
Post No. 15,198
Date uploaded in London – – 19 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
30-8-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
ஆன்மீகம்
மனைவி கழுத்தில் கத்தியை வைக்க அவள் சிரித்தது ஏன்?
ச. நாகராஜன்1
கடவுளைப் பற்றிய நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும்?
ஒரு குட்டிக் கதை உண்டு.
இளம் மனைவியை அவளது கணவன் தன் இல்லத்திற்கு அழைத்துச் செல்ல வந்தான். அவளுக்கு ஒரே சந்தோஷம். கணவனுடன் கிளம்பப் போகிறோம் என்று.
கணவனது ஊர் ஆற்றின் அக்கரையில் இருந்தது. வெகு தூரம் ஆற்றில் போக வேண்டும்.
படகில் இருவரும் ஏற கணவன் படகைச் செலுத்த மனைவிக்கு ஒரே ஆனந்தம்.
ஆனால் அந்தச் சமயம் பார்த்து வானம் இருண்டது. இடியோடு, பளீர் பளீரென மின்னல். அருகில் சென்று கொண்டிருந்த ஏராளமான படகுகளிலிருந்து கூக்குரல் கேட்டது. பயத்தின் குரல்.
ஆனால் இங்கு கணவனோ அமைதியாக தன் ஊரை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.
மனைவிக்குச் சற்று ஆச்சரியமாக இருந்தது. இப்படிப்பட்ட புயல் பயங்கரமாக அடிக்க மின்னல் ஒளி வெள்ளம் பாய்ச்ச, அருகில் உள்ள படகுகளில் ஐயோ ஐயோ என்று ஓலக்குரல் கேட்க தன் கணவன் மட்டும் பயப்படாமல் எப்படி இருக்கிறார்!
அவள் தனது சந்தேகத்தைக் கேட்டே விட்டாள்.
“உங்களுக்கு பயமாக இல்லையா?” என்று.
உடனே கணவன் தன் இடுப்பில் இருந்த கூர்மையான கத்தியை இளம் மனைவி கழுத்தில் வெட்டப் போவது போல வைத்தான்.
அவளோ சிரித்தாள்.
“என்ன உனக்கு பயமாக இல்லையா? என்று கேட்டான் கணவன்.
:எனக்கா? புயமா? எனக்கு எதற்கு பயம்? என்னை உயிராக நேசித்து என்னை காப்பாற்றத் தானே நீங்கள் இருக்கிறீர்கள்? நீங்கள் கத்தியைக் கழுத்தில் வைத்தால் என்ன, வைக்காவிட்டால் தான் என்ன? நான் எதற்குப் பயப்பட வேண்டும்.? என்றாள் அவள்.
“பார்த்தாயா? உன் கேள்விக்கு நீயே பதில் சொல்லி விட்டாய். நம்மைப் படைத்த கடவுளுக்கு நம்மைக் காப்பாற்றுவதை விட வேறென்ன வேலை? ஏதோ ஒரு சிறு புயலையும் கொஞ்சம் இடி மின்னலையும் அனுப்பி இருக்கிறார். அவர் நம்மைப் பாதுகாக்க மாட்டாரா என்ன? உன் கழுத்தில் கத்தியை வைத்தாலும் நீ என்னை நம்புகிறாய் அல்லவா? அது போலக் கடவுளை நான் நம்புகிறேன். பத்திரமாக வீடு போய்ச் சேர்வோம் பயப்படாதே” என்றான்.
அதே சமயம் புயலும் ஓய்ந்தது. இடி மின்னலும் நின்றது.
படகு பத்திரமாக அக்கரை சேர்ந்தது.
உண்மையான பக்தன் எந்தக் காலத்திலும் சோர்வடைய மாட்டான்; பயப்படமாட்டான். அவனுக்குத் தான் அளவு கடந்த நம்பிக்கை கடவுள் மீது இருக்கிறதே! அவர் பார்த்துக் கொள்வார்.
இது அல்லவா பக்தி?!
2
.webp)
பழைய காலத்தில் நடந்த சம்பவம் இது. ஒரு வியாபாரி கடல் கடந்து பணம் சம்பாதிக்கச் சென்றான். அவளது மனைவி நிறை மாத கர்ப்பிணி. அவளுக்கு மகன் பிறந்தான். அவனும் வளர்ந்து வணிகத்தில் ஈடுபட்டான்.
ஒரு நாள் அயல் நாட்டில் ஓரிடத்தில் ஏராளமான பொருள்களை மகன் வாங்கி ஒரு ஷெட்டில் வைத்தான். அதே ஷெட்டில் ஏராளமான பொருள்களும் வைக்கப்பட்டிருந்தன.
அங்கு அப்போது வந்த இன்னொருவர் அனைத்துப் பொருள்களும் தன்னுடையது தான் என்று சண்டை போட ஆரம்பித்தார்.
மகனோ தனது பொருள்களைக் காண்பித்து, “இவை என்னுடையவை” என்று கூற சண்டை தீவிரமானது.
இருவரும் கைகலப்பில் ஒருவரை ஒருவர் வெட்டும் அளவு சண்டை முற்றி விட்டது. அப்போது அங்கு வந்த ஒருவர், “அடடே! இது என்ன சண்டை? அப்பனுக்கும் மகனுக்கும்?” என்றார்.
இருவரும் திகைத்து நின்றனர்.
அந்த இருவரையும் நன்கு அறிந்த அவர்கள் ஊர்க்காரர், “ இது தான் உன் அப்பா” என்று மகனிடம் கூறி விட்டு, “இது தான் உங்கள் மகன். ஊருக்கு வந்தால் தானே எல்லாம் தெரியும்” என்றார்.
இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து ஆனந்தம் அடைந்தனர்.
அவர்களை இனம் காட்டியவருக்கு நன்றி தெரிவித்தனர்.
இப்போது ஷெட்டில் இருந்த அனைத்தும் ஒன்றானது.
இப்படித் தான் கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவு இருக்கிறது.
கடவுள் எப்போது நம்முடையவன் என்று அறிந்தோமோ அப்போது ஒரே ஆனந்தம் தான்! எல்லையற்ற செல்வத்தை உடைய அவனது சொத்தும் பரம குணமும் நம்முடையவையே தான்!
இந்தக் குட்டி விளக்கம் வைஷ்ணவ ரகசியங்களை விளக்கும் டிவைன் விஸ்டம் (DIVINE WISDOM) புத்தகத்தில் பத்தாவது விஷயமாகத் தரப்பட்டுள்ளது.
**