Post No. 15,322
Date uploaded in London – – 30 December 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
டிசம்பர் 2025 ஹெல்த்கேர் இதழில் வெளியான கட்டுரை!
ஒரு கடிதம் புதுப்பித்த மூளை!
ச. நாகராஜன்
பிரபல ஆங்கில உளவியல் பத்திரிகையான சைக்காலஜி டு டே இதழில் செப்டம்பர் 2025 இதழில் ஆன்டி சாலெஃப் (Andy Chaleff ) எழுதியுள்ள கட்டுரை அனைவரும் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை.
மூளை எப்படி உற்சாகத்துடன் புதுப்பிக்கப்பட்டது – ஒரே ஒரு கடிதத்தினால் என்பதை அவர் உருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
அவர் தனது தாயாருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் எப்படி அவர் தாய் அவருக்கு மிக முக்கியமானவராக இருந்தார் என்பதை ஆழ்ந்த அன்புடன் குறிப்பிட்டிருந்தார். அவார் தாயார் அவருக்குக் கொடுத்த உற்சாகம், அவரால் எதையும் செய்ய முடியும் என்று அவர் கொடுத்த நம்பிக்கை,, அடிக்கடி அவர் அடிக்கும் ஜோக்குகள் எல்லாம் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன.
அந்தக் கடிதத்தைப் படித்த சில மணி நேரங்களுக்குள் ஒரு குடி போதை டிரைவரினால் அவர் ஒரு விபத்தில் இறந்தார். அந்தக் கடிதம் தான் அவரது தாயார் அவரிடமிருந்து பெற்ற கடைசிச் சொற்கள்!
அந்தக் கடிதத்தை எழுதி அனுப்பியவுடன் அவரது மூளையில் ஒரு மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. நன்றியைத் தெரிவிக்கும் ஒருவருக்கு, மூளையில் உள்ள புரிந்துணர்வு, உணர்வுக் கட்டுப்பாடு, சமூகத் தொடர்பு உள்ளிட்ட பகுதிகள் ஊக்குவிக்கப்படுவதாக மூளையியல் நிபுணர்கள் தங்கள் ஆய்வின் மூலமாகக் கண்டுபிடித்திருக்கின்றனர். (விவரங்களுக்கு FOX, KAPLNA, DAMSADIO, & DAMASIO, 2015 பார்க்கவும்)
இப்படி நன்றி தெரிவித்து எழுதியவர்கள் நன்கு உறங்குகிறார்கள். அவர்கள் டாக்டரைப் பார்க்கச் செல்வது அபூர்வமாகவே நடக்கும். எப்போதும் இனம் புரியாத குதூகலத்துடன் இருப்பர்.
மார்டின் செலிக்மேன் என்ற ஆய்வாளரும் அவரது சகாக்களும் சேர்ந்து (Martin Seligman and colleagues) ஒரு ஆய்வை மேற்கொண்டனர். யாரெல்லாம் தங்கள் நன்றியைக் கடிதம் மூலம் தெரிவித்து அனுப்பி இருக்கிறார்களோ அவர்கள் எல்லாம் மிகுந்த சந்தோஷத்துடன் வாழ்கின்றனர் என்பதே அவர்களின் கண்டுபிடிப்பு!
தாயாரை இழந்த துக்கத்தால் தவித்தாலும் அதனால் அவர் பெற்ற உத்வேகத்தால் ஆன்டி சாலெஃப் 90 நாட்களில் 60 குழுவினரைச் சந்தித்து குழுவில் உள்ள அனைவரையும் அவர்களுக்குப் பிடித்த ஒருவருக்கு நன்றி தெரிவிக்கும் கடிதத்தை உடனே அனுப்பச் சொன்னார்.
ஆரேகானில் குழுவில் இருந்த ஒரு பெண்மணியான மார்கரெட் தனது சகோதரிக்கு எழுதிய கடிதத்தை உணர்ச்சி வசப்பட்டு கண்ணீருடன் படிக்க ஆரம்பித்தார். அதில் தாயை இழந்த போது அந்த சகோதரி தனக்கு எப்படி தலைமுடியை அழகுற சிங்காரித்தார், கூடவே பள்ளி வரை வந்து தன்னை உற்சாகப்படுத்தினார் உள்ளிட்ட எல்லா விவரங்களும் இருந்தது. கடந்த 43 வருடங்களில் இந்த விஷயங்களைத் தான் ஒரு போதும் பேசியதில்லை என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.
அவர் முடித்த போது குழுவில் இருந்த அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு பேசமுடியாமல் திகைத்திருந்தனர்.
கடிதத்தை முடித்த மார்கரெட், “எனது வாழ்நாள் முழுவதும் என் தலையில் சுமந்த ஒரு கனமான சூட்கேஸை கீழே இறக்கி வைத்து விட்டது போல உணர்கிறேன்” என்றார்.
மறுநாள் காலை மார்கரெட் தனது சகோதரியிடம் பேசினார் – மூன்று மணி நேரம் பேச்சு தொடர்ந்தது!
இப்படிப்பட்ட நன்றிக் கடிதங்கள் அதை அனுப்புபவர், அதைப் பெறுபவர் ஆகிய இருவருக்கும் புதிய உணர்வைத் தருகிறது.
பேசப்படாத அன்பின் மொழிகள் “முடிக்கப்படாத ஒரு வணிகம்” போலத்தான்.
ஆய்வுகள் தெரிவிக்கும் ஒரு முக்கிய விஷயம் – இப்படிப்பட்ட நன்றிக் கடிதங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கிறது, இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது என்பதைத் தான்! (விவரங்களுக்கு Witvliet, Ludwig, & Vander Laan, 2001 பார்க்கவும்)
சிறியதாக ஒரு நன்றிக் கடிதத்தை எழுதிப் பாருங்கள். உங்களின் ஆசிரியர் எப்படி உங்களை ஊக்கப்படுத்தினார் என்பதை நினைத்துப் பாருங்கள்.
அவர்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள், நீங்கள் அதனால் எப்படி உற்சாகம் அடைந்து மாறினீர்கள், அவரால் இன்று எந்த உயர்நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதைச் சொன்னால் போதும்.
ஆன்டி சாலெஃப் இது போன்ற பல கட்டுரைகளை எழுதி வருபவர் என்பது குறிப்பிடத் தகுந்தது!
அடடா, என்ன பேனாவையும் பேப்பரையும் எடுத்து விட்டீர்களா, ஒரு நன்றிக் கடிதத்தை எழுத!
வாழ்த்துக்கள்!
**