Written by London Swaminathan
Post No. 15,333
Date uploaded in London – 5 January 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து, .வைஷ்ணவி ஆனந்தும், லதா யோகேஷும் வாசித்து வழங்கும் செய்தி மடல்
அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனவரி மாதம் நான்காம் தேதி 2026-ம் ஆண்டு.
நேயர்களுக்கு முதலில் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்
***
முதலில் வங்க தேசச் செய்திகள்
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு
வங்கதேசத்தில் மேலும் ஒரு ஹிந்து நபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை அதிகரித்து உள்ளது.
ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் 40 வயது மதிக்கத்தக்க ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். கொல்லப்பட்டவர் பெயர் பிஜேந்திர பிஸ்வாஸ் (42) இவர் ஆடைத் தொழிற்சாலையில் பாதுகாவலாளியாக இருந்து வந்தார்.
இந்த சம்பவம் மைமென்சிங்கில் உள்ள பாலுகா உபாசிலா என்ற இடத்தில் நடந்துள்ளது அவரை சுட்டுக்கொன்றவர் சக ஊழியர் நோமன் மியா (29)என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். சுடுவதற்கு பயன்பத்திய சிறியரக துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
இந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு மாணவர் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினரே காரணம் என குற்றம் சாட்டப்பட்ட நிலையில், பல்வேறு நகரங்களில் வன்முறை வெடித்தது.
குறிப்பாக, இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன. அண்மையில், மைமென்சிங் பகுதியைச் சேர்ந்த திபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார்.அதன் தொடர்ச்சியாக, சாட்டோகிராம், பிரோஜ்பூர் மாவட்டங்களில் 10க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன.
பின்னர் மேலும் இரண்டு இந்துக்கள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன
இதுதொடர்பான பலர் கைது செய்யப்பட்ட்டனர் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்களால் வங்கதேசத்தில் பதற்றம் நிலவுகிறது.
***
சிலிகுரி கோழி யானையாக மாற வேண்டும்!: வங்கதேசம் வாலை நறுக்க சத்குரு யோசனை
இந்தியாவின், சிலிகுரி பகுதியை துண்டிப்போம் என, வங்கதேச இடைக்கால அரசு கூறி வருவது குறித்த கேள்விக்கு, ‘கோழி கழுத்தாக இருக்கும் சிலிகுரியை, யானையாக வளர நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தின் தற்போதைய சூழல் மற்றும் இந்தியாவின் சிலிகுரி காரிடார் பகுதிக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் குறித்து, ஈஷா அறக்கட்டளை நிறுவன சத்குருவிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அது குறித்த வீடியோ பதிவில் சத்குரு கூறியதாவது: இந்தியாவின், ஒரு பகுதி வெறும், 22 கி.மீ., அகலத்தில், கோழிக்கழுத்து போல் இருப்பது ஒரு தேசத்தை உருவாக்குவதற்கான சரியான முறை அல்ல. இதற்கான அதிகாரம் நம்மிடம், 1946 மற்றும் 47ல் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், 1972ல் இதற்கான சீர்திருத்தங்களை செய்யும் அதிகாரம் இருந்தும், நாம் அதை செய்யவில்லை.
கோழியாக இருப்பதால் தேசங்களை உருவாக்கி விட முடியாது. அது ஒரு யானையாக வளர வேண்டும். அதற்கு ஊட்டச்சத்து தேவைப்படலாம் அல்லது சில ஊக்க மருந்துகள் தேவைப்படலாம். எது தேவையோ அதை நாம் செய்தே தீர வேண்டும். எப்படியிருந்தாலும், இந்த முரண்பாடு வெறும், 78 ஆண்டுகளுக்கு முன் தான் நிகழ்ந்தது.
சில திருத்தங்கள் தேவைப்படுகின்றன. திருத்தம் நடந்தே தீர வேண்டும். நாம் அந்த கோழிக்கு நன்றாக உணவளித்து அதை ஒரு யானையாக மாற்ற வேண்டும். யானையின் கழுத்தை கையாள்வது அவ்வளவு எளிதாக இருக்காது. எப்படியோ, இப்போது அவர்கள் இந்த விவகாரத்தை முன்னிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள். இனி இது தவிர்க்க முடியாமல் நடந்தே தீரும்.
தற்போதைய நிலையில், தேசங்களின் இறையாண்மையை பாதுகாப்பது மிக முக்கியமானது. காலப்போக்கில் எல்லைகள் மெதுவாக தளர்ந்து ஒரு கட்டத்தில் முழுமையாக அது நீக்கப்படலாம். 1944, 45ல், ஐரோப்பாவில் மக்கள் கடுமையாக போரிட்டனர். மிக மோசமான முறையில் இரண்டாம் உலகப்போர் நடந்தது. ஆனால், இன்று பாருங்கள், அவர்கள் அனைவரும் ஐரோப்பிய ஒன்றியமாக இருக்கிறார்கள். எனவே அதை செய்வது சாத்தியம்தான். என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறினார்.
***
கோவிலில் முதல் மரியாதை தெய்வத்துக்கு தான்: ஐகோர்ட்
கோவிலில் முதல் மரியாதை, எப்போதும் தெய்வத்துக்கு தான் என்பதால், சிறப்பு மரியாதைகளை, ஒரு போதும் உரிமையாக கோர முடியாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேவராஜ சுவாமி கோவிலில், தங்கள் ஆசிரம மடாதிபதிக்கு, 1992 முதல் வழங்கப்பட்டு வந்த, ‘பஞ்ச முத்திரை மரியாதை’ நிறுத்தப்பட்டதை எதிர்த்து, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் தரப்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, ஹிந்து அறநிலையத் துறை தரப்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ”தேவராஜ சுவாமி கோவில் செயல் அறங்காவலரின், 1991ம் ஆண்டு செப்., 5ம் தேதியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டபடி, காஞ்சி காமகோடி பீடம் -சங்கர மடம், அகோபில மடம், நாங்குநேரி வானமாமலை மடம், மைசூர் பரகால ஜீயர் மடம், உடுப்பி வியாசராயர் மடம் ஆகிய ஐந்து மடங்களின் மடாதிபதிகளுக்கு மட்டுமே சிறப்பு மரியாதைகள், பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன,” என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கோவிலில் முதல் மரியாதை, எப்போதும் தெய்வத்துக்கு தான். சிறப்பு மரியாதைகளை, ஒருபோதும் உரிமையாக கோர முடியாது. மடங்களின் தலைவர்களை கவுரவிப்பது, அவர்களுக்கு மரியாதை வழங்குவது குறித்து, அறநிலையத்துறை சட்டப்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும்.இதுதொடர்பாக, அறநிலையத் துறை அதிகாரியை அணுகி, மனுதாரர் தரப்பு நிவாரணம் கோரலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
*****
ஹிந்துக்கள் ஒன்றோடு நிறுத்தக்கூடாது 2 – 3 குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும்: அசாம் முதல்வர் ‘அட்வைஸ்’
”அசாம் மாநிலத்தில் ஹிந்து மக்கள் தொகையின் வளர்ச்சி குறைந்து வருவதால், ஹிந்து தம்பதியர் ஒரு குழந்தையோடு நிறுத்தாமல், குறைந்தது இரண்டு, மூன்று குழந்தைகளாவது பெற்றெடுக்க வேண்டும்,” என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வலியுறுத்தியுள்ளார்.
வடகிழக்கு மாநிலமான அசாமில், முஸ்லிம்கள் எண்ணிக்கை 40 சதவீதத்தை நெருங்கி வருவதாக சமீபத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியிருந்தார்.
எதிர்கால தலைமுறை இந்நிலையில், மக்கள் தொகை அமைப்பு மாறி வருவது குறித்து, சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியுள்ளதாவது:
சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகம் உள்ளது. ஹிந்துக்களிடையே குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. எனவே தான் ஹிந்துக்களை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள சொல்கிறேன்.
ஒரு குழந்தையோடு நிறுத்தாமல், குறைந்தது இரண்டு குழந்தைகள் பெற்றெடுங்கள். முடிந்தவர்கள் மூன்று குழந்தைகள் கூட பெற்றெடுக்கலாம்.
முஸ்லிம்கள் ஏழு, எட்டு குழந்தைகள் பெற்றுக்கொள்கின்றனர். இப்படியே சென்றால், அசாமில் அவர்களின் மக்கள் தொகை 40 சதவீதத்துக்கு மேல் செல்லும்.
ஹிந்துக்களின் மக்கள் தொகை 35 சதவீதத்துக்கு கீழே செல்வதை எதிர்கால தலைமுறையினர் சந்திக்க நேரிடும்.
நம் அண்டை நாடான வங்கதேசம், அடிக்கடி வடகிழக்கு இந்தியாவை பிரித்து, தங்களுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றது.
கோரிக்கை போர் செய்யத் தேவையில்லை. அவர்களின் மக்கள் தொகை 50 சதவீதத்தை தாண்டினால் தானாகவே அது நடந்துவிடும்.
அசாம் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், முஸ்லிம்களுக்கு 48 சட்டசபை தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என, அக்கட்சியிடம் கோரிக்கை வைத்தார்.
அவரை இன்னமும் கட்சியை விட்டு நீக்கவில்லை. ஏனென்றால், முஸ்லிம் ஓட்டுகளை நம்பியே காங்கிரஸ் உள்ளது என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறினார்.
***
வைகுண்ட ஏகாதசி செய்திகள்
வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோயிலில் தங்கத் தேரோட்டம் நடைபெற்றது.
கடந்த 20ம் தேதி ஏகாதசி விழா தொடங்கி பகல் பத்து உற்சவ விழாக்கள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தங்கத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கம் எழுப்பினர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் டிசம்பர் 30 ஆம் தேதி காலை 5.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நம் பெருமாள் பாண்டியன் கொண்டை, கிளிமாலை, ரத்தின அங்கி அலங்காரத்தில் பரமபத வாசலை கடந்து எழுந்தருளினார். ரங்கா.. ரங்கா.. கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
பெங்களூரு இஸ்கான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்..
ஆருத்ரா தரிசனம்
ஜனவரி மூன்றாம் தேதி ஆருத்ரா தரிசனம் ;அதை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவில் தேர்த்திருவிழா முதல் நாள் நடந்தது; ஐந்து தேர்களில் பவனி வந்த 5 மூர்த்திகளை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்
***
சபரிமலை கோயிலில் தங்கம் திருடப்பட்ட வழக்கு – தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் கைது!
சபரிமலையில் தங்கம் திருடப்பட்ட வழக்கில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் கைது செய்யப்பட்டார். இதனால் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது.
சபரிமலை ஐயப்பன் கோயில் துவார பாலகர் சிலைகளில் இருந்த தங்கக் கவசங்கள், பராமரிப்பு பணிக்காக 2019ம் ஆண்டு கழற்றப்பட்டன. பின்னர் ஒப்படைக்கும்போது தங்கக் கவசங்களின் எடை, 4 புள்ளி 54 கிலோ அளவுக்கு குறைந்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பான விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.
இவ்வழக்கில் உன்னிகிருஷ்ணன் போத்தி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இப்போது திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமாரை கைது செய்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
***
ராமர் கோவில் பிரதிஷ்டை 2ம் ஆண்டு விழா: பிரதமர் மோடி பெருமிதம்
ராமர் கோவில் பிரதிஷ்டை இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இன்று, அயோத்தியின் புனித பூமியில் ராமர் கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இரண்டாம் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது; இந்த விழா நமது நம்பிக்கை மற்றும் மரபுகளின் தெய்வீக விழாவாகும்; உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்களுக்கு வாழ்த்துகள். நாட்டு மக்களுக்கும் வாழ்த்துக்கள்.
ராமரின் எல்லையற்ற கருணை மற்றும் ஆசீர்வாதங்களுடன், எண்ணற்ற ராம பக்தர்களின் ஐந்து நூற்றாண்டு பழமையான உறுதிமொழி நனவாகியுள்ளது. இன்று, ராமர் தனது அற்புதமான இல்லத்தில் மறுபிறவி எடுத்துள்ளார். கடந்த மாதம் அயோத்தியில் காவிக்கொடியை நிறுவும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம்.
ஒவ்வொருவரின் இதயங்களிலும் சேவை, அர்ப்பணிப்பு மற்றும் இரக்க உணர்வை மேலும் வலுப்படுத்த விரும்புகிறேன். இது ஒரு வளமான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்குவதற்கான வலுவான அடித்தளமாகவும் மாறும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்; லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் , லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு பற்றிய முக்கிய அறிவிப்பு .
எல்லோரும் நீண்ட பொங்கல் விடுமுறைக்குச் செல்வதால்
அடுத்த நிகழ்ச்சி பற்றிய செய்தியை FACEBOOK மற்றும் YOU TUBE வழியாக பின்னர் அறிவிப்போம் .
மீண்டும் ஞான மயம் குழு உங்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக்களையும், பொங்கல் வாழ்த்துக்களையும்
தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறது .
நன்றி; வணக்கம்
–Subham—
Tags- Gnanamayam, News Broadcast, 4-1-2026