
WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,148
Date uploaded in London – – 4 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
16-8-25 அன்று கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
MOTIVATION : NEW TECHNIQUE
அனைவரையும் கவர ஒரு வழி நூஞ்சி! (Nunchi)
ச. நாகராஜன்
உடல் பேசும் மொழி வார்த்தைகளை விட சக்தி வாய்ந்தது!
– ரிக்கி ஜெர்வெய்ஸ்
ஒரு புன்னகை, நண்பரை உருவாக்கும்! – ஃப்ராங்க் டைகர்

அனைவரையும் கண் பார்வையினாலேயே எடை போட்டு அவர்களைக் கவர ஒரு வழி இருக்கிறது! அது தான் நூஞ்சி!!
தென் கொரியாவில் இது இளமைப் பருவத்திலிருந்தே அனைவருக்கும் கற்றுத் தரப்படுகிறது.
நூஞ்சி என்ற தென்கொரிய வார்த்தைக்கு கண்ணின் ஆற்றல் அல்லது கண்ணின் சக்தி என்று பொருள். கண்ணினால் பார்த்தவுடனேயே ஒருவரை அளந்து விட வேண்டும்! அவர்களின் நடை, உடை பாவனையையும் உடல் பேசும் மொழியையும் வைத்து சுலபமாக ஒருவரைப் புரிந்து கொள்வதோடு அவரை நம் பக்கம் கவர்ந்து இழுத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக பெரிய பார்ட்டிகளிலும், சமூக விழாக்களிலும் இது நமக்குப் பெரிதும் உதவும். பல புதிய நண்பர்களை உருவாக்குவதோடு வெற்றிக்கும் வழி வகுக்கும்.
தனிப்பட்ட நபர்களிடம் நட்பும், வேலை பார்க்குமிடத்தில் அனைவரிடமும் நல்லுறவும் நமக்குத் தேவை.
ஒருவரைப் புதிதாகப் பார்க்கும் போது அவரையே அதிகமாகப் பேசும்படி அவருக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும். இது நூஞ்சியின் அபாரமான உத்தி. அவர்களைப் பற்றிய ஏராளமான விவரங்கள் சிறிதும் முயற்சி இல்லாமலேயே உங்களுக்குக் கிடைக்கும்.
பேச்சு என்பது உணர்வுகளையும் தகவல்களையும் பெறும் ஒருவிதமான தொடர்பு தான். ஆனால் பேசாமலேயே பேச்சு அற்ற தொடர்புகள் நமக்குத் தரும் விவரங்களும், அறிவுரைகளும் ஏராளம்.
ஒருவர் சந்தோஷமாக இருக்கிறாரா, உங்களுடன் மேலும் பேச விரும்புகிறாரா என்பதை எல்லாம் அவர்கள் கண்களும் முகமும் உடலுமே காட்டி விடும்.
சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஒரு முறை பார்த்து விட்டு வேகமாக சிந்திக்க நூஞ்சி உதவுகிறது.
பார்ட்டியில் உள்ள சைகைகள், ட்ரெண்ட்,, புதிய வார்த்தைகள் ஆகியவற்றையும் நூஞ்சியினால் பெற முடியும்.
எல்லாவற்றிற்கும் மேலாக நம்மைப் பற்றி இன்னும் கொஞ்சம் புரிதல் கூடும்; உள்ளுணர்வு ஆற்றல் அதிகரிக்கும்.
பேச்சுக்கு வேண்டிய மொழி ஆற்றல் ஒரு பக்கம் என்றால் உணர்ச்சிகளைப் “படிக்கும்” உணர்வு மொழி நமக்குத் தேவை. இது தான் மற்றவர்களுடன் நாம் மகிழ்ச்சியுடன் பழகி வெற்றி பெற உதவும்.
சுருக்கமாகச் சொல்லப் போனால் நமது அன்புக்குரியவர்கள், நண்பர்கள், உறவினர்கள், சகாக்கள் ஆகியோருடனான நமது உறவு மேம்படுவதோடு நமது சுயமதிப்பையும் நம்மை சமூகத்தில் உயர் அந்தஸ்தும் பெற வழி வகுப்பது நூஞ்சி.
நூஞ்சியை வளர்த்துக் கொள்வது எப்படி?
இதோ இருக்கிறது வழிகள்:
முதலில் யாரைப் பற்றியும் நாமாக ஒரு அபிப்ராயத்தை உருவாக்கிக் கொள்ளக் கூடாது. திறந்த மனதுடன் ஒரு பார்ட்டியில் கலந்து கொள்ள வேண்டும். ஒரு புதியவருடன் பழக வேண்டும்.
ஒரு அறையில் நீங்கள் நுழையும் போது அங்கு ஒரு புதிய ஊக்கமூட்டும அதிர்வலைகளை உண்டு பண்ண வேண்டும்.
அனைவரையும் கண் பார்வையாலேயே நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும். புன்னகையுடன் கூடிய மலர்ந்த முகம் இதற்குத் தேவை.
மற்றவர்களை நிறையப் பேசும்படி ஊக்குவிக்க வேண்டும். இதனால் ஏராளமான புதுச் செய்திகள் உங்களுக்குக் கிடைக்கும்.
பேசுகின்ற சொற்களை விடப் பேசாமல் மற்றவர்களது உடலும் உணர்ச்சியும் காட்டும் தகவல்கள் ஏராளம். இதை உன்னிப்பாகக் கவனித்தல் அவசியம்.
ஒருவரைப் பாராட்டுவதில் அதிக உற்சாகம் கொண்ட ஹீரோவாகவும், ஒருவரை எதிர்மறையாக விமரிசிப்பதில் ஜீரோவாகவும் இருத்தல் வேண்டும்.
கண்களையும் காதுகளையும் திறந்து வைத்துக் கொண்டு வாயை மட்டும் மூடி வைத்துக் கொண்டால் வாழ்க்கை முழுவதும் நூஞ்சியால் வெற்றி தான்!
இந்த நூஞ்சியை ஜப்பானிய மொழியில் சாஷி என்கின்றனர்.
வாஞ்சையுடன் அனைவருடனும் பழக ஒரு வழி நூஞ்சி!
**