால் பெருகும் நீரானது காங்கோ நதியை வெள்ளமாக ஆக்கி நைல் நதிக்கும் நீரைக் கொண்டு சேர்க்கிறது.

 ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் இயற்கை ஆர்வலர் ஒருவர் ஏழு கிலோ எடையுள்ள லொபிலியாவை வெட்டவே அதைப் பார்த்த ஆதிவாசிகள் அதைத் தொடக்கூட மறுத்து விட்டனர். அது முடுலும்பு (MUDULUMBU) என்று கூறிய அவர்கள் அதைத் தொட்டால் மரணம் நிச்சயம் என்றனர்.

ருவென்ஜோரி மலைத் தொடரில் உள்ள ஒரு 16042 அடி உயரமுள்ள ஒரு சிகரமானது அதை 19ம் நூற்றாண்டில் ஆய்வு செய்த ஆங்கிலேயரான ஜான் ஹானிங் ஸ்பெக் (JOHN HANNING SPEKE) பெயரால் மவுண்ட் ஸ்பெக் என்று அழைக்கப்படுகிறது. 

எப்போதும் மேகத்தால் மறைக்கப்பட்டு மிக அரிதாகவே காணப்படும் ருவென்ஜோரி மலைத் தொடர் உலகில் உள்ள அதிசய மலைகளில் ஒன்றாகும்!

அதிர்ஷ்டம் உள்ளவர்கள் இதை இன்றும் பார்க்கிறார்கள் அது மேகமூட்டத்திலிருந்து வெளியே வந்து தோற்றமளிக்கும் போது!

***

Leave a comment

Leave a comment