Post No. 15,429
Date uploaded in London – 16 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுபாஷிதச் செல்வம்
உலகால் போற்றப்படுவது எப்படி?
ச. நாகராஜன்
கர்மணா மனஸா வாசா சக்ஷுஷா ச சதுர்விதம் |
ப்ரசாதயதி யோ லோகம் தம் லோகோனுப்ரஸீததி ||
எவன் ஒருவன் தனது செயலாலும் மனதாலும் வாக்காலும் கண்களாலும் உலகை சந்தோஷப்படுத்துகிறானோ அவன் உலகால் போற்றப்படுவான்.
நல்லோர் மகிழ்வது எப்போது?
துஷ்யந்தி போஜனே விப்ரா மயூரா கனகர்ஜனே |
சாதவ: பரகார்யேஷு கலா: பரவிபத்திஷு ||
அந்தணர்கள் போஜனத்தால் சந்தோஷம் அடைகிறார்கள்.
மயிலானது மேக கர்ஜனையைக் கேட்டு மழை வருவதால் சந்தோஷப்படுகிறது.
நல்லவர்கள் மற்றவர்களுடைய சாதனையால் சந்தோஷப்படுகிறார்கள்.
கெட்டவர்களோ மற்றவர்கள் அழிவதால் சந்தோஷப்படுகிறார்கள்.
உலோபி மகிழ்வது எப்போது?
லுப்தமர்த்தேன க்ருஹ்ரீயாத் க்க்ருத்தமஞ்சலிகர்மணா |
மூர்கசந்தாநுவ்ருத்தேன யாதாதத்யேன பண்டிதம் ||
ஒருவருக்கும் ஈயாமல் இருக்கும் உலோபி செல்வத்தால் கவரப்படுகிறான். கோபம் கொள்பவனோ கைகளைக் குவித்து நிற்பதால் சாந்தமடைகிறான். ஒரு மூர்க்கனோ அவனது நடத்தையை அங்கீகரிப்பதால் மகிழ்கிறான். ஒரு பண்டிதனோ சத்தியத்தின் தன்மையால் கவரப்படுகிறான்.
உலோபியின் குணம் பற்றி வள்ளுவர் கூறுவது இங்கு ஒப்புநோக்கத் தக்கது. குற்றங்களில் எல்லாம் தனித்து இலங்குவது பற்றுள்ளம் கொண்டு யாருக்கும் எதையும் ஈயாத தன்மை தான்!
குறள் 438: பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.
சரண் அடைந்தேன்; காப்பாற்றுவீராக! பிரார்த்தனை!
ஆயுர்நஷ்யதி பஷ்யதா ப்ரதிதினம் யாதி க்ஷயம் யௌவனம்
ப்ரத்யாயாந்தி கதா: புனர்ன திவஸா: காலோ ஜகத்தக்ஷக: |
லக்ஷ்மீஸ்தோயதரங்கபங்கசபலா வித்யுச்சலம் ஜீவிதம்
தஸ்மான்யாம் சரணாகதம் சரணதம் த்வம் ரக்ஷ ரக்ஷாதுனா ||
வாழ்நாளாவது ஒவ்வொரு நாளும் கழியக் கழிய ஒருவன் பார்க்கும் போதே குறைந்து கொண்டே போகிறது. இளமை கழிகிறது. சத்தியம் அழிகிறது. காலமானது உலகை விழுங்குகிறது. கடல் அலை போல வளமானது நலிகிறது. மின்னல் போல வாழ்க்கை மின்னி மறைகிறது. ஆகவே, ஓ! சரண் அடைவோரைக் காப்பவரே, சரணடைந்த என்னைக் காப்பாற்றுவீராக!
மழை பொழிய பிரார்த்தனை!
ஷம் தோ வாத: பவதாம் ஷம் நஸ்தபது சூர்ய: |
ஷம் ந: கனிக்ரதத் தேவ: பர்ஜன்யோ அபிவர்ஷது ||
எங்களைத் தூய்மைப்படுத்தும் தென்றலுக்கு வெற்றி.
பிரகாசமாக ஒளிரும் சூரியனுக்கு வெற்றி.
மழைமேகத்திற்கு அதிபதியான அஸ்வினுக்கு நமஸ்காரம்.
மழை மேகம் நீரைப் பொழியட்டும்!
இனிமையாகப் பேசு!
ப்ரியவாக்யப்ரதாநேன சர்வம் துஷ்யந்தி ஜந்தவ: |
அதஸ்ததேவ வக்தவ்யம் வசனே கா தரித்ரதா ||
பிரியமான வார்த்தைகளைப் பேசுவதால் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆகவே அப்படி மட்டுமே பேச வேண்டும். ஒருவன் ஏன் வார்த்தைகளில் தரித்திரத்தைக் காட்ட வேண்டும்?!
“வார்த்தைகளில் கஞ்சத்தனமாக இருக்காமல் இனிய வார்த்தைகளையே பேசு” என்பதே இதன் பொருள்
இனியவை கூறல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவதை இங்கு ஒப்பு நோக்கலாம்.
“இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று” (குறள் 100)
பொருள்:
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது, கனிகள் இருக்கும்போது அவற்றைத் தவிர்த்துப் காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்ற முட்டாள்தனமாகும்.
**