WRITTEN BY Brhannayaki Sathyanarayanan Chitra Nagarajan
Post No. 15,332
Date uploaded in London – – 5 January 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
4-1-2026 ஞாயிறு அன்று ஒளிபரப்பப்பட்ட ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற உரை
ஆலயம் அறிவோம்
வழங்குவது ப்ரஹன்நாயகி சத்யநாராயணன்
ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.
ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே
ஊழி தோறு ஊழி உயர்ந்தார் தாமே
நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே
நீர் வளி தீ ஆகாசம் ஆனார் தாமே
கொன்று ஆடும் கூற்றை உதைத்தார் தாமே
கோலப் பழனை உடையார் தாமே
சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே
திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே
– திருநாவுக்கரசர் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் செல்லும் சாலையில் உள்ள திரு ஆலங்காடு திருத்தலமாகும். இது சென்னையிலிருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
இறைவர் : வடாரண்யேசுவரர், தேவர்சிங்கப் பெருமான், ஆலங்காட்டு அப்பர், ஊர்த்த தாண்டவர்
இறைவி : பிரம்மராளகாம்பாள், வண்டார்குழலி
தீர்த்தம்: சென்றாடு தீர்த்தம் (செங்கச்சி உன்மத்ய மோக்ஷ புஷ்கரணி), முத்தி தீர்த்தம்
தல விருட்சம் : ஆல மரம், பலா மரம்
ஆலமரக்காடாக இருந்த இந்தப் பகுதியில் இறைவன் ஸ்வயம்புவாகத் தோன்றி நடனமாடியபடியால் இறைவன் வட ஆரண்யேஸ்வரர் என்ற பெயரைப் பெற்றார். அம்மனின் சக்தி பீடங்களில் இது காளி பீடமாக அமைகிறது.
நடராஜப் பெருமான் நித்தமும் நடனமாடும் ஐந்து அம்பலங்களில் இது ரத்தின சபை ஆகும்.
ஏனைய நான்கு சபைகள்
சிதம்பரம் நடராஜர் கோவில் – பொன்னம்பலம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் – வெள்ளியம்பலம்
திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவில் – தாமிர அம்பலம்
குற்றாலநாதர் கோவில் – சித்திர அம்பலம்
இந்தத் தலத்தைப் பற்றிய ஏராளமான புராண வரலாறுகள் உண்டு. சும்பன், நிசும்பன் என்ற இரு அரக்கர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள இந்தக் காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் சொல்லொணா துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் வருத்தமடைந்த தேவர்கள் சிவ, பார்வதியிடம் சென்று முறையிட்டனர். பார்வதி தேவி தனது பார்வையால் காளி தேவியைத் தோற்றுவித்தாள். காளி தேவி அரக்கர்களை அழித்தாள். அவளையே தேவி ஆலங்காட்டிற்கு தலைவியாக்கினாள்.
அரக்கர்களின் ரத்தத்தைக் குடித்த காளி பல கோரச் செயல்களைச் செய்யவே, முஞ்சிகேச கார்க்கோடக முனிவர் சிவனிடம் சென்று முறையிட்டார். உடனே சிவபிரான் கோர வடிவம் கொண்டு ஆலங்காட்டை அடைந்தார். அவரைக் கண்ட காளி, “என்னுடன் நீ நடனமாடி வெற்றி பெற்றால் இந்த ஆலங்காட்டை ஆளலாம்” என்றாள்.
சிவன் உடனே ஊர்த்துவ தாண்டவத்தை ஆடினார். அப்போது அவர் தன் காதில் இருந்த மணியைக் கீழே விழவைத்து, பின் அதைத் தன் இடதுகால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தன் காதில் பொருத்தினார். இது போல் தன்னால் தாண்டவம் ஆட முடியாது என்று காளி தன் தோல்வியை ஒப்புக் கொண்டாள். உடனே இறைவன் அவள் முன் தோன்றி, “என்னையன்றி உனக்குச் சமமானவர் யாரும் கிடையாது. இத்தலத்தில் முதலில் உன்னை வழிபட்ட பின்னரே பக்தர்கள் என்னை வழிபட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு முழுப்பலன் கிடைக்கும் என்று கூறி அருளினார். அன்றிலிருந்து காளி தனிக் கோயில் கொண்டு அருள் பாலித்து வருகிறாள்.
இத்தலத்தில் கார்க்கோடகன், சுநந்த முனிவர், பரண தேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார் உள்ளிட்ட பல பெரியோர் வழிபட்டுள்ளனர்.
நடனக்கலையில் தேர்ச்சி பெற விரும்புவோர் வழிபட வேண்டிய தலம் இது. கணவன், மனைவி ஒற்றுமை ஓங்கவும் இத்தலத்தில் வழிபாடு நடத்தப்படுகிறது.
மார்கழி மாதம் திருவாதிரைத் திருவிழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து வந்து இறைவனை தரிசித்த தலம் இது. காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதி ஆகும். அவரை சிவபிரான் அம்மையே என்று அழைத்ததால் அவர் காரைக்கால் அம்மையார் என்ற பெயரைப் பெற்றார்.
அவர் வரலாற்றைக் கூறும் சேக்கிழார் பிரான்,
“இறவாத இன்ப அன்பு வேண்டி, பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும் போது உன்னடியின் கீழ் இருக்க என்றார்”
என்று பாடுகின்றார்.
அவர் சிவபிரானை வழிபட்டவுடன் சிவபிரான் தனது இடதுகாலைத் தூக்கி ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். தலைக்கு மேலே காலைத் தூக்கி ஆடுவது ஊர்த்துவ தாண்டவம் எனப்படும். அவரின் திருவடியின் கீழிருந்து காரைக்கால் அம்மையார் சிவானந்த இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் தலமாகும் இது.
அவர் பாடிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திருவிரட்டை மணி மாலை, அற்புதத் திருவந்தாதி ஆகியவை பதினோராந் திருமுறையில் உள்ளன.
காரைக்காலம்மையார் தலையால் நடந்து வந்த தலம் இது என்பதால் இத்தலத்தில் கால் பதிக்க அஞ்சிய திருஞானசம்பந்தர் வெளியில் ஓரிடத்தில் தங்கி இரவு உறங்கலானார். அப்போது அவர் கனவில் வந்த ஆலங்காட்டான். “நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு” என்று கேட்க அடுத்த நாள் தலத்துக்கு வந்து கோவிலுள் சென்று இறைவன் மீது பதிகம் பாடி வணங்கி வழிபட்டார் திருஞானசம்பந்தர்.
இத்தலத்தில் திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரும் பதிகங்கள் பாடி அருளியுள்ளனர்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் வடாரண்யேஸ்வரரும், வண்டார்குழலியும்
அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
நன்றி! வணக்கம்!!
**