

WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,358
Date uploaded in London – 24 January 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
சாயிபாபா உருவாக்கிய நிரந்தராக்னியான துனியும் அவரது ஷீர்டி வாசமும்!
ச. நாகராஜன்
ஷீர்டிக்கு வருவதற்கு முன்னால் சாயிபாபா ஔரங்காபாத்திற்கு அருகில் உள்ள ஒரு காட்டில் வசித்து வந்தார். சாந்த்பாய் படேல் என்பவர் ஒரு சமயம் அவரைக் காட்டில் கண்டு பேயோ பிசாசோ என்று பயந்து விட்டார்.
பாபா, அவரை நோக்கி, “நான் பேயும் அல்ல, பிசாசும் அல்ல, வா, என் அருகில் வா” என்றார்.
சாந்த்பாய் பாபாவிடம், “எனது குதிரையை இழந்து நான்கு நாட்கள் ஆகி விட்டன. அதைத் தேடிக் கொண்டு வருகிறேன். அதைக் கண்டுபிடிக்காத வரை எனக்கு உணவே வேண்டாம்” என்றார்.
‘குதிரை இந்தப் பக்கம் வந்ததா, அதை நீங்கள் பார்த்தீர்களா?’ என்று சாந்த்பாய் கேட்க உடனே பாபா தாம் அதை விரட்டவில்லை என்றும் தூரத்தில் உள்ள ஒரு வேலியின் அருகில் மேய்ந்து கொண்டிருக்கிறது
என்றும் கூறினார். அவர் கையைக் காட்டிய திசையில் சென்ற சாந்த்ராம் தனது குதிரையைக் கண்டுபிடித்து அதன் மேல் ஏறி உட்கார்ந்து பாபாவிடம் வந்தார்.
சாந்த்பாயுடன் தூப்கேடா என்ற கிராமத்திற்குச் சென்ற பாபா அவர் இல்லத்தில் வசிக்கலானார்.
ஷீர்டியில் சாந்த்பாயின் மனைவியின் தம்பி மகனுக்கு கல்யாணம் நடக்கவிருந்தது. அப்போது பாபா மாப்பிள்ளை வரிசையுடன் சேரந்து ஷீர்டிக்கு வந்தார்.
ஷீர்டி கிராமத்தின் ஆரம்பத்திலேயே கண்டோபா கோவில் இருக்கிறது.
அது கிராமத்தை விட்டுச் சற்று விலகியும் அடர்த்தியான மரங்களின் அருகேயும் உள்ள கோவில்.
அதைப் பார்த்த பாபா அது தான் வசிப்பதற்கு உகந்த இடம் என்று அதைத் தேர்ந்தெடுத்து அங்கே வசிக்கலாம் என்று அங்கே சென்றார்.
ஆனால் அதைக் கட்டிய மகல்ஸாபதி பாபாவை உள்ளே விடவில்லை.
உடனே பாபா ஷீரடி ஊருக்குள் சென்று கோட் நீம் என்ற தித்திக்கும் வேப்பமரத்தைத் தான் வசிக்கும் இடமாக ஆக்கிக் கொண்டார்.
இரவும் பகலும் அங்கேயே இருக்க ஆரம்பித்த அவர் உணவருந்தும் வேளையில் மட்டும் ஷீரடி ஊருக்குள் சென்று அங்கிருந்த குறிப்பிட்ட் ஐந்து வீடுகளில் எதிரில் நின்று பிக்ஷை கேட்கலானார். அவர்களும் பிக்ஷை அளித்தனர்.
பின்னர் பாபா மழைக்காலங்களில் அங்கிருந்த ஒரு பாழும் மசூதியில்
தங்க ஆரம்பித்தார். அங்கு ஒரு பள்ளத்தைத் தோண்டி அக்னியையும் கட்டைகளையும் போட்டு நிரந்தராக்னியை ஸ்தாபித்தார்.
அன்று அவர் ஆரம்பித்த அந்த அக்னி இன்று வரை எரிந்து கொண்டிருக்கிறது.
அதற்கு துனி என்று பெயர்.
ஊரில் அவர் யாருடனும் ஆரம்பகாலத்தில் பேசவில்லை. யாருக்கேனும் வியாதி என்றால் அவர்களின் வியாதியைக் குணப்படுத்தி வந்தார். பூச்செடிகளை நட்டு கிடைக்கும் பூக்களை கோவில்களுக்குக் கொடுத்து வந்தார்.
இவரது கீர்த்தி சிறிது சிறிதாகப் பரவ ஆரம்பித்தது.
அவரது அபூர்வ ஆற்றலைக் கண்டவர்கள் அவர் ஒரு பெரிய மகான் என்று உணர ஆரம்பித்து வணங்க ஆரம்பித்தனர்.
நாளடைவில் ஷீர்டியின் பெருமை உலகத்திற்குத் தெரிய ஆரம்பித்தது.
இன்று ஷீர்டிக்கு ஆயிரக்கணக்கானோர் சென்று பாபாவின் அருளைப் பெற்று வருகின்றனர்.
**