லண்டனில் எதற்காக தமிழ் படிக்க வேண்டும்? (Post No.5006)

லண்டனில் எதற்காக தமிழ் படிக்க வேண்டும்? (Post No.5006)

 

Written by London Swaminathan 

 

Date: 13 May 2018

 

Time uploaded in London – 14-21 (British Summer Time)

 

Post No. 5006

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

லண்டன் க்ரோய்டன் தமிழ்க் கழக (பள்ளி) மூன்றாவது ஆண்டு விழாவில் (Croydon Tamil Kazakam) பேசுவதற்கு என்னை நேற்று (May12, 2018) அழைத்திருந்தார்கள். நானும் க்ரோய்டன் டெபுடி மேயர் மைக்கேல் செல்வநாயகமும்,  க்ரோய்டன் எம். பி. சாரா ஜோன்ஸுல் (Sara Jones, M. P.) பேசினோம். எங்களுக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். நினைவுப் பரிசுகளும் அளித்தனர்.

Shawl to london swaminathan

நான் ஆற்றிய உரையின் சுருக்கம்

 

(முதலில் தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்களை வைத்து— அ, க,

ஆ, பை, கை, மை, வை, வா, போ, தீ, பூ– ஒரு விளையாட்டு விளையாடினேன். தமிழை சுவைபடக் கற்பிக்க   இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு. இது போல தினமும் மாணவர்களுக்கு விளையாட்டு, விடுகதை முதலியன சொல்லி சுவையுடன் வகுப்பை நடத்துங்கள்;  மாணவர்களை ஈடுபடுத்தும் இன்டெர் ஆக்டிவ் கேம்ஸ் (Inter Active Games) இருந்தால் ஆர்வத்துடன் தமிழ் படிப்பார்கள் என்றேன்.

 

பின்னர் சொற்பொழிவைத் துவக்கினேன்:-

எல்லோருக்கும் முதற்கண் வணக்கம்.

நான் ஈராண்டுகளுக்கு முன்னர் உங்கள் ஆண்டு விழாவுக்கு வந்தபொழுது 40 மாணவர்கள் இருந்தனர். இன்று அது எண்பது மாணவர்களாக உயர்ந்து விட்டது என்பதைக் கேட்டு மகிழ்ந்தேன்.

 

ஒவ்வொரு முறையும் எல்லோரும் தமிழ் கற்கச் சொல்லும் காரணங்கள்:–

தமிழ் பழைய மொழி, வளமான மொழி, தாய் மொழி, இனிமையான மொழி என்றெல்லாம் சொல்லுவர். நான் இன்று உங்களுக்கு- இங்குள்ள பெரியோர்களுக்கும்தான்.      — ஒரு புதிய காரணத்தையும் சொல்கிறேன்.

லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரி என்னும் (British Library) பழைய நூலகம் உள்ளது. 20,000 க்கும் அதிகமான நூற்றாண்டுக்கும் முந்தைய பழைய — தமிழ்ப் புத்தகங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார்கள். இது அதிசயமான விஷயம். இவைகளைப் படிக்க- பயன்படுத்த, கட்டணம் ஏதுமில்லை; நீங்கள் முகவரியுடன் கூடிய 2 யுடிலிட்டி பில்கள் (two utility bills) , கையெழுத்துடைய ஒரு பாஸ்போர்ட் அல்லது டிரைவிங் லைசென்ஸுடன் போனால் ஐந்து ஆண்டுகளுக்கு இலவச பாஸ் பெறலாம். நான் மூன்றாண்டுகளுக்கும் மேலாக அடிக்கடி சென்று புஸ்தகங்களை விளம்பரப்படுத்தி வருகிறேன்.

 

‘300 ராமாயணங்கள்’– என்று ஒருவர் புஸ்தகம் எழுதினார். ஆனால் பழைய புஸ்தகங்களைப் பார்த்தபோது அது தவறு; 3000 ராமாயணங்கள் இருக்கும் என்று தெரியவந்தது. எவ்வளவு கவிதைகள், நூல்கள், நாடகங்கள் – ராமாயணத்தை வைத்தே! அது மட்டுமல்ல; ஏரளமான பெண்கள் 100 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் நூல்களை   எழுதியுள்ளனர் . அவர்கள் பெயர்களை நாம் கேட்டதே இல்லை. ஷேக்ஸ்பியரின் நாடகங்களை 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் மொழி பெயர்த்துள்ளனர். இது தவிர, ஏராளமான தமிழ்  நாடகங்கள் உள்ளன.

 

இவைகளை எல்லாம் யாருக்காக சேமித்து வைத்தனர்? எழுதியோரும் இவைகளை எல்லாம் யாருக்காக எழுதினர்? பல புஸ்தகங்களைக் கைகளில் எடுத்தால் அவைகள் உளுத்துப்போன நிலையில் உதிர்ந்தே போகின்றன. இவைகளைப்  படிக்கவாவது நாம் தமிழ் கற்க வேண்டும்’

 

 

 

தமிழால் இணைவோம்

சமீப காலமாக  ஒரு வாசகம் பிரபலமாகி வருகிறது – ‘தமிழால் இணைவோம்’ — அதன் பின்னாலுள்ள அரசியலை மறந்து விட்டு வாசகத்தை மட்டும் கவனியுங்கள். தமிழுக்கு அபாரமான இணக்கும் சக்தி இருக்கிறது. நான் பத்து நிமிட சொற்பொழிவுக்காகவா (மூன்று + மூன்று) ஆறு மணி நேரப் பயணத்தை இன்று செய்கிறேன்; இல்லை. தமிழ் என்று சொன்னவுடன் நாம் ஆர்வம் அடைந்து சிரமத்தைப் பார்க்காமல் வருகிறோம். ஜல்லிக்கட்டு போன்ற கிளர்ச்சிகளின் போது தமிழர்கள் ஒன்றுபட்டதைக் கண்டோம்.

 

தமிழில் இன்னும் என்ன செய்ய வேண்டும்?

 

‘தமிழ் வாழ்க’ என்று கோஷம் போடுகிறோம். தமிழில் எல்லாம் உளது என்கிறோம். ஆனால் இன்னும் நிறைய விஷயங்களைச் செய்ய வேண்டியுள்ளது. பாரதியார் பாடல் போன்ற பல நூல்களுக்கு இன்டெக்ஸ் (INDEX) தேவைப்படுகிறது.

 

பாரதியார் ‘காக’த்தைப் பற்றி எங்கெல்லாம் பாடி இருக்கிறார் என்றால் அதைக் கண்டுபிடிக்க, நமக்கு நேரம் பிடிக்கிறது;

அவர் ‘காக்கைச் சிறகினிலே நந்த லாலா’, என்றும் ‘எத்தித் திருடும் அந்தக் காக்கை’ என்றும், ‘காக்கை குருவி எங்கள் ஜாதி- நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ என்றும் பல இடங்களில் பாடுகிறார். ஒரு இண்டெக்ஸ் இருக்குமானால் இது போன்ற விஷயங்களை விரைவில் கண்டு பிடிக்கலாம்.

 

இது போலத் தமிழ்ப் பழமொழிகள்  தொகுப்பு. நூறு ஆண்டுகளுக்கு முன் மதத்தைப் பரப்ப வந்த மூன்று வெள்ளையர் 20, 000 பழமொழிகளைத் தொகுத்து புஸ்தகங்களாக வெளியிட்டனர். ஆனால் இன்னும் 10, 000 பழமொழிகளாவது தொகுக்கப்படாமல் உள்ளன.

 

அவைகளை எல்லாம் ஸப்ஜெக்ட் (Subject wise) வாரியாக ‘ஆல்பபெட்’ வாரியாக (alphabetical order) வகைப்படுத்த வேண்டும்.

ஆங்கிலத்தில் நான்சென்ஸ் ரைம்ஸ் (Nonsense Rhymes ) உள்ளது போல தமிழில் நிறைய உள்ளன.

சூரியன் தங்கச்சி

சுந்தர வள்ளிச்சி

நாளைக் கல்யாணம்

மேளக் கச்சேரி

ஈக்கையாம் பிரண்டையாம்

ஈயக்காப்பு திரண்டையாம்

…………

 

இது போன்ற பல பொருளற்ற பாடல்களைத் தொகுக்க வேண்டும்.

 

இதோ பாருங்கள் சென்னையில் இருந்து வெளிவரும் கிரியா (creA) தமிழ் அகராதி. உங்கள் தமிழ் பள்ளிக்குக் கொடுப்பதாற்காக கொண்டு வந்துள்ளேன். இதில் பல புதிய தமிழ் சொற்களையும் பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் வழக்குகளையும் காணலாம். இது போல ஆக்கபூர்வமான பணிகள் நிறைய உள்ளன. தமிழ் கற்கும் நாம் இவற்றைப் பிற்கால சந்ததியனருக்காக update ‘அப்டேட்’ செய்யலாம். புதிய சொற்களைச் சேர்க்க உதவலாம்.

எனக்குக் கொடுக்கப்பட்ட நேரம் பத்தே நிமிடங்கள் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்.

 

என்னை இங்கு அழைத்தமைக்கு அனைவருக்கும் நன்றி; வணக்கம்.

 

(( நான் எழுதிச்சென்ற குறிப்புகளில் இருந்தும், நேரம் போதாமையால் சொல்லாமல் விட்ட விஷயம்:

Member of Parliament Sarah Jones addressing the gathering

பழந்தமிழ் புத்தகங்களும் புதிய அகராதிகளும் தேவையா? எல்லாம் கூகிள் GOOGLE  செய்தால் கிடைக்குமே என்று பல நண்பர்கள் என்னிடம் சொல்கிறார்கள்.அது ஓரளவே உண்மை. நான் காயத்ரீ மந்திரத்தைத் தேடி ‘காயத்ரி’ என்று போட்டால் கடவுளுக்குப் பதிலாக ஒரு அரை நிர்வாணப் பெண் படம் தான் வருகிறது; அவள் பெயர் காயத்ரீயாம்! ‘மந்தரா’ என்று போட்டாலுமொரு நடிகையின் படம் வருகிறது. அவள் ஒரு நடிகையாம்! ஆக, சரியான ‘ஸ்பெல்லிங்’ போடாவிட்டால் கூகிள் google விபத்தில் முடியும். மேலும் தமிழில் 10,000 பிளாக்குகள் இருக்கின்றன. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல பேனா கிடைத்தவன் எல்லாம் எழுதத் துவங்கி விட்டான்; தமிழ் தட்டச்சு தெரிந்தவன் எல்லாம் பிளாக் BLOG கட்டுரை எழுதுகிறான். அதில் எது சரி, எது தவறு என்பதை விஷயம் அறிந்தவரே வேறுபடுத்த இயலும். நிறைய தவறுகள் — சொற் குற்றம், பொருட் குற்றம், எழுத்துப் பிழைகள்— மலிந்துள்ளன. சில காலம் அதை மட்டுமே படித்தால் நாமும் ‘தமிழ்க் கொலை’யில் பங்கு கொண்ட பாவம் வந்து சேரும்.

london swaminathan speaking; Deputy Mayor of Croydon Michael Selvanayakam standing behind.

ஆகவே, முறையாகத்  தமிழ் பயில, ஆசிரியரைக் கலந்தாலோசிக்க இத்தகைய பள்ளிகள் தேவை)

 

–சுபம்–

அனுமார் பற்றிய விநோதக் கதை (Post No.4991)

Written by London Swaminathan 

 

Date: 8 May 2018

 

Time uploaded in London – 20-12 (British Summer Time)

 

Post No. 4991

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

தாய்லாந்து, கம்போடியா, இந்தோ நேஷியா போன்ற நாடுகளில் ராமாயணம் தேசீய காவியமாகக் கருதப்படுகிறது. அந்த நாட்டிலேயே ராமாயணம் நடந்ததாக ஒவ்வொரு தலத்திலும் கதை சொல்லுவர். அந்த அளவுக்கு அவர்களின் ரத்தத்தில் ஊறிவிட்டது ராமாயணம்; இதற்கு அடுத்த நிலையில் அவர்களைக் கவர்ந்தது மஹாபாரதம்.

 

நாடகம், ஓவியம், கற்சிலைகள், ஊர்ப் பெயர்கள், மனிதர்களின் பெயர்கள் எல்லாவற்றிலும் இவ்விரு இதி ஹாசங்களையும் காணலாம்.

 

சங்க இலக்கியத்திலும் ஆழ்வார் பாடல்களிலும் கூட வால்மீகியும் கம்பனும் கூறாத கதைகள் இருக்கும்போது, கடல் கடந்த நாடுகளில் புது ராமாயணக் கதை இருப்பதில் வியப்பில்லை.

 

தாய்லாந்து மன்னர்கள் ‘ராமா’ என்று பெயர் சூட்டிக்கொண்டனர். அயோத்யா என்று தலை நகருக்குப் பெயர் வைத்தனர். என்னே ராம பக்தி!

 

10,000 பாடல்களில் ராமாயணத்தை ராமக்யான் என்ற பெயரில் எழுதி வைத்தனர்.

 

இதோ ஒரு சுவையான கதை

 

ராவண ஸம்ஹாரம் முடிந்தது; அரக்கனை விழுத்தாட்ட உதவிய ஒவ்வொருவருக்கும் ஏதேனும் கைம்மாறு செய்ய ராமபிரான் எண்ணினார். இலங்கையை விபீஷணனுக்கு வழங்கினார். கிஷ்கிந்தையை சுக்ரீவனுக்கு அளித்தார். பாதாளத்தை ஜாம்பவானுக்குக் கொடுத்தார்.குஹனுக்கு பூரிராம் (ராமபுரி) என்னும் இடத்தைத் தந்தார்.

 

அடக் கடவுளே! எல்லோருக்கும் அளித்தாகிவிட்டது நெஞ்சிலே குடி இருக்கும் அனுமனுக்கு எதை நல்குவது என்று ஒரே சிந்தனை! ராமன் ஏதாவது ஒரு பணியைக் கொடுக்க மாட்டானா; அவனுக்குச் சேவை செய்வதில் கிடைக்கும் ஆனந்தம்வேறு எதிலும் கிடைக்காதே என்று அனுமன் எண்ணும் வேலையில் ராமன் செப்பினார்:

 

“ஆருயிர்த்தோழா! நான் ஒரு அம்பு விடப்போகிறேன்; அது எந்த இடத்தில் விழுகிறதோ அந்தப் பகுதி முழுவதும் உனக்கே சொந்தம்”– ஆஞ்சநேய ஸ்வாமிக்கு ஒரே மகிழ்ச்சி.

அம்பும் பறந்தது; அதன் பின்னால் அனுமனும் பறந்தான். ஒரு இடத்தில் அது போய் விழுந்தது. அந்த இடத்தின் தற்போதைய பெயர் (Lop Buri Kingdom) லோப்பூரி (லவ புரி).

ராமனின் அம்பு தீ கக்கியதால் அந்த இடம் எல்லாம் கருகியது; ஆனால் ராமனின் அம்பு கீழே விழுந்த பட்ட இடம் மட்டும் பச்சைப் பசேல் என்று பசுமையாக விளங்கியது. அது மட்டுமல்ல; அம்பு விழுந்த இடம் கரடு முரடான மலைப் பகுதி வேறு! அனுமந்த வீரன் தன் வால் மூலம் அதை சமதளப் பூமியாகச் செய்வித்தான்.

 

இன்றும் கூட அந்த லவபுரியை மக்கள் புனிதமாகக் கருதுவதால் அங்குள்ள பொருள்களை எல்லாம் புனிதம் என்று கருதி எடுத்துச் செல்ல ஆயினர். அது முழு மொட்டை ஆகி விடுமோ என்று பயந்த தாய் அரசு அதை பாதுக்ககப்பட்ட இடமாக அறிவித்தது. அந்த இடத்தைச் சுற்றி வேலியும் போட்டது.

 

புவியியல் ரீதியில் அங்கு சுண்ணாம்புக் கல் கிடைப்பதால் அரசு ஏற்றுமதியும் செய்து வருகிறது.

இந்தக் கதையில் தெரியும் உண்மை என்ன?

ராமன் அம்பு பட்ட இடம் கூடப் புனித மானது.

ராமன் அம்பு பட்ட இடம் பொன் விளையும் பூமியாக மாறும்.

ராமாயணம் , தாய்லாந்திலேயே நடந்தது போல லவ புரியை உண்மை என்றே கருதுகின்றனர் மக்கள்.

ராமனின் புதல்வன் லவன் பெயரில் அந்த ஊரும் அருகில் லாவோஸ் என்ற நாடும் உளது.

 

வாழ்க ராமன் புகழ்! வளர்க அனுமன் பக்தி!!

அனுமனுக்கு அயிந்திரம் தெரியும்! கம்பன் தகவல் (Post No.4989)

அனுமனுக்கு அயிந்திரம் தெரியும்! கம்பன் தகவல் (Post No.4989)

 

Written by London Swaminathan 

 

Date: 8 May 2018

 

Time uploaded in London – 9-19 am (British Summer Time)

 

Post No. 4989

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

இயைந்தன இயைந்தன இனைய கூறலும்

மயிந்தம் துயிந்தனும் என்னும் மாண்பினார்

அயிந்திரம் நிறைந்தவ நானை ஏவலால்

நயம் தெரி காவலர் இருவர் நண்ணினார்

 

பொருள்

படையின் முன்பக்கத்தில் இருந்த வானரர் இவ்வாறு மனத்திற்பட்டதைச் சொல்லுகையில், நீதி முறை அறிந்த காவலர்களான மயிந்தன், துமிந்தன் என்ற சிறப்புமிக்க இரு வானரர்கள் ஐந்திர இலக்கணத்தை நன்கு அறிந்தவனான அனுமன் கட்டளையால் அங்கு வந்தனர்.

–வீடணன் அடைக்கலப் படலம், யுத்த காண்டம்

 

இப்படிப் போகிற போக்கில் அனுமனுக்கு அயிந்திரம் தெரியும் என்று சொல்லிவிட்டுப் போகிறான கம்பன்.

 

அனுமனை நவ வியாகரண பண்டிதன் என்றும் ராமாயணம் வருணிக்கும். நவ என்றால் இரண்டு பொருள் உண்டு. புதிய மற்றும் ஒன்பது என்று.

அயிந்திரம் பற்றிய குறிப்பு தொல்காப்பியத்திலும் வருகிறது.

தொல்காப்பியனார் பாடிய தொல்காப்பியத்துக்கு பனம்பாரனார் அளித்தச்  சிறப்புப் பாயிரத்தில்

ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்

பல்புகழ் நிறுத்த படிமையோனே

 

இதற்கு உரை எழுதிய பாஷ்யக்காரர்கள், “வடமொழிக் கண் புகழ்பெற்ற ஐந்திரம் என்னும் இலக்கணத்த்தைக் கற்றுப் புலமை வாய்ந்தவரும்’ என்று எழுதியுள்ளனர்.

 

ஆக ஐந்திரம் என்பது சம்ஸ்க்ருத இலக்கண

நூல் என்பது தெரிகிறது. இது கம்பன் காலத்தில் கூடக் கிடைத்ததாக தோன்றுகிறது.

 

பிருஹஸ்பதி என்பவர் தேவர்களின் குரு. அவர் எழுதிய நூலுக்குப் பெயர் ‘சப்த பாராயணம்’. அதை அவர் இந்திரனுக்குப் போதித்தார். வ்யாகரணம் (இலக்கணம்) என்பது ‘மரணாந்த வியாதி’ என்று உசநா என்ற மாபெரும் கவி கூறியதாக பிருஸ்பதி சொல்கிறார். அதாவது ‘ இலக்கணம் என்பது சாகும் வரை உள்ள நோயாம்’. உண்மைதான்! இலக்கணம் படித்தவன் அதை சாகும் வரை பின்பற்றி, விவாதித்து, வரம்பு மீறியவர்களைக் குறை கூறி, அதிலேயே பொழுதைக் கடத்துவான்.

 

பாரதியார் வாழ்க்கையில்…….

பாரதியார் வாழ்க்கையில் கூட இப்படி ஒரு சம்பவம் நடந்ததை ஆக்கூர் அநந்தாச்சாரியார் எழுதியுள்ளார். சிலர் பாரதியின் பாட்டில் இலக்கணப் பிழை கண்டனர். பாரதி அவர்களை அழைத்தார். உம் கவிதையில் குறை உளது என்றனர்.

என்ன குற்றம்? சொற் குற்றமா? பொருட் குற்றமா ? என்று அவர் வினவினார்.

இரண்டும் இல்லை இலக்கணப் பிழை என்றனர்.

அவர் கேட்டார்? கவிதை முதலில் வந்ததா?

அல்லது இலக்கணம் முதலில் வந்ததா?

 

வந்தவர்கள் சொன்னார்கள்: கவிதைதான் முதலில் வந்தது- என்று.

நான் கவிதைதான் எழுதுகிறேன்; இலக்கணம் அன்று- என்று சொல்லி அவர்களை ஓட்டி விட்டார் பாரதியார்.

‘’இலக்கியமன்றேல் இலக்கணம் இல்லை’’ — என்பது ஆன்றோர் வாக்கு.

 

பிருஹஸதியின் கதைக்குத் திரும்பி வருவோம்.

யார் இந்த தகவலைக் கூறியது. பாணினியின் வியாகரண நூலான அஷ்டாத்யாயீக்கு பேருரை எழுதியவர் பதஞ்சலி முனிவர். அவர் எழுதிய மஹாபாஷ்யம்தான் இந்திரனுக்கு பிருஹஸ்பதி உபதேசித்த சப்த பாராயணம் பற்றி விளம்புகிறது.

 

இது பற்றி தைத்ரீய ஸம்ஹிதை மேலும் ஒரு சுவையான செய்தியைச் சொல்லுகிறது; அந்தக் காலத்தில் லக்ஷண விதிகள் இல்லையாம். லக்ஷண என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்து வந்ததே இலக்கணம்; இதே போல லக்ஷியம் என்ற சொல்லில் இருந்து வந்ததே இலக்கியம் என்று ஆன்றோர் வழங்குவர். ஆக இந்திரன் பகுதி, விகுதி— இவைகளை எல்லாம் பிரித்து ஒரு இலக்கண நூல் செய்தான். அதுதான் ஐந்திரம்;

அயிந்திரம் என்பதே இந்திரன் என்ற சொல்லில் இருந்து பிறந்ததே!

 

தைத்ரீய ஸம்ஹிதைக்கு உரை எழுதிய ஸாயணாச்சாரியார் சொல்கிறார்:-

முன் காலத்தில் சொல் என்பது விளக்கப்படாமல் இருந்தது. தேவர்கள் வந்து அதை விளக்கும் படி கேட்டனர்; அப்போதுதான் இந்திரன் சொல்லின் ‘பகுதி, விகுதி’களைப் பிரித்து தனி இலக்கணம் எழுதினான்.

அந்தக் காலத்தில் இரண்டு வகையான இலக்கண மரபுகள் இருந்தன. ஐந்திர மரபு, மாஹேஸ்வர மரபு என்று.

இந்திரன் உண்டாக்கியது ஐந்திரம்.

பாணினி உண்டாக்கியது மாஹேஸ்வர மரபு- பாணிணீயம்

மொத்தம் எட்டு வகை இலக்கணங்கள் இருந்ததாகத் தெரிகிறது: பிரம்மா, சிவன், இந்திரன், பிருஹஸ்பதி, ப்ரஜாபதி, த்வஷ்டா, அபிசலி, பாணினி—-

 

ரிக்வேத கல்பத்ருமமும் எட்டு பேர் இலக்கணம் இயற்றியதாக இயம்பும்: வாயு, வருணன், ஸோமன், விஷ்ணு, இந்திரன், யமன், சந்திரன், ரௌத்தன்

 

பிற்கால நூலான, போப தேவர் இயற்றிய, ‘கவி கல்பத்ருமம்’ எட்டு இலக்கண ஆசிரியர்களின் பெயர்களை விளம்பும்; ஆபிசலி, பாணினி, காசக்ருத்சனன், சாகடாயனன்,இந்திரன், சந்திரன், ஜைனேந்திரன்.

 

ஸ்ரீ தத்வநிதி என்ற வைணவ நூல் ஒன்பது பெயர்களைத் தெரிவிக்கிறது—

 

ஐந்திரம், சாந்த்ரம், காச கிருஷ்த்ணம், கௌமாரம், சாகடாயனம், ஸாரஸ்த்வம், சாகல்யம், ஆபீசலம், பாணீணீயம்

 

ஐந்திரம் முதலியவை லௌகீக சாஸ்திர இலக்கணங்கள்; ப்ரதிசாக்யம் முதலியன வைதீக நூல் இலக்கணங்கள்.

 

பாணீணீயம், ஆபிசலம் ஆகியன லௌகீக, வைதீக நூல்கள் இரண்டுக்கும் பொருந்துவன.

 

பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார் (கி.மு ஏழாம் நூற்றாண்டு). அவருக்கு முன்னர் 35 ஸம்ஸ்க்ருத இலக்கண வித்தகர்கள் இருந்தனர்!! ஐந்திர வ்யாகரண நூலை நிறைய ஸம்ஸ்க்ருத, தமிழ், ப்ராக்ருத நூல்கள் குறிப்பிடுகின்றன.

 

 

25 மடங்கு பெரிது!

 

12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மஹாபாரத உரை ஆசிரியர் தேவ போதர் செப்புகிறார் :— பாணினி இலக்கண நூலைப் போல 25 படங்கு பெரியது ஐந்திர வ்யாகரண நூல்!

 

ஐந்திர இலக்கண நுல் வெகு காலத்துக்கு முன்னரே அழிந்துவிட்டது என்று கதைக் கடல் (கதா சரித் சாகரம்) சொல்லும்.

 

ஆனால் பிற்கால நூல்கள் ஐந்திர இலக்கண நூலின் சூத்ரங்களை மேற்கோள் காட்டுவதால் இப்படி ஒரு நூல் இருந்தது என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை!

 

கி.மு முதல் நூற்றாண்டைச் சேர்ந்த  பட்டாரக ஹரிச்சந்திரர், ‘ஸரக ந்யாச’ என்ற உரை நூலில் ஒரு சூத்திரத்தை மேற்கோள் காட்டுகிறார்.

 

‘’அத வர்ண ஸமூஹ’’ என்பது ஐந்திரத்தின் முதல் சூத்திரம்; இதன் பொருள்:- ‘பிறகு எழுத்துக்களின் தொகுப்பு’—

 

தொல்காப்பியமும் முதலில் எழுத்துகளைப் பற்றியே நுவலும்:

எழுத்தெனப்படுப

அகர முதல் னகரம் இறுவாய்

முப்பஃது என்ப

சார்ந்துவரல் மரபின் மூன்று அலங்கடையே.

 

‘அர்த்த: பதம்’ என்னும் இன்னொரு சூத்திரத்தை துர்காச்சாரியாரின் நிருக்த விருத்தியில் காண்கிறோம்; இதன் பொருள்:-  ‘பொருள் உள்ள எழுத்துக்களின் கூட்டுதான்’ சொல் எனப்படும்.

 

பிற்காலத்தில் சுஷேண வித்யாபூஷணர் எழுதிய ஒரு நூலிலும், பரதர் எழுதிய நாட்டிய சாஸ்திரத்திலும் ஐந்திரம் குறிப்பிடப்படுவதால் அவர்கள் காலத்தில் இது இருந்திருக்கவேண்டும். ஆயினும் பாணினியின் இலக்கணம் பிரபலமானவுடன் ஐந்திரம் வழக்கொழிந்து போயிருக்கலாம்.

 

ஐந்திரம் பற்றிப் பல தவறான கருத்துகளும் உண்டு; சமண மதத்தின் 24ஆவது தீர்த்தங்கரரான மஹாவீரர், அல்லது பௌத்த சமயத்தைச் சேர்ந்த இந்திர கோமீதான் இதை இயற்றியவர் என்றும் இயம்புவர்.  இது தவறு.

 

தேவநந்தி என்ற பூஜ்யபாதர் எழுதிய ஜைனேந்திர வியாகரணம்தான் ஐந்திரம் என்ற தவறான பிரச்சாரமும் உள்ளது.

 

–Subham–

 

ஜாதி பேதமற்ற சங்க இலக்கியப் புலவர்களுள் நால்வர்! (Post No.4985)

WRITTEN by S NAGARAJAN

 

Date: 7 MAY 2018

 

Time uploaded in London –  6-51 AM   (British Summer Time)

 

Post No. 4985

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

ஜாதி பேதமற்ற சங்க இலக்கியப் புலவர்களுள் நால்வர்!

 

ச.நாகராஜன்

 

சங்க இலக்கியத்தில் ஜாதி பேதமே இல்லை என்பதைச் சுட்டிக் காட்ட நான்கு புலவர்களைப் பற்றிய சில குறிப்புகளை இங்கே காணலாம். உலகத்தார் அனைவரையும் ஒன்று படுத்தும் ஒரு பெரும் சக்தியாக தமிழ் விளங்குவதையும் உணரலாம்.

சங்க இலக்கியம் முழுவதையும் படித்தால் பொன்னான தமிழ்நாடு நம் கண் முன்னே தவழும்.

அதை மீண்டும் கொணர முயல்வோமாக!

இதோ புலவர்கள் நால்வர்.

 

கபிலர்

புலனழுக்கற்ற அந்தணாளன் என்று போற்றப்படும் பெரும் புலவர் இவர்.

இவர் அந்தணர் (புறம் 200)

குறிஞ்சித்திணை பாடுவதில் இணையற்ற ஆற்றலுடையவர்.

ஐங்குறுநூற்றில் குறிஞ்சிப்பாட்டு நூறும், கலித்தொகையில் குறிஞ்சி 29 பாட்டும் இவர் பாடியனவாகும்.

இதனைப்,

“பெருங்கடுங்கோன் பாலை குறிஞ்சி கபிலன்

மருதனிள நாகன் மருத – மருஞ்சோழ

னல்லுத் தான்முல்லை நல்லந் துவனெய்தல்

கல்விவலார் கண்ட கலி”

என்ற வெண்பாவால் அறியலாம்.

அகநானூறில் 203ம் பாடல் தவிர ஏனைய பாடல்கள் அனைத்தும் குறிஞ்சித் திணைக்கு உரியவையே.

இவர் மழவர் பெருமகனாகிய நள்ளியையும், பேரூரினையும் புகழ்ந்து பாடியுள்ளார். (அகம் 238; 382)

குறுந்தொகையில் ஓரியினது கொல்லிப்பாவையினையும், காரியினது முள்ளூர்கானத்தையும் புகழ்ந்துள்ளார். (குறுந்: 100;198)

நற்றிணையில் காரி மாவூர்ந்து நிரைகவர்தலையும், அவன் ஓரியைக் கொன்ற வரலாற்றினையும் கூறியுள்ளார். (நற் 291;320)

ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழறிவுறுத்திக் குறிஞ்சிப்பாட்டுப் பாடியருளினார்.

செல்வக்கடுங்கோ ஆழியாதனைப் புகழ்ந்து இவர் பாடிய பத்துப் பாடல்கள் பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தாகத் தொகுக்கப் பெற்றுள்ளன.

இன்னா நாற்பதும் கபிலம் என்னும் நூலும் இவர் இயற்றிய மற்ற நூல்களாகும்.

இவர் பாணருடன் வாது செய்தவர்.

புறநானூற்றில் பாரி வள்ளலைப் பலபடியாகப் புகழ்ந்து பாடியுள்ளார். (புறம் 105;106)

பாரிவள்ளல் தன் மகளிரை மூவேந்தருக்கு மணம் செய்து கொடுக்க மறுத்தமை காரணமாக மூவேந்தரும் அவனைப் பகைத்து அவன் பறம்பு மலையை முற்றுகை இட்ட போது உள்ளே உணவின்றி வருந்திய அனைவரையும் காப்பதற்காக கிளிகளால் நெற்கதிரைக் கொணரச் செய்தார். (அகம் 78;303)

மூவேந்தரும் பறம்பு மலையைக் கைப்பற்றுவது இயலாத காரியம் என்று கண்டு மனம் தளர்ந்த காலத்து, அவர்களை இவர் இகழ்ந்து பாடியுள்ளார். (புறம் 109;110)

பாரி அவ்வேந்தரால் வஞ்சித்துக் கொல்லப்பட்ட பின்னர், அவன் மகளிரை அழைத்துச் சென்று பார்ப்பார் பால் அடைக்கலம் வைத்தார். (புறம் 113; 236)

இந்தப் பாரி மகளிர் தம் தந்தையின் மலையைச் சூழ்ந்து கொண்ட பகை வேந்தரது படையின் அளவு எந்தெந்த திசையில் எவ்வெவ்வளவு இருக்கிறதென்று உயர்ந்த குவடுகளில் ஏறி நின்று எண்ணிச் சொன்னார்கள் என்னும் குறிப்புத் தோன்ற இவர் பாடியுள்ளார். (புறம் 116)

பின்னர், அம்மகளிர்களை அழைத்துக் கொண்டு போய், அவர்களை மணந்து கொள்ளும்படி விச்சிக்கோனையும் இருங்கோவேளையும் அவர் புகழ்ந்து பாடினார். (புறம் 200;201)

அவர்கள் மறுத்தவுடன் அவர்களைச் சபித்து விட்டு மீண்டார்.

கடைசியாக அம்மகளிருள் ஒருத்தியைத் திருக்கோவலூர் மலையனுக்கு மணம் செய்து கொடுத்து விட்டுப் பெண்ணையாற்றினிடையே ஒரு பாறையில் தீ வளர்த்து அதில் புகுந்தார் என்று திருக்கோவலூர் சாஸனம் ஒன்றால் வெளியாகிறது. (ஆதாரம் : செந்தமிழ் தொகுதி-4; பகுதி-5 பக்கம் 232)

 

தித்தன்

தித்தன் ஒரு அரசன்.

இவன் தித்தன் வெளியன் எனவும் வீரைவெளியன் தித்தன் எனவும் கூறப்படுவான். (அகம் 152;188;226)

இவன் சிறந்த வீரன் மட்டுமன்றி பெரும் புலவனும் ஆவான். (அகம் 188)

இவனது தலைநகர் உறையூர்.

இவ்வூரைப் பகைவர் கைப்பற்றாவண்ணம் அரண்வலி மிகுந்த புறங்காடு உடையதாகவும் படைகாவல் உடையதாகவும் செய்து காத்து வந்தான். (அகம் 122; தொல்.பொருள் நச் 60)

இவனுக்குக் கற்பில் சிறந்தவளும் பேரழகியாயுமுள்ள ஐயை என்னும் பெயருடைய ஒரு மகள் இருந்தாள். ஒரு சமயம் வடுக அரசனான கட்டி என்பான் பாணனொடு சேர்ந்து கொண்டு தித்தனோடு போர் புரிய நினைத்து உறையூருக்கு அருகில் வந்து இருக்கும் போது, உறையூரின் கண் இத்தித்தனது நாளவைக்கண் ஒலிக்கப் பெறும் தெண்கிணைப்பாடு கேட்டு அஞ்சிப் போர் புரியாமல் ஓடினான். (அகம் 226) இவன் மகன் பெயர் போர்வைக்கோப்பெருநற் கிள்ளி.

 

மதுரை அறுவைவாணிகன் இளவேட்டனார்

இவர் வணிக மரபினர். (தொல் பொருள் மரபு 74)

அறுவை வாணிகன் என்றால் வஸ்திர வியாபாரி. (Cloth Merchant) திருவள்ளுவரின் திருக்குறளைச் சிறப்பித்துப் பாடியுள்ளோரில் இவரும் ஒருவர். பாலைத் திணையைத் தவிர ஏனைய எல்லாத் திணையையும் புனைந்து இவர் அகநானூற்றில் பாடியுள்ளார்.

படுத்த யானை முதுகினைக் காற்றிலசையும் வழைத்தாறு தடவும் என்பது இவரது அழகிய கூற்று. (அகம் 302)

 

ஆவூர் மூலங்கிழார்

இவர் சோழநாட்டில் பிறந்தவர். (புறம் 33) வேளான் மரபிணர்.

இவரது மகன் தான் பெரும் புகழ் படைத்த பெருந்தலைச் சாத்தனார் ஆவார்.

இவர் காவிரியைப் புகழ்ந்து பாடியுள்ளார். (அகம் 341)

யாகம் பண்ணாத பார்ப்பானுக்கு சங்கறுக்கைத் தொழிலாகுமென்று இழித்துக் கூறுவதாலும் (அகம் 24),  யாகம் பண்ணிய கௌணியன் விண்ணந்தாயனைப் புகழ்ந்து பாடியுள்ளமையாலும் (புறம் 1660 இவர் வைதிக மதத்தில் (இந்து மதத்தில்) பெரும் பற்றுள்ளவர் என்பது அறியப்படுகிறது.

 

***

பாரதீய ஜனதா இல.கணேசன் ‘ஜோக்’குகள் (Post No. 4979)

Written by London Swaminathan 

 

Date: 5 May 2018

 

Time uploaded in London – 5-36 am (British Summer Time)

 

Post No. 4979

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

முன்னொரு காலத்தில் மதுரையில் ஆர்.எஸ்.எஸ். பிரசாரக்காக இருந்தவர் இல. கணேசன்; அவர் இப்பொழுது பாரதீய ஜனதா எம்.பி. இந்திரா காந்தி  (Emergency) எமர்ஜென்ஸி பிரகடனம் செய்த காலத்தில் நாங்கள் எல்லோரும் தலைமறைவு இயக்கத்தில் வேலை செய்தோம். எமர்ஜென்ஸிக்கு முன்னரும் பின்னரும் மதுரையில் வீட்டிற்கு சாப்பிட வருவார். அவர் தஞ்சாவூர்காரர். ஆகையால் பேச்சில் நிறைய நகைச் சுவை இருக்கும். அவர் என்ன சொன்னாலும் நான் தலை அசைப்பேன்

‘நான் இப்பொழுது என்ன சொன்னேன் தெரியுமா? உங்களை ஒரு குரங்கு என்று சொன்னேன் அதற்கும் தலை அசைத்து ஆமாம், ஆமாம் என்கிறீர்களே’ என்பார்.

 

ஜீ!  நீங்கள் சொன்னால் எல்லாம் சரிதான் என்று சொல்லி நான் சிரித்து (அசடு வழிய) மழுப்பி விடுவேன்.

 

வீட்டிற்கு சாப்பிட வந்த போது, வழக்கமாக பிராமணர்கள் சொல்லுவது போல, அவரிடம் என் அம்மாவும்

“சங்கோஜப்படாமல் சாப்பிடுங்கள்” என்றார்.

கணேஷ்ஜி, தடால் அடியாக ஒரு போடு போட்டார்.

“நான் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடுவேன்; நீங்கள் சங்கோஜம் இல்லாமல் தாராளமாகப் போடுங்கள்” என்றார்.

 

என் அப்பா, அம்மா எல்லோரும் தஞ்சை ஜில்லாக்காரர்கள்தான். ஆகவே அவர் ‘ஜோக்’கைப் புரிந்து கொண்டு சிரித்தார்கள்.

xxxx

 

தமிழ்நாட்டு எம்.பிக்கள் வழக்கம் போல பார்லிமெண்டில் கூட்டம் நடக்கும் போது தூங்கிக் கொண்டிருந்தார்களாம். அப்போது காரசார விவாதத்தில் வடக்கத்திய எம்.பி.க்கள் “எங்களுக்கு இரண்டு வேண்டும், மூன்று வேண்டும்; அந்த மாநிலத்துக்கு எங்கள் மாநிலம் என்ன இளைத்தவர்களா?” என்று சண்டை போட்டனராம்.

 

திடீரென விழித்துக் கொண்ட தமிழ் நாட்டு எம்.பிக்கள், “நீங்கள் எப்போதுமே இப்படித்தான் ‘ வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது. எங்களுக்கும் மூன்று வேண்டும்” என்று கூச்சல் போட்டார்களாம்.

அது சரி, நீங்கள் எந்த மிருகக் காட்சிசாலைக்காக கேட்கிறீர்கள் என்பதையும் சேர்த்துச் சொல்லுங்கள்; சபைக் குறிப்பேட்டில் அது பதிவாகட்டும் என்றார் அவைத்  தலைவர்.

 

தமிழ்நாட்டு எம்.பிக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பேசா மடந்தைகளாக நின்றனராம்.

 

கரசாரமாக விவாதித்தது வெளி நாட்டில் இருந்து வந்த குரங்குகளை எங்கு அனுப்புவது என்பதாகும்; குரங்கு பற்றிய விவாதம் என்பதே புரியாமல் இவர்கள் எங்களுக்கும் “மூன்று தா” என்று கூச்சல் போட்டனராம்!! அது போல நான் சொன்னது என்ன என்றே தெரியாமல் நீங்களும் ஆமாம் என்றீர்களே என்று என்னை இடித்துரைப்பார்.

 

xxx

 

என் மனைவி ஒரு செவிடு!

எங்கள் வீட்டுக்கு நிறைய உபந்யாசகர்கள், சாமியார்கள், சாது, சந்யாஸிகள் சாப்பிட வருவர். என் தந்தை வெ.சந்தானம்  திருக்கருகாவூர்க்காரர். தஞ்சாவூர்காரர்கள் பேச்சில் நிறைய நகைச் சுவை இருக்கும்—- ஒரு முறை ஒரு சொற்பொழிவாளர் சாப்பிடுகையில் ஏதோ கேட்டார். என் அம்மா வேறு வேலை செய்து கொண்டிருந்ததால் கொஞ்சம் தாமதாமக அதைக் கொண்டு வந்தார்.

 

என் அப்பா சொன்னார்,

“என் பெண்டாட்டி ஒரு செவிடு; கொஞ்சம் பொறுங்கள்; நான் சொல்கிறேன்” என்று ஜோக் அடித்தார்.

அதற்குள் அவர் கேட்ட பொருளும் வந்தது.

 

அடுத்த முறை அவருக்கு மோர் தேவைப்பட்டது. சமையல் ரூம் முழுக்க எதிரொலிக்குமாறு உரத்த குரலில் மோர் கொண்டு வாருங்கள் என்று இடி முழக்கம் செய்தார். எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை; பெரிதாகச் சிரித்து விட்டோம். அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

 

பின்னர் எங்கள் சஹோதரர்களில் ஒருவர் “அம்மாவுக்குக் காது கேட்கும்; அப்பா ஜோக் அடித்தார்; அதை நீங்கள் உண்மை என்று நம்பிவிட்டீர்களே” என்றார்.அவருக்கு தர்ம சங்கடமாகிப்போனது.

 

விருந்தாளியின் முகம் வாடக்கூடாதே என்பதற்காக நாங்கள் பேச்சை மாற்றி, அவருடைய முந்திய நாள் உபந்யாசத்தைப் புகழ்ந்தோம்.

 

xxxx

சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள்

கூத்தனூர் சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள் மதுரைக்கு வந்தால் எங்கள் வீட்டில்தான் தங்குவார். பெரிய வேத பண்டிதர்; ரிக் வேதத்தின் ஒரு ஷாகையை மனப்பாடம் செய்து (அத்யயனம் செய்து) காஞ்சி பரமாசார்ய சுவாமிகளிடம் தங்கக் காசு, சால்வை, பசு மாடு, ஒரு வீடு ஆகியன பெற்றவர்.

 

எப்போது சாப்பிட உட்கார்ந்தாலும், எங்கள் தாயார் உங்களுக்கு இது வேண்டுமா. அது வேண்டுமா என்று கேட்டுப் பரிமாறுவார். அவரோ இன்னும் கொஞ்சம் ரஸம் வேண்டுமா? என்று கேட்டால்” நீங்கள் எல்லோரும் க்ஷேமமாக (நன்றாக) இருக்க வேண்டும்” என்பார். இன்னும் கொஞ்சம் பாயஸம் வேண்டுமா? என்று கேட்டாலும் ‘நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்’ என்பார். அவ்வளவு நல்ல உள்ளம்; சதா ஸர்வ காலமும் உப்பிட்டவரை உள்ளளவும் நினைப்பவர்; நன்றி பாராட்டுவர். “அன்ன தாதா ஸுகீ பவ” என்று ஆஸீர்வதிப்பவர்.

 

அதிலிருந்து அவர் சொன்ன வாசகம் எங்கள் வீட்டில் ஒரு IDIOM AND PHRASE ‘இடியம் அண்ட் ப்ரேஸாக’ மாறிவிட்டது. எங்கள் அம்மா ஏதாவது வேண்டுமா என்று கேட்டாலோ வேறு யாராவது ஏதாவது வேண்டுமா என்று கேட்டாலோ நீங்கள் எல்லோரும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்போம். சிரித்து மகிழ்வதற்கு ஒரு சான்ஸ் கிடைத்தால் விடலாமா?

ஆனால் அந்தப் பெரியவர் வந்தால் வழக்கம் போல நமஸ்கரித்து ஆஸி பெறுவோம். ‘ஜோக்’ வேறு; மரியாதை வேறு.

 

xxxx Subham xxxxx

புலவனுக்குப் பரிசு கொடுக்க முடியவில்லை எனில் புலிக்கு இரையாவதே சிறந்தது! (Post No.4912)

WRITTEN by S NAGARAJAN

 

Date: 14 April 2018

 

Time uploaded in London –  6-10 AM  (British Summer Time)

 

Post No. 4912

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

கொங்கு மண்டலப் பெருமை

 

புலவனுக்குப் பரிசு கொடுக்க முடியவில்லை எனில் புலிக்கு இரையாவதே சிறந்தது!

 

ச.நாகராஜன்

 

தமிழக மன்னர்களும் பிரபுக்களும் புலவர்களுக்குத் தகுந்த பரிசுகளைக் கொடுப்பதைப் பெருமையாகவும் கடமையாகவும் கருதியவர்கள்.

கொங்கு மண்டல சதகத்தில் வரும் பல பாடல்களை ஏற்கனவே பார்த்துள்ளோம். இன்னும் ஒரு பாடலைப் பார்ப்போம்:

 

இப்போதுள்ள கோபிச்செட்டி பாளையம் தாலுகா பழைய காலத்தில் காஞ்சிக்கோயில் நாடு என்று அழைக்கப்பட்டு வந்தது. இதில் அடங்கியிருந்த ஊரான பாரியூரில் செட்டி பிள்ளையப்பன் என்ற பெரிய கொடையாளி ஒருவர் இருந்தார். அவர் மீது கவிபாடிக் கொண்டு புலவர் ஒருவர் வந்தார். கொடுத்துக் கொடுத்துக் கையில் ஒன்றுமில்லாமல் இளைத்திருந்த செட்டி பிள்ளையப்பன் சற்று வருத்தத்துடன் சிந்திக்கலானார்.

உலகத்தில் ஒருவனிடம் சென்று எனக்கு இல்லை என்று கேட்பது சிறுமை. கேட்போனுக்கு இல்லை என்று சொல்வதோ சிறுமையிலும் சிறுமை. அதிலும் நம் குலத்தைப் புகழ்ந்து கவி பாட வந்த புலவருக்கு இல்லை என்று சொல்வது நமக்கு தீரா வசையைத் தேடித் தரும். ஆகவே அருகில் உள்ள புலித்தூறிற் புகுந்து அங்கிருக்கும் புலிக்கு உணவாவதே சாலச் சிறந்தது.

 

இப்படி எண்ணிய செட்டி பிள்ளையப்பன் புலி உறையும் இடத்திற்குச் செல்லலானார்.

அப்போது அங்கு கொள்ளையடித்த பொற்குவியல்களை பங்கு போட்டுக் கொண்டிருந்த திருடர்கள் அவரைப் பார்த்து பயந்து அவற்றை அப்படியே விட்டு விட்டு ஓடினர்.

இதனால் மகிழ்ந்த செட்டி பிள்ளையப்பன் அவற்றை எடுத்து வந்து புலவருக்கு உரிய முறையில் பரிசுகளை வழங்கினார்.

 

 

கொங்கு மண்டல சதகம் 99வது பாடல் செட்டி பிள்ளையப்பனைப் போற்றுகிறது.

 

பாடல் வருமாறு:

கவியின் மெலிந்த புகல்கவிக் கீயக் கயிலின்மையால்

புலியி னுழைபுக்குக் கள்வர்கள் பங்குப் பொருட்டிரளை

மலிய வெடுத்தப் புலவனுக் கீந்த வடகரையான்

வலியன் கனவாளன் செட்டிபிள் ளான்கொங்கு மண்டலமே

 

இதன் பொருள் : வறுமையால் தளர்வுற்ற காலத்தில், கூறிய பாட்டைக் கேட்டு அவருக்குப் பொருள் கொடுக்க கையில் ஒன்றும் இல்லாததால், புலி வாழுமிடத்தில் புகவே, அங்கு திருடர்கள் பங்கிட்டுக் கொண்டிருந்த பொற்குவியலை அடைந்து கவி பாடிய புலவனுக்குக் கொடுத்த வடகரை நாட்டினனான செட்டி பிள்ளான் என்பவனும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவரே!

 

 

ஒரு சுவையான செய்தி, பாரியூர் ஸ்ரீ அமரவிடங்கப் பெருமானார் சிவாலயத்தில் ஒரு கற்சாசனம் உள்ளது. அதில் செட்டி பிள்ளையப்பன் நில தானம் செய்த செய்தி உள்ளது.

 

“ஸ்வஸ்தி ஸ்ரீ…..வீர வல்லாள தேவர் .. ராஜ்ஜியம் பண்ணியருளா நின்ற   … வத்ஸரத்து ஆவணி மாத முதல் காஞ்சிக் கூவல்நாட்டில் பாரியூர் வெள்ளாளன்களில் செட்டி பிள்ளையப்பனேன் உடையார் அமரவிடங்கப் பெருமாள் திருப்பள்ளிஎழுச்சிக்கு….”

 

இந்த அரிய சம்ப்வத்தை அமரவிடங்கர் குறவஞ்சி என்னும் நூ பாடலாக இப்படித் தருகிறது:

 

 

இட்டமான கவிசொல்லும் பாவலர்க்

கில்லையென்று சொலற்கஞ்சிக் காட்டில்வாழ்

துட்ட வன்புலித்தூறிற் புகுந்தநற்

றூயவன் கனவாள குலத்தினன்

செட்டி பிள்ளையப் பன்றினந் தொண்டுசெல்

தேவிமாமலை மாதொரு பங்குள

கட்டு செஞ்சடையமர விடங்கனார்

கதித்துவாழ் பாரியூ ரெங்களூரே

 

தமிழ்ப் புலவர்களை மதித்து வாழ்ந்த நாடு தமிழ் நாடு; அதில் கொங்கு மண்டலத்தின் சிறப்பை இந்தப் பாடல் மூலம் அறிந்து மகிழ்கிறோம்.

 

***

 

அடங்காப்பிடாரியை அடக்கும் வித்தை! (Post No.4894)

COMPILED by London Swaminathan 

 

Date: 8 April 2018

 

Time uploaded in London –  11-29 am (British Summer Time)

 

Post No. 4894

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

நடேச சாஸ்திரியார் என்னும் தமிழ்ப் பெரியார், தமிழ் மொழிக்கு அரிய பெரிய சேவை செய்துள்ளார். அக்காலத்தில் அவர் கேட்ட நாட்டுப்புற கதைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் 100 ஆண்டுகளுக்கு முன்னர் புஸ்தகமாகவும் ஆராய்ச்சி இதழ்களில் கட்டுரைகளாகவும் வெளியிட்டுள்ளார். அவர் தொகுத்த ஒரு கதை வில்லியம் ஷேக்ஸ்பியரின் டேமிங் ஆf தெ ஷ்ரூ ( TAMING OF THE SHREW) போன்ற கதை. இதோ நடேச சாஸ்திரியின் நடையிலேயே படியுங்கள்:-

 

 

 

 

 

 

TAGS– கெட்ட பெண், நல்ல பெண், பேய், அடங்காப்பிடாரி

 –subham–

திருடனைப் பிடித்த புத்திசாலி வணிகன் (Post No.4887)

திருடனைப் பிடித்த புத்திசாலி வணிகன் (Post No.4887)

 

Written by London Swaminathan 

 

Date: 6 April 2018

 

Time uploaded in London –  7-41 am (British Summer Time)

 

Post No. 4887

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

இது ஒரு தெலுங்கு தேச நாட்டுப்புற கதை

 

ஒரு வயதான வர்த்தகன் வீட்டில் திருடன் வந்து மரத்தடியில் ஒளிந்து கொண்டான். இதை அந்த புத்திசாலி வணிகன் பார்த்தும் பாராமலும் இருந்துவிட்டான். பின்னர் திருடனைப் பிடிக்க எப்படி பக்கத்து வீட்டுக்காரர்களை அழைப்பது என்று யோசித்தான்.

 

திருடன், திருடன் என்று கத்தினால் அவன் ஓடி விடுவான் அல்லது வணிகரைத் தாக்குவான். ஆகையால் ஒரு IDEA ஐடியா செய்தார்.

 

மனைவியைக் கூப்பிட்டு மரத்துக்குப் பக்கத்தில் ஒரு நாற்காலியைப் போடச் சொன்னார். கணவனுக்கு ஏதோ என்னமோ ஆகிவிட்டதோ என்று பயந்து அந்த அம்மாளும் ஒரு நாற்காலியைப் போட்டார்.

 

‘கடவுளே, பயங்கர பல் வலி. சீக்கிரம் ஒரு குடத்தில் சுடுநீரும், வாயில் அடக்கிக்கொள்ள கிராம்பும் கொண்டு வா’ என்றார். மனைவியும் அப்படியே செய்தார்.

 

அவர் ஒவ்வொரு முறையும் வாயைக் கொப்பளித்து அந்த எச்சிலைத் திருடன் இருக்கும் புதர் மீது துப்பினார்.  குடத்தில் கடைசி நாலு வாய்க்கு சுடு நீர் இருக்கும் நேரத்தில் அதை இரண்டு மூன்று முறைக் கொப்பளித்து மனைவி மீது துப்பினார். அவள் கணவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று குய்யோ முறையோ என்று சப்தம் போடத் துவங்கினாள். உதவி, உதவி என்று எல்லோரையும் கூப்பிடத் துவங்கினார் .

எல்லோரும் ஓடி வந்தனர்; உடனே அந்த வணிகர் மனைவியைப் பார்த்து திட்டத் துவங்கினார்:- “நான் யாருக்காக லட்சக் கணக்கான ரூபாயைச் சேமித்து வைத்தேன்? இது என்ன அநியாயம்? இரண்டு முறை எச்சில் விழுந்ததற்கு இவ்வளவு கூப்பாடு போட்டு ஊரையே கூட்டி விட்டாளே!! இதோ பாருங்கள், அந்தப் புதருக்கு அடியில் ஒளிந்திருக்கும் திருடன் மட்டும் நான் ஒரு மணி நேரத்துக்கு எச்சில் நீரை துப்பியும் கூட எவ்வளவு அமைதியாக இருக்கிறான்? அவனுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்? என்று கேட்டார்.

 

உடனே எல்லோரும் அந்த்ப் புதர் மீது பாய்ந்து, திருடனை வெளியே இழுத்து தர்ம அடி கொடுத்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

 

எந்தப் பிரச்சினையையும் சமயோசித புத்தியால் சமாளிக்கலாம்.

 

–subham–

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -3 (Post.4864)

Date: MARCH 30, 2018

 

 

Time uploaded in London- 5-49 am

 

 

Compiled by S NAGARAJAN

 

 

Post No. 4864

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சம்ஸ்கிருதச் சிறப்பு :

நீங்கள் படிப்பது அயர்லாந்து சம்ஸ்கிருத ஆசிரியர் ரட்கெர் கோர்டன்ஹார்ஸ்ட் நிகழ்த்திய உரை!

 

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -3

 

ச.நாகராஜன்

 

ஆங்கிலத்தை எடுத்துக் கொள்வோம். உங்கள் குழந்தை அதை எப்படி கற்க வேண்டி இருக்கிறது என்று பாருங்கள்!

ROUGH என்பதை எப்படிச் சொல்ல வேண்டும்? அதே சமயம் DOUGH என்பதை எப்படிச் சொல்ல வேண்டும்? WOMEN என்ற வார்த்தையில் உள்ள ‘o’  ஏன் ‘e’ போல ஒலிக்க வேண்டும்? SPECIAL என்ற வார்த்தையில் வரும் ‘ci’ ஏன் CINEMA என்ற வார்த்தையில் வரும் ‘ci’- ஐ விட மாறுபட்டு ஒலிக்க வேண்டும்?

ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்? ‘அது அப்படித்தான்’! அதைக் கற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்கள்! அவர்களுக்கு தர்க்கரீதியாகக் காரணம் சொல்லத் தெரியவில்லை!

 

குழந்தைகளுக்கு அது ஒரு ‘hit and miss’ விஷயம் போல விசித்திரமாக இருக்கிறது! இது குழந்தைக்கு என்ன ஒரு நம்பிக்கையைத் தரும்?!

இப்போது விதிகள் உள்ள மொழியைப் பாருங்கள்.

 

எதையுமே ‘அது அப்படித்தான்’ என்று சொல்ல இடமில்லாமல் விதி முறை மாறாமல் இருக்கிறது.

அருமையான நேர்த்தியான தத்துவக் கருத்துக்கள் எளிய ‘அகர வரிசை’ சரியாக அமைக்கப்பட்டிருப்பதால் நன்கு உருவாகி கற்க முடிவதைப் பாருங்கள்!

சம்ஸ்கிருதத்துடனான தொடர்பினால் மற்றவர்கள் அப்படி நல்ல குணாதிசயங்களுடன் வளர்வதை நான் நேரடியாகக் கண்டிருக்கிறேன்.

பல வருடங்களாக சம்ஸ்கிருதத்தை ‘குறைந்த பட்ச புரிதலுடன்’ ‘அதிக பட்ச உற்சாகத்துடன்’ நாங்கள் கற்பித்து வந்துள்ளோம்.John Scttus School – இல் உள்ள குழந்தைகளுக்கும், தத்துவப் பள்ளியில் – School of Philosophy – இல் உள்ள பெரியவர்களுக்கும் நாங்கள் சம்ஸ்கிருதம் கற்பித்து வந்துள்ளோம்.

ஒருவேளை நாங்கள் ஏராளமானவர்களை சம்ஸ்கிருதம் படிக்க ஊக்குவிக்கவில்லையோ என்னவோ!

ஆகவே சம்ஸ்கிருதம் எங்கு தோன்றியதோ அங்கு செல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

சம்ஸ்கிருத ஆசிரியர்கள் சம்ஸ்கிருதத்திலேயே பேசுபவர்களாக இருக்கும் இடத்தில் வாழ வேண்டும்.

 

பெங்களூர் அருகில் உள்ள ‘சம்ஸ்கிருத பாரதி’ -இல் நான் மூன்று கோடைக் காலங்களைக் கழித்தேன்.

அது என்னை இன்னும் தீவிரமாக சம்ஸ்கிருதத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆசையைத் தோற்றுவித்தது.

ஆகவே பாரம்பரியமான ஒரு குருகுலத்திற்கு நான் சென்றேன்.

அதாவது அங்கேயே தங்கி இருக்க வேண்டும்.

அரிசி சாதம் சாப்பிட வேண்டும்.

ஏராளமான பவர் கட்டுகளை – மின் தடைகளை அனுபவிக்க வேண்டும்.

நீர் பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டும்.

 

ஆனால் டிசம்பர் 2009இல் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். சீனியர் ஸ்கூலில் நான் வகித்து வந்த வைஸ்-பிரின்ஸிபால் வேலையை விட்டு விட்டு சம்ஸ்கிருதத்தை கற்பிப்பதிலேயே என் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

இன்னும் பல பேர்கள் நான் வகித்து வந்த வைஸ்-பிரின்ஸிபால் பதவியை வகிக்க தகுதியானவ்ர்களாக இருப்பார்கள். ஆனால் சம்ஸ்கிருதத்தை அயர்லாந்தில் போதிக்க வேறு யாரால் முடியும்?

ஆகவே இதை ஒரு பதவி உயர்வாகவே – ப்ரமோஷனாகவே – நான்  கருதுகிறேன்.

வயது ஆக ஆக என் உடல் தளர்ந்தாலும் கூட சம்ஸ்கிருதத்தினால் என் மனம் முன்னேறும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

சம்ஸ்கிருதம் என்பது ஒரு முழு நேர ஆசிரியருடன் ஒப்பிடப்படக் கூடியது.

24/7 என்று முழு நேரமாக அது இருக்கிறது. மற்ற மொழிகள் எல்லாம் பகுதி நேர – Part time –  மொழியாகவே இருக்கின்றன!

சம்ஸ்கிருதம் கற்பதன் விளைவு என்னவெனில் அது உண்மையான நம்பிக்கையை என்னுள் ஏற்படுத்துகிறது.

இரண்டாவதாக எனது வார்த்தைகளை சீர் தூக்கிப் பார்த்து துல்லியமாக சரியாகப் பேச வேண்டும் என்று அது எனக்கு உணர்த்துகிறது.

குழப்பமின்றி நான் சொல்ல வருவதைச் சொல்ல அது எனக்குக் கற்பிக்கிறது.

ஆகவே எதையும் என்னால் சுருக்கமாகப் பேச முடிகிறது.

எனது கவன சக்தி சந்தேகமின்ரி அதிகரித்துள்ளது!

கேட்பதைத் தக்க வைக்கும் சக்தியும் அதிகரித்துள்ளது!

 

எப்படி சம்ஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது?

இந்தியாவில் பல இடங்களில் முறையாக அது கற்பிக்கப்படவில்ல என்பது எனக்கு ஆச்சரியமூட்டும் ஒரு விஷயம்!

9 முதல் 11 வயது முடிய அது மாணவர்களுக்கு அங்கு கற்பிக்கப்படுகிறது. ஆனால் மோசமாகக் கற்பிக்கப்படுவதால் அத்துடன் அதை விட்டு விடுகிறார்கள்.

சில விடாக்கண்டர்கள் மட்டும் அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல ஆசைப்படுகிறார்கள்.

இது ஏன்?

 

ஏனெனில் மேலை நாடுகளைக் காப்பி அடிக்க வேண்டும் என்ற ஒரு வெறி அங்கு உள்ளது.

காலனி ஆதிக்கத்தால் அவர்களின் பாரம்பரியம் திட்டமிட்டு வேருடன் அழிக்கப்பட்டுள்ளது.

கிழக்கத்திய ஞானத்தையும் இலக்கணத்தையும் அறிய பாரம்பரிய மிக்க ஒரு குருகுலத்தில் நான் சேர்ந்தேன்.

சம்ஸ்கிருதம் பேசுவதற்கோவெனில் நவீன அணுகு முறை அங்கு இல்லை என்பதை உணர்ந்தேன்.

அப்போது தான் புதுவையில் உள்ள அரவிந்த ஆஸ்ரமத்தில் இண்டர்நேஷனல் ஸ்கூலில் ஒரு ஆசிரியரைக் கண்டேன்.

அவர் பெயர் நரேந்திரா.

அவர் இலக்கணத்தைக் கற்பிக்க ஒரு புதிய எளிய வழி முறையைக் கண்டுள்ளார்.

அது இலக்கணம் படிக்கிறோம் என்ற உணர்வையே உங்களிடம் ஏற்படுத்தாது!

ஆனால் அதே சமயம் இலக்கணத்தை பயிற்சியாளர்களுக்குக் குறைத்துக் கற்பித்து விடாது. ஆகவே உங்களுக்கு இலக்கணத்தில் பகுதி அறிவு தான் ஏற்படும் என்ற நிலையும் ஏற்படாது.

சில சம்ஸ்கிருத பேச்சு வழக்கு வகுப்புகளிலும் நான் சேர்ந்தேன்.

இவை அனைத்தும் சம்ஸ்கிருதத்துடனான பரிச்சயத்தை எனக்கு அதிகப்படுத்தியது!

– தொடரும்

(அடுத்த கட்டுரையுடன் இந்தத் தொடர் முடியும்)

 

 

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -3 / A

 

ச.நாகராஜன்

 

Rutger Kortenhorst ஆங்கித்தில் உள்ள முரண்பாடுகள் ஒரு சிறிதை மட்டும் தனது உரையில் கோடி காட்டி விட்டுச் சென்று விட்டார்.

இது தொடர்பாக எனது தொகுப்பில் உள்ள ஒரு சிறு கவிதையை இங்கு தருகிறேன்.

ஆங்கித்தில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டும் சுவையான நையாண்டிக் கவிதை இது:-

WHY ENGLISH IS SO HARD

 

We’ll begin with a box, and the plural boxes,

But the plural of ox becomes oxen, not oxes

One fowl is goose, but two are called geese,

Yet the plural of moose should never be meese.

You may find a lone mouse or a nest full of mice

Yet the plural of house is houses, not hice.

 

If the plural of man is always called men,

Why shouldn’t the plural of pan be called pen?

If I speak of my foot and show you my feet,

And I give you a boot, would a pair be called beet?

If one is a tooth and a whole set are teeth,

Why shouldn’t the plural of booth be called beeth?

 

Then one may be that, and three would be those,

Yet hat in the plural would never be hose,

And the plural of cat is cats, not cose,

We speak of a brother and also of brethren

But though we say mother, we never say methern,

Then the masculine pronoun are he, his and him,

But imagine the feminine she, shis and shim!

 

– ANONYMOUS

***

 

 

வீடு பற்றிய 30 பழமொழிகள் (Post No.4861)

Picture posted by Lalgudi Veda

COMPILED by London Swaminathan 

 

Date: 29 MARCH 2018

 

Time uploaded in London –  6-58 am (British Summer Time)

 

Post No. 4861

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

ஏப்ரல் 2018 காலண்டர்

(2018 பங்குனி-சித்திரை மாத நற்சிந்தனை காலண்டர்;

ஹேவிளம்பி- விளம்பி காலண்டர்)

 

முக்கிய விழாக்கள் ஏப்ரல் 14-தமிழ்ப் புத்தாண்டு; 18-அக்ஷய த்ருத்யை; 20- சங்கர ஜயந்தி; 29-சித்ரா பௌர்ணமி; புத்த பௌர்ணமி; ஏப்ரல் 1- ஈஸ்டர், 2- ஈஸ்டர் திங்கள் விடுமுறை

 

 

பௌர்ணமி ஏப்ரல் 29

அமாவாசை ஏப்ரல் 15

ஏகாதஸி விரதம்—ஏப்ரல் 12, 26

சுப முகூர்த்த தினங்கள்:- 5, 20, 22, 25, 27

 

ஏப்ரல் 1 ஞாயிற்றுக் கிழமை

வீடு அசையாமல் தின்னும், யானை அசைந்து தின்னும்

ஏப்ரல் 2 திங்கட்கிழமை

வீடு கட்டுகிறது அரிது, வீடு அழிக்கிறது எளிது

ஏப்ரல் 3 செவ்வாய்க்கிழமை

 

வீடு கட்டும் முன்னம், கிணறு வெட்ட வேண்டும்

ஏப்ரல் 4 புதன்கிழமை

வீடு நிறைந்த விளக்குமாறு

ஏப்ரல் 5 வியாழக்கிழமை

வீடு பற்றிக் கொண்டு  எரியும்போது, சுருட்டுக்கு நெருப்புக் கேட்டானாம்.

 

ஏப்ரல் 6 வெள்ளிக்கிழமை

வீடு பற்றி எரியும்போதா கிணறு வெட்டுவது?

ஏப்ரல் 7 சனிக்கிழமை

வீடு போ போ என்கிறது காடு வா வா என்கிறது

 

ஏப்ரல் 8 ஞாயிற்றுக் கிழமை

வீடு வெறும் வீடாய் இருந்தாலும் மணியம் ஏழு ஊர்

ஏப்ரல் 9 திங்கட்கிழமை

வீட்டிலிருக்கிற பூனையை அடித்தால், மேட்டிலிருக்கிற எலியைப் பிடிக்கும்

ஏப்ரல் 10 செவ்வாய்க்கிழமை

வீட்டுக்கு ஏற்றின விளக்கு விருந்துக்கும் ஆகும்

 

ஏப்ரல் 11 புதன்கிழமை

வீட்டைக் கட்டிப் பார், கலியாணம் செய்து பார்

 

ஏப்ரல் 12 வியாழக்கிழமை

வீட்டைக் காத்த நாயும் காட்டைக் காத்த நரியும் வீண்போகா

ஏப்ரல் 13 வெள்ளிக்கிழமை

வீட்டுக் கருமம் நாட்டுக்குரையேல்

ஏப்ரல் 14 சனிக்கிழமை

வீட்டுக் காரியம் பார்க்காதவன் நாட்டுக் காரியம்  பார்ப்பானா?

 

ஏப்ரல் 15 ஞாயிற்றுக் கிழமை

வீட்டுக்கு அடங்காத பிள்ளையை ஊரார் அடக்குவார்கள்

வீட்டில் அடங்கதவன் ஊரில் அடங்குவான்

ஏப்ரல் 16 திங்கட்கிழமை

வீட்டுக்கு அலங்காரம் பெரிய குடி.

வீட்டுக்கு அலங்காரம் மனையாள்.

வீட்டுக்கு அலங்காரம் விளக்கு.

வீட்டுக்கு அலங்காரம் வேளாண்மை.

ஏப்ரல் 17 செவ்வாய்க்கிழமை

வீட்டுக்கு இருந்தால் வெண்கலப் பெண்டாட்டி, வீட்டுக்கு இல்லாமற் போனால் தூங்கற் பெண்டாட்டி

ஏப்ரல் 18 புதன்கிழமை

வீட்டுக்கு ஒரு மெத்தை, கேட்டுக்கொள்ளடி மாரியாத்தை

ஏப்ரல் 19 வியாழக்கிழமை

வீட்டுக்கு ஒரு வாசற்படி, பூட்டுக்கு ஒரு திறவு கோல்

 

ஏப்ரல் 20 வெள்ளிக்கிழமை

வீட்டுக்கு சோறில்லை சிவனறிவான், நாட்டுக்குச் செல்லப் பிள்ளை நானல்லவா?

ஏப்ரல் 21 சனிக்கிழமை

வீட்டுக்குப் புளி, காட்டுக்குப் புலி

 

ஏப்ரல் 22 ஞாயிற்றுக் கிழமை

வீட்டுக்கு வாய்த்தது எருமை, மோட்டுக்கு வாய்த்தது போர்

 

ஏப்ரல் 23 திங்கட்கிழமை

வீட்டைக் கட்டிக் குரங்கை குடிவைத்தது போல

 

ஏப்ரல் 24 செவ்வாய்க்கிழமை

வீட்டுக்கு வீரன் காட்டுக்குக் கள்ளன்

 

ஏப்ரல் 25 புதன்கிழமை

வீட்டுப் பாம்பு காட்டுக்குப் போனால் அதுவும் காட்டுப் பாம்பாகும்.

வீட்டு மூதேவியும் காட்டு மூதேவியும் சேர்ந்து உலாவுகின்றன

 

ஏப்ரல் 26 வியாழக்கிழமை

வீட்டுக்குள் கஞ்சித் தண்ணீரைக் குடித்துவிட்டு, மீசையில் வெள்ளையைத் தடவிக்கொண்டு புறப்படுகிறது

ஏப்ரல் 27 வெள்ளிக்கிழமை

வீட்டுப் பெண்சாதி வேம்பு, நாட்டுப்     பெண்சாதி                 கரும்பு

 

ஏப்ரல் 28  சனிக்கிழமை

வீட்டுக்கு வீடு  வாசற்படி.

வீட்டுக்கு வீடு எதிர் வீடு ஆகாது.

வீட்டுக்கு வீடு மண் வீடுதான்.

 

ஏப்ரல் 29 ஞாயிற்றுக் கிழமை

வீட்டுச் செல்வம் மாடு, தோட்டச் செல்வம் முருங்கை

 

ஏப்ரல் 30 திங்கட்கிழமை

வீட்டுக்குள்ளே வேட்டை நாயை உசுப்புவானேன்

 

BONUS PROVERBS ON HOUSE/HOME

வீட்டிளக்காரம் வண்ணான் அறிவான்

வீட்டைக் கொளுத்தி வேடிக்கை பார்க்கிறதா?

வீட்டில் அழகு வேம்படியாகும்

 

–SUBHAM–