Post No. 15,123
Date uploaded in London – 27 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்.
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து, லதா யோகேஷு வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் மாதம் 26-ம் தேதி 2025-ம் ஆண்டு
****
முதலில் கேரள மாநிலச் செய்திகள்

guruvayur temple
சபரிமலையில் ஜனாதிபதி முர்மு தரிசனம்: இருமுடி சுமந்து 18 படியேறி வழிபாடு
பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், இருமுடி சுமந்து சென்று ஜனாதிபதி திரவுபதி முர்மு சுவாமி தரிசனம் செய்தார்.சபரிமலை அய்யப்பன் கோவில், ஐப்பசி மாத பூஜையையொட்டி, கடந்த 17ல் திறக்கப்பட்டது. கடைசி நாளான நேற்று சுவாமி தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு சென்றார்.
கார் மூலம் பம்பை நதிக்கரையை அடைந்த ஜனாதிபதி முர்மு, பாரம்பரிய முறைப்படி நதியில் இறங்கி கால்களை மட்டும் நனைத்து வழிபாடு செய்தார்.
அய்யப்ப பக்தர்கள் போல, ஜனாதிபதி முர்முவும், கழுத்தில் மணி மாலை அணிந்து, கருப்பு ஆடை உடுத்தி, பம்பையில் இருமுடி கட்டிக் கொண்டு, கன்னிசாமியாக தன் முதல் சபரிமலை யாத்திரையை துவங்கினார்.
கன்னிமூல கணபதி கோவில் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி, குருசாமியாக இருந்து, இருமுடியை கட்டி, ஜனாதிபதி முர்முவை மலையேற அனுப்பி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, சிறப்பு வாகனம் மூலம் சன்னிதானத்தை அடைந்த ஜனாதிபதி முர்மு, இருமுடியை சுமந்தபடி பதினெட்டு படியேறி, கொடி மரம் அருகே வந்தார். அப்போது கேரள தேவசம் போர்டு அமைச்சர் வாசவன், திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு ஆகியோர் பூரண கும்ப மரியாதை அளித்து அவரை வரவேற்றனர்.பின், கொடிமரம் அருகே உள்ள வாசல் வழியாக சென்று சுவாமி அய்யப்பனை பக்தியுடன் வழிபட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனம் செய்தார்.பாதுகாவலர்களும் இருமுடி சுமந்து வந்து இருந்தனர். பின்னர் அவர்களது இருமுடிகள் பிரிக்கப்பட்டு, அதில் இருந்த நெய் தேங்காய்களை உடைத்து, சுவாமி அய்யப்பனுக்கு நெய்யபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மலையில் உள்ள மாளிகைபுறத்தம்மன், கொச்சு கடுத்த சுவாமி, மணி மண்டபம், நவக்கிரக கோவில்களிலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனம் செய்தார்.
ஜனாதிபதியின் வருகையையொட்டி, சபரிமலை முழுதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பக்தர்களுக்கு, இரு நாட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு இருமுடி சுமந்து சென்று வழிபாடு நடத்திய முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை முர்மு பெற்றார்.
*****
குருவாயூர் கோவில் தங்கம் மாயம்
குருவாயூர் கோவிலில் தங்கம், வெள்ளி பொருட்கள்… மாயம்!; 40 ஆண்டுகளாக கணக்கு பார்க்கவில்லை என குற்றச்சாட்டு
கேரள மாநிலம், சபரிமலையில் துவாரபாலகர் சிலையில் இருந்து, 4 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தால் ஏற்பட்ட சர்ச்சை அடங்குவதற்குள், பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலிலும் தங்கம், வெள்ளி, யானை தந்தம், குங்குமப்பூ உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் காணாமல் போயிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
சபரிமலையை திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வகித்து வருவது போல, குருவாயூர் கோவிலை குருவாயூர் தேவசம் போர்டு நிர்வகித்து வருகிறது.
தங்கம், வெள்ளி, தந்தம் மற்றும் குங்குமப்பூ உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் கோவிலின் கருவூலத்தில் இருந்து மாயமாகி இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கு தணிக்கை மூலம் சந்தேகம் எழுந்துள்ளது.
பக்தர்கள் காணிக்கை மூலம் கோவிலுக்கு வந்த விலை உயர்ந்த பொருட்களை நேரடியாக மதிப்பிடும் பணி கடந்த 40 ஆண்டுகளாக நடக்கவே இல்லை என, சமீபத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகம் இது குறித்து மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கோவிலுக்கு, 15 லட்சத்துக்கும் மேற்பட்ட காணிக்கைகளுக்கு முறைப்படி எந்த ரசீதும் எழுதி தரப்படவில்லை. குருவாயூர் கோவிலுக்கு சொந்தமாக நிறைய யானைகள் இருக்கும் நிலையில், அவற்றின் தந்தங்கள் குறித்து போதிய அளவுக்கு பதிவு செய்யவில்லை. யானை தந்தங்கள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதா என்பதற்கான சான்றுகளும் போதிய அளவுக்கு இல்லை.
குங்குமப்பூ போன்ற விலை உயர்ந்த பொருட்களுக்கும் இதே நிலைதான் நீடிக்கிறது. வெளிச்சந்தையில் ஒரு கிலோ குங்குமப்பூ ஒரு லட்சத்து 47,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதை, கிலோ கணக்கில் காணிக்கையாக பக்தர்கள் தினசரி செலுத்தி வருகின்றனர். இருந்தபோதிலும், குங்கும பூவுக்கான கணக்கு தெளிவாக இல்லை.
குருவாயூருக்கு வரும் பக்தர்கள் பாரம்பரியமாக குன்றிமணியையும் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். அப்படி பக்தர்கள் வாயிலாக வந்த குன்றிமணிகள், 17 மூட்டைகளில் கட்டி கோவிலின் மேற்கு கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த 2019 முதல் அந்த மூட்டைகள் மாயமாகியுள்ளன.
தினசரி பூஜைகளுக்காக பயன்படுத்தப்படும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் விபரங்களை ஆராய்ந்ததிலும், அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. பூஜைக்கு பின் ஒப்படைக்கப்பட்ட பல பொருட்களின் எடை கணிசமான அளவுக்கு குறைந்து இருக்கிறது. ஒரு வெள்ளி பானையின் எடை மட்டும், 10 மாதங்களில் 1.19 கிலோ குறைந்துள்ளது. மற்றொரு வெள்ளி விளக்கின் எடையும் சில நுாறு கிராம் அளவுக்கு குறைந்துள்ளது.
தங்க கீரிடத்திற்கு பதிலாக வெள்ளி ஆபரணம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. அதே போல், 2.65 கிலோ வெள்ளி பாத்திரத்திற்கு பதிலாக வெறும் 750 கிராம் எடை கொண்ட வெள்ளி பாத்திரம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் மாயமான வழக்கில், தேவஸ்தான முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபுவை எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்தனர்.


sabarimalai temple
*************
கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது: சுற்றறிக்கை அனுப்ப அறநிலைய துறைக்கு உத்தரவு
கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என, மாநிலம் முழுதும் உள்ள கோவில்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்’ என, அறநிலைய துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பழனி என்பவர் தாக்கல் செய்த மனு:சென்னை ராசப்பா தெருவில் கந்தகோட்டம் ஸ்ரீ முத்துகுமாரசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான, பெரும்பாலான சொத்துக்கள், பக்தர்களால் தானமாக வழங்கப்பட்டவை. பார்க் டவுன் நைனியப்பா நாயக்கன் தெரு, சவுகார்பேட்டை அன்ன பிள்ளை தெரு, பெரியமேடு கற்பூர முதலி தெரு போன்றவற்றில், இக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன. இங்குள்ள கட்டடங்களை இடித்து விட்டு, வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகள் கட்டும் பணியை, அறநிலைய துறை துவக்கி உள்ளது.
அதுவும் முத்துகுமார சாமி கோவிலின் நிதியை வைத்து, வணிக வளாகங்கள், குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. கோவில் நிதியில், வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என, உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதை அறிந்தும், கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டும் பணியை, அறநிலைய துறை அதிகாரிகள் துவக்கி உள்ளனர்.
கடந்த ஆகஸ்ட், 4ல், இது தொடர்பாக அளித்த மனுவுக்கு, அதிகாரிகள் இதுவரை பதில் அளிக்கவில்லை. இருப்பினும், வணிக வளாகங்கள் பணிக்கு கோவில் நிதியை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகள் கட்டும் பணிக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கந்தகோட்டம் ஸ்ரீ முத்துகுமாரசுவாமி கோவில் நிலத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளை தொடரலாம். அதேசமயம், அந்த கட்டுமானங்களை, அறநிலைய துறை சட்டப்படி பக்தர்கள் வசதிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். வணிக ரீதியில் பயன்படுத்தக் கூடாது. இந்த மனுவுக்கு, நவ., 21ம் தேதிக்குள், தமிழக அரசு, அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும்.
மேலும், கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என, தமிழகம் முழுதும் உள்ள கோவில்களுக்கு, அறநிலையத்துறை கமிஷனர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். கோவில் நிதியில் வணிக ரீதியில் கட்டுமானங்களை மேற்கொள்ளும் அதிகாரிகள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட வேண்டும். இதைச் செய்ய தவறினால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
***
அழகர்கோவிலில் மேம்பாட்டு பணிக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் மேம்பாட்டு பணியை ஒட்டுமொத்தமாக நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மேலுார் வெள்ளரிப்பட்டி பிரபு தாக்கல் செய்த பொதுநல மனு:
அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ரூ.40 கோடியில் கழிப்பறை, பேவர் பிளாக் பதித்தல், முக்கிய பிரமுகர்கள் தங்கும் விடுதி, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, கடைகள், பக்தர்கள் தங்கும் விடுதி, அர்ச்சகர்கள் குடியிருப்பு, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டு பணியை மேற்கொள்ள தமிழக அறநிலையத்துறை அரசாணை வெளியிட்டது. இதனடிப்படையில் கோயில் அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியது. பணியை கோயில் நிதி மூலம் மேற்கொள்ள அனுமதித்தது அறநிலையத்துறை சட்டத்திற்கு புறம்பானது. கட்டுமான பணிக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுபோல் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரம் வெங்கடேஷ் சவுரிராஜன் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். ஆக.,28 ல் இரு நீதிபதிகள் அமர்வு, ‘கடைகள், உணவருந்தும் கூடம், முக்கிய பிரமுகர்கள் தங்கும் விடுதி அமைக்கும் பணிக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது,’ என உத்தரவிட்டது. நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு நேற்று விசாரித்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஒட்டுமொத்த கட்டுமான பணியையும் நிறுத்தி வைக்க வேண்டும். கோயில் அறங்காவலர்கள் குழு பதிலளிக்கும் வகையில் அவர்களை எதிர்மனுதாரராக இந்நீதிமன்றம் சேர்த்துக் கொள்கிறது. விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.
***
திருச்செந்துார் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வரிசையை ஒழுங்குபடுத்த நடவடிக்கை என்ன; உயர்நீதிமன்றம் கேள்வி
குருவாயூர், திருப்பதி கோயில்களில் உள்ளதுபோல் திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இரும்பு மேம்பாலம் அமைத்து பக்தர்களின் வரிசையை ஒழுங்குபடுத்த முடியுமா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கோயில் நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது
***.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மண்டபம் அருகே பிரசாதம் தயாரிப்பதை ஏற்க முடியாது – மதுரை உயர் நீதிமன்ற கிளை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மண்டபம் அருகே பிரசாதம் தயாரிப்பதை ஏற்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்களை முறையாக மீட்டு பராமரிக்கவும், கும்பாபிஷேகம் நடத்தவும் உத்தரவிடக் கோரி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.இதுகுறித்த விசாரணையில், கூடுதல் ஆவணங்களுடன் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து, மண்டபம் அருகே அடுப்பு வைத்து பிரசாதம் தயாரிப்பதை ஏற்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், மாற்று வழி குறித்து கோயில் இணை ஆணையர் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
****
திருவாசகம் பாட கட்டணம் வசூல்; திராவிட மாடலின் ஜிஸ்யா வரி
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில், திருவாசகம் பாட, கட்டணம் செலுத்த வேண்டும் என, வலியுறுத்தியதற்கு, ஹிந்து தமிழர் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில், கடந்த 25 ஆண்டுகளாக, சிவ பக்தர்கள், கயிலை கிருஷ்ணன் தலைமையில், திருவாசகம் முற்றோதல் பாடி வருகின்றனர். இக்கோவிலின் செயல் அலுவலர் பொன்னி, ‘தன் அனுமதி இல்லாமல், எதுவும் நடக்கக் கூடாது’ என, கோவில் உரிமையாளர் போல் நடந்து கொள்கிறார். ஹிந்து சமய அறநிலையத் துறை சட்ட விதிகளுக்கு முரணாக, அதிகார மமதையில், சிவனடியார்களை அவர் மிரட்டுவது கண்டிக்கத்தக்கது. திருவாசக முற்றோதல் பாட கோவிலில் அனுமதி வாங்க வேண்டும்; நன்கொடை என்ற பெயரில், கட்டணம் செலுத்த வேண்டும் என்பது அடாவடியான செயல்.
கோவில் உபரிநிதியில், ‘தேவாரம் பரப்ப வேண்டும்’ என்பது சட்டம். ஆனால், கோவிலில் திருவாசகம் முற்றோதல் செய்வதற்கே, 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது, திராவிட மாடலின் ஜிஸ்யா வரி விதிப்பு.
சிவனடியார்களை, அவமரியாதையாக பேசிய கோவில் செயல் அலுவலர் மீது அறநிலையத்துறை கமிஷனர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனல், காசிவிஸ்வநார் கோவிலில், இந்து தமிழர் கட்சி சார்பில், மிகப் பெரிய திருவாசக முற்றோதல் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
********
குளிர்காலம் தொடங்கியது ;கேதார்நாத் கோயில் மூடப்பட்டது!
குளிர்காலம் தொடங்கியதை அடுத்து கேதார்நாத் கோயில் நடை மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்துக்களின் 4 புனித தலங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தலங்களுக்குச் செல்லும் யாத்திரையானது ‘சார் தாம்’ யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோயில்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசித்து வருவார்கள். கடந்த மே 2ஆம் தேதி கேதர்நாத் கோயில் நடை திறக்கப்பட்டது; .நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வந்து ஈசனை தரிசித்தனர்.
கோயில் நடை மூடப்படுவதையொட்டி, கேதார்நாத் கோயில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்புப் பூஜை நடைபெற்றது..
***
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து லதா யோகேஷு வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் 12 மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
வணக்கம்.
—SUBHAM—-
Tags – World Hindu News, 26-10-2025, Gnanamayam, Broadcast