

Post No. 15,361
Date uploaded in London – 25 January 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நைமிசாரண்யமும், தண்டகாரண்யமும்!
ச. நாகராஜன்
தெய்வீக பாரத தேசத்தில் பல ஆரண்யங்கள் இதிஹாஸ புராணங்களில் குறிப்பிடப்படுகின்றன.
இந்த ஆரண்யங்களில் முனிவர்கள் தவம் புரிந்தனர். முக்கியமான கோவில்கள் அமைக்கப்பட்டன. தெய்வங்களுடன் தொடர்பு கொண்ட பல இடங்கள் இந்த வனங்களில் உள்ளன.
அவற்றில் நைமிசாரண்யம், தண்டகாரண்யம் ஆகியவற்றை இங்கு பார்க்கலாம்.
நைமிசாரண்யம்
நைமிசாரண்யத்திலேயே அனைத்து முனிவர்களும் தவம் செய்வதையும் பெரும்பாலான உரையாடல்கள் அங்கேயே நடைபெறுவதையும் பல்வேறு புராணங்களில் நாம் காண்கிறோம். நைமிசாரண்யம் ஏன் முனிவர்கள் அணுகும் இடமானது?
இந்தக் கேள்விக்கு விடையை சௌனக முனிவர் சூதரைப் பார்த்துப் பேசும் போது அறிகிறோம்!
சௌனகர் சூதரைப் பார்த்துச் சொன்னது:-
“பிரமதேவர் எங்களுக்கு மனோகரமாகிய சக்கரத்தைக் கொடுத்து ஆக்ஞை ஒன்று செய்தனர். அதாவது நீங்கள் யாவரும் புண்ணிய க்ஷேத்திரத்தை உத்தேசித்து இந்தச் சக்கரத்தின் பின்னே செல்லுங்கள்.இது எவ்விடத்தில் சிதறி விழுகின்றதோ அந்த இடம் தான் புண்ணிய பூமி. அந்த இடத்தில் ஒரு போதும் கலி தோஷம் அணுகமாட்டாது. ஆகையால் கிருத யுகம் வரும் மட்டும் நீங்கள் யாவரும் அவ்விடத்தில் தவம் செய்து கொண்டிருங்கள் என்று கட்டளையிட்டனர் .நாங்களெல்லாம் சகல தேசங்களையும் பார்க்க வேண்டுமென்கிற இச்சையினால் அவரால் சொல்லப்பட்ட கட்டளையை அங்கீகரித்து வேகமாய்ச் சுழன்று போகிற அந்தச் சக்கரத்தின் பின்னால் சென்று கொண்டிருந்தோம்.சுழன்று கொண்டே வந்த அந்தச் சக்கரம் இவ்விடத்தில் சிதறி விழுந்தது. நாங்கள் அதைப் பார்த்தோம்.அதனால் இந்த க்ஷேத்திரம் நைமிசம் என்ற பெயரைப் பெற்றது.இது மகா பரிசுத்தமானது.இவ்விடத்தில் கலியின் பிரவேசமே இல்லை.அதனால் என்னாலும் முனிவர்களாலும் மகாத்மாக்களாகிய சித்தர்களாலும் வசிக்கும் இடமாகக் கொள்ளப்பட்டது.”
-தேவி பாகவதம், மூதல் ஸ்கந்தம், 2ஆம் அத்தியாயம்
நைமிசாரண்யம் எங்கு உள்ளது?
நைமிசாரண்யம் உத்தர பிரதேசத்தில் லக்னோவிலிருந்து 84 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இது 108 வைணவ திவ்ய ஸ்தலங்களுள் ஒன்று. இது கோமதி நதிக்கரையில் உள்ளது.
நேமி என்ற சொல்லுக்கு சக்கரம் என்று பொருள். நேமி சார்ந்த ஆரண்யம் என்பதால் இது நைமிசாரண்யம் என்ற பெயரைப் பெற்றது.
இங்கு தான் சௌனகர் 12 ஆண்டுகளில் செய்யக்கூடிய சத்திர யாகத்தைச் செய்தார்.
இங்கு தான் வியாஸர் மஹாபாரதத்தை இயற்றினார்.
இங்கு தான் சுகர் பாகவதத்தை இயற்றினார்.
திருமங்கையாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட திருத்தலம் நைமிசாரண்யம்.
தண்டகாரண்யம்
தண்டகாரண்யம் இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ள காட்டுப் பகுதியாகும். 92200 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. ராமர் தனது 14 வருட வனவாசத்தின் போது சில காலம் சீதை மற்றும் லக்ஷ்மணனுடன் இங்கு தங்கி இருந்தார். இங்கு அவர் அகஸ்திய முனிவரைச் சந்தித்தார். முனிவர்கள் தவம் புரிந்து வந்த இந்த இடத்தில் அவர்களை அவர் பாதுகாத்தார். கர தூஷணர்களை வதம் செய்தார். சூர்ப்பநகையின் அங்கங்களை அறுத்தது, மாரீசன் மாயமானாக வந்தது, சீதையை ராவணன் தூக்கிச் சென்றது போன்ற ராமாயணத்தின் முக்கிய நிகழ்வுகளைக் கொண்டது தண்டகாரண்யம்.
வால்மீகி ராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில் முழு வரலாற்றையும் படிக்கலாம்.
தண்டகாரண்யம் என்ற பெயர் எப்படி வந்தது?
இக்ஷ்வாகு வமிசத்தின் முதல்வனான் இக்ஷ்வாகுவின் புதல்வர்களுள் ஒருவன் தண்டகா என்ற பெயரைப் பெற்றவன். இக்ஷ்வாகுவிற்குப் பிறகு அவன் விந்தியம் முதல் இமாலயம் வரை உள்ள பகுதியை அரசாள ஆரம்பித்தான். ஒரு முறை அவன் வேட்டையாடச் செல்கையில் சுக்ராசாரியாரின் புதல்வியான அராஜஸின் அழகில் மயங்கி அவளைக் கற்பழித்தான். இதைத் தந்தையிடம் அரா கூற அவர் வெகுண்டார். தன் மகளிடம் தவம் செய்யுமாறு கூறிய அவர் தீமழை பொழிந்து தண்டகனின் ராஜ்யத்தை அழிப்பதாகக் கூறினார். அதன்படியே இந்திரன் தண்டகனின் ராஜ்யத்தின் மீது தீ மழை பொழிய அவன் அழிந்தான். அவனது ராஜ்யமும் ஆரண்யமானது. அதுவே தண்டகாரண்யம் என்ற பெயரைப் பெற்றது.
உத்தர ராமாயணத்தில் இந்த சரித்திரத்தை முழுவதுமாகப் படிக்கலாம்.
**