இசையின் மகிமை: பெரியாழ்வாரும், ஆனாய நாயனாரும் செப்புவது ஒன்றே! (Post No.15,243)

Tumburu and Narada 
Written by London Swaminathan

Post No. 15,243

Date uploaded in London –  5 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

இசையின் மகிமை பற்றி பெரியாழ்வாரும் , ஆனாய நாயனாரும் பாடிய பாடல்கள்  அல்லது இசைத்த கீதங்களில் ஒற்றுமை நிலவுவதைக் கண்டு ரசித்து ஆனந்தம் அடையலாம்; இசை என்பது உலகம் முழுதும் புரியும் மொழி என்று சான்றோர் பகர்ந்தார்கள் ; அவர்கள் அப்படிச் செப்பியது மொழிகளைப் பேசும் மனிதர்களைப் பற்றிய வாக்கியம் ஆகும். ஆனால் இந்துக்களோவெனில் பிராணிகளும் மொழிகளைப் பேசும், கனவுகளைக் காணும், சிந்திக்கும், மனிதர்களைப் போல கருவிகளைப் பயன்படுத்தும், மனிதர்களுக்கு உதவும், அவைகளைத் தூதும் விடலாம் என்ற கருத்துக்களை வெளியிட்டதை ரிக் வேதம் தொடங்கி மஹாபாரதம், ராமாயணம் வழியாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்கப்பாடல்கள் வரை காண்கிறோம்.

பிராணிகள் கனவு காண்பது பற்றி இப்பொழுதுதான் மேலை நாட்டு விஞ்ஞான சஞ்சிகைகளில்  கட்டுரைகள் வருகின்றன; நாமோ பஞ்ச தந்திரம், ஹிதோபதேசம் கதைகள் மூலமும் ஆழ்வார் பாசுரங்கள், நாயன்மார் பாடல்கள்  மூலமும் இதை பல்லாயிரம் ஆண்டுகளாக மொழிந்து வருகிறோம் கீழேயுள்ள பாசுரங்களையும் பெரிய புராணப்பாடல்களையும் ஒப்பிட்டு மகிழுங்கள்.

 ரிக்வேதத்தில் நாய்விடு தூதும், மஹாபாரதத்தில் தமயந்தி கதையில் அன்னம் விடு தூதும் வருகின்றன கஜேந்திர மோட்சம் கதைகளில் யானை பேசுவதைக் கேட்கிறோம் ; அந்த சிற்பங்கள் குப்தர் காலம் முதல் நாடு முழுதும் விரவிக்கிடக்கின்றன

உலகப்பு கழ்பெற்ற காளிதாசனின் சாகுந்தல நாடகத்தில் பறவைப்பெண் என்று பெயர் படைத்த சகுந்தலாவைக் கண்வ மகரிஷி, துஷ்யந்த மஹாராஜனுடன் சேர்த்துவைக்க அனுப்பிய காட்சியில் காடே சோகத்தில் மூழ்கியது; மான்கள் சாப்பிடவில்லை, மயில்கள் ஆடவில்லை, கொடிகள் பூக்க வில்லை என்று காளிதாசன் வருணிக்கிறார். அதாவது செடிகொடிகள், விலங்குகளுக்கும் நம்மைப்போல கோபதாபங்கள் ராக அநுராகங்கள் உண்டு என்பதை இந்துக்கள் சொல்லிவைத்தார்கள் . சகுந்தலையும் செடிகொடிகளை சகோதரி என்று அழைத்து பிரியாவிடை பெறுகிறாள் ; வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடுவது நாம் மட்டுமல்ல; நாம் வாடினால் செடிகளும் வாடும்; நாம் ஆடினால் செடிகளும் ஆடும்.

இதோ பெரியாழ்வார் பாசுரங்கள்:

ஓர் அற்புதம் கேளீர்!

யாதவப் பெண்கள் என்ன செய்தனர் ?

நாவலம் பெரிய தீவினில் வாழும்

        நங்கைமீர்கள் இது ஓர் அற்புதம் கேளீர்

தூ வலம்புரி உடைய திருமால்

        தூய வாயிற் குழல்-ஓசை வழியே

கோவலர் சிறுமியர் இளங் கொங்கை

        குதுகலிப்ப உடல் உள்-அவிழ்ந்து எங்கும்

காவலும் கடந்து கயிறுமாலை

        ஆகி வந்து கவிழ்ந்து நின்றனரே         (1)

****

இட அணரை இடத் தோளொடு சாய்த்து

        இருகை கூடப் புருவம் நெரிந்து ஏறக்

குடவயிறு பட வாய் கடைகூடக்

        கோவிந்தன் குழல்கொடு ஊதின போது

மட மயில்களொடு மான்பிணை போலே

        மங்கைமார்கள் மலர்க் கூந்தல் அவிழ

உடை நெகிழ ஓர்கையால் துகில் பற்றி

        ஒல்கி ஓடு அரிக்கண் ஒட நின்றனரே         (2)

****

வான் இளவரசு வைகுந்தக்

        குட்டன் வாசுதேவன் மதுரைமன்னன் நந்த-

கோன் இளவரசு கோவலர் குட்டன்

        கோவிந்தன் குழல்கொடு ஊதின போது

வான் இளம்படியர் வந்து வந்து ஈண்டி

        மனம் உருகி மலர்க்கண்கள் பனிப்பத்

தேன் அளவு செறி கூந்தல் அவிழச்

        சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே        (3)

****

ரம்பா ஊர்வசி திலோத்தமா, மேனகா என்ன செய்தனர் ?

தேனுகன் பிலம்பன் காளியன் என்னும்

        தீப்பப் பூடுகள் அடங்க உழக்கிக்

கானகம் படி உலாவி உலாவிக்

        கருஞ்சிறுக்கன் குழல் ஊதின போது

மேனகையொடு திலோத்தமை அரம்பை

        உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி

வானகம் படியில் வாய் திறப்பு இன்றி

        ஆடல் பாடல் இவை மாறினர் தாமே         (4)

****

நாரதர் தும்புரு என்ன செய்தனர் ?

முன் நரசிங்கமது ஆகி அவுணன்

        முக்கியத்தை முடிப்பான் மூவுலகில்

மன்னர் அஞ்சும் மதுசூதனன் வாயிற்

        குழலின் ஓசை செவியைப் பற்றி வாங்க

நன் நரம்பு உடைய தும்புருவோடு

        நாரதனும் தம் தம் வீணை மறந்து

கின்னர மிதுனங்களும் தம் தம்

        கின்னரம் தொடுகிலோம் என்றனரே         (5)

****

கந்தர்வர்கள் என்ன செய்தனர் ?

செம் பெருந் தடங்- கண்ணன் திரள் தோளன்

        தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்

நம் பரமன் இந்நாள் குழல் ஊதக்

        கேட்டவர்கள் இடர் உற்றன கேளீர்

அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம்

        அமுத கீத வலையால் சுருக்குண்டு

நம் பரம் அன்று என்று நாணி மயங்கி

        நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே         (6)

****

தேவர்கள் என்ன செய்தனர் ?

புவியுள் நான் கண்டது ஒர் அற்புதம் கேளீர்

        பூணி மேய்க்கும் இளங்கோவலர் கூட்டத்து

அவையுள் நாகத்து- அணையான் குழல் ஊத

        அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப

அவியுணா மறந்து வானவர் எல்லாம்

        ஆயர்-பாடி நிறையப் புகுந்து ஈண்டிச்

செவி-உணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து

        கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே         (7)

***

பறவைகள் என்ன செய்தன ?

சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்

        செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிப்பக

குறுவெயர்ப் புருவம் குடிலிப்பக்

        கோவிந்தன் குழல்கொடு ஊதின போது

பறவையின் கணங்கள் கூடு துறந்து

        வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்

கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்

        கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்டகில்லாவே        (8)

***

மான்கள் என்ன செய்தன ?

திரண்டு எழு தழை மழைமுகில் வண்ணன்

        செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே

சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான்

        ஊதுகின்ற குழல்-ஓசை வழியே

மருண்டு மான்-கணங்கள் மேய்கை மறந்து

        மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர

இரண்டு பாடும் துலுங்காப் புடைபெயரா

        எழுது சித்திரங்கள் போல நின்றனவே   

      (9)

***

செடி கொடிகள் என்ன செய்தன ?

கருங்கண் தோகை மயிற் பீலி அணிந்து

        கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை

அருங்கல உருவின் ஆயர் பெருமான்

        அவனொருவன் குழல் ஊதின போது

மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்

        மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும்

இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற

        பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே         (10)

***

குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக்

        கோவிந்தனுடைய கோமள வாயிற்

குழல் முழைஞ்சுகளின் ஊடு குமிழ்த்துக்

        கொழித்து இழிந்த அமுதப் புனல்தன்னைக்

குழல் முழவம் விளம்பும் புதுவைக்கோன்

        விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார்

குழலை வென்ற குளிர் வாயினராகிச்

        சாதுகோட்டியுள் கொள்ளப் படுவாரே         (11)

*****

இனி ஆனாயநாயனார் கதையைப் பார்ப்போம்

கையில் புல்லாங்குழலுடன் சுவர்க்கத்துக்குப் போன புனிதர்!

இசை மூலம் இறைவனை அடைந்த ஆனாய நாயனார்
எழுதியவர்:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்—982; தேதி— 16th April 2014.

அறுபத்து மூன்று சிவனடியார்களின் கதைகளைக் கவிதை வடிவில் தந்தது பெரிய புராணம். இதை நமக்குத் தந்தவர் சேக்கிழார் பெருமான். இதில் வரும் அப்பர், சுந்தரர், சம்பந்தர், கண்ணப்பர், நந்தனார் முதலிய கதைகள் பலருக்கும் தெரியும். ஆனால் சேக்கிழார் பாடிய இன்னும் சிலரைப் பற்றி பலருக்கு அதிகம் தெரியாது. குறிப்பாகப் புல்லாங்குழல் ஊதிக்கொண்டே சிவலோகம் சென்ற ஆனாயர் பற்றி பலருக்கும் தெரியாது. புல்லாங்குழலில் நமசிவாய மந்திரத்தை இசைத்தவுடன் சிவனே பூவுலகிற்கு வந்து ஆனாய நாயனாரை புல்லாங்குழல் ஊதிக் கொண்டே அழைத்துச் சென்ற அற்புதமான வரலாற்றை சேக்கிழார் மிக அழகாகப் பாடியுள்ளார். இது உலகில் வேறு எங்கும் நடக்காத அதிசயம்!!

மேல் மழநாடு என்பது சோழ சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதி. அங்கே திருமங்கலம் என்று ஒரு ஊர். மங்கலம் என்றால் பிராமணர்கள் வாழும் ஊர் என்பது பொருள். ஆனால் அந்த ஊரில் வாழ்ந்த ஒர் மாடு மேய்க்கும் இடையர் பற்றிய கதை இது. அவர் பெயர் ஆனாயர். அவருக்கு தெரிந்தது மாடு மேய்க்கும் தொழில் ஒன்றுதான். கிருஷ்ண பரமாத்மாவின் ஜாதி. ஆனால் கண்ணனுக்கோ உலகில் தெரியாத விஷயம் இல்லை. ஆனாயருக்கு மாடு மேய்க்கும் தொழிலோடு வேறு இரண்டே விஷயங்கள் மட்டும் தெரியும். ஒன்று புல்லாங்குழல் வாசிப்பது, இரண்டு பஞ்சாட்சர மந்திரத்தை ஜபிப்பது. அதையும் புல்லாங்குழலிலேயே வாசித்து மகிழ்வார்.

செய்யும் தொழிலே தெய்வம் என்று இருந்த அவரது கவனிப்பில் ஆடு மாடுகள் எல்லாம் சாப்பிட்டுப் பல்கிப் பெருகின. ஒரு நாள் ஒரு கொன்றை மரத்தைப் பார்த்துவிட்டார். அதன் பூக்கள் சரம் சரமாகத் தொங்கியதைக் கண்டவுடன் சிவ பெருமான நினைவில் மூழ்கிவிட்டார்.

ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும் இது போன்ற ஒரு அனுபவம் உண்டு. ஒரு பச்சைப் பசேல் என்று பச்சைக் கம்பளம் விரித்தார் போன்ற வயல் வெளியில் ஒரு நாள் நடந்து கொண்டிருந்தார். தூரத்தில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு வந்தன. ஒரு பக்கம் பச்சை வயல்; மறுபக்கம் நீல மேகம்; இந்தப் பிண்ணனியில் வெள்ளை நிறக் கொக்குகள் சிறகடித்துப் பறந்தன. இந்த அற்புதமான இயற்கை எழிலைப் பார்த்தவுடன் அவருக்கு இவற்றை எல்லாம் படைத்த இறைவன் நினைவுக்கு வரவே வயல் வரப்பிலேயே சமாதி நிலைக்குப் போய்விட்டார். அவருடன் வந்தவர்கள் அவரை வீட்டுக்குத் தூக்கிக்கொண்டு போக வேண்டி இருந்தது. அவர் சமாதி கலைந்து சுய நினைவுக்கு வர சில நாட்கள் ஆயின!!

நாமாக இருந்தால் இந்த அற்புதமான காட்சியை உடனே மொபைல் போனில் புகைப் படம் பிடித்து அதை பேஸ் புக்கில் போட்டு பெருமைப் பட்டிருப்போம். ஆனால் ஆனாய நாயனார், ராம கிருஷ்ண பரமஹம்சர் போன்றோருக்கு சத்யம் – சிவம்—சுந்தரம் மூன்றும் இறைவனின் படைப்பு. எங்கெங்கெல்லாம் சுந்தரம் (அழகு) இருக்கிறதோ அது எல்லாம் அவர்களுக்கு இறைவனையே நினைவுபடுத்தும்.

கொன்றை மரத்தையும் அழகிய பூங்கொத்துக்களையும் கண்ட ஆனாயர் எடுத்தார் புல்லாங்குழலை, இசைத்தார் நமசிவாய மந்திரத்தை! இதைத் தொடர்ந்து அவரைச் சுற்றியிருந்த உலகமெல்லாம் ஆடாது அசங்காது நின்றன. இதோ சேக்கிழார் பாடல் வாயிலாகவே அதைக் காணுங்கள்:

“வள்ளலார் வாசிக்கும்
மணித் துளை வாய் வேய்ங்குழலின்
உள்ளுறை அஞ்செழுத்து
ஆக, ஒழுகி எழும் மதுர ஒலி
வெள்ளம் நிறைந்து எவ்வுயிர்க்கும்
மேல் அமரர் தருவிளை தேன்
தெள் அமுதின் உடன் கலந்து
செவி வார்ப்பது எனத் தேக்க”.

அதாவது அவர் வாசித்தது அமிர்தத்தையும் கற்பக மரம் ஒழுக்கும் தேனையும் கலந்து கொடுத்தது போல இருந்ததாம் (அமரர் தரு= கற்பக விருட்சம்).

அடுத்தாற்போல பசுக்களும் கன்றுகளும் மான் முதலிய காட்டு விலங்குகளும் என்ன செய்தன என்று படியுங்கள்:–

ஆன் நிரைகள் அறுகு அருந்தி
அசைவிடாது அணைந்து அயரப்
பால் நுரை வாய்த் தாய்முலையில்
பற்றும் இளம் கன்றினமும்
தான் உணவு மறந்து ஒழிய
தட மருப்பின் விடைக் குலமும்
மான் முதலாம் கான் விலங்கும்
மயிர் முகிழ்த்து வந்து அணைய.”

பொருள்:– பசுக்கள் சாப்பிட்ட உணவை அசைபோட மறந்தன. கன்றுகள் பாதியில் பால் குடிப்பதை நிறுத்தின. காளைகள் வந்து குழுமின. மான் முதலிய விலங்குகள் மயிர்க்கூச்சம் அடைந்தன.

மயில் முதலிய பறவைகள் என்ன செய்தன என்பதையும் நம் கண் முன்னே படம் போலக் காட்டுகிறார் சேக்கிழார் பெருமான்:

ஆடு மயில் இனங்களும் அங்கு
அசைவு அயர்ந்து மருங்கு அணுக
ஊடு செவி இசை நிறைந்த
உள்ளமொடு புள் இனமும்
மாடு படிந்து உணர்வு ஒழிய
மருங்கு தொழில் புரிந்து ஒழுகும்.
கூடியவன் கோவலரும்
குறை வினையின் துணை நின்றார்

பொருள்:– மயில்கள் ஆடுவதை நிறுத்திவிட்டு ஆனாயரைச் சூழ்ந்து நின்றன. பறவைகள் அவரைச் சுற்றி கூடு கட்டின. இடையர்கள் பாதி வேலைகளைப் போட்டுவிட்டு அவரைச் சூழ்ந்து நின்றனர்.

பூமிக்கடியில் வாழும் நாகர்கள், வானத்தில் சென்று கொண்டிருந்த தெய்வ மகளிரான அரம்பையர், வித்யாதரர், சாரணர், கின்னரர், தேவர்கள் ஆகியோர் விமானங்கள் எல்லா வற்றுடனும் அங்கே கூடிவிட்டனர்.

பணி புவனங்களில் உள்ளார்
பயில் பிலங்கள் அணைந்தார்
மணிவரை வாழ் அரமகளிர்
மருங்கு மயங்கினர் மலிர்ந்தார்
தணிவு இல் ஒளி விஞ்சையர்கள்
சாரணர் கின்னரர் அமரர்
அணி விசும்பில் அயர்வு எதி
விமானங்கம் மிசை அணைந்தார்.

இந்தப் பாடல்கள் புல்லாங்குழல் இசையின் மகிமையையும் பாடுவதால் அப்படியே பாடல் வடிவில் படிப்பது இன்பம் பயக்கும்.

மரங்கள் அசையவில்லை. ஆறுகள் ஓடவில்லை, அருவிகள் நீர் ஒழுக்கு இன்றி அப்படியே நின்றன. கடல் அலைகள் வீசவில்லை என்று சேக்கிழார் பாடிக்கொண்டே போகிறார். இப்படி ஸ்தாவர, ஜங்கமப் பொருட்கள் எல்லாம் பாதிக்கப்பட்ட நிலையில் சிவனும் உமையும் இந்த இசையில் மயங்கி காளை வாகனத்தில் ஏறிப் புறப்பட்டனர்.

ஆனாயர் குழல் ஓசை
கேட்டருளி அருள் கருணை
தான் ஆய திரு உள்ளம்
உடைய தவ வல்லியுடன்
கானாதி காரணர் ஆம்
கண்ணுதலார் விடை உகைத்து
வான் ஆறு வந்து அணைந்தார்
மதி நாறும் சடை தாழ

“உடனே எம்முடன் வருக. வீட்டுக்குள் போய் ‘’ட்ரஸ்’’ எல்லாம் ‘சேஞ்ச்’ (’மாற்ற) பண்ண வேண்டாம். அப்படியே எம்முடன் வருக”– என்று சிவனும் உமையும் கூறினர்:–

“இந்நின்ற நிலையே நம்பால்
அணைவாய் என, அவரும்
அந்நின்ற நிலை பெயர்ப்பார்
ஐயர் திருமருங்கு அணைந்தார்”

உடனே விண்ணவர்கள் மலர் மாரி பொழிந்தனர். முனிவர்கள் வந்து வேதம் ஓதினர். ஆனாயர் புல்லாங்குழலை நிறுத்தவே இல்லை. வாசித்துக் கொண்டே சிவனுடன் சென்று விட்டார். இவ்வாறு இசைக் கருவியை வாசித்துக் கொண்டே சிவலோகம் போன ஒரு தொண்டரைப் பற்றி படிக்கும் போது வியப்பாக இருக்கிறது. நாமும் கதையை முடித்தோம். நமசிவவாய ஓம்!!

விண்ணவர்கள் மலர் மாரி
மிடைந்து உலகம் மிசை விளங்க,
எண்ணில் அரு முனிவர் குழாம்
இருக்கு மொழி எடுத்து ஏத்த’
அண்ணலார் குழல் கருவி
அருகு இசைத்து அங்கு உடன் செல்லப்
புண்ணியனார் எழுந்தருளிப்
பொன் பொதுவினிடைப் புக்கார்.

—subham—

Tags- ஆனாய நாயனார் , பெரியாழ்வார், காளிதாசன், இசையின் மகிமை

Leave a comment

Leave a comment