மாவீரர் நேதாஜி! (Post No.15,355)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,355

Date uploaded in London – 23 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஜனவரி 23 நேதாஜி தினம்!

மாவீரர் நேதாஜி!

ச. நாகராஜன் 

பாரதத்தின் அற்புதமான மாவீரர்களில் அண்மைக் காலத்தில் தோன்றி அனைவரையும் அதிசயிக்க வைத்தவர் மாவீரர் நேதாஜி!

அவரது வாழ்க்கை வரலாறு அனைத்து இந்தியர்களாலும் அறியப்பட வேண்டிய ஒன்று. அவரது வரலாற்றை நன்கு படித்து அறிந்தவர்கள் தனக்குத் தெரிந்த அனைவருக்கும் அதை உள்ளது உள்ளபடி தெரிவிக்க வேண்டும்.

கல்கத்தாவில் வாழ்ந்து வந்த காயஸ்த குடும்பங்களில் ஒன்று ஜானகிதாஸ் போஸ் குடும்பம்.பிரபாவதி என்ற நற்குண மங்கையை இவர் மணந்தார். இவர்களுக்கு மகனாக சுபாஷ் சந்திர போஸ் 1897ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி பிறந்தார். சுபாஷுக்கு எட்டு  மூத்த சகோதர சகோதரிகளும் ஐந்து இளைய சகோதர சகோதரிகளும் இருந்தனர். அதாவது 14 குழந்தைகளில் இவர் ஐந்தாவதாகப் பிறந்தார்.

இளம் வயதிலேயே ஆங்கிலேயர்களின் நிறவெறி ஆதிக்கத்தைக் கண்டு அவர் திகைத்தார். எப்படியேனும் ஆங்கில ஆதிக்கத்திலிருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டும் என்று அவர் துடித்தார்.

மகாத்மா காந்திஜி சுபாஷை வெகுவாக நேசித்தார்.1938ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த வருடம் அவர் தலைவராகத் தொடர்வார் என்று அனைவருமெ எதிர்பார்த்த போது பட்டாபி சீதாராமையா அவரை எதிர்த்து நிற்பார் என்று அறிவிக்கப்பட்டது. மகாத்மா பட்டாபி சீதாராமையாவை ஆதரித்தார்.

மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை 2597.  அதில் 1580 வாக்குகளை போஸ் பெற்றார். பட்டாபி சீதாராமையா 1377 வாக்குகளைப் பெற்றார்.

200 வாக்கு வித்தியாசத்தில் போஸ் வென்றார்.

சீதாராமையாவின் தோல்வியைத் தனது தோல்வியாக மகாத்மா கருந்தினார். போஸ் மிகவும் வருந்தி தனது தலைமைப் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.

1939ம் ஆண்டு மே மாதம் பார்வர்டு ப்ளாக் கட்சியை அமைக்க அவர் தீர்மானித்தார்.

இதற்கிடையில் ஹிட்லர் போலந்தின் மீது படையெடுத்து செப்டம்பர் மூன்றாம் தேதி இரண்டாம் உலக மகா யுத்தத்தை ஆரம்பித்தான்.

பிரிட்டிஷார் தனது அடக்குமுறையைக் கையாண்டு அவரை கைது செய்தது. சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்ற சுபாஷின் அதிரடி அறிவிப்பைக் கண்டு அரண்டு போன பிரிட்டிஷ் அரசு ஆறு நாள் உண்ணாவிரதத்திற்குப் பின்னர் அவரை விடுதலை செய்தது.

இந்தியாவிலிருந்து தப்ப நினைத்த போஸ் அதன்படியே

1941ம் ஆண்டு ஜனவரி மாதம் 11ம் தேதி மௌல்வி ஜியாவுடின் என்று மௌல்வி வேஷம் போட்டவாறே பெஷாவரை அடைந்தார். பின்னர் ஜெர்மனியை அடைந்த அவர் அங்கு ஜெர்மானிய அதிகாரிகளுடன் பேசினார்.

இதற்கிடையில் ஜெர்மனி 1941ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் தேதி ரஷியாவின் மீது படையெடுத்தது. இது மிகவும் முட்டாள்தனமான செயல் என்று கருதினார் போஸ்.

1941ம் ஆண்டு நவம்பர் இரண்டாம் தேதி “ஃப்ரீ இண்டியா செண்டர்” என்ற ஒரு மையத்தை ஆரம்பித்த போஸ் ரேடியோ மூலம் பிரசாரம் செய்வது, இந்திய விடுதலைக்காக சேனை ஒன்றைத் திரட்டுவது ஆகிய இரு நோக்கங்களைக் குறிக்கோளாகக் கொண்டார்.

ஜனகன மண தேசீய கீதமாக அறிவிக்கப்பட்டது. ஜெய்ஹிந்த் என்ற கோஷம் உருவாக்கப்பட்டது. ஒருவரை ஒருவர் பார்க்கும் போது இந்த கோஷம் எழுப்பப்பட்டது. நேதாஜி என்று மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டு அழைக்கப்படலானார் சுபாஷ்.

1943ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி சிங்கப்பூரில் நடந்த ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தில் இந்திய விடுதலைக்கான தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றார். தற்காலிக ஆஜாத் ஹிந்த் அரசு உருவானது.

மறு நாள் 5ம் தேதி சிங்கப்பூர் டவுன்ஹாலுக்கு எதிரில் இருந்த மைதானத்தில் இந்திய தேசீய ராணுவத்தின் அணிவகுப்பைப் பார்வையிட்டு சல்யூட் மரியாதையை ஏற்றார் நேதாஜி.

ஒன்பது நாடுகள் நேதாஜியின் தற்காலிக அரசை அங்கீகரித்தன.

அக்டோபர் 29ம் தேதி நேதாஜியை டோக்கியோவில் ஜப்பானிய சக்கரவர்த்தி முழு மரியாதையுடன் வரவேற்றார். உலகிலேயே பெண்கள் மட்டும் கொண்ட ஜான்ஸிராணி பெண்கள் படைப்பிரிவை அவர் தொடங்கினார்

1944ம் ஆண்டு பிப்ரவரி மாதம்  4ம் தேதி  விடுதலைப் போரின் முதல் சங்கநாதம் முழங்கியது. மார்ச் 18ம் தேதி இந்திய தேசீய ராணுவம் பர்மிய எல்லையைக் கடந்தது. பர்மா வழியே சென்று இந்தியாவைப் பிடிப்பதே நேதாஜியின் நோக்கம்.

தற்காலிக இந்திய அரசின் தலைவராக விளங்கிய அவர் எட்டு மந்திரிகளை நியமித்தார்.

எட்டு முனைகளில் போர் நடைபெற்றது. ஆங்கிலேய சேனை அரண்டு ஓடியது. இன்னும் சில மணி நேரங்களில் இம்பால் வீழ்ந்து விடும் என்ற நிலையில் இயற்கை சதி செய்தது. ஒயாத மழை. ராணுவம் பின்வாங்க உத்தரவிட்டார் நேதாஜி..

ஆனால் 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிலைமை சற்று மாறியது.

பர்மாவில் பிரிட்டிஷ் படைகள் பியின்மனா என்ற இடத்தில் முன்னேறக் கூடும் என்பதை அறிந்த அவர் ரங்கூனை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஜப்பான் சரணாகதி அடைந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி சூரியன் உதயமான போது நேதாஜி பாங்காக்கிலிருந்து சைகோனுக்கு விமானம் மூலம் பயணமானார்.

“தெரியாத இடத்தில் சாகஸம் செய்யப் போகும் பயணம் இது” என்று இந்தப் பயணத்தைப் பற்றி அவர் குறிப்பிட்டார்.

ஆனால் 18ம் தேதி காலையில் அவர் விமான விபத்தில் மரணமடைந்தார் என்ற செய்தியை உலகம் அடுத்த நாள் அறிந்தது. அவருடன் கூடச் சென்ற ஹபீப் அவரது அஸ்தியைப் பெற்றார்.

இது தான் சுருக்கமாக மாவீரரான நேதாஜியின் வரலாறு.

ஆனால் அவர் விமான விபத்தில் இறக்கவில்லை என்ற செய்தியை உலகமே நம்பியது. 2025ம் ஆண்டு முடிய ஏராளமான தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன!

உலகம் உண்மையான ஆவணங்களை இன்று வரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டே இருக்கிறது.

வாழ்க நேதாஜியின் புகழ்! ஜெய்ஹிந்த்!!

**

குறிப்பு: இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதியுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நூலின் சுருக்கம்.

Leave a comment

Leave a comment