பக்தியினால் திருப்பிக் கிடைத்த மோதிரம் (Post No.15,210)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,210

Date uploaded in London –   24 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

22-11-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

பக்தியினால் திருப்பிக் கிடைத்த  மோதிரம்: ஷீர்டி சாயியாக இருந்த போது நடந்த சம்பவத்தை ஶ்ரீ சத்ய சாயிபாபா விவரித்த ரகசியம்! 

ச. நாகராஜன 

ஶ்ரீ சத்யசாயிபாப பிறந்த நாள் விழாவில் 23-11-1962 அன்று பிரசாந்தி நிலையத்தில் ஆற்றிய உரை! 

வேத பண்டிதர்கள் வேதத்தின் மீது முழு நம்பிக்கையோடு இருத்தல் வேண்டும். அப்படி இருந்தால் அவர்கள் மிகவும் சந்தோஷத்துடன் இருப்பார்கள். வேதங்கள் ஒரு மனிதனை சந்தோஷமாக இருக்க வைக்க முடியாவிடில் வேறு எது தான் சந்தோஷத்தைத் தரும்?

ஹோட்டல் வைத்து நடத்தும் ஒருவர் தனக்கு தலை வலிக்கும் போது மருந்துக் கடைக்குச் சென்று தலைவலி மாத்திரையை வாங்கிச் சாப்பிடுகிறார். மருந்துக் கடை வைத்து நடத்துபவரோ தனக்கு காப்பி வேண்டும் என்கின்ற போது அதே ஹோட்டலுக்குச் சென்று காப்பி அருந்துகிறார். மேலைநாடுகள் கீழை நாடுகளை நோக்கி மன அமைதிக்காக வருகின்றன; கிழக்கோ மன அமைதி என்று தாங்கள் நினைத்துக் கொள்வதை அடைய மேலை நாடுகளை நோக்கிச் செல்கின்றன.

உங்களுக்கு எனது முந்தைய பிறவியில் ஷீர்டி சாயியாக நான் இருந்த போது நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.

எனது பக்தையான ஒரு எழுத்தறிவற்ற பெண்மணி பகல்ஹானில் வாழ்ந்து வந்தாள். அவள் தனது சமையலறையில் மூன்று பளபளக்கும் பித்தளைக் குடங்களில் நீரை நிரப்பி வைத்துக் கொள்வாள்.   அந்த மூன்று குடங்களுக்கும் அவள் கங்கை, யமுனை, சரஸ்வதி என்று பெயர் சூட்டியிருந்தாள். அவள் அந்தப் பெயரால் தான் அந்தக் குடங்களைக் குறிப்பிடுவது வழக்கம்.

யாரேனும் வழிப்போக்கர் ஒருவர் தாகமாக இருக்கிறது என்று அந்தப் பெண்மணியிடம் சொன்னால், அவள் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நீரையும் கலந்து திரிவேணி சங்கமமாக வந்த வழிப்போக்கருக்குத் தருவாள்.

அவளது இந்தச் செய்கையைக் கண்டு அண்டை அயலார் எள்ளி நகையாடுவது வழக்கம். ஆனால் அவளோ அந்த மூன்று குடங்களில் உள்ள தண்ணீர் நிலத்தடி வழியே கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகளுடன் இணைந்திருப்பதாக நம்பினாள்.அவளது இந்த நம்பிக்கை அசைக்க முடியாததாக இருந்தது.

அவளது கணவன் ஒரு முறை காசி யாத்திரைக்குக் கிளம்பினான். அவனது தாயார் அவனிடம் தான் அணிந்திருந்த தங்க மோதிரத்தைத் தந்து அவனை அணிவிக்கச் சொன்னாள். அது அவனை  நன்கு காக்கும் தாயத்தாக இருக்கும் என்று அவள் கூறினாள். அவனும் அதை அணிந்து கொண்டு காசிக்குக் கிளம்பினான். கங்கையில் மணிகர்ணிகா துறையில் அவன் நீராடும் போது அந்த மோதிரம் நழுவி நீரினில் விழுந்து விட்டது. தேடிப் பார்த்தும் அது கிடைக்கவில்லை.

அவன் திரும்பி வந்து நடந்ததைச் சொல்லி தாயாரிடம் ஆறுதலுக்காக,
“கங்கை அது வேண்டுமென்று விரும்பினாள் போலும், எடுத்துக் கொண்டாள்” என்றான்.

ஆனால் அவனது மனைவி இதைக் கேட்ட போது, “கங்கை ஒரு நாளும் ஒரு எளிய வயதான பெண்மணியின் மோதிரத்தை வலிய எடுத்துக் கொள்ள மாட்டாள். அன்புடன் எதைத் தருகிறோமோ அதை மட்டுமே அவள் பெற்றுக் கொள்வாள். அதை அவள் நமக்குத் திருப்பித் தருவாள்.  இது நிச்சயம். அவள் நமது சமையலறையிலேயே தான் இருக்கிறாளே!” என்றாள்.

இதைச் சொல்லி விட்டு நேராக சமையலறைக்குச் சென்ற அவள் கங்கை என்று பெயரிட்டிருந்த குடத்தின் முன்னர் கூப்பிய கையுடன் மனதார பிரார்த்தனை செய்தாள். பின்னர் குடத்தில் தன் கையை விட்டுத் துழாவினாள்.

என்ன ஆச்சரியம்! கங்கையில் தொலைந்து போன அந்த மோதிரம் அவள் கையில் கிடைத்தது.

அவள் த்வாரகாமாயிக்கு தன் கணவனுடனும் மாமியாருடனும் வந்தாள்.

நம்பிக்கையே முக்கியம். பெயரும் வடிவமும் முக்கியம் அல்ல! ஏனெனில் எல்லா பெயர்களும் அவனுடையவையே! எல்லா வடிவங்களும் அவனுடையவையே!

நம்பிக்கை என்பது தர்ம பூமியிலே வேதம் என்ற செழிப்பான மணல் உள்ள பூமியிலேயே வளரும். ஆகவே தான் இங்கு பாடசாலை இன்று ஆரம்பிக்கப்பட்டது!

***

Leave a comment

Leave a comment