
WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,180
Date uploaded in London – – 14 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கலை/கலாச்சாரம்
கனவால் நமக்குக் கிடைத்த டிவைன் காமடி!
ச. நாகராஜன்
இத்தாலியக் கவிஞரான தாந்தே (Dante -தோற்றம் மே, 1265 மறைவு 14-9-1321) ஆன்மாவின் பயணத்தையும், அன்பின் நல்ல விளைவுகளையும் சித்தரிக்கும் கவிதை நூலான ‘டிவைன் காமடி’ (DIVINVE COMEDY) என்ற காவியத்தைப் படைத்தார். இது மூன்று பகுதிகளைக் கொண்டது. லத்தீன் மொழியில் எழுதுவதே அந்தக் காலப் பழக்கம். ஆனால் அந்தப் பழக்கத்தை உடைத்து மக்கள் பேசும் மொழியான இத்தாலிய மொழியில் டிவைன் காமடியை உருவாக்கிப் புகழ் பெற்றார் தாந்தே.
1308ம் ஆண்டு ஆரம்பித்து இதை 1321ம் ஆண்டு முடித்தார்.
ஆனால், இந்த நூல் நமக்குக் கிடைத்தது ஒரு அதிசயக் கனவினால் தான் என்றால் நம்ப முடிகிறதா?
தாந்தேக்கு இரு மகன்கள். ஜாகோபோ (JACOPO) மற்றும் பியட்ரோ
(PIETRO) ஆகிய இருவரும் தந்தை இறந்தவுடன் மலைத்து விட்டனர். அந்த இழப்பு ஒரு புறம் இருக்க, அவர் எழுதிய அற்புத காவியமான டிவைன் காமடி நூல் முழுதுமாகக் கிடைக்கவில்லை. வீடு முழுவதும் தேடித் தேடிப் பார்த்தனர். நூலின் இறுதிப் பகுதி எங்கு இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
என்ன செய்வதென்று திகைத்த நிலையில் ஜாகோபோவிற்கு ஒரு நாள் இரவில் கனவு ஒன்று வந்தது. அவரது தந்தை ஜாகோபிவின் அறைக்குள் வெள்ளை வெளேரென ஆடை அணிந்து உள்ளே நுழைகிறார். ஜாகோபோ அவரிடம் , “நீங்கள் உங்களது அருமையான படைப்பை முடித்து விட்டீர்களா?” என்று கேட்கிறார்.
அதற்கு தாந்தே, “ஆம், முடித்து விட்டேன்” என்கிறார். ஜாகோபோவிடம்
அவர் தேடி வரும் தொலைந்து விட்ட பகுதி இருக்கும் இடத்தை தாந்தே சொல்கிறார். உடனே மறைந்து விடுகிறார்.
விழித்தெழுந்த ஜாகோபாவிற்கு மிகுந்த சந்தோஷம். தனது வக்கீல் நண்பர் ஒருவரை சாட்சியாக இருக்க அழைத்தார் அவர்.
தாந்தே எந்த இடம் சொன்னாரோ அந்த இடத்திற்குச் சென்றார் அவர்.
தாந்தேயின் அறைக்குள் சுவரில் இருந்த ஒரு ஜன்னல் பகுதிக்கு அவர் சென்றார். அந்த ஜன்னல் பகுதியில் ஒரு குட்டி அறை இருந்தது. அதில் இருந்த ஒரு பெட்டியைத் திறந்து பார்த்த போது அதில் தொலைந்து விட்ட பகுதிகள் ஒரு கோப்பில் பத்திரமாக வைக்கப்பட்டு இருந்தன.
இப்போது டிவைன் காமடி முழு நூலாகக் கிடைத்து விட்டது.
தந்தையின் மீது பாசம் கொண்ட உண்மையான ஒரு மகனுக்கு தந்தை செய்த உதவி தான் இது1
முதல் அச்சுப் பதிப்பு 1472ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் தேதி வெளியிடப்பட்டது. 300 பிரதிகள் அச்சிடப்பட்டன. அவற்றில் 14 பிரதிகள் இன்னும் இருக்கின்றன.
இதன் அருமையைக் கருதிப் பலரும் பலமுறை இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர். 1805ம் ஆண்டு ஹென்றி ஃப்ரான்ஸிஸ் கேரி இதை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தொடர்ந்து இது 17 முறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கடைசி மொழிபெயர்ப்பு 2025இல் செய்யப்பட்டது. இன்னும் பல ஆங்கில மொழிபெயர்ப்புகள் முழுமையான நூலைச் செய்யாமல் முக்கிய பகுதிகளைச் செய்வதாய் அமைந்துள்ளன.
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என் நோற்றான் கொல் எனும் சொல் (குறள் எண் 70) என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தந்தையின் நூலை மகன் தேடிக் கண்டுபிடித்து உலகிற்கு அளித்தார்!
இதுவும் தெய்வீகத்தின் ஒரு டிவைன் காமடி தானோ?!!
***