Post No. 15,122
Date uploaded in London – – 27 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஞானமயம் நிகழ்ச்சியில் 26-10-2025 அன்று ஒளிபரப்பான உரை.
ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.
அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.
ஆலயம் அறிவோம்! வழங்குவது சந்தானம் நாகராஜன்
எதிரி லாத பத்தி …… தனைமேவி
இனிய தாள்நி னைப்பை …… யிருபோதும்
இதய வாரி திக்கு …… ளுறவாகி
எனது ளேசி றக்க …… அருள்வாயே
கதிர காம வெற்பி …… லுறைவோனே
கனக மேரு வொத்த …… புயவீரா
மதுர வாணி யுற்ற …… கழலோனே
வழுதி கூனி மிர்த்த …… பெருமாளே.
அருணகிரிநாதர் திருவடி போற்றி!
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது இலங்கையில் ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முருகன் தலமான கதிர்காமம் ஆகும்.
இத்தலம் கொழும்பு நகரிலிருந்து 232 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
இது மிகவும் புகழ் பெற்ற பாத யாத்திரை தலமாகும்.
ஏமகூடம், பூலோக கந்தபுரி, வரபுரி, பிரமசித்தி, கதிரை எனப் பல்வேறு பெயர்களால் இத்தலம் அழைக்கப்படுகிறது.
அதே போல இங்கு எழுந்தருளியிருக்கும் முருகனுக்கும் கதிர்காமன், சிங்காரவேலன், கதிரை நாயகன், கதிரை வேலன், மாணிக்க ஸ்வாமி உள்ளிட்ட பல பெயர்கள் உண்டு.
இங்கு அழகிய மாணிக்க கங்கை நதி ஓடுகிறது.
இத்தலத்தைப் பற்றிய பரம்பரை வரலாறு ஒன்று உண்டு.
சூரபத்மனை வதம் செய்யும் நோக்கில், முருகப் பெருமான் மாணிக்க கங்கை அருகே பாசறை அமைத்து வீற்றிருந்தார் என்கிறது புராண வரலாறு.
இத்தலத்திற்கு ஏற்பட்ட பெயருக்கான காரணமும் ஒன்று உண்டு.
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறியாக- அதாவது கதிராக -சரவணப் பொய்கையில் முருகப் பெருமான அழகான முகத்தில் -அதாவது காமன் – தோன்றியதால் இந்தத் தலத்திற்கு கதிர்காமம் என்ற பெயரும் முருகனுக்கும் கதிர்காமன் என்ற பெயரும் அமைந்தது.
ஏழுமலைகளில் ஒன்றின் மீது கதிர்காமக் கந்தன் காட்சி அளிக்கிறான். அவன் மாணிக்க கங்கையின் இடது கரையோரத்தில் வள்ளியை மணம் புரிந்தான். இதன் ஞாபகார்த்தமாக இங்கு வள்ளி பிராட்டியின் கோவில் கட்டப்பட்டது.
சுமார் முக்கால் ஏக்கர் பரப்பில் உள்ள கோவிலின் சுற்றுமதில் ஆறு அடி உயரத்தில் உள்ளது. கோவில் சதுர வடிவில் உள்ளது. கோவில் வீதியில் சிறிய கோவில்கள் உள்ளன. கணபதிக்கும், தெய்வானைக்கும் தனிக் கோவில்கள் உள்ளன.
பிள்ளையாருக்கு அருகில் உள்ள அரசமரம் விஷ்ணுவுக்கும் புத்த பெருமானுக்கும் புனிதமானது.
கோவிலுக்கு இரு வாயில்கள் உள்ளன. தெற்கே அமைந்துள்ள பிரதான வாயில் வில் போன்று வளைந்த அலங்கார முகப்பைக் கொண்டது. பக்கத்தில் சிறிய கதவு ஒன்று உண்டு.
கோவிலின் எதிரே வள்ளியம்மையின் கோவில் அமைந்துள்ளது.
கோவிலின் கர்பக்ருஹ அறை விசேஷமான ஒன்று. இதற்குள் பக்தர்கள் செல்ல முடியாது. திரையால் இது மூடி மறைக்கப்பட்டுள்ளது. இதில் காற்றோ, வெளிச்சமோ உட்புக முடியாதபடி சாளரமோ துவாரங்களோ இல்லை. இந்த கர்பக்ருஹத்திற்கு மத்திய அறைக்கும் இடையே ஒரு சிறிய கதவு மட்டும் உண்டு. இங்கு அர்ச்சகர் மட்டும் உள்ளே செல்வார்.
பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை மத்திய அறை வரைக்கும் சென்று செலுத்தலாம்.
கதிர்காம விழாக்கள் மிகவும் சிறப்பானவை; பிரபலமானவை. வருடாந்திரப் பெருவிழாவின் போது தாமிரத்திலோ அல்லது தங்கத்திலோ அமைந்துள்ள மந்திர சக்தி வாய்ந்த யந்திரத்தை வெண்துகிலால் மூடிய பேழையை யானை சுமந்து ஊர்வலமாக வரும்.
இந்த விழா தீர்த்தத் திருவிழாவுடன் முடிவுறும். குறிப்பிட்ட நல்ல நாளனறு கந்தன் நீராடுவான். மாணிக்கை கங்கை ஆற்றில் பூஜையில் வைக்கப்பட்ட வாளினால் வட்டமிட்டுத் தண்ணீரை வெட்டுவான்.
இதே போல இங்கு ஆடி அமாவாசைத் திருவிழாவும் மிக முக்கியமான ஒன்றாக அமைகிறது. ஆடித் திருவிழா ஆடி அமாவாசையில் தொடங்கி பௌர்ணமி முடிய நடைபெறும். கார்த்திகை மாதத்தில் தீபத் திருநாளும் சிறப்பாக இங்கு கொண்டாடப்படும்.
முருகனின் ஆணையின் பேரில் அருணகிரிநாதர் அற்புதமான திருப்புகழ் பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றுள் நமக்கு இன்று பதிமூன்று பாடல்கள் கிடைத்துள்ளன.
இலங்கை-கதிர்காமத்தில் கோயில் கொண்டிருக்கும் வேலவன் மீது 30 பாடல்களில் பாடப்பெற்றுள்ளதே கதிர்காம மாலை ஆகும். இதில் முருகப்பெருமானது சிறப்புக்கள் பற்றியும் கோயிற் சிறப்புக்கள் பற்றியும் எடுத்துரைக்கப்பெற்றுள்ளன.
இலங்கையில் புத்த பிரான் விஜயம் செய்த 16 இடங்களில் சிறப்பான ஒரு இடமாக இது கருதப்படுவதால் புத்த மதத்தினருக்கும் இது சிறப்பான வழிபாட்டுத் தலமாக அமைகிறது.
இங்கு கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோக மாமன்னனின் மகளான சங்கமித்ரை புனிதமான இரு வெள்ளரசுக் கன்றுகளில் ஒன்றை அனுராதபுரத்தில் நட்டு விட்டு பிறகு இங்கு மற்றொரு கன்றை நட்டார்
2500 ஆண்டுகளுக்கும் மேலாக மிகப் பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் ஏராளமான மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர்.
மணிதரளம் வீசி யணியருவி சூழ மருவு கதிர்காமப் பெருமாள் காண்!
மணியையும் முத்தையும் வீசி அழகிய அருவி சூழ்ந்து விளங்கும் கதிர்காமத் தலத்துப் பெருமான் நீதான் என்று இப்படி அருணகிரிநாதர் போற்றிப் புகழ்வதால் பண்டைய காலத்தில் காட்டின் நடுவே அமைந்துள்ள இந்தக் கோவிலின் வனப்பையும் பெருமையையும் நன்கு அறிய முடிகிறது.
பக்தர்கள் தீமிதித்தல், காவடி எடுத்தல் உள்ளிட்ட பல்வகையாலும் தங்கள் பக்தியையும் சிரத்தையையும் காண்பித்து முருகனின் அருளை இத்தலத்தில் பெறுகின்றனர்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் கதிர்காம முருகன் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
**
28-20-2025 அன்று இத்தலத்தில் நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சி வைபவம் நான்கு மணி நேரம் சிறப்பு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் கண்டு களிக்கலாம்
.—subham—