பறவை ஞானிகள் ‘பரமஹம்சர்’ பற்றி அருணகிரிநாதர் (Post.15,423)- Part 20

Written by London Swaminathan

Post No. 15,423

Date uploaded in Sydney, Australia –  14 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 20

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 20

***

சொல் நயமும் பொருள் வளமும்

மீண்டும் மீண்டும் படித்துப்பாருங்கள்

அலை எறியும் எழில் சண்ட உததி வயிறு அழல் மண்ட

அதிர வெடி பட அண்டம் இமையோர்கள் அபயம் என …

அலை வீசும் வலிமை வாய்ந்த கடலின் உட்புறத்தில் நெருப்பு

நெருங்கிப் பற்றிக் கொள்ள, அண்டம் அதிர்ச்சியுடன் வெடிபட,

தேவர்கள் அடைக்கலம் என்று முறையிட,

நடு நின்ற அசுரர் அடி உண்டு அவர்கள் முனை கெட

நின்று பொரும் வேலா … இடை நிலத்தே நின்ற அசுரர்கள்

அழிய, அடிபட்டு அவர்களின் சேனைகள் அழிய, நின்று

சண்டை செய்த வேலனே,

தலை மதிய நதி தும்பை இள அறுகு கமழ் கொன்றை

சடை முடியில் அணிகின்ற பெருமானார் தரு குமர …

தலையில் நிலவு, கங்கை, தும்பை, இள அறுகம் புல், மணம்

வீசும் கொன்றை மலர் இவைகளைச் சடை முடியில் அணிந்த

சிவபெருமான் அருளிய குமரனே,

விட ஐந்து தலை அரவு தொழுகின்ற தணி மலையில்

உறைகின்ற பெருமாளே. … விஷம் கொண்ட ஐந்து தலைகளை

உடைய பாம்பு* பூஜித்து வணங்கும் திருத்தணிகை மலையில்

வீற்றிருக்கும் பெருமாளே.

தணிகை மலையில் வாசுகியும், ஆதிசேஷனும் பூசித்ததாகத்

தணிகைத் தல புராணங்கள் கூறுகின்றன.

***

நான்கு தலை ஐராவதம்

(ஜனவரி மாதம் தாய்லாந்து சென்றபோது பாங்காக் நகரில் தெரு முச்சந்திகளிலும் சதுக்கங்களிலும் 4 தலை யானைச் சிலைகளைக் கண்டேன்)

பட்ட(ம்) நால் பெரும் மருப்பினால் கர … நெற்றிப் பட்டமும்,

நான்கு* பெரிய தந்தங்களும், (தொங்கும்) துதிக்கையும் உடைய,

இபத்தின் வாள் பிடியின் மணவாளா … (ஐராவதம் என்னும்)

யானை வளர்த்த, ஒளி பொருந்திய பெண் யானை போன்ற

நடையை உடைய (தேவயானையின்) மணவாளனே,

பச்சை வேய்ப் பணவை கொச்சை வேட்டுவர் பதிச்சி …

பச்சை மூங்கிலால் ஆகிய பரண் மீது (தினைப் புனத்தைக்

காப்பதற்காக) நின்ற, பாமர குலத்தவர்களான வேடர்களுடையஊரிலிருந்த, வள்ளியின்

தோள் புணர் தணியில் வேளே … தோளை அணைந்த

திருத்தணிகைத் தலைவனே,

எட்டு(ம்) நால் கர ஒருத்தல் மாத் திகிரி எட்டும் …

தொங்கும் துதிக்கையை உடைய யானைகளும், பெரிய எட்டு

மலைகளும் (கிரெளஞ்ச மலையும் குலகிரிகள் ஏழும்),

மாக் குலைய எறி வேலா … நடுங்கும்படி செலுத்திய வேலனே,

எத்திடார்க்கு அரிய முத்த … உன்னைப் போற்றித்

துதிக்காதவர்களுக்கு அரிதான முத்தனே (பாசங்களினின்று

இயல்பாகவே நீங்கியவனே),

பாத் தமிழ் கொண்டு எத்தினார்க்கு எளிய பெருமாளே. …

தமிழ்ப் பாக்களால் போற்றுபவர்களுக்கு எளிதான பெருமாளே.

***

தன்னைப் பற்றி அருணகிரிநாதர்

விரித்து அருண கிரிநாதன் … அருணகிரிநாதன் என்ற இந்த

அன்பன் விரிவாக

உரைத்த தமிழெனு மாலை … கூறிய தமிழினால் ஆன இந்தத்

திருப்புகழ் மாலையை

மிகுத்தபல முடனோத மகிழ்வோனே … நிரம்பிய ஆற்றலுடன்

பாட உள்ளம் மகிழ்பவனே,

வெடித்து அமணர் கழுவேற … சமணர்கள் உடல் வெடித்துக்

கழுமரத்தில் ஏறவும்,

ஒருத்தி கணவனும் மீள … ஒப்பற்ற மங்கையர்க்கரசியின்

கணவனாகிய பாண்டியன் (சமணப் படுகுழியிலிருந்து) உயிர் மீளவும்,

விளைத்ததொரு தமிழ்பாடு … அற்புதங்கள் விளைத்த தேவாரத்

தமிழ் மறையைப் பாடிய

புலவோனே … ஞான பண்டிதனாக அவதரித்த திருஞானசம்பந்தனே,

***

திருப்புகழ் பற்றி

திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும் திருத்தணி மேவும்

பெருமாளே. … திருப்புகழ் ஓதும்* கருத்துள்ள அடியார்கள்

கூடுகின்ற திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.

அருணகிரி நாதரின் இந்த வாக்கியம் பொய்யாகாதபடி, ஆண்டுதோறும் டிசம்பர் 31ம் தேதியில் அடியார்கள் திருத்தணிகையில் கூடித் திருப்புகழை ஓதுகின்றார்கள்.

***

இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே

அதிருங் கழல்ப ணிந்து உன் அடியேன் … ஒலிக்கும் வீரக்

கழல்களை அணிந்த உன் திருவடிகளை வணங்கும் நினது

அடிமையாகிய யான்

உன் அபயம் புகுவ தென்று … நீயே புகலிடம் என்று

நிலைகாண … மெய்ந் நிலையை யான் காணுமாறு

இதயந் தனிலி ருந்து க்ருபையாகி … எனது உள்ளத்தில்வீற்றிருந்து கருணை புரிந்து

இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே … துன்பங்களும்

சந்தேகங்களும் கலங்கி ஒழிய அருள்வாயாக.

எதிர் அங்கொருவர் இன்றி … தமக்கு சமானம் ஒருவருமில்லாமல்

நடமாடும் இறைவன் தனது … ஆனந்தத் தாண்டவம் செய்யும்

சிவபெருமானுடைய

பங்கில் உமை பாலா … இடது பாகத்தில் விளங்கும் உமாதேவியின் திருக்குமாரனே,

பதியெங்கிலுமிருந்து விளையாடி … திருத்தலங்கள் எங்கிலும்

இருந்து திருவிளையாடல்கள் புரிந்து,

பலகுன்றிலும் அமர்ந்த பெருமாளே. … பல மலைகளிலும்

எழுந்தருளிய பெருமாளே.

***

பாண்டியர் வளர்த்த தமிழ்

வழுதியர் தமிழின் … பாண்டிய மன்னர்களால் விருத்தி

செய்யப்பட்ட தமிழில்

ஒருபொரு ளதனை … ஒப்பற்ற அகப்பொருள் இலக்கணத்தை

வழிபட மொழியு … வணங்கி வேண்ட விளக்கிய (திருவிளையாடற்

புராணத்தில் வரும் உருத்திரசன்மன் [முருக அம்சம்] – கதை)

முருகேசா … முருகேசனே

***

பறவை ஞானிகள் – பரமஹம்சர் பற்றி

பறவையான மெய் ஞானிகள் மோனிகள் … பரமஹம்ச ஞானிகளும், மெளன நிலை கண்டவர்களும்,

அணுக ஒணா வகை நீடும் இராசிய(ம்) … அணுகுதற்குக்

கூடாததாய் விலகி விளங்கும் இரகசியம்,

பவன பூரக(ம்) ஏகிகமாகிய விந்து நாதம் … காற்றை (மூச்சை)

பூரகமாக** அடக்குவதால் (பிராணாயாமத்தால்) ஒன்றுபடக் கூடிய

சிவசக்தி தத்துவ ஒலியாய் விளங்குவதும்,

பகர ஒணாதது சேர ஒணாதது நினை ஒணாததுவான ...

சொல்ல முடியாததும், அடைய முடியாததும், நினைக்கவும்

முடியாததுமான

தயாபர பதியது ஆன சமாதி மனோலயம் வந்து தாராய் …

கருணைப் பரம் பொருளாய், மூலப் பொருளான மனதை ஒடுக்கும்

சமாதி நிலைப் பேற்றை நீ வந்து (எனக்குத்) தந்து அருள வேண்டும்.

***

பறவையான மெய்ஞ்ஞானிகள் மோனிகள்

அணுகொனா வகை நீடுமிராசிய

பவன பூரக வேகிக மாகிய விந்துநாதம் என்பதன் விளக்கம்

இதில் பறவை மெய் ஞானிகள் என்பது பரமஹம்சர் என்பதன் மொழிபெயர்ப்பாகும். ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற ஞானிகள் இகலோகத்தில் இருந்தும் மெய்ஞ் ஞானத்தை அடைந்தவர்களாவர். எப்படி ஹம்சம் (அன்னப் பறவை) தண்ணீரும் பாலும் கலந்திருந்தாலும் பாலை மட்டும் எடுத்துக் கொள்ளுமோ அது போல ஞானிகள் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளும் பக்குவம் பெற்றவர்களாவர்.

மேலும் ஹம்சம் என்ற சொல் அஹம் ச: = அவன் நானே என்ற இருமையற்ற ஒருமை நிலையை (அத்வைத) உணர்த்துவதாகும். மூச்சு வெளியே போகும் போது ஹம் என்ற சப்தத்துடனும் உள்ளே வரும் போது ச என்ற சப்தத்துடனும் வருவதாக ஞானிகள் கூறுவர்.

இந்தப் பாடலிலும் வேறு ஒரு பாடலிலும் உபநிஷதக் கருத்துக்களை அற்புதமாகப் பாடுகிறார்:

வாசித்துக் காணொ ணாதது

பூசித்துக் கூடொ ணாதது

வாய் விட்டுப் பேசொ ணாதது

மாசர்க்குத் தோணொ ணாதது

நேசர்க்குப் பேரொ ணாதது

மாயைக்குச் சூழொ ணாதது

என்று பாடி மெய்ஞ் ஞானம் அருள வேண்டுகிறார். 

பொருள்: நூல்களால் அறியமுடியாதது, பூஜை புனஸ்காரத்தால் அடைய முடியாதது, வார்த்தைகளால் வருணிக்க முடியாதது, குற்றமுடையோரால் உணர முடியாதது, அன்புடையோரிடமிருந்து விலக முடியாதது, மாயையினால் சூழ முடியாதது.

சொற்கள் எங்கு செல்லாவோ அங்குதான் மெய்ஞ் ஞானம் பிறக்கிறது என்பது உபநிஷத முடிபு. கடவுளைக் கண்டவர் அவனைப் பற்றிப் பேசமுடியாது. அவனைப் பற்றிப் பேசுபவர்கள் அவனைக் காணவில்லை என்றே அர்த்தம். இதைத்தான் தமிழில் கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பர்.

பரமஹம்ச என்று முனிவர்களை அழைப்பது ஏன்?

உயர் அன்னம் (பரம ஹம்ச) என்று ராமகிருஷ்ண பரமஹம்ச ரை யும் ‘ஒரு யோகியின் சுயசரிதை’ என்ற புகழ்பெற்ற நூல் எழுதிய பரமஹம்ச யோகானந்தாவையும் அழைக்கிறோம் . ஒரு முஸ்லீம் படைத் தளபதிக்கு சங்கேத மொழியில் உபதேசம் வழங்கிய சதாசிவ பிரம்மேந்திரர்எழுதிய அருமையான, இனிமையான வடமொழிப் பாடல்களில் அவரது முத்திரை ‘’பரமஹம்ச’’ என்ற சொல் ஆகும்.

ஞானிகளுக்கும் அன்னப் பறவைக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை. காயத்ரீ மந்திர வகைகளில் ஒன்று ஹம்ச காயத்ரீ:–

ஓம் ஹம்சாய வித்மஹே

பரமஹம்சாய தீமஹி

தன்னோ ஹம்சப் ப்ரசோதயாத்

–என்பது ஹம்ச காயத்ரீ. நம் ஆத்மனில் உறையும் ஹம்சத்தை நாம் உணர்வோமாக. அந்தப் பரமஹம்சத்தை ( பரமாத்மா ) தியானிப்போம். அந்த ஹம்சம் நமது அறிவைத் தூண்டட்டும் என்பது மந்திரத்தின் பொருள்.

ஞானிகள் மூச்சை உள்ளே இழுக்கும் போது ‘’அஹம்’’ என்றும் வெளியே விடும்போது ‘’ ச: ’’ என்றும் சப்தம் கேட்கும். “நானே அவன், அவனே நான்” என்ற அத்வைதப் பேருண்மையை உணர்த்தும் சொற்கள் இவை. ‘’தத்வம் அஸி’’, ‘’அஹம் பிரம்மாஸ்மி’’ போன்ற பெரிய மந்திரங்கள் மனிதனும் இறைவனும் ஒன்றும் நிலையை உணர்த்துவன. ‘’ஒன்றாகக் காண்பதே காட்சி புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம்’’ — என்ற அவ்வைப் பெருமாட்டியின் அற்புத மந்திரமும் இதுவே.

‘’ஹம்………ச………ஹம்……..ச………..’’ என்ற மூச்சை அறிவோர் பரம ஹம்சர்கள் ஆவர். தேவி துர்க்கையை நினைத்த மாத்திரத்தில் சமாதியில் மூழ்கிவிட்ட ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கையைப் படித்தோருக்கு இதெல்லாம் தெள்ளிதின் விளங்கும்.

சாந்தோக்ய உபநிஷதத்தில் அன்னப் பறவை கற்பிக்கும் பாடம் வருகிறது.

–subham—

Tags- திருப்புகழ் , அருணகிரிநாதர், அரிய செய்திகள் Part 20, சொல் அழகும், பொருள் வளமும், பறவை ஞானிகள், பரம ஹம்சர், ஹம்ச காயத்ரீ

Leave a comment

Leave a comment