Post No. 15,129
Date uploaded in London – – 29 October 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
25-8-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
நகைச்சுவை கட்டுரை – சிரித்து மகிழ மட்டுமே தான்!
என்னைக் கண்டால் தமிழறிஞர்கள் ஏன் சார் ஓடுகிறார்கள்?
ச. நாகராஜன்
என்னைக் கண்டால் தமிழறிஞர்கள் ஏன் சார் ஓடுகிறார்கள்? அது தான் எனக்குப் புரியவில்லை!!
அந்தத் தமிழறிஞரின் அற்புதமான உரையைக் கேட்டு மகிழ்ந்தேன்.
சிலப்பதிகாரத்தில் ஆரம்பித்து பாரதியார் முடிய, அந்த அறிஞர் கூறியபடி தமிழில் மலர்ந்த சொற்களின் அழகே அழகு தான்!
உரை முடிந்தது. அனைவரும் அகன்றனர்.
அவரைப் பாராட்டி விட்டு, ‘‘எனக்கு சில வார்த்தைகள் பற்றிய சந்தேகம் இருக்கிறது, கேட்கலாமா, ஐயா?’ என்றேன்.
உடனே தமிழ்ச் சொற்களின் அருமை பற்றி ஒரு சிறு உரை நிகழ்த்தி தன் அறிவைப் பற்றிப் பெருமை கொண்டு கர்வத்துடன் என்னைப் பார்த்தார் அவர்.
“கேளுங்கள், என்ன சொற்கள்? என்ன சந்தேகம்?”
“ஒன்றுமில்லை ஐயா,
‘கும்தல கும்மா, குமாய்க்காதே என் கோதுமை அல்வாவே?’ இதில் வரும் கும்தல கும்மாவுக்கு என்ன அர்த்தம் ஐயா? கும்தலவில் உள்ள ல-வுக்கு சின்ன ல போட வேண்டுமா, பெரிய ள- போட வேண்டுமா?
என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார் அவர்.
“இது 1958ம் ஆண்டில் ஜெமினி கணேசன் சாவித்திரி நடித்த ‘பிரேமபாசம்’ படத்தில் வந்த பாடல் ஐயா! தஞ்சை ராமையாதாஸ் எழுதி சீர்காழி கோவிந்தராஜனும் ஜிக்கியும் பாடிய பாடல் இது” என்றேன் நான்.
அவர் ஒரு மாதிரியாக இழுத்தவாறே, , “உங்களின் அடுத்த சந்தேகம்?” என்றார்.
“ஐயா! டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே உலகம் போற போக்கைப் பாரு தங்கமே தில்லாலே” இது 1958ல் அன்பு எங்கே படத்தில் வந்த பாடல் ஐயா! டிங்கிரி டிங்காலே, தில்லாலே என்றால் என்ன பொருள் ஐயா! இது தான் என் சந்தேகம்!”
வெறுப்புடன் என் மீது பார்வையை ஓட்டிய அவர், “ இது தான் சந்தேகமா என்றார்.
“இல்லை ஐயா! இன்னும் நிறைய இருக்கிறது. ஜிங்குச்சா ஜிங்குச்சா, செகப்பு கலரு ஜிங்குச்சா, மீனா நடனமாடி பாடும் இதில் ஜிங்குச்சா என்றால் என்ன அர்த்தம்? – இது நான்.
“இதற்கெல்லாம் நான் அர்த்தம் சொல்லணுமா? – சற்று கோபத்துடன் கேட்ட அவரிடம் எனது மொபைலிலிருந்து ஒரு பாடலைப் போட்டுக் காட்டினேன். அமரதீபம் படத்தில் மலர்ந்த பாடல் அது. பாடல் இது தான்:
ஜாலிலோ ஜிம்கானா ஓஓஓஓ
ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்க்கானா ஹேய் ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்க்கானா ஆடுதோ ரௌண்டானா அசந்துட்டா டகக்கானா ஆடுதோ ரௌண்டானா அசந்துட்டா டகக்கானா
ஹேய் ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்க்கானா
சாயுமாசாயுமாசாயுமா சாயாதம்மா ஜம்பம் இங்கே சாயாது சாயாது
ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்க்கானா ஓஓஓஓ
ஓஓஓ நாதர்சிங் தில்லானா நல்லா இருக்கான்னு சொல்லேன்டா நல்லா இருக்கான்னு சொல்லேன்டா நாதர்சிங் தில்லானா நல்லா இருக்கான்னு சொல்லேன்டா நல்லா இருக்கான்னு சொல்லேன்டா…….
பயங்கர கோபத்துடன் ஒரு வெறிப் பார்வை பார்த்த அவர் என் மொபைலை சடக்கென்று பிடுங்கி ஆஃப் செய்து விட்டு, வேகமாகத் திரும்பிச் சென்றார்.
சூரியன் படத்தில் வந்த ‘லாலாக்கு டோல் டப்பிமா’ என்று கூறியவாறே அவரிடமிருந்து அகன்றேன். அன்றிலிருந்து தமிழறிஞர்களிடம் என் புகழ் பரவி விட்டது போலும், என்னைக் கண்டாலே எல்லோரும் ஓடுகிறார்கள், சார்!
உங்களுக்குத் தெரிந்த நல்ல தமிழறிஞர் யாரேனும் உண்டா, சார்?
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு ஜா!
**