
மைக்கேல் (இடது புறம் உள்ளவர்) ரிஷிகேசத்தில் சிரார்த்தம் செய்கிறார்.
Written by S Nagarajan
Post No. 15,098
Date uploaded in London – – 18 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
5-10-25 தினமணி கதிர் இதழில் வெளியான கட்டுரை!
ஹாலிவுட்டில் ஹிந்து வாழ்க்கைமுறை!
ச. நாகராஜன்
இந்தியாவிற்கு வருகை புரிந்த பிரபல ஆங்கில எழுத்தாளரான சாமர்செட் மாம் தனது பாயின்ட்ஸ் ஆஃப் வியூ என்ற புத்தகத்தில், “ஹிந்து மதம் ஒரு மதம் மட்டும் அல்ல, அது ஒரு தத்துவமும் கூட, மதம் மற்றும் தத்துவம் மட்டுமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை” என்று எழுதி வியந்தார்.
இந்த வாழ்க்கைமுறையை வியந்து போற்றியவர்களுள் மேலை நாட்டு பிரபலங்கள் நூற்றுக் கணக்கானவர்கள் உள்ளனர். விஞ்ஞானிகள், ஹாலிவுட் நடிகர்கள், நடிகைகள், இசை மேதைகள், அரசியல் மேதைகள், அறிஞர்கள் என்று அனைத்து பிரபலங்களும் இதில் அடக்கம்.
ஹிந்து வாழ்க்கை முறையில் ஈர்க்கப்பட்ட இரு ஹாலிவுட் பிரபலங்களைப் பார்ப்போமா?
ஜூலியா ராபர்ட்ஸ்
ஜூலியா ராபர்ட்ஸ் பிரபலமான அமெரிக்க நடிகை. இவரது தாய் ஒரு ரோமன் கத்தோலிக்கர், (பிறப்பு 28-10-1967) இளம் வயதிலிருந்தே ஜூலியாவிற்கு இந்து மதத்தின் மீது ஒரு ஈர்ப்பு உண்டானது, அசைவ உணவை விட்டு விட்டு சுத்த சைவ உணவை மட்டுமே உட்கொள்ள ஆரம்பித்தார், யோகாவில் மனம் ஈடுபட அதில் ஈடுபட்டார். தியானத்தை மேற்கொண்டார். இயற்கையை நேசித்து அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற இந்து மத உணர்வு அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். அதன் பெயர் என்ன தெரியுமா? ரெட் ஓம் பிலிம்ஸ் (‘Red OM Films’)
ஆஸ்கார் அவார்ட் பெற்ற இவர் நடித்த ஈட் ப்ரே லவ் (Eat Prey Love) என்ற படம் உலகினரின் கவனத்தை ஈர்த்த ஒரு படம். எல்லாமே பெற்று விட்டதாக நினைக்கும் பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு அதைப் பிடிக்க ஏங்கும் அவல நிலையை இந்தப் படம் சித்தரிக்கிறது.
படத்தின் கதாநாயகி எலிஸபத் ஜில்பர்ட் (ஜூலியா ராபர்ட்ஸ்) இந்தியாவில் பிரார்த்தனை புரிகிறாள், இந்தோனேஷியாவில் பாலித் தீவில் அன்பின் பெருமையை உணர்கிறாள். படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
ஜூலியா ராபர்ட்ஸ் இந்து வாழ்க்கை முறையை நுணுகி ஆராய்ந்தவர். ஹிந்து மதத்தை அவர் தழுவினார். நீம் கரோலி பாபா என்பவரை இவர் தனது குரு என்று கூறினார். அனுமனின் உபாசனைக் கொண்டவர் இந்த குரு. ஹனுமான் படத்தைப் பார்த்தவுடன் அவருக்கு மனமாற்றம் வந்ததாம். தீபாவளியை உலக மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என்ற அவரது கருத்து உலகெங்கும் பரவலாகப் பேசப்பட்டது. பிரபல நாளிதழ்கள் வெளியிட்ட செய்தியின் படி அவர் ஸ்வாமி தரம் தேவ் என்பவரை அவர் சந்தித்த போது அவர் ஜூலியா ராபர்ட்ஸின் குழந்தைகளுக்கு ஹிந்துப் பெயர்களைச் சூட்டினார். ஹேஸல் மற்றும் பின்னயஸ் என்ற இருவருக்கும் லக்ஷ்மி மற்றும் கணேஷ் என்று பெயர் சூட்டப்பட்டது. ஹென்றிக்கு கிருஷ்ண பலராம் என்று பெயரிடப்பட்டது.
சில்வஸ்டர் ஸ்டல்லோன் (SYLVESTER STALLONE)
சில்வஸ்டர் ஸ்டல்லோன் உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் இத்தாலியப் பின்னணியைக் கொண்டவர். அவரது தாயார் யூத வம்ச பாரம்பரியத்தைக் கொண்டவர். தந்தை ஒரு கத்தோலிக்கர்.
2012ம் ஆண்டு முப்பத்தாறே வயதான அவரது அருமை மகன் சேஜ் திடீரென்று மரணமடையவே அவர் சொல்லொணாத் துக்கம் கொண்டார். சேஜ் போதைப் பொருளை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டதால் இந்த துயரமான முடிவு நேர்ந்தது. இறந்த மகனை அடிக்கடி பார்ப்பதாக ஸ்டல்லோன் கூறினார். ஹிந்து தர்மத்தைப் பற்றியும் புனர் ஜென்மத்தைப் பற்றியும் அறிய அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. ரிஷிகேசத்தில் உள்ள வேத பண்டிதருடன் அவர் தொடர்பு கொண்டார்.
2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹரித்வாரில் அவர் தனது மகனுக்கு கங்கா நதி தீரத்தில் உரிய முறைப்படி சிரார்த்தம் செய்ய முடிவு செய்தார். பத்திரிகையாளர் கூட்டத்திற்கு பயந்த ஸ்டல்லோன் இந்த சிரார்த்த காரியத்தை ரகசியமாகவே செய்தார்.
இதற்காக தனது சகோதரரான மைக்கேல் அவரது மனைவி மற்றும் இரண்டு பேர்களை அவர் ஹரித்வாருக்கு அனுப்பினார். விபத்தினால் துர்மரணம் நேரிட்டவர்களுக்கு உரிய சாந்தியை அவர்கள் செய்தனர். இதைச் செய்த பிறகு ஸ்டல்லோன் மனதில் பெரும் நிம்மதி ஏற்பட்டது.
இதற்கு அவருக்கு உதவி செய்தவர் மிஸ்ராபுரி என்ற ஒரு ஜோதிடர்.
இந்த சிரார்த்தம் முடிந்த பிறகு மைக்கேல் 2012ல் இறந்த 48 வயதான தனது சகோதரி ரோனி ஆன் -க்கும் சிரார்த்தம் செய்தார்.
இப்படி இன்னும் பல பிரபலமான ஹாலிவுட் நடிகர்களும் நடிகையரும் இந்து மத வாழ்க்கை முறை மீது அளவிலா நம்பிக்கை கொண்டு அதைப் பின்பற்றி வருகின்றனர்.
இன்னும் சிலரைப் பற்றி அறிய அடுத்த கட்டுரையில் சந்திப்போம்.
***




–subham–