ஷீர்டி சாயிபாபாவின் ருணானுபந்தம்! (Post No.15,206)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,206

Date uploaded in London –   22 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

3-9-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

ஷீர்டி சாயிபாபாவின் ருணானுபந்தம்! 

ச. நாகராஜன் 

ஷீர்டி சாயிபாபா தனது பக்தர்களை தானே ஈர்த்துக் கொள்வார். இதை அவர் ருணானுபந்தம் என்பார்.

இதைச் சுட்டிக்காட்டும் நிகழ்ச்சிகள் ஏராளம் உண்டு. ஒரு எடுத்துக்காட்டு சம்பவத்தைக் காண்போம்.

அப்பா குல்கர்னி என்ற பாபாவின் பக்தர் அவரிடமிருந்து விடை பெற வந்தார். அவரை ஆசீர்வதித்த பாபா, “அப்பா! உன்னுடைய டெபுடி கலெக்டர் நானாவை நான் கூப்பிட்டதாகச் சொல்” என்றார்.

உடனே குல்கர்னி, “நானோ ஏழை குல்கர்னி. பெரிய அதிகாரியிடம் போய் நான் எப்படி இதைச் சொல்ல முடியும்?” என்றார்.

“நான் கூப்பிட்டதாகச் சொல்!”

“அப்படிச் சொல்லலாமா?”

“தைரியமாகச் சொல்!”

குல்கர்னியும் தைரியமாக டெபுடி கலெக்டர் நானா சாஹப்பிடம் அதைத் தெரிவித்தார்.

நானாவுக்குக் கோபம் வந்தது. “பொய்க்கும் குயுக்திக்கும் குல்கர்னியைப் போல யாரும் இல்லை. குல்கர்னி சொல்வது பொய். அந்தப் பக்கிரியை நான் பார்த்ததில்லை அப்படியே அவ ர் கூப்பிட்டிருந்தாலும் நான் வர மாட்டேன் என்று சொல்.” என்றார்,

 குல்கர்னி நடந்த விஷயத்தை அப்படியே பாபாவிடம் சொன்னார்.

 பாபா மீண்டும் அவரிடம், “இங்கு நானாவை வரச் சொல்” என்றார்.

இரண்டாம் முறை இதைச் சொன்னவுடன் இந்த முறையும் நானா வரமுடியாது என்று சொல்லி விட்டார். அவருக்கு ஒரு சந்தேகம்,

 இப்படிச் சொல்லி தன்னை குல்கர்னி தன் கிராமத்திற்கு வரவழைத்து  ஏதாவது லாபம் அடையப் பார்க்கிறாரோ என்று.

பாபாவிடன் இரண்டாம் முறையும் குல்கர்னி நடந்ததைச் சொன்னார்.

“அட, மீண்டும் நானாவிடம் இங்கு வரச்சொல். அவன் இங்கு வருவான் பார். இங்கு யாரும் தானாக வருவதில்லை. நானே தான் பூர்வ ருணானுபந்தத்தால் அவர்களை இங்கு இழுக்கிறேன்.” என்றார் பாபா.

 குல்கர்னி மூன்றாம் முறையாக நானாவை பாபா அழைத்ததை அவரிடம் சொன்னார்.

“சரி, பிறகு வருகிறேன்” என்று சொல் என்றார் நானா. பின்னர் தனது வாசஸ்தலமாகிய ஆமத் நகர் சென்றார்.

 அங்கிருந்து ஷீர்டி கிராமம் 60 மைல் தூரத்தில் உள்ளது.

 ஒரு நாள் எதற்காகத் தன்னை பாபா வரச் சொல்லி இருக்கிறார் என்ற எண்ணத்துடன் ஷீர்டிக்குக் கிளம்பினார் நானா.

1892ம் ஆண்டில் பல இடங்களில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளிடையே ஒரு காசும் வாங்காத உத்தமராக இருந்தவர் நானா. பலவிதமாக யோசித்தவாறே ஷீர்டி வந்த அவர் பாபாவின் முன் ஏதேனும் கொடுக்க வேண்டுமே என்று எண்ணித் தன் பையைச் சோதித்தார். கொஞ்சம் பாதாமும், கல்கண்டும் கிடைத்தது.

அதை பாபாவிடம் அவர் சமர்ப்பித்தார். பாபா மிகுந்த சந்தோஷத்துடன் அதை அவரிடமே தந்து சாப்பிடச் சொன்னார்.

“நீங்கள் கொஞ்சம் சாப்பிடுங்கள். பிரசாதமாகத் தந்தால் நான் சாப்பிடுவேன்” என்றார் நானா.

பாபா கொஞ்சம் பாதாம், கல்கண்டை எடுத்துக் கொண்டார். நானாவும் பிரசாதமாக அதை வாங்கிச் சாப்பிட்டார்.

பின்னர் கேட்டார்: “என்னை இங்கு வரச் சொன்னீர்களா?”

பாபா: ஆமாம்.

நானா : எதற்காகவோ?

பாபா; உலகில் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கும் போது உன்னை ஏன் கூப்பிட்டேன் தெரியுமா? நீயும் நானும் நான்கு ஜன்மமாகச் சேர்ந்து வாழ்ந்து வந்தோம். அதை நீ அறிய மாட்டாய் நான் அறிவேன். ஆகவே இந்த ஜன்மத்திலும் உன்னை அழைத்தேன். சாவகாசம் கிடைத்தபோதெல்லாம் இங்கே வா”.

நானா அவர் கருணையை எண்ணி வியந்து விடை பெற்றார்.

சில காலம் கழித்து அகமத் நகர் ஜில்லாவில் ப்ளேக் நோய் வந்தது. ஏராளமானோர் மரணமடைய ஆரம்பித்தனர்.

எல்லோரும் அம்மை குத்திக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்தது.

நானாவுக்கு அம்மை ஊசி குத்திக் கொள்ள சற்று பயமாக இருந்தது. நேராக பாபாவிடம் சென்று ஊசி குத்திக் கொள்ளலாமா என்று கேட்டார்.

பாபா, “தாரளமாகக் குத்திக் கொள். ஒன்றும் ஆகாது” என்றார்.

நானாவும் அம்மை ஊசி குத்திக் கொண்டார். டெபுடி கலெக்டரே குத்திக் கொண்டதைப் பார்த்த மக்கள் தாங்களும்  ஊசி குத்திக் கொள்ள ஆரம்பித்தனர்.

ப்ளேக் பரவுவது நின்று விட்டது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து நானா ஷீர்டி சென்று பாபாவின் அணுக்கத் தொண்டராகி விட்டார்.

ஏராளமான ஆச்சரியகரமான அனுபவங்களை அவர் பெற்றார்.

இவற்றை ஷீர்டி பாபா வரலாற்றில் படிக்கலாம்; ஆனந்திக்கலாம்!

**

Leave a comment

Leave a comment