கண்ட பெயர்களை குழந்தைகளுக்குச் சூட்டாதீர்கள்: பெரியாழ்வார் எச்சரிக்கை (Post.15,268)

Written by London Swaminathan

Post No. 15,268

Date uploaded in London –  13 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பிள்ளைகளுக்கு ,குழந்தைகளுக்கு, அரசியல் தலைவர்களின் பெயர்களையோ, நடிகர், நடிகையர் பெயர்களையோ சூட்டக்கூடாது. இறக்கும் தருணத்தில் இறைவன் பெயர்களைச் சொல்லிக் கூப்பிடும் வகையில், தெய்வீகப் பெயர்களை வைக்கவேண்டும் என்கிறார் பெரியாழ்வார்

இதோ சில சுவையான பாசுரங்கள்:

1

ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -4-6—

காசும் கறை யுடைக் கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும்

ஆசையினால் அங் கவத்தப் பேரிடும் ஆதர்காள்

கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித் திருமினோ

நாயகன் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்.

பதவுரை

காசுக்காகவும் பார்டர் BORDER  போட்ட ஆடைகளுக்காவும் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் அறிவிலிகளே! கேசவன், நாராயணன் பெயர்களை சூட்டினால் நீங்கள் நரகத்துக்குள் விழமாட்டீர்கள் .

ஆதர்= குருடர்க்கும், அறிவில்லாதார்க்கும் பெயர்:

(இக்காலம் போலவே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் ஒரு கூலிப்பட்டாளம் இருந்ததை அறிய முடிகிறது)

****

2

அங்கொரு கூறை அரைக்குடுப்ப தனாசையால்

மங்கிய மானிட சாதியின் பேரிடும் ஆதர்காள்

செங்க ணெடு மால் சிரீதரா என்று அழைத்தக்கால்

நங்கைகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-2-

மானிட சாதி பேர் இடும் ஆதர்காள் (குருடர்களே)!

ஒரு உடுப்புக்காக பெயர் வைக்காதீர்கள்

ஸ்ரீதரனே! என்று பெயர் வைத்து அழைத்தீர்களாகில்

நாராயண நாமத்தைப் பூண்ட அப் பிள்ளையினுடைய

தாயானவள் நரகம் புகார்

***

3

உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து

எச்சம் பொலிந்தீர்காள் எஞ்செய்வான் பிறர் பேரிட்டீர்

பிச்சை புக்காகிலும் எம்பிரான் திரு நாமமே

நச்சுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-3-

தலையிலும் கையிலும் அணியும் ஆபிராணங்களுக்காக பெயர் வைக்காதீர்கள்; பிச்சை எடுக்க நேரிட்டாலும்

பெருமாளின் திரு நாமத்தையே சூட்டுங்கள்

***

4

மானிட சாதியில் தோன்றிற்று ஓர் மானிட சாதியை

மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக் கில்லை

வானுடை மாதவா கோவிந்தா என்று அழைத்தக்கால்

நானுடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள்-4-6-4-

மானிட சாதியில் உண்டான ஒரு மனிதனின் பெயரைச் சூட்டினால் மறுமைக்குப் பலனில்லை;மாதவா, கோவிந்தா என்று பெயர் வைத்தால் அவனுடைய அன்னை, நரகத்துக்குப்  போகமாட்டாள்

***

5

மலமுடை யூத்தையில் தோன்றிற்று ஓர் மல வூத்தையை

மலமுடை யூத்தையின் பேரிட்டால் மறுமைக்கில்லை

குலமுடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால்

நலமுடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-5-

நம்முடைய சரீரம் அழுக்குடைய ஊத்தை ; அந்த ஊத்தைக்கு இன்னுமொரு ஊத்தையின் பெயரை வைக்காதீர்கள் .கோவிந்தா கோவிந்தா என்று பெயர் சூட்டி அழைத்தால் அவனுடைய அன்னைக்கு நற்கதி கிட்டும்

****

6

நாடும் நகரும் அறிய மானிடப் பேரிட்டு

கூடி யழுங்கிக் குழியில் வீழ்ந்து வழுக்காதே

சாடிறப் பாய்ந்த தலைவா தாமோதரா என்று

நாடுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-6-

மானிடர் பேர் இட்டு ஒளி மழுங்கி குழியிலே வழுக்கி விழாதீர்கள் . சகடாசுரனை  அழித்த தலைவா, தாமோதரா என்று கூப்பிடுங்கள்  ; தாய்க்கு நரகம் வராது

***

7

மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேரிட்டு அங்கு

எண்ண மொன் றின்றி யிருக்கும் ஏழை மனிசர்காள்

கண்ணுக் கினிய கரு முகில் வண்ணன் நாமமே

நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-7-

மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேரிட்டுத் திரியும் அறிவு குறைந்தவர்களே  ,கண்ணன் நாமத்தையேயிடுங்கள்

***

8

நம்பி பிம்பி யென்று நாட்டு மானிடப் பேரிட்டால்

நம்பும் பிம்பு மெல்லாம் நாலு நாளில் அழுங்கிப் போம்

செம் பெருந் தாமரைக் கண்ணன் பேரிட்டழைத் தக்கால்

நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-8-

நம்பி என்றும் பிம்பி என்றும் பொருளற்ற பெயர்கள் வேண்டாம்; கண்ணன் நாமத்தை இட்டு

அழைத்தால் அவன் தாய்க்கு நரகம் கிடைக்காது (ஸ்ரீவைகுண்டமே புகுவாள்)

***

9

ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வது போல் உங்கள்

மூத்திரப் பிள்ளையை என் முகில் வண்ணன் பேரிட்டு

கோத்துக் குழைத்துக் குணால மாடித் திரிமினோ

நாத்தகு நாரணன் தம் அன்னை நரகம் புகாள்–4-6-9-

அசுத்தமானதொரு குழியிலே அம்ருதம் பாய்ந்தாற்போலே

உங்களுடைய அசுத்தனான பிள்ளைக்கு, எம்பெருமானுடைய திருநாமத்தை நாமகரணம் பண்ணி, அதனாலுண்டாகும் ஆநந்தத்  தோடு கூத்தாடிக் கொண்டு திரியுங்கள்

****

10

சீரணி மால் திரு நாமமே யிடத் தேற்றிய

வீரணி தொல் புகழ் விட்டு சித்தன் விரித்த

ஓரணி யொண் தமிழ் ஒன்பதோடொன்றும் வல்லவர்

பேரணி வைகுந்தத்து என்றும் பேணி யிருப்பரே–4-6-10-

கல்யாண குணங்களை ஆபரணமாகவுடைய திருநாமத்தையே இந்திரியங்களை வெல்லும்  வீரப் பாட்டை ஆபரணமாக வுடைய,  சாச்வதமான கீர்த்தியை யுடைய , பெரியாழ்வார் விரிவாக அருளிச் செய்தார்.    கற்பார்க்கு ஒப்பற்ற ஆபரணம் போன்றவையும், அழகிய தமிழ்ப்மொழியிலுமுள்ளவையும் ஆன இப் பத்துப் பாட்டுக்களையும் துதிப்போர் ஸ்ரீவைகுண்டத்தில்  எந்நாளும்  வாழ்வார்கள்.

–SUBHAM—

TAGS- பிள்ளைகளுக்கு , குழந்தை , பெயர், நாமகரணம் ,பெரியாழ்வார், எச்சரிக்கை, நரகம்

Leave a comment

Leave a comment