திருமாலுக்கு சிவன் கொடுத்த சக்ராயுதம்! அருணகிரி சொல்லும் அதிசயச் செய்திகள் ! (Post.15,368)

Written by London Swaminathan

Post No. 15,368

Date uploaded in Sydney, Australia –  28 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும் பொருள் வளமும்- Part 3

***

திருப்புகழில் மதுரைத் திருவிளையாடல் புராணம்

செம் சொல் மா திசை வட திசை குட திசை … தமிழ் மொழி

விளங்கும் சிறந்த தெற்கு திசை, வடதிசை, மேற்கு திசை,

விஞ்சு கீழ் திசை சகலமும் இகல் செய்து … மேலான கிழக்கு

திசை முதலிய திக்குகள் எல்லாவற்றிலும் போர் செய்து,

திங்கள் வேணியர் பல தளி தொழுது … நிலவை அணிந்த சடை

முடியராகிய சிவபெருமானுடைய பல கோயில்களையும் தொழுது,

உயர் மக மேரு செண்டு மோதினர் அரசருள் அதிபதி …

உயர்ந்த பெரிய மேரு மலையின் மீது செண்டை எறிந்த க்கரவர்த்தியே**,

தொண்டர் ஆதியும் வழிவழி நெறி பெறு … தொண்டர்

முதலானோர் வழிவழி அடிமையாக இருந்து முத்தி பெற அருளிய

செந்தில் மா நகரில் இனிது உறை அமரர்கள் பெருமாளே. …

திருச்செந்தூரில் இனிது வீற்றிருக்கும் தேவர்கள் பெருமாளே.

* முருகன் பாண்டியச் சக்கரவர்த்தி உக்கிர குமாரனாய் அரசாண்டபோது பொன் பெற வேண்டி மேருமலையைச் செண்டாலடித்த திருவிளையாடலைக் குறிக்கும்.

***

திருப்புகழில் திருக்குறள் பற்றி அருணகிரிநாதர்

படர்புவியின் மீது மீறி வஞ்சர்கள்

     வியனினுரை பானு வாய்வி யந்துரை

          பழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரி …… சங்கபாடல்

பனுவல்கதை காவ்ய மாமெ ணெண்கலை

     திருவளுவ தேவர் வாய்மை யென்கிற

          பழமொழியை யோதி யேயு ணர்ந்துபல் …… சந்தமாலை

மடல்பரணி கோவை யார்க லம்பக

     முதலுளது கோடி கோள்ப்ர பந்தமும்

          வகை வகையி லாசு சேர்பெ ருங்கவி …… சண்டவாயு

மதுரகவி ராஜ னானென் வெண்குடை

     விருதுகொடி தாள மேள தண்டிகை

          வரிசையொடு லாவு மால கந்தைத …… விர்ந்திடாதோ

அடல்பொருது பூச லேவி ளைந்திட

     எதிர்பொரவொ ணாம லேக சங்கர

          அரஹர சிவாம ஹாதெ வென்றுனி …… அன்றுசேவித்

தவனிவெகு கால மாய்வ ணங்கியு

     ளுருகிவெகு பாச கோச சம்ப்ரம

          அதிபெல கடோர மாச லந்தர …… னொந்துவீழ

உடல்தடியு மாழி தாவெ னம்புய

     மலர்கள்தச நூறு தாளி டும்பக

          லொருமலரி லாது கோவ ணிந்திடு …… செங்கண்மாலுக்

குதவியம கேசர் பால இந்திரன்

     மகளைமண மேவி வீறு செந்திலி

          லுரியஅடி யேனை யாள வந்தருள் …… தம்பிரானே.

……… சொல் விளக்கம் ………

படர் புவியின் மீது மீறி வஞ்சர்கள் … பரந்துள்ள இப்பூமியில்

அளவுக்கு மிஞ்சி வஞ்சனை உள்ள லோபியர்களிடம்

வியனில் உரை பானுவாய் வியந்து உரை … (பொருள் பெறுதற்கு

அவர்களைச்) சிறப்பாக சூரியனே என்று பாராட்டிக் கூறியும்,

பழுது இல் பெரு சீல நூல்களும் … குற்றம் இல்லாத பெரிய

ஒழுக்க நூல்களையும்,

தெரி சங்க பாடல் … தெரியவேண்டிய சங்க நூல் பாடல்களையும்,

பனுவல் கதை காவ்யமாம் எண் எண் கலை … வரலாற்று

நூல்களையும், கதைகளையும், காப்பியங்களையும், அறுபத்து நான்கு

கலை நூல்களையும்,

திருவ(ள்)ளுவ தேவர் வாய்மை என்கிற பழமொழியை ஓதியே உணர்ந்து … திருவள்ளுவ தேவர் அருளிய பொய்யாமொழி ஆகிய திருக்குறள் முதலிய பழமொழி நூல்களை ஓதியும் உணர்ந்தும்,

பல் சந்த மாலை மடல் பரணி கோவையார் … பலவகையான

சந்த மாலைச் செய்யுட்கள், மடல், பரணி, கோவையார்,

கலம்பகம் முதல் உளது கோடி கோள் ப்ரபந்தமும்

வகைவகையில் … கலம்பகம் முதலான கோடிக்கணக்கான

பிரபந்தங்களை வகைவகையாய்ப் பாடி,

ஆசுசேர் பெரும் கவி சண்டவாயு மதுரகவி ராஜன் நான்

என்(று) … பெருமைமிக்க ஆசுகவி, சண்டமாருதன், மதுரகவிராஜன்

நான் என்று (புலவர்கள் தம்மைத் தாமே கூறிக்கொண்டு),

வெண் குடை விருது கொடி தாள மேள தண்டிகை … வெண்

குடை, வெற்றிக் கொடி, தாளம், மேளம், பல்லக்கு முதலான

வரிசையொடு உலாவு மால் அகந்தை தவிர்ந்திடாதோ …

சிறப்புச் சின்னங்களோடு உலவி வரும் மயக்க அறிவும், அகங்காரமும் அவர்களை விட்டு நீங்காவோ?

***

திருமாலுக்கு சக்கர ஆயுதம் கொடுத்த சிவபெருமான்

அடல் பொருது பூசலே விளைந்திட … (ஜலந்தராசுரனுடன்)

வலிமையுடன் போர் செய்து பெரிய ஆரவாரம் உண்டாக

எதிர் பொர ஒணாமல் ஏக … அவனுடன் எதிர் நின்று போர் செய்ய முடியாமல் புறந்தந்து (திருமால்) சென்று,

சங்கர அரஹர சிவா மஹா தேவ என்று உ(ன்)னி அன்று

சேவித்து … சங்கரா, அரகர சிவா மகா தேவா என்று தியானித்து அன்று ஆராதனை புரிந்து,

அவனி வெகு காலமாய் வணங்கி உள் உருகி … மண்ணுலகில்

வெகு காலமாகத் தொழுது, மனம் உருகி,

வெகு பாச கோச சம்ப்ரம அதி பெல கடோர மா சலந்தரன்

நொந்து வீழ … கொடிய பாசக் கயிறு, கவசம் முதலிய சிறப்பான

ஆயுதங்களும், மிக்க வலிமையும் கொடுமையும் உள்ள பெரும்

ஜலந்தரன் வருந்தி விழுமாறு

உடல் தடியும் ஆழி தா என … அவனுடைய உடலைப்

பிளக்கவல்ல சக்கரத்தைத் தந்தருள்வீர் என்று வேண்டி,

அம் புய மலர்கள் தச நூறு தாள் இடும் பகல் … தாமரை

மலர்கள் ஆயிரம் கொண்டு (சிவனுடைய) திருப்பாதங்களில்

பூஜித்து வந்த அந்த நாட்களில் (ஒரு நாள்),

ஒரு மலர் இல்லாது கோ அணிந்திடு செம் கண் மாலுக்கு …

ஒரு மலர் இல்லாது குறைந்துபோக, (அதற்கு ஈடாகத் தன்)

கண்ணையே எடுத்து அர்ச்சித்த சிவந்த கண்ணுடைய திருமாலுக்கு

உதவிய மகேசர் பால … அந்தச் சக்ராயுதத்தையே உதவி அருளிய*

மகா தேவருடைய குழந்தையே,

இந்திரன் மகளை மணம் மேவி … இந்திரன் பெண்ணாகிய

தேவயானையை திருமணம் செய்து கொண்டு,

வீறு செந்திலில் உரிய அடியேனை ஆள வந்து அருள்

தம்பிரானே. … பெருமை நிறைந்த திருச்செந்தூரில் (உன்னிடம்)

உரிமை பூண்ட அடியேனாகிய என்னை ஆட்கொள்ளும் பொருட்டு

வந்தருளிய பெரும் தலைவனே.

திருமால் ஆகிய தேவர்களை வென்ற பின், வலிமை வாய்ந்த ஜலந்திரன் என்னும் அசுரன் சிவ பெருமானையும் வெல்ல கயிலைக்குச் சென்றான். சிவன் ஒரு மறையவனாகத் தோன்றி, ஒரு சக்கரத்தை அமைத்து, நீ அந்த சக்கரத்தைத்தாண்டி வந்தால் கயிலைக்குப் போகலாம் என்றார். அவன் அதை எடுக்கப்போனபோது கழுத்து அறுபட்டு மாண்டான். அந்தச் சக்கரத்தை அடைய திருமால் சிவனை தினமும் ஆயிரம் மலர்களால் அர்ச்சித்துப் பூஜித்தார். ஒரு நாள் ஒரு பூ  குறையவே தன் கண்ணையே மலராக இட்டுப் பூஜித்தார். பின்னர் சுதர்ஸன சக்கரத்தையும் சிவனிடமிருந்து பெற்றார்.

***

தகராகாசம் என்றால் என்ன ?

தகரத்து அந்தச் சிகரத்து ஒன்றி … தகராகாசமாக இருந்து* அழகிய

வேதசிரோமுடியாம் பேரிடத்தைப் பொருந்தி,

தடநற் கஞ்சத் துறைவோனே … அகன்ற நல்லிடமான இதயக்

கமலத்தில் வீற்றிருப்பவனே,

ஆன்மாக்களின் இதய தாமரைக்கு நடுவே ஞானமயமாக விளங்கும் ஆகாயம் தகராகாசம்‘ எனப்படும்.

***

தமிழ்ப்புலவன் என்ற பட்டம் வேண்டும் !

புரக்கைக்கு உன் பதத்தைத் தந்து எனக்குத் தொண்டு உறப்

பற்றும் புலத்துக் கண் செழிக்கச் செந்தமிழ் பாடும் புலப்

பட்டம் கொடுத்தற்கும் … என்னைக் காப்பதற்காக உனது

திருவடியைத் தந்து நான் தொண்டு செய்து உன்னைப் பற்றும்படியான ஞானக் கண் (அறிவு நிலை) செழித்தோங்கவும், செந்தமிழ் பாடும் புலவன் என்னும் பட்டத்தை (உலகோர்) கொடுப்பதற்கும்,

கருத்தில் கண் படக் கிட்டும் புகழ்ச்சிக்கும் க்ருபைச் சித்தம்

புரிவாயே … ஞானக் கண் பெறக் கிட்டும்படியான புகழைப்

பெறுவதற்கும் அருள் மனம் கொண்டு உதவுவாயாக

***

பிள்ளையார் பாரதம் எழுதிய கதை

பாயு மா மத தந்தி முகம் பெறும் ஆதி பாரதம் என்ற பெரும்

கதை பார மேருவில் அன்று வரைந்தவன் இளையோனே …

மிகுந்து பாய்கின்ற மதம் கொண்ட யானையின் முகத்தைக் கொண்ட

முதல்வரும், பாரதம் என்ற பெரிய கதையை பாரமான மேரு மலையில் அந்நாள் (தன் ஒடிந்த தந்தத்தால்) எழுதியவருமான கணபதிக்கு தம்பியே,

***

முருகனின் மாலை தமிழ்ப் பாமாலை !

செந்தமிழ் சொல் பாவின் … செந்தமிழ்ச் சொற்களான பாடல்களை

மாலைக் கார … மாலைகளாக அணிந்துகொள்பவனே,

அண்டர் உபகார … தேவர்களுக்கெல்லாம் உபகாரியே,

சேவற் கார … சேவலைக் கொடியாக உடையவனே,

(திருச்செந்தூர் திருப்புகழ் பாடல்கள் – நன்றி கெளமாரம். காம்)

To be continued……………..

—Subham—

Tags-  திருமாலுக்கு சிவபெருமான் , சக்ராயுதம்! அருணகிரிநாதர் , அதிசயச் செய்திகள்! திருப்புகழில் , சொல் அழகும் பொருள் வளமும்- Part 3

Leave a comment

Leave a comment