WRITTEN BY Brhannayaki Sathyanarayanan
Post No. 15,105
Date uploaded in London – 20 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
19-10-2025 அன்று ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை!
ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.
ஆலயம் அறிவோம்!
வழங்குவது ப்ரஹன்நாயகி சத்யநாராயணன்.
அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
மூன்றெழுத்ததனை மூன்றெழுத்து அதனால்
மூன்று எழுத்தாக்கி,
மூன்றெழுத்தை ஏன்று கொண்டிருப்பார்க்கு இரக்க நன்குடைய
எம் புருடோத்தமன் இருக்கை
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி
மூன்றினில் மூன்று உருவானான்
கான்தடம் பொழில் சூழ் கங்கையின் கரை மேல்
கண்டமென்னும் கடி நகரே
பெரியாழ்வார் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது உத்தராகண்ட் மாநிலத்தில் டெக்ரி கார்வால் மாவட்டத்தில் அமைந்துள்ள தேவப்ரயாகை என்னும் திருத்தலமாகும் ரிஷிகேசத்திலிருந்து 70 கிலோமீட்டர் தூரத்தில் இமயமலையில் 2723 அடி உயரத்தில் இது அமைந்துள்ளது.
108 வைணவ திவ்யதேச தலங்களில் ஒன்றாக அமையும் இது பல புராணச் சிறப்புகளைக் கொண்டதாகும்.
இமயமலையில் உற்பத்தியாகும் அலக்நந்தா நதியும் , பாகீரதி நதியும் இந்த தலத்தில் ஒன்றாகக் கூடி கங்கா நதி என்ற பெயரை அடைகிறது.
இந்தத் தலம் பஞ்ச பிரயாகைகளில் ஒன்றாகும்.
இங்குள்ள ரகுநாதர் கோவில் ஆதி சங்கரரால் அமைக்கப்பட்ட ஒன்று என்றும் கார்வால் அரசினரால் பின்னர் விரிவாக்கப்பட்டது என்றும் வரலாறு கூறுகிறது.
மூலவர் : நீலமேகப் பெருமாள். (புருஷோத்தமன்) கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்.
தாயார் : புண்டரீகவல்லி
தீர்த்தம் : மங்கள தீர்த்தம், கங்கை நதி ப்ரயாகை
விமானம் : மங்கள விமானம்
காட்சி கண்டவர்கள் : பாரத்வாஜ முனிவர், பிரம்மா உள்ளிட்ட பலர்
கங்கையும் யமுனா நதியும் கூடுகின்ற இடமே ப்ரயாகை ஆகும். மிக ரகசியமான தீர்த்தம் இது. விதிப்படி இங்கு வந்து கர்மாக்களைச் செய்தால் முற்பிறவியில் எப்படி எங்கு இருந்தோம் என்ற ஞானத்தை இந்தத் தலம் நமக்குத் தரும் என்று கூர்ம புராணம் கூறுகிறது.
இந்த இடத்தில் விதிப்படி தூய்மையான மனதுடன் யாகம் செய்பவர்கள் மோக்ஷம் அடைவர் என்றும் இங்கு மரணம் அடைபவர்கள் மோக்ஷத்தை அடைகின்றனர் என்றும் ரிக் வேதம் கூறுகிறது.
தேவேந்திரன் ப்ரயாகையைப் பாதுகாக்கிறான். இங்குள்ள ஆலமரம் பிரளய காலத்திலும் அழியாது இருக்கும். இதன் இலையில் தான் பெருமாள் குழந்தையாக பள்ளி கொள்வார் என்று மாத்ஸ்ய புராணம் விவரிக்கிறது.
பெரியாழ்வார் திருமொழியில் வழங்கியுள்ள மங்களாசாஸனப் பாடலின் அர்த்தம் அற்புதமானது.
விஷ்ணு என்ற மூன்று எழுத்தினை, லக்ஷ்மி என்ற மூன்று எழுத்து அவர்கள் நித்ய வாசம் செய்யும் பரம் என்ற மூன்று எழுத்தைக் குறிக்கும்.
அதை அடைவதே தமக்கு உபாயம் என்ற மூன்று எழுத்தினால் அதுவே ஜீவாத்மாவின் கடன் என்று எண்ணி, முக்தி என்னும் மூன்று எழுத்தை ஏற்றுக் கொண்டிருப்பவர்களிடம் இரக்கம் கொண்டுள்ள புருஷோத்தமன்,
வாமன அவதாரம் கொண்டு ஓரடியால் இவ்வுலகை அளத்து, பின்னர் இன்னும் ஒரு அடியால் விண்ணை அளந்து,, ஓரடியால் பாதாளம் நிமிர மூன்று அடியாக நிமிர்த்தி, இந்த மூன்று உலகிலும் தோன்றி, பரம வியூக, விபவம் ஆகிய மூன்றினில் நின்று, அமர்ந்து, கிடந்து என்று மூன்று உருவாக ஆகியுள்ளான்.
அவன் அழகான பொழில் சூழ்ந்த கங்கைக் கரை மேல் அமைந்துள்ள கண்டமென்னும் கடிநகரில் எழுந்தருளியுள்ளான்.
இதுவே இந்தப் பாடலின் அர்த்தம்.
திருக்கண்டம் கடிநகர் என்ற இந்த நகரில் பிரம்மா சிறந்த யாகத்தைத் துவங்கியதால் இது தேவப்ரயாகை என்ற பெயரைப் பெற்றது.
இங்கு கிழக்கே உள்ள பிரதிஷ்டானம் என்ற இடத்தில் தீர்த்தக் கிணறு அமைந்துள்ளது. வடக்கே வாசுகி இருக்க, ,மேற்கே காம்ப்ளாஸ் என்னும் இடத்தில் சர்ப்பங்கள் உள்ளன. தெற்கு திசையில் பஹூ மூலம் என்ற பகுதி உள்ளது.
ராவணனை வதம் செய்த தோஷம் நீங்க இங்கு ராமர் தவம் செய்ததாக கூறப்படுகிறது.
பாண்டவர்கள் தங்களது சகோதரர்களான கௌரவர்களை யுத்தத்தில் கொன்றதனால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க இங்கு நீராடுமாறு மார்க்கண்டேயர் கூற அவர்களும் அவ்விதமே இங்கு வந்து நீராடி பாவத்தைப் போக்கிக் கொண்டனர்.
இங்கு யாகம் செய்ததால் பிரம்மாவின் படைக்கும் சக்தி அதிகமானது.
பரத்வாஜ மஹரிஷி இங்கு யாகம் செய்ததால் தான் சப்த ரிஷிகளுள் ஒருவராக ஆனார்.
சுவேதகேது என்னும் மன்னன் தானத்தில் சிறந்தவனாக இருந்தாலும் கூட அன்னதானம் மட்டும் செய்யவில்லை. அவன் இறந்த பின் மேலுலகம் சென்ற போது அவனை பசி வாட்ட அவனிடம் அகத்தியர், “ப்ரயாகையில் அன்ன தானம் செய்தால் உன் பசி நீங்கும்” என்று கூறினார். சுவேதகேது தன் புண்ணீய பலன்களைத் திரட்டி கணையாழியாக அகத்தியரிடம் தந்தான். அவர் தனது சீடர்களிடம் அதை விற்று அன்னதானம் செய்யப் பணித்தார். அவர்களும் அப்படியே செய்தனர். உடனே சுவேதகேதுவின் பசி நீங்கியது. அவன் மோக்ஷம் பெற்றான்.
இந்தத் தலத்தில் ஆஞ்சநேயர், கால பைரவர். மகாதேவர், பத்ரிநாதர் ஆகியோரின் சந்நிதிகளும் உள்ளன.
பிரம்மா, பரத்வாஜர், தசரதன் ஆகியோருடன் ஶ்ரீ ராமர் இங்கு தவம் இயற்றியுள்ளார்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நீலமேகப் பெருமாளும் புண்டரீகவல்லித் தாயாரும்
அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
**