
Post No. 15,225
Date uploaded in London – – 29 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
8-9-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
உலகின் அதிசய இடங்கள்!
சீனாவின் ஜாங்க்யே டான்க்ஸியா (Zhangye Danxia) பார்க்!
ச.நாகராஜன்

சீனாவில் ஜாங்க்யே நகரில் அமைந்துள்ள ஜாங்க்யே டான்க்ஸியா உலகில் உள்ள 34 பெரும் மீடியாக்களினால் உலகின் மிக அழகிய இயற்கை வனப்பு மிக்க நில வடிவம் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றாகும்.
240 லட்சம் வருடங்களுக்கு முன்னால் மணல்கற்களும் தாதுக்களும் கலந்த கலவையினால் உருவான இடம் இது. காற்றும் மழையும் தொடர்ந்து அடிக்கவே இங்குள்ள அழகுள்ள வடிவமைப்புகள் காலப்போக்கில் உருவாகி விட்டன.
இங்குள்ள ஜாங்க்யே நேஷனல் பார்க் 322 சதுர கிலோமீட்டரில் அமைந்த பார்க். வானவில் வண்ணங்களில் ஜொலிக்கும் இந்த இடத்தை யுனெஸ்கோ உலகளாவிய பாரம்பரிய தளங்களில் ஒன்றாக 2009ம் ஆண்டில் அறிவித்து விட்டது.
கொய்லான் மலைத்தொடர்களின் அடிவாரத்தில் இந்த பார்க் அமைந்துள்ளது. இது ஜாங்க்யே நகருக்கு மேற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது சீனாவின் தலை நகரான பீகிங்கிலிருந்து 1700 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
விசித்திரமான வண்ணக் கலவைக்காக பிரசித்தி பெற்ற பார்க்காக இது ஆகியுள்ளது. வியக்க வைக்கும் சிவப்பு, பழுப்பு, மஞ்சள் மற்றும் பச்சை மணல்கற்கள் மடிப்பு மடிப்பாக அதனுள்ளிருக்கும் பல்வேறு ஆக்ஸைடுகளால் உருவாக்கப்பட்டுள்ளன. நிலத்தடி நீரில் உள்ள பல்வேறு கனிமங்களில் சேர்க்கையானது மணல்கற்களின் துகள்களில் ஊடுருவ, இந்த இரசாயன கூட்டுப்பொருள்கள் அவற்றுடன் ஒன்று சேர்ந்து இந்த இயற்கை வனப்பை உருவாக்கியிருக்கிறது. இதை லேயர் கேக் ஹில்ஸ் (Layer Cake Hills) என்று அனைவரும் புகழ்கின்றனர்.
மார்கோ போலோவே இதன் உயிர்த்துடிப்பான அழகையும் வண்ணங்களையும் பார்த்து வியந்து போற்றியுள்ளான்.
இது இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 510 சதுர கிலோமீட்டரைக் கொண்ட பகுதி ஜாங்க்யே க்யிகாய் என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் பல்வேறு வண்ணங்கள் என்று பொருள். இன்னொரு பகுதி 332 சதுரகிலோமீட்டரைக் கொண்டது. இது பிங் கௌ என்று அழைக்கப்படுகிறது. பனிப் பள்ளத்தாக்கு என்பது இதன் பொருள்.
இந்த வானவில் அடுக்குத் தொடரானது பெருவில் அமைந்துள்ள ரெய்ன்போ மலைகள், பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஸ்பெக்ட்ரம் தொடர், அமெரிக்காவில் உள்ள ரெய்ன்போ தொடர் ஆகியவற்றுடன் ஒப்பிடப்படுகிறது.
ஜாங்க்யே பழைய காலத்தில் யான்ஜி என்று அழைக்கப்பட்டது. இங்கு புத்தமத குருமார்கள் மடாலயங்களை அமைத்து வழிபட்டார்கள். ஆகவே இது பாரம்பரியத்தை விளக்கும் இடமாகவும் அமைந்து விட்டது. நிலவியலின் சரிதத்தைச் சொல்வதோடு கலை, பண்பாடு ஆகியவற்றின் ஒரு முக்கிய பகுதியாகவும் இது அமைந்து விட்டதால் சீன அரசு இதன் சுற்றுப்புறச் சூழலை பாதிக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
உலகில் அதிக மக்கள் சென்று விரும்பிப் பார்க்கும் இடமாக இது அமைந்து விட்டது. அத்துடன் திரைப்படத் தயாரிப்பாளர்களையும் ஈர்க்கும் இடமாகவும் இந்தப் பகுதி அமைந்து விட்டது. டிஸ்னியின் முலன் (MULAN) என்ற திரைப்படத்தில் இந்தப் பகுதியின் அழகிய காட்சி இடம் பெறுகிறது.
அத்துடன் இது சீனாவின் புகழ்பெற்ற சில்க் ரோட் என்னும் பெருவழியில் உள்ள இடமாகவும் உள்ளது. சில்க் ரோட் என்பது சீனவாவின் வடக்கே உள்ள பெருவழி. இது உலக வரலாற்றைப் பல்வேறு விதங்களில் பலமுறை மாற்றியுள்ளது என்பதை வரலாறு கூறுகிறது. 7000 கிலோமீட்டர் தூரம் செல்லும் இந்த வழியில் ஏராளமான வணிகர்களும் அரசர்களும் அவர்களின் படைகளும் சென்றுள்ளன.
இந்த சில்க் ரோட் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லும் இடமாக உள்ளது. ஜாங்க்யே டான்க்ஸியா (Zhangye Danxia) பார்க் இந்த சில்க் ரோடில் அமைந்திருப்பதால் இதன் புகழ் நாளுக்கு நாள் பெருகி வருகிறது!
**