ஹனுமானுக்கு பிரம்மா வரம் அருளியது! (Post No.15,421)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,421

Date uploaded in London – 13 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் வரங்கள் (37)    

ராமாயணத்தில் வரங்கள் (37) ஹனுமானுக்கு பிரம்மா வரம் அருளியது!

ச. நாகராஜன் 

அடுத்து சுந்தரகாண்டத்தில் ப்ரம்மாஸ்திரத்தால் ஹனுமார் கட்டுண்டது என்ற நாற்பத்தெட்டாவது அத்தியாயத்தில் ஹனுமாருக்கு பிரம்மா வரம் அருளிய செய்தியைப் பார்க்கிறோம்.

கடுமையான யுத்தத்தில் ஜம்புமாலி, விரூபாக்ஷன்,அக்ஷயகுமாரன் உள்ளிட்டோர் ஹனுமாரால் கொல்லப்பட்டனர்.

இதையறிந்த ராவணன் ஆத்திரத்துடன் இந்திரஜித்தை அழைத்து அவனை ஹனுமானை வெல்லுமாறு கூறி அனுப்பினான். பல வித பாணங்களைத் தொடுத்து அவன் ஹனுமார் மீது விட்டான். ஆனால் அவை ஒன்றும் ஹனுமாரை பாதிக்கவில்லை. 

இதனால் கவலையுற்ற இந்திரஜித் ஹனுமார் மீது ப்ரம்மாஸ்திரத்தை பிரயோகித்தான். அந்த அஸ்திரத்தல் அவன் ஹனுமாரைக் கட்டிப் பிடித்து விட்டான். ஹனுமார் கை கால்களை அசைக்க முடியாதவராய் கீழே விழுந்தார்.

 அப்போது அவர் பிரம்மாவின் மஹிமையினால் தனது வேகம் குன்றியிருப்பதைக் கண்டு கொண்டு, “என் அஸ்திரத்தால் கூட நீ அடங்கி இருத்தல் க்ஷண காலமே” என்ற பிரம்மாவின் அனுக்ரஹத்தை அப்போது நினைத்துக் கொண்டார். 

தத: ஸ்வாயம்புவைர் மந்த்ரைர் ப்ரஹ்மாஸ்த்ர மபிமந்தரிதம் |

ஹனுமாம்ஸ் சிந்தயமாஸ வரதானம் பிதாமஹாத் ||

   சுந்தர காண்டம் நாற்பத்தெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண்  41

 ஹனுமான் – ஹனுமார்

ஸ்வாயம்புவை: – ஸ்வயம்புவினுடைய

மந்த்ரை – மந்திரங்களினால்

அபிமநத்ரிதம் – ஜபித்து விடப்பட்ட

ப்ரஹ்மாஸ்த்ரம் – ப்ரம்மாஸ்திரத்தைப் பற்றியும்

தத: – அப்படியிருந்தும்

பிதமஹாத் – பிரம்மாவிடத்தினின்று

வரதானம் – வரம் பெற்றிருப்பதையும்

சிந்தயாமாஸ – மனதினுள் ஆராய்ச்சி செய்து கொண்டார்.

ப்ரம்மாஸ்திரத்திற்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டியதையும் அதிலிருந்து விடுவித்துக் கொள்ள ப்ரமாவின் அனுக்ரஹத்தையும் பற்றி ஹனுமார் சிந்தித்தார்.

அப்போது அரக்கர்கள் ஹனுமார் செயலற்று வீழ்ந்து கிடப்பதைப் பார்த்து உறுதியான சணல் நார்களாலும் மரப்பட்டைகளாலும் அவரைக் கட்டினார்கள்.

ப்ரம்மாஸ்திரத்தால் கட்டுண்டு இருப்பவரை மரப்பட்டைகளாலும் சணல்நார்களாலும் கட்டினால் இன்னொரு கட்டு போடப்பட்டபோது ப்ரம்மாஸ்திரம் விடுபட்டு விடும்.

ஸ பத்தஸ் தேந வல்கேந விமுக்தோஸ்த்ரேண வீர்யவாந் |

அஸ்த்ரபந்த: ஸ சாந்யம் ஹி ந பந்த மநுவர்த்ததே ||

ஸ: வீர்யவாந் – அந்த வீர்யவான்

வல்கேந ச – மரப்பட்டைகளினால்

பந்த: – கட்டுண்டவராய்

தேன அஸ்த்ரேண – அந்த அஸ்திரத்தால்

விமுக்த: – விடுபட்டார்

ஹி – ஏனென்றால்

ஸ: – அந்த

அஸ்த்ர பந்த: – அஸ்திரக்கட்டானது

அன்யம் வ தே – மற்றொரு பிணையை

ந அநுவர்ததே – ஒத்துக் கொள்ளாது

சுந்தர காண்டம் நாற்பத்தெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண்  49

ஹனுமார் ப்ரம்மாஸ்திரத்திலிருந்து விடுபட்டதையும் மரப்பட்டைகளினால் மட்டும் கட்டுண்டிருப்பதையும் இந்திரஜித் உணர்ந்து கொண்டான். ஹனுமாரோ தான் ப்ரம்மாஸ்திரத்திலிருந்து விடுபட்டதைக் காட்டிக் கொள்ளவில்லை.

அவரை அரக்கர்கள் இழுத்துக் கொண்டு போய் ராவணனிடம் நிறுத்தினார்கள்.

கோபம் கொண்ட ராவணன் ஹனுமாரைப் பார்த்து, “நீ யார். உள்ளதை உள்ளபடி சொல். எதற்காக இங்கு நீ வந்தாய்?” என்று கேட்டான். 

உடனே ஹனுமார் கீழ்க்கண்டவாறு பதிலைத் தருகிறார்:

ரக்ஷணார்த்தந்து தேஹஸ்ய ப்ரதியுத்தா மயா ரணே |

அஸ்த்ரபாஷைர் ந ஸக்யோஹம் பந்தும் தேவாஸுரைரபி ||

பிதாமஹா தேவ வரோ மமா ப்யேஷோப்யுபாகத: |

ராஜாநம் த்ரஷ்ட்காமேந மயாஸ்த்ர மநுவர்த்திதம் ||

சுந்தர காண்டம் ஐம்பதாவது அத்தியாயம் ஸ்லோக எண்கள்  15,16,17

 ரணே – யுத்தத்தில்

தேஹஸ்ய – சரீரத்தின்

ரக்ஷணார்த்தம் து – பாதுகாப்பிற்காகத்தான்

மயா – என்னால்

ப்ரதியுத்தா: – எதிர்த்து சண்டை செய்யப்பட்டார்கள்

தேவாசுரை: அபி – தேவர்களாலும் அசுரர்களாலும் கூட

அஸ்த்ரபாஷைர் – அஸ்திரங்களைக் கொண்டு

பந்தம் – பிணைக்க

அஹம் – நான்

சக்ய ந: – சாத்தியமானவனில்லை

ஏஷ: வர: அபி – இந்த வரமும்

மம – எனக்கு

பிதாமஹான் ஏவ- பிரம்மதேவனிடத்தினின்றே

அம்யுபாகத: – கிடைத்தது

 ராஜாநம் – அரசரை

த்ரஷ்டுகாமேந – காண விரும்பியதால்

மயா – என்னால்

அஸ்த்ரம் – ப்ரம்மாஸ்திரமானது

அநுவர்த்திதம் – ஏற்றுக்கொள்ளப்பட்டது

அபி – என்றாலும் கூட

ராக்ஷஸை: – அரக்கர்களால்

அபிபீடித: – பிடிக்கப்பட்டவனாக

து – ஆனதுமே

அஸ்த்ரேண – பிரம்மாஸ்திரத்திலிருந்து

அஹம் – நான்

விமுக்த: – விடுபட்டேன்

இப்படிக் கூறி பின்னர் ராவணனுக்கு ஹனுமார் தனது உபதேசத்தை ஆரம்பித்தார்.

பிரம்மா ஹனுமாருக்கு கொடுத்த இந்த வரம் பற்றிய முழு விவரங்களும் இங்கு கூறப்படவில்லை;

**

Leave a comment

Leave a comment