ரிஷியின் விலை மதிப்பு எவ்வளவு?  பாபா கூறிய கதை! (Post.15,279)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,279

Date uploaded in London –   17 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

8-10-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கதை!

ரிஷியின் விலை மதிப்பு எவ்வளவு? ஶ்ரீ சத்யசாயிபாபா கூறிய கதை! 

ச. நாகராஜன்                      

ஶ்ரீ சத்யசாயிபாபா தெலுங்கு மொழியில் அருவியென அருளுரைகளைப் பொழிவது வழக்கம்.

‘ஒக சின்ன கதா’ என்று அவர் கூறினால் பக்தர்கள் மிகுந்த சந்தோஷம் அடைவர். ஒரு அற்புதமான கதையும் அத்துடன் அழகிய நீதியும் உபதேசமாகக் கிடைக்கும் என்பது அவர்களின் அனுபவம். 

பாபா கூறிய இரு கதைகளைப் பார்ப்போம்.

ரிஷியின் மதிப்பு!

பசுவைப் பராமரியுங்கள். ஏனெனில் அது தான் தன்னலமற்ற சேவையின் வடிவம். தர்மத்தின் உருவம்.

ஆகவே தான் புதிதாகக் கட்டிய வீட்டின் க்ரஹப்ரவேசத்தின் போது முதலில் பசுவை வீட்டிற்குள் செல்லச் செய்கிறோம்.

.

ஒரு சமயம் ஒரு ரிஷி திரிவேணி சங்கமமாக அமையும் கங்கா யமுனா சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளின் சங்கமத்தில் குளிக்கச் சென்றார். அவர் நதியில் அமுங்கிக் குளித்த சமயத்தில் சில மீனவர்கள் தங்கள் வலையை வீசினர். அவர்கள் வீசிய வலைக்குள் இந்த ரிஷி சிக்கினார்.

நல்ல பெரிதான ஒன்றைப் பிடித்திருக்கிறோம் என்ற சந்தோஷத்தில் வலையை மீனவர்கள் இழுக்க வலைக்குள்ளே பார்த்தால் அகட்டிருப்பது ரிஷி!

தங்கள் வலைக்குள் அகப்பட்டிருப்பதால் ரிஷி தங்களுக்குச் சொந்தம் என்று மீனவர்கள் வாதாடினர். வழக்கு அரசனிடம் சென்றது.

அரசனிடம் ரிஷி தன்னை விடுவிக்கும் முன்னர் தனக்கான விலையை முதலில் மீனவர்களிடம் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.

ரிஷியின் விலை மதிப்பு எவ்வளவு? அரசன் திகைத்தான்.

ஆயிரம் வராகன் தருகிறேன் என்றான் அரசன். ரிஷி அது மிகவும் மலிவாகத் தன்னை நினைப்பதாகும் என்றார்.

ஐயாயிரம் வராகன் தருகிறேன் என்றான் அரசன். ரிஷி அதையும் மறுத்தார். அனைவரும் ஆளுக்கு ஒரு விலையைச் சொல்ல அவற்றை எல்லாம் ரிஷி மறுத்து விட்டார்.

அப்போது அரசவையில் இருந்த ஒரு யோகி தான் சரியான விலையைக் கூறுவதாகச் சொல்ல அனைவரும் அவரை ஆவலுடன் பார்த்தனர்.

யோகி, “ஒரு பசுவைக் கொடுங்கள். அதுவே ரிஷியின் மதிப்பிற்குச் சரி சமமானது” என்றார்.

ரிஷியும் அதை ஒப்புக் கொண்டார். பசு கொடுக்கப்பட்டது. ரிஷி விடுவிக்கப்பட்டார்.

அப்படி ஒரு மதிப்பைக் கொண்டது பசு. அதை போஷிக்க வேண்டும். ஆராதிக்க வேண்டும்.

     பாபா 19-8-1964 அன்று சென்னையில் ஆற்றிய உரையிலிருந்து

நல்ல நடத்தை தொடர்ந்து வரும்!

நல்ல நடத்தையும் அதைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதுமே உலகியல் வாழ்விற்கு உகந்ததாகும்.

ஆன்மீக வாழ்வைப் பொருத்தமட்டில் இது மிகவும் அவசியம்.

ஒரு மனிதனை அவனது குணாதிசயத்தாலும் நடத்தையாலும் அவன் செய்கையாலுமே நாம் மதிப்பிட முடியும்.

ஒரு ஊரில் இரண்டு பெண்கள் இருந்தனர். இருவரும் எதிரெதிர் வீட்டில் வசித்து வந்தனர். முதலாமவளிடம் ஐந்து பசுக்கள் இருந்தன. இன்னொருத்தியிடம் ஒரே ஒரு பசு தான் இருந்தது. ஐந்து பசுக்கள் வைத்திருந்தவள் ஒரு ஊதாரி. எதையும் வீணாக்குபவள். ஒரு பசு வைத்திருந்தவளோ சிக்கனமாகவும் தேவை அறிந்தும் செலவழிப்பவள்.

ஐந்து பசுக்களை வைத்திருந்தவள் ஒரு பசு வைத்திருந்தவளிடம் பாலை தினமும் கொஞ்சம் கடனாகப் பெற்று வந்தாள். ஏனெனில் அவளது ஊதாரித்தனத்தால் அவ்வளவு பால் அவளுக்குத் தேவையாக் இருந்தது. பெரிய குடும்பத்தைக் கொண்டிருந்தாலும் ஒரு பசுவை வைத்திருந்தவள் உதவி புரியும் மனப்பான்மையுடன் பாலைக் கொடுத்து உதவி வந்தாள். ஒரு நாள் திடீரென்று அவளுடைய பசு இறந்தது.

அவள் தான் தந்த பால் ஐம்பது சேர் அளவு என்றும் தினமும் தனக்கு ஒரு சேர் பால் தரவேண்டும் என்று மற்றவளிடம் வேண்டினாள்.

ஆனால் ஐந்து பசு வைத்திருந்த பணக்காரிக்கோ கோபம் வந்தது.

தான் அவளிடம் ஒரு போதும் பாலைக் கடனாகப் பெற்றதில்லை என்று வாதித்தாள்.

விஷயம் நீதிபதியிடம் சென்றது. அவர் சற்று யோசித்தார்.

பிறகு இருவரிடமும் ஐந்து செம்பு நீரைத் தந்தார். உங்கள் கால்களை கழுவிக் கொண்டு சுத்தமாக வாருங்கள் என்றார்.

பணக்காரி ஐந்து செம்பு நீரையும் ஒரேயடியாகக் காலில் ஊற்றினாள். அழுக்கு அப்படியே இருக்க உள்ளே வந்தாள். ஏழையோ ஒரு செம்பு நீரால் தன் கால்களை முற்றிலும் கழுவி சுத்தமாக உள்ளே வந்தாள். நான்கு செம்பு நீர் பத்திரமாக அப்படியே இருந்தது.

நீதிபதி உண்மையை உணர்ந்தார். அவர் 50 சேர் பாலை ஏழைக்குத் தருமாறு தன் தீர்ப்பை அளித்தார்.

நல்ல நடத்தை என்பது தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டால் ஒருவரின் கூடவே வந்து தொடரும்.

                         பாபா 17-8-1964 அன்று சென்னையில் ஆற்றிய உரையிலிருந்து.

–subham—

Leave a comment

Leave a comment