Post No. 15,159
Date uploaded in London – 7 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அகநானூறு பாடல் 113 சுவையான செய்தி தருகிறது. இந்தக் கருத்து எகிப்து நாட்டிலும் இருப்பது வியப்புக்குரியது மனிதனுடைய உடலுக்குள் உள்ள உயிர் ஒரு பறவையின் உடம்பு என்னும் கூட்டிலிருந்து வெளியே போவது போலத்தான் மரணம் என்பது.
இது திருக்குறளிலும் இருக்கிறது பகவத்கீதையில் கிருஷ்ண பரமாத்மா , ஆத்மா உடலில் இருந்து பிரிந்து செல்வது –அதாவது இறப்பது— மனிதன் நைந்துபோன ஆடைகளை களைந்து விட்டு புத்தாடை போட்டுக்கொள்வது போலத்தான் ஏனெனில் ஆன்மாவுக்கு இறப்பு இல்லை என்று ஒரு உவமை கூறுகிறார்
பகவத் கீதையில் நைந்து போன உடைகளுக்கு உடலை உவமையாகக் கூறியுள்ளார் கிருஷ்ண பரமாத்மா
वासांसि जीर्णानि यथा विहाय
नवानि गृह्णाति नरोऽपराणि |
तथा शरीराणि विहाय जीर्णा
न्यन्यानि संयाति नवानि देही || 2-22||
வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய நவானி க்ருஹ்ணாதி நரோபராணி |
ததா ஶரீராணி விஹாய ஜீர்ணான் யன்யானி ஸம்யாதி நவானி தேஹீ ||2-22||
ஒருவன் கந்தலாய்ப்போன ஆடைகளை அகற்றிவிட்டு, புதிய ஆடைகளை அணிவது போல, மரணத்தின் போது, ஆன்மா தனது தேய்ந்து போன உடலைக் களைந்துவிட்டு புதியதொன்றில் நுழைகிறது.
ஆனால் அகநானூற்றிலும் குறளிலும் ஆன்மா என்பதை பறவைக்கு ஒப்பிடுகிறார்கள். இது கல்லாடர் பாடலிலும் வள்ளுவர் திருக்குறளிலும் வரும் கருத்தாகும்..

அறுதுறை அயிர் மணற் படுகரைப் போகி,
சேயர்’ என்றலின், சிறுமை உற்ற என்
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க,
அழாஅம் உறைதலும் உரியம்-பராரை
அலங்கல் அம் சினைக் குடம்பை புல்லெனப்
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு,
மெய் இவண் ஒழியப் போகி, அவர்
செய்வினை மருங்கில் செலீஇயர், என் உயிரே!–அகநானூறு 113
***
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு— குறள் 338
உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.
***
அருட் பிரகாசவள்ளளார் ராமலிங்க சுவாமிகளும் இதைச் சொல்கிறார்
உடம்பினை ஒன்பது வாசல் வீடு என்று வருணிப்பதைப் பகவத் கீதை முதல் பல நூல்களில் காண்கிறோம். அதை வருணிக்கும் வள்ளலார், வள்ளுவர் போல பறவைக்கூடு என்றும் பாடுகிறார்
17. உப்புற்ற பாண்டம்என ஒன்பது துவாரத்துள்
உற்றசும் பொழுகும்உடலை
உயர்கின்ற வானிடை எறிந்தகல் என்றும்மலை
உற்றிழியும் அருவிஎன்றும்
வெப்புற்ற காற்றிடை விளக்கென்றும் மேகம்உறு
மின்என்றும் வீசுகாற்றின்
மேற்பட்ட பஞ்சென்றும் மஞ்சென்றும் வினைதந்த
வெறுமாய வேடம்என்றும்
கப்புற்ற பறவைக் குடம்பைஎன் றும்பொய்த்த
கனவென்றும் நீரில்எழுதும்
கைஎழுத் தென்றும்உட் கண்டுகொண் டதிலாகை
கைவிடேன் என்செய்குவேன்
***
“பா” Ba என்னும் மனித முகப் பறவை ஆன்மா ஆகும்

எகிப்து நாட்டில் இந்த உருவத்தை மனித முகமும் பறவை உடலும் உள்ள ஒரு கடவுளாக சித்தரித்திருக்கிறார்கள் .அந்த மனித முக பறவைக்கு “பா” என்று பெயர்; இதேபோல மாமூலனார் பாடிய பாடல் ஒன்றில் இன்னும் ஒரு எகிப்திய கருத்தினை உரைத்தார் .சூரியனை வானத்தில் செல்லும் ஓடம்/ கப்பல் என்று உவமித்து இருந்தார். மாமூலனார் காலத்தைச் சேர்ந்த கல்லாடரும் இவ்வாறு ஒரு எகிப்திய கருத்தினை சொல்லுவது வியப்புக்குரியது.
****
பல்லி சொல்லுக்கு பலன்
கல்லாடர் பாடிய இன்னும் ஒன்று பாடலைக் காண்போம்
அகநானூறு ஒன்பதாம் பாடலில் அவர் இரண்டு சுவையான செய்திகளை நமக்கு அளிக்கிறார் தலைவனுக்காக காத்திருக்கும் தலைவி பல்லியின் சொல்கேட்டு நன் நிமித்தத்தை அறிகிறார் பல்லி சொல்லுக்கு பலன் என்று இன்று கூட நாம் பஞ்சாங்கத்தில் படிக்கிறோம். இது அந்த காலத்திலிருந்து இருந்து வரும் வழக்கமாகும். பல்லி ஜோதிடத்தைக் கேட்டு ஒரு பன்றி கூட வேட்டையாடாமல் குகைக்குள் திரும்பிச் சென்றதாக இன்னொரு பாடலில் காண்கிறோம். இது 2000 ஆண்டுகளாக இருந்து வரும் தமிழர்களின் நம்பிக்கையாகும்.
***
உலக்கைப்பாட்டு
இரண்டாவது செய்தி பெண்கள் உலக்கையால் நெல்லைக் குத்தும் ஒலி/ சப்தம் மலையில் உள்ள ஆந்தைகளின் குரல் ஒலி போல இருந்ததாம். இது ஒரு உவமை .உலக்கை குத்தும் போது பெண்கள் பாடும் பாட்டு பாணி என்று சொல்லப்படுகிறது இதுபோன்ற உலக்கைப் பாட்டுகளை சைவத் திருமுறைகளிலும் காண்கிறோம்.
***
கல்லாடர் பாடிய அகநானூற்றுப் பாடல் 83ல் , வேங்கட மலையில் உள்ள புல்லி பற்றி மீண்டும் கேட்கிறோம். மலையில் வாழும் வேடர்கள் யானைக் குட்டிகளைப் பிடித்து வந்து கள் விற்கும் கடைகளின் வாசலில் கட்டுவார்களாம்! இது ஒரு காட்சி.
***

கரடிகள் இருப்பை மரத்தின் மீது ஏறி பூக்களை உண்ணும் காட்சி பாடல் 171 ல் வருகிறது .கரடிகளின் சப்தத்தைக் கேட்டு அவைகளை வேட்டையாட வேடர்கள் வில்லுடன் வந்தவுடன் அவை பயந்து போய் மரத்தின் மீது ஏறி பூவை சாப்பிட்தாம்.
***
பாடல் 199 இதில் இரண்டு இயற்கைக் காட்சிகள் வருகின்றன. செந்நாய்கள் மான் கூட்டத்தைத் தாக்கியவுடன் அவைகள் வெவ்வேறு திசையில் ஓடின பெண் மான்களைக் கூப்பிடுவதற்காக ஆண் மான்கள் குரல் எழுப்பின. இந்த குரல் சத்தத்தை பயன்படுத்தி வேட்டைக்காரர்கள் மான்களை பிடிப்பதை ஆதிசங்கரர் முதல் பலரும் உவமையாக பயன்படுத்தினார்கள். ஐம்புலன்களில் குரலை கேட்டு உயிரிழக்கும் மான்களை புலன்கள் செய்யும் தீங்கினுக்கு உதாரணமாகக் காட்டி உள்ளார்கள்
***
இரண்டாவது இயற்கைக் காட்சி: காற்று காற்று வீசியபோது வெண்கடம்பு மலர்கள் தரையில் விழுந்தனவாம். யானைகள் மழை பெய்கிறது என்று எண்ணி நீரைக் குடிப்பதற்காக அந்த மலர்களை மேய்ந்தனவாம்! அதாவது வறண்ட பாலைவனத்தில் தண்ணீருக்காக ஏங்கிய யானைகள் கீழே விழுந்த மழைத்துளிகள் என்று கருதி ஏமாந்தன.
***
களம் காய் நார் முடிச் சேரல்
இதைவிட முக்கியமான செய்தி ஒரு வரலாற்றுச் செய்தி.
இதில் களம் காய் நார் முடிச் சேரல் என்ற மன்னனைப் பற்றிய செய்திகள் வருகின்றன அவன் முன்னோர் இழந்த நாட்டினைப் பெறுவதற்காக நன்னன் என்ற மன்னனுடன் போரிட்டு வெற்றி பெற்றான். அந்தப் போர் நடந்த இடம் வாகைப் பரந்தலை எனப்படுகிறது. மற்றொரு பெயர் பெருந்துறை. நன்னனுக்கு உரிய காவல் மரம் வாகை. அதை அவர் தங்கத்தால் அலங்கரித்து வைத்திருந்தாராம். நார்முடிச்சேரல் என்ற பெயர் பற்றி இன்னும் ஒரு சங்க நூலான பதிற்றுப்பத்து சுவையான செய்தி தரிகிறது. அவள் முடி சூட்டும் சமயத்தில் உரிய கிரீடம் கிடைக்காதால் களம் காயால் ஆன மாலையையும் (கண்ணி) நாரால் செய்த முடியையும் அணிந்தான். அதனால் அவன் பெயர் களம் காய் கண்ணி நார் முடிச் சேரல் என்று ஆனது! IVVAARU PALA வரலாற்றுச் செய்திகள் கல்லாடர் பாடல்கள் மூலம் நமக்குக் கிடைக்கின்றன.
—SUBHAM—
Tags- அகநானூற்றில், எகிப்திய கடவுள் Ba ‘பா’,களம் காய் நார் முடிச் சேரல்