ஆலயம் அறிவோம்! திருவித்துவக்கோடு (Post.15,168)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 15,168

Date uploaded in London – 10 November 2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

லண்டனிலிருந்து 9-11-25 அன்று ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை 

ஆலயம் அறிவோம்! 

வழங்குவது ப்ரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம். 

தருதுயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரணில்லை

விரை குழுவும் மலர்ப்பொழில் சூழ் விற்றுவக்கோட்டம்மானே!

அரிசினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன்

அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்றிருந்தேனே!

                                                                                      – குலசேகராழ்வார் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றான திருவித்துவக்கோடு திருத்தலமாகும்.

இத்தலம் கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி என்னும் நகருக்கு அருகில் உள்ளது.

 மூலவர்: உய்யவந்த பெருமாள், அபயபிரதன் (தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம்)

 தாயார்: வித்துவக்கோட்டுவல்லி, பத்மாஸனி நாச்சியார்

  தீர்த்தம்: சக்ர தீர்த்தம்,

  விமானம் : தத்வ காஞ்சன விமானம்

 திருவித்துவக்கோடு என்னும் இத்தலம் திருமிற்றக்கோடு என்றும் திருவீக்கோடு என்றும் அழைக்கப்படுகிறது.

 இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறுகள் பல உண்டு.

அம்பரீஷ சக்ரவர்த்தி பரமபதநாதனின் வ்யூக அவதாரத்தை சேவிக்க வேண்டுமென்று எம்பெருமானை இந்த இடத்திலிருந்து பிரார்த்தித்தான்.

உடனே எம்பெருமான் நான்கு வடிவம் கொண்டு வ்யூக வடிவத்தை அவனுக்கு இங்கு காட்சி கொடுத்து முக்தியும் அளித்தார். இதனால் இந்தத் தலத்திற்கு நாலுமூர்த்தி கோவில் என்ற பெயரும் ஏற்பட்டது.

 அம்பரீஷன் இங்கு முக்தி அடைந்ததால் வைகுண்டப் பதவிக்கு வித்தாக அமைந்த இந்தத் தலம் வித்துவக்கோடு என்ற பெயரைப் பெற்றது.

 திருமாலுக்கும் சிவனுக்கும் இங்கு ஒரே இடத்தில் சந்நிதி இருக்கிறது.

இரு மூர்த்திகளும் கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தைக் காணலாம்.

பஞ்ச பாண்டவர்கள் தங்கள் வனவாச காலத்தில் இங்குள்ள நீளா நதிக்கரையோரம் ஒரு அழகிய இடத்தைக் கண்டனர்.  அந்த அழகிய இடத்தில் சில காலம் தங்க தீர்மானித்தனர். நித்ய வழிபாட்டிற்காக ஆலயத்தையும் விக்ரஹங்களையும் ப்ரதிஷ்டை செய்தனர்.\

முதலில் மஹாவிஷ்ணுவை அர்ஜுனன் ப்ரதிஷ்டை செய்ய மற்றவர்களும் விக்ரஹங்களை ப்ரதிஷ்டை செய்து தங்கள் வனவாச காலத்தில் பூஜை செய்தனர்.

நடுவில் அமைந்துள்ள மூர்த்தியை தர்மரும், மேற்கில் அமைந்துள்ள மூர்த்தியை அர்ஜுனனும், இடப்புறம் உள்ள மூர்த்தியை பீமனும், வலப்புறம் உள்ள மூர்த்தியை நகுல சகாதேவர்களும் பூஜை செய்ததாக வரலாறு கூறுகிறது.

பிற்காலத்தில் பாண்டிய மன்னன் ஒருவன் கோவிலின் சுற்று மதில்களை நிர்மாணித்தான்.

நெடுங்காலமாக நான்கு மூர்த்திகள் கொண்ட தலமாகவே இது இருந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாட்டைச் சேர்ந்த ரிஷி ஒருவர் காசிக்குச் சென்று அங்கேயே தங்கி இருந்தார். அவரது அன்னையார் மரணத் தருவாயில் இருப்பதாக அவருக்குச் செய்தி கிடைக்கவே அவர் தாயாரைப் பார்க்க திரும்பி வந்தார். அப்போது அவரது பக்தியினால் மகிழ்ந்த காசி விஸ்வநாதர் அந்த முனிவரது குடையில் மறைந்து வந்ததாக வரலாறு கூறுகிறது.

அவர் இந்தத் தலத்திற்கு வந்த போது நீளா நதியில் நீராடச் சென்றார்.

நான்கு மூர்த்திகளுக்கு முன்புறம் இருந்த ஒரு பலிபீடத்தில் தன் குடையை வைத்து விட்டுச் சென்றார். திரும்பி வந்து பார்க்கும் போது அந்த பலிபீடம் நான்காக வெடித்து அந்த வெடிப்பிலிருந்து ஸ்வய,ம்புவாக ஒரு சிவலிங்கம் தோன்றி இருந்தது. குடையும் மறைந்து விட்டது.

காசி விஸ்வநாதரே இங்கிருந்த நான்கு மூர்த்திகளோடு தங்குவதற்காக வந்துவிட்டதாகவும் அதற்கு அந்த முனிவர் காரணமாக இருந்தார் என்றும் கூறப்படுகிறது. பிற்காலத்தில் சிவலிங்கத்தைச் சுற்றி ஒரு கோவில் கட்டப்பட்டு விட்டது.

ஆக இது ஐந்து மூர்த்தி தலமாக மாறியது. இதன் பெயரும் ஐந்து மூர்த்தி திருக்கோவில் என்று மாறியது.

இத்தலத்தைப் பற்றி குலசேகராழ்வர் அற்புதமான பத்து பாக்களில் மங்களாசாஸனம் செய்துள்ளார். 

நடுக்கடலில் ஒரு பறவை அகப்பட்டுக் கொண்டது. எங்கும் கடல் நீர்!

 கரையோ, காடோ, நகரமோ தென்படவில்லை. அப்போது அங்கு ஒரு கப்பல் வந்து கொண்டிருந்தது. கப்பலுக்கு அருகே சென்ற பறவை அதைச் சுற்றிச் சுற்றி வந்தது. அது நாடாகவோ, தனக்குரிய இடமாகவோ அதற்குத் தென்படவில்லை. பின்னர் தொலைவில் சென்றது.

வேறு வழியின்றி மீண்டும் கப்பலுக்கு வந்து அதன் பாய்மரக்கம்பத்தின் கூம்பில் வந்து அமர்ந்தது. அதே போல, பெருமாளே, எனக்கு உன் திருவடியை விட்டால் வேறு வழியில்லை. மானிடக் கடலில் சிக்கித் தவிக்கும் என்னை நீயே காப்பாற்ற வேண்டும். நின் திருவடியே சரணம் என்று கூறுகிறார் ஆழ்வார்.

“எங்கும் போய்க் கரை காணா

தெறிகடல் வாய் மீண்டேயும்

வங்கத்தின் கூம்பேறும்

மாப்பறவை போன்றேனே”

என்ற அவரது பாசுரம் உள்ளத்தை நெகிழ வைக்கும் ஒன்று.

இப்படி உயரிய உவமானங்களுடன் அவர் பெருமாளைத் துதிப்பது எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியதாக அமைந்துள்ளது.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் உய்ய வந்த பெருமாளும் தாயார் வித்துவக்கோட்டுவல்லியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

நன்றி! வணக்கம்!!

**

Leave a comment

Leave a comment