பாரதி போற்றி ஆயிரம் – 19 (Post No.4558)

Date: 29  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-45 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4558

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 19

  பாடல்கள் 120 முதல் 125

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் பாடல்கள்

அமரகவி (பாரதி)

(பாடல் தொடர்ச்சி)

                    

குயிலின் பாட்டிலே – காதல்

   கொப்புளிக்குதடா!

செயல் மறந்தேனடா – லாகிரி

    சிரசிற் கொண்டதடா!

 

‘சுதந்திரப் பாட்டில் – உள்ளம்

        துடிதுடிக்குதடா!

பதமெழும்புதடா – கையும்

       பதைபதைக்குதடா!

 

‘தொண்டு செய்யுமடிமை – என்னும்

       சுடுச ரம்ஓடி

மண்டையைத் தாக்குதடா! – நெஞ்சம்

      மடியப் பாயுதடா!

 

பெண்டுபிள்ளைகளின் – பெருமை

      பெரித றிந்தேனடா!

சண்டைகள் செய்ததெல்லாம் – எண்ணித்

    தலைக விழ்ந்தேனடா!

 

ஏழை துயரெல்லாம் – அவனும்

     எடுத்த டுக்கையிலே

மூளை கலங்குதடா! – விம்மி

    மூச்சும் முட்டுதடா!

 

பாவின் நயமெல்லாம் யானும்

    பகர வல்லேனோ!

ஆவின் பாற்சுவையை நாழி

    அளந்து காட்டிடுமோ!

                  ******        அமரகவி பாடல் முற்றும்

 

அமரகவி என்ற இந்தப் பாடல் எட்டயபுரம் பாரதி மண்டபத் திறப்பு விழாவின் போது கல்கி இதழில் (12-10-1947) வெளி வந்த பாடல்.

பாமரன் ஒருவன் சுப்பிரமணிய பாரதியின் கவிதைகளில் ஈடுபாடு கொண்டு பாடுவது போன்ற அமைப்பை உடையவை. இவை எல்லாமே ஆரம்ப காலக் ‘கலைமகளில் வந்தவை. (1944)    

 

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை: கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.

****

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 18 (Post No.4554)

Date: 28  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-44 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4554

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

  பாடல்கள் 114 முதல் 119

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் பாடல்கள்

அமரகவி (பாரதி)

(பாடல் தொடர்ச்சி)

 

பாப்பாப் பாட்டிலே – நெஞ்சைப்

     பறிகொ டுத்தேனடா!

சாப்பா டேதுக்கடா! – சீனி

     சர்க்கரை ஏதுக்கடா!

 

அன்னை ‘பாஞ்சாலி -சபதம்

     அறைதல் கேட்டேனடா!

முன்னைக் கதையெல்லாம் – கண்ணின்

     முன் நடந்ததடா!

 

‘வந்தே மாதரத்தைப் – பாடவே

    வாய்தி றந்தவுடன்

சந்தேக மில்லை  – ஒருபுதுச்

    சக்தி தோன்றுதடா!

 

‘எங்கள் நாடு தான் – பூங்கா

   இசையி லேறிடுமேல்,

கங்கை யாறுபோல் – உள்ளத்தில்                           

   களிப்பொ ழுகதடா!

 

‘சின்னஞ் சிறுகிளி – கனவில்

    தினமும் காணுதடா!

கன்னங் குழியவே – முத்தமும்

    கனிந்த ளிக்குதடா!

 

‘கண்ணன் காதலன் – எனக்கொரு

     களிய முதமடா!

விண்ண முதமுமே – அதனை

     வெல்ல மாட்டாதடா!

 

 

(நீண்ட பாடல் தொடரும்)

அமரகவி என்ற இந்தப் பாடல் எட்டயபுரம் பாரதி மண்டபத் திறப்பு விழாவின் போது கல்கி இதழில் (12-10-1947) வெளி வந்த பாடல்.

பாமரன் ஒருவன் சுப்பிரமணிய பாரதியின் கவிதைகளில் ஈடுபாடு கொண்டு பாடுவது போன்ற அமைப்பை உடையவை. இவை எல்லாமே ஆரம்ப காலக் ‘கலைம்களில்’ வந்தவை. (1944)

 

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை: கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.

****

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 17 (Post No.4550)

Date: 27  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-30 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4550

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 17

  பாடல்கள் 108 முதல் 113

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் பாடல்கள்

 

அமரகவி (பாரதி)

(பாடல் தொடர்ச்சி)

விண்ணிலொளிரு மீன்கள் மின்னுமே, அடா! – விண்ணில்

    விளங்கும் மதிநிலவு வீசுமே, அடா!

கண்ணுக் கினியசோலை காணுமே, அடா! – அதில்

    களித்திள மான்கள்விளை யாடுமே, அடா!

 

தேனும் தினையும்பாவில் உண்ணலாம், அடா! – மிகத்

     தித்திக்கும் முக்கனியும் உண்ணலாம், அடா!

கானக் குழலிசையும் கேட்கலாம், அடா! ஊடே

      களிவண்டு பாடுவதும் கேட்கலாம், அடா!

 

நாட்ட மொழியுமவன் பாட்டினிசையில் – மிக்க

     நல்ல கற்கண்டினிமை சொட்டுமே, அடா!

ஏட்டிலிம் மந்திரந்தான் கண்டவருண்டோ? – ஈதவ்   

     ஈசன் திருவருளென் றெண்ணுவாய், அடா!       

 

உள்ளந் தெளியுமொரு பாட்டிலே, அடா! – மிக்க

     ஊக்கம் பிறக்குமொரு பாட்டிலே, அடா!

கள்ளின் வெளிகொளுமோர் பாட்டிலே, அடா! – ஊற்றாய்க்

     கண்ணீர் சொரிந்திடு மோர் பாட்டிலே, அடா!

 

வேறு

 

‘கரும்புத் தோட்டத்திலே – எனுங்கவி

    காதைச்  சுடுகுதடா!

இரும்பு நெஞ்சமே – நீராய்

    இளகியோடுதடா!

 

செந்தமிழ் நாட்டின் முதன்மொழி

    செவியிற் சேருமுன்னே,

அந்தமில் லாமல் – உள்ளத்தில்

    அமுதம் ஊறுதடா!

                                                    (நீண்ட பாடல் தொடரும்)

அமரகவி என்ற இந்தப் பாடல் எட்டயபுரம் பாரதி மண்டபத் திறப்பு விழாவின் போது கல்கி இதழில் (12-10-1947) வெளி வந்த பாடல்.

பாமரன் ஒருவன் சுப்பிரமணிய பாரதியின் கவிதைகளில் ஈடுபாடு கொண்டு பாடுவது போன்ற அமைப்பை உடையவை. இவை எல்லாமே ஆரம்ப காலக் ‘கலைம்களில்’ வந்தவை. (1944)

 

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை: கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.

****

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 16 (Post No.4545)

Date: 26  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-53 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4545

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 16

  பாடல்கள் 102 முதல் 107

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் பாடல்கள்

 

அமரகவி (பாரதி)

 

ஊரறிய நாடறிய உண்மை யெல்லாம்

ஒருவரையும் அஞ்சாமல் எடுத்து ரைத்தோன்,

ஆரமுதம் அனையகவி பாடித் தந்தோன்

அமரகவி யென்றெவரும் புகழப் பெற்றோன்,

சீருயரும் தமிழ் மக்கள் செய்த வத்தால்

தென்னாடு சிறக்க வந்த சுப்ரமண்ய

பாரதியார் பெயர்போற்றி ஏத்துவோமே.

பாமாலை புனைந்தவற்குச் சாத்துவோமே.

 

வேறு

உள்ளக் கருத்தையெல்லாம் உள்ளபடி யானிந்த

வெள்ளைக் கவியில் விளம்பினேன் -தெள்ளுதமிழ்

வெண்பாப் புலியும் விகடகவியுமெனக்

கண்பார்த்துக் காத்தல் கடன்

 

வேறு

பாட்டுக் கொருபுலவன் பாரதி அடா! -அவன்

பாட்டைப் பண்ணொடொருவன் பாடினான் அடா

கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனே, அடா – அந்தக்

கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய் அடா!

 

சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமே, அடா!கவி

துள்ளும் மறியைப் போலே, துள்ளும் அடா!

கல்லும் கனிந்துகனி யாகுமே, அடா!- பசுங்

கன்றும் பால் உண்டிடாது கேட்குமே, அடா!

 

குயிலும் கிளியும்பாட்டில் கூவுமே, அடா! – மயில்

குதித்துக் குதித்துநடம் ஆடுமே, அடா!

வெயிலும் மழையுமதில் தோன்றுமே, அடா! – மலர்

விரிந்து விரிந்துமணம் வீசுமே,அ டா!

 

 

அலைமேலே அலைவந்து மோதுமே, அடா! – அவை

அழகான முத்தையள்ளிக் கொட்டுமே, அடா!

மலைமேலே மலைவளர்ந் தோங்குமே, அடா!

வனங்கள் அடர்ந்தடர்ந்து சூழுமே, அடா!

(நீண்ட பாடல் தொடரும்)

 

அமரகவி என்ற இந்தப் பாடல் எட்டயபுரம் பாரதி மண்டபத் திறப்பு விழாவின் போது கல்கி இதழில் (12-10-1947) வெளி வந்த பாடல்.

பாட பேதம்- வரி 4 – பாரதியார் – பாரதியின்

பாமரன் ஒருவன் சுப்பிரமணிய பாரதியின் கவிதைகளில் ஈடுபாடு கொண்டு பாடுவது போன்ற அமைப்பை உடையவை. இவை எல்லாமே ஆரம்ப காலக் ‘கலைம்களில்’ வந்தவை. (1944)

 

 

 

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (தோற்றம்: 27-7-1876 மறைவு: 26-9-1954) குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்தவர். பல்சுவைப் பாடல்களைப் பாடியுள்ள இவர் தொடாத துறைகள் இல்லை எனலாம். குழந்தை இலக்கியப் பாடல்களை ஏராளமாகப் புனைந்துள்ளார். பல நூல்களுக்கு ஆசிரியர்.

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.

****

 

 

ஒரு கவிதை பிரபலமாவது எப்படி? (Post No.4542)

Date: 25  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-33 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4542

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

அறிவியல் துளிகள் ஏழாம் ஆண்டு 44வது கட்டுரை

ஜிமிக்கி கம்மலின் பிரபலம்! ….. ஒரு கவிதை பிரபலமாவது எப்படி?

ச.நாகராஜன்

 

“கவிதை என்பது சக்தி வாய்ந்த உணர்ச்சிகளின் தன்னியல்பான வெளிப்பாடு!” – வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்

இலக்கிய உலகில் சில கவிதைகள் மிகவும் பிரபலமாகி அனைவராலும் பாராட்டப்படுகின்றன. சில கவிதை நூல்களைப் படிக்க ஆளே இருப்பதில்லை.

பிரபலமான கவிஞர்கள் அப்படி என்ன ஒரு மாயப்பொடியைத் தம் கவிதைகளில் சேர்க்கிறார்கள்?

ஆராயக் களமிறங்கியிருக்கிறது அறிவியல். ஆம், சமீ பத்தில் நியூயார்க் பல்கலைக்கழகமும் மாக்ஸ் ப்ளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் எம்பிரிகல் அஸ்தடிக்ஸ் நிறுவனமும் சேர்ந்து ஒரு கவிதை எப்படி படிப்போரிடையே கலை நயத்துடன் மகிழ்ச்சியைத் தருகிறது என்று ஆராய ஒரு ஆய்வை நடத்தியது. 2017, நவம்பரில் ஆய்வு முடிவுகள் வெளியாகிவிட்டன.

இந்த ஆய்வில் 400 கவிதா ரஸிகர்கள் பங்கேற்றனர். அவர்களிடம் 111 ஹைகூக்களும் 16 சானெட்டுகளும் ( 14 வரியுள்ள ஆங்கிலக் கவிதை) கொடுக்கப்பட்டன.

இந்த கவிதைகளை வரிசைப் படுத்தித் தர அவர்களிடம் கீழ்க்கண்ட கேள்விகள் கேட்கப்பட்டன.

 

  • இந்தக் கவிதையில் உள்ள கற்பனையின் தெளிவு எப்படி இருக்கிறது?
  • இந்தக் கவிதை உணர்ச்சி பூர்வமாக எப்படிப்பட்ட கிளர்ச்சியை அல்லது மன ஓய்வைத் தருகிறது?
  • இந்தக் கவிதையின் உள்ளடக்கம் உடன்மறையானதா அல்லது எதிர்மறையானதா? அதன் உணர்ச்சிப் பிணைப்பு எப்படி உள்ளது?
  • இந்தக் கவிதை கலைநயத்தில் எப்படிப்பட்ட ரசிப்பைத் தருகிறது?

ஆய்வின் முடிவில் அனைவரிடமும் சில பொதுவான ஒற்றுமைகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

“தனிநபரின் ருசி மனிதருக்கு மனிதர் மாறுபடும் என்பது உண்மை. இப்படிப்பட்ட வேறுபாடுகள் இருப்பினும், ஒரு கவிதையை அனைவரும் ரசிக்க சில காரணிகள் அனைவருக்கும் பொதுவாகவே உள்ளன”, என்று ஆய்வுக் குழு தலைவர் அமி பெல்ஃபி (Amy Belfi) கூறுகிறார்.

இந்த ஆய்வின் முடிவு நடப்பு ‘சைக்காலஜி ஆஃப் அஸ்தடிக்ஸ், க்ரியேடிவிடி அண்ட் தி ஆர்ட்ஸ்’ இதழில் வெளியாகியுள்ளது.

ஒரு கவிதையில் அனைவரும் முதலில் எதிர்பார்ப்பது கற்பனா தெளிவு தான்.

அடுத்தது ஒரு சிறந்த கவிதை, உடன்மறையான உள்ளக் கிளர்ச்சியைத் தூண்ட வேண்டும்.

சந்தோஷமான உணர்வுகளைக் கிளப்பும் கவிதைகள் முதலிடத்தைப் பிடிக்கின்றன.

இந்த உரைகல்லில் பாரதியாரின் இரு பாடல்களைப் பார்த்தால் ஆய்வு உண்மை தான் என்று நம்மை நம்ப வைக்கும்.

மங்கியதோர் நிலவினிலே, கனவில் இது கண்டேன், வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை –பாரதியார்;

காற்று வெளியிடை கண்ணம்மா, உன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் – பாரதியார்

 

‘தி செகண்ட் கமிங்’ என்ற ஈட்ஸின் (Yeat’s “The Second Coming” )  கவிதை போல பிற கவிதைகள் யாரையும் கவரவில்லை.

ஹைகூவில் அனைவரையும் கவர்ந்த ஹைகூ : “மலர்கள் மலர்ந்து தீ போல பரவுகிறது.”

மிக மோசமான ஹைகூ என்று மதிப்பிடப்பட்ட ஹைகூ:

“குடித்து விட்ட பெண் வாந்தி எடுக்கிறாள்.”

மிகவும் மோசமான மதிப்பெண்களைப் பெறும் கவிதைகள் எதிர்மறை உணர்ச்சிகளை ஊட்டுவதாக உள்ளன. அதில் கற்பனைத் தெளிவும் இல்லை.

இந்த ஆய்வானது கவிதைகளுக்கென்றே எடுக்கப்பட்டது என்று கூறும் ஆய்வாளர்கள், ஆனால் இது பாடல்கள், கதைகள் மற்றும் ஸ்கிரிப்டுகளுக்கும் பொருந்தும் என்று கூறுகின்றனர். ஆய்வுக் களத்தை விரிவு படுத்தி இன்னும் ஆராயப் போகிறது ஆய்வுக் குழு.

இந்த ஆய்வு, பாடல்களுக்கும் பொருந்தும் என்று ஆய்வு முடிவு கூறும் போது தான், ஐந்து கோடி பேர் பார்த்து ரஸித்த ஜிமிக்கி கம்மல் எப்படி பிரபலமானது என்பது புரிகிறது!

பாருங்கள் ஆய்வின் முடிவை! கற்பனைத் தெளிவு வேண்டும்.

உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் உள்ளத்தில் ஏற்படுத்தி ஆடச் செய்ய வேண்டும்.

ஜிமிக்கி கம்மல் அவரவர்கள் மனோரஸனைக்கு ஏற்றபடி கற்பனா தெளிவைக் கொடுத்து உள்ளக் கிளர்ச்சியை உற்சாகத்தையும் ஏற்படுத்தி நாடு விட்டு நாடு, பட்டி தொட்டி எங்கணும் பரவி விட்டது. அவரவர்களுக்கு அவரவர் மனோபாவப்படி ஒரு ஜிமிக்கி கம்மல்!

மேலை நாட்டு ஆய்வுகள் ஒரு புறம் இருக்க நம் நாட்டுக் கவிஞர்கள் கவிதை பற்றிய இலக்கணத்தை எப்படி வரையறுத்திருக்கிறார்கள்?

மஹாகவி பாரதியார், “உள்ளத்தில் ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்” என்கிறார். வாக்கின் ஒளி அற்புதங்களை உருவாக்கும் என்பது அவரது முடிவு,

அதன் பயனையும் அவர் தெளிவுற விளக்குகிறார்:-

“வெள்ளம் போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழி பெற்றுப் பதவி கொள்வார்!”

எப்படி ஒரு அற்புதமான வரையறுப்பு?

கவிச் சக்கரவர்த்தி கம்பனோ பெருகி வரும் கோதாவரியைக் கண்ணால் கண்ட மகிழ்ச்சியில் கவிதைக்கு இலக்கணம் வகுத்து விடுகிறான்.

‘புவியினுக்கு அணியாய் ஆன்ற பொருள் தந்து  புலத்திற்றாகி அவியகத்துறைகள் தாங்கி ஐந்திணை நெறியளவில்       சவியுறத் தெளிந்து தண்ணென் ஒழுக்கமும் தாங்கிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்”

நல்ல ஒரு கவிஞனின் கவி புவியினுக்கு அணியாக இருக்கும்; ஆன்ற பொருளைத் தரும். தேவர் தம் உணவுக்கொத்த சுவைப் புலங்களில் படிந்ததாக இருக்கும். அகன்ற பிரவாகம் போலப் பெருக்கெடுத்து ஓடி இன்பம் தரும்.(கோதாவரியைப் போல).

கவிதை என்றால் என்ன என்பதை மிக எளிமையாக விளக்குகிறார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. ஆனால் அது ஆழ்ந்த பொருளைத் தரும் ஒன்று:

 

உள்ளத்துள்ளது கவிதை – இன்பம்                       உருவெடுப்பது கவிதை                                     தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை                தெரிந்துரைப்பது கவிதை.

இப்படி கவிதை பற்றிய வரையறுப்புகள் ஆயிரம் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கவிஞர் சொன்னதே! அனைத்தும் உண்மை! இதற்கு அப்பாலும் விளக்க முடியாமல் இருப்பதே நல்ல கவிதை!

அறிவியல் கவிதைக் களத்திற்குள் இறங்கியது என்றால் கவிதை மட்டும் சும்மாவா இருக்கும். அதுவும் அறிவியலுக்குள் இறங்கி விடும்; விளையாடும்!

அதையும் எதிர்காலத்தில் ரஸிக்கத் தானே போகிறோம்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

1911ஆம் ஆண்டு ஸ்காட் மேற்கொண்ட சாகஸம் நிறைந்த தென் துருவப் பயணம் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் அதே பயணத்தில் இன்னும் மூன்று பேர் உயிரைப் பணயம் வைத்து தனியாக ஒரு குட்டிப் பயணம் மேற்கொண்டனர்.

1911 ஜூன் மாதம் ஸ்காட் குழுவினர் 25 பேர்கள் கேப் இவான்ஸ் என்ற இடத்தை அடைந்த போதிலும் நிஜமான தென் துருவக் கடைசிப் பயணம் அக்டோபரில் தான் ஆரமபிக்க முடிந்தது.

அவரது உதவியாளரான வில்ஸன் என்பவர் பவர்ஸ் என்பவரையும் செர்ரி கராட் என்பவரையும் அழைத்துக் கொண்டு பெங்குயின் முட்டைகளைச் சேகரிக்க ஜூன் 27ஆம் தேதியன்று ஒரு பயணம் மேற்கொண்டார்.

130 மைல் பயணம். கண்ணே தெரியாத அளவுக்கு கும்மிருட்டு. உறைய வைக்கும் குளிர். கற்பனைக்கும் அப்பாற்பட்ட மைனஸ் 75 டிகிரி பாரன்ஹீட்! என்றாலும் கூட உயிரியல் துவக்கத்தின் பரிணாமத்தை ஆராய பெங்குயின் முட்டைகள் உதவும் என்று வில்ஸன் நம்பினார்.

 

அவர்கள் கொண்டு சென்ற ஸ்லெட்ஜ் வண்டிகள் 400 பவுண்ட் எடையின் பாரத்தைத் தாங்க முடியாமல் நெளிந்தன. கடுமையான காற்று. கும்மிருட்டில் ஒவ்வொரு ஸ்லெட்ஜையும் அடுத்த கட்டத்திற்கு கடைத்தேற்ற வேண்டியதாகப் போயிற்று.

திடீரென ஒரு பனிப்புயல். அவர்களது கூடாரம் பறந்தே போனது. பிஸ்கட் தான் உணவு. ஸ்லீப்பிங் பேக்கில் தான் தூக்கம்.

19 நாட்கள் இப்படித் தவியாய்த் தவித்தனர். கடைசியில் பெங்குயின் காலனி என்று வர்ணிக்கப்படும் பெங்குயின் இருப்பிடத்தை அடைந்தனர்.

200 அடி உயர சிகரத்திலிருந்து பனிக் கடலோரம் இறங்கி முட்டைகளைச் சேகரித்து மீண்டும் மேலே ஏற வேண்டும்.

 

செர்ரி கராட் கண் தெரியாமல் சிகரத்தில் ஏற இரண்டு முட்டைகள் உடைந்து சிதறின. நல்ல வேளையாக இன்னும் மூன்று முட்டைகள் பத்திரமாக இருந்தன!

மறு நாள் தங்கள் கல் வீட்டை அவர்கள் செப்பனிட்டனர். இரு நாட்கள் கழித்து காற்று வீச்சு குறைந்தது. பவர்ஸ் இன்னும் ஒரு முறை பெங்குயின் காலனி போகலாமா என்றார், துணிச்சலுடன்.

ஆனால் வில்ஸனோ, “போதுமப்பா! போதும்! போகலாம் நம் காம்பை நோக்கி” என்றார்.

உலகின் மிகத் துணிச்சலான, அபாயகரமான, மோசமான பயணங்களுள் இதுவும் ஒன்று என்கிறது வரலாறு!

***

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 15, அழ.வள்ளியப்பா பாடல்கள் (Post No.4541)

Date: 25  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-06 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4541

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 15

  பாடல்கள் 97 முதல் 101

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

அழ.வள்ளியப்பா அவர்களின் பாடல்கள்

பாரதியார்

பாப்பாப் பாட்டைப் பாடித்தந்த
பாரதி யாரைப் போற்றிடுவோம்.
கேட்போம், அவரது வார்த்தைகளை
கேட்ட படியே நடந்திடுவோம்.

குன்றெனத் தலைநிமிர்என்றிடுவார்,
கொடுமை தொலைந்திட வேண்டுமென்பார்.
ஒன்றுபட் டாலே வாழ்வுஎன்பார்.
உலகிலே யாவரும் ஒன்றுஎன்பார்.

சண்டை சச்சரவை மூட்டிவிடும்
சாதி ஒழிந்திட வேண்டும்என்பார்.
பண்டைப் பெருமை வளர்ந்திடவே
பற்பல உண்மைகள் கூறிடுவார்.

பெண்ணுக் குரிமைகள் வேண்டுமென்பார்.
பேச்சொடு செய்கையும் வேண்டுமென்பார்.
கண்ணிற் சிறந்த விடுதலையைக்
கண்டிட வழிதனைக் காட்டிவந்தார்.

தமிழை வளர்த்திடப் பாடுபட்டார்.
தாய்மொழி ஆசையை ஊட்டிவிட்டார்.
அமுதாம் அவரது வார்த்தைகளை
அறிந்து செயலிலே காட்டிடுவோம்.

 

 அழ.வள்ளியப்பா: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இராயவரத்தில் 1922இல் பிறந்தார். (தோற்றம் 7-11-1922 மறைவு:16-3-1989) நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த சிறந்த கவிஞரான இவர், 2000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான பாடல்களை இயற்றியவர். குழந்தை இலக்கியத்தில் இவரது சாதனை மிகவும் அரிதான ஒன்று. எளிய தமிழ், இனிய சந்தம் கூடிய பாடல்களை குழந்தைகள் இன்றும் விரும்பிப் பாடுகின்றனர்.

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.

****

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 14(Post No.4537)

Date: 24  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-10 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4537

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

  பாடல்கள் 93 முதல் 96

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

நாமக்கல் கவிஞர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்

நாமக்கல் கவிஞர் பாடல்கள் 93 முதல் 95 முடிய

பாடல் 93

உலகம் வாழ்க!

 

உலகம் வாழ்க என்ற இந்தத் தலைப்பில் உள்ள 7 பாடல்களில் முதல் பாடலில்  பாரதியாரைப் பற்றிய குறிப்பு வருகிறது. முதல் பாடலை இங்குக் காணலாம்.

 

கவிபாடிப் பெருமைசெய்யக் கம்ப னில்லை

கற்பனைக்கிங் கிலையந்தக் காளி தாசன்
செவிநாடும் கீர்த்தனைக்குத் த்யாக ரில்லை

தேசீய பாரதியின் திறமும் இல்லை
புவிசூடும் அறிவினுக்கோர் புதுமை தந்து

புண்ணியமும் கண்ணியமும் புகழும் சேர்ந்த
உவமானம் வேறெவரும் உரைக்க வொண்ணா                               உத்தமராம் காந்தியரை உவந்து பேச.

பாடல் 94

ஸ்ரீசுப்பிரமண்ய பாரதி

பல்லவி

சுதந்தர ஞானத்தின் சுடரொளி தீபம்
சுபஸ்ரீ சுப்பிரமண்ய பாரதி நாமம்.

அநுபல்லவி

நிதந்தரும் கவலையை நீக்கிடும் சூத்திரம்
நிச்சய புத்திதரும் அட்சய பாத்திரம் (சுதந்)

சரணங்கள்

அச்சம் எனும்பிணியை அகற்றிடும் மருந்து
ஆற்றலைக் கொடுத்திடும் அமுதத்தின் விருந்து
கொச்சை வழக்கங்களைக் கொளுத்திடும் நெருப்பு
கொடுமையை எதிர்த்திடக் கூரிய மறுப்பு! (சுதந்)

தெய்வத் தமிழ்மொழியில் புதுமைகள் சேர்த்துத்
தீரம் விளங்கச்சுத்த வீரமும் வார்த்து
வையம் முழுதும்அதை வணங்கிடச் செய்யும்
வாய்மையும் தூய்மையும் வளர்த்திடும் ஐயன்! (சுதந்)

பெண்ணின் பெருமைகளைக் காத்திடும் கோட்டை
பேதையர் என்பதனைக் கடிந்திடும் சாட்டை
உண்மை அறிவுகளை உணர்த்திடும் போதம்
உத்தம தத்துவங்களை ஒலித்திடும் கீதம்! (சுதந்)

 

பாடல் 95

 

சுதந்தர தினம்

பல்லவி

விடுதலை அடைந்து விட்டோம்–உலகம்
வியந்திடும் படிக்கொரு நயந்திகழ் விதத்தினில் (விடு)

அநுபல்லவி

நடுநிலை தாங்கிடும் நம்மர சோங்கிட
நாநிலம் முழுதுக்கும் ஞானப் பணிபுரிய (விடு)

சரணங்கள்

பாரதி மெய்ப்புலவன் வாக்குப் பலித்ததென
பண்டுநம் தாதாபாய் கண்ட கனவிதென
தீரன் திலகரிஷி த்யாகம் திகழ்ந்திடவும்
தெய்விக காந்திதவம் வையம் புகழ்ந்திடவும் (விடு)

அந்நியப் பிடிப்புகள் அகன்றத னால்மட்டும்
ஆனந்த சுதந்தரம் அடைவது வெகுகஷ்டம்
உன்னத லட்சியங்கள் ஓங்கிட வேண்டும்அதில்
உத்தமன் காந்திவழி தாங்கிட வேண்டும்இனி (விடு)

கிடைத்த விடுதலையைக் கெடுத்து விடாதபடி
கீழான ஆசைகட்குக் கொடுத்து விடாமல்இடம்
அடுத்திடும் யாவரையும் அன்பின் வழிமதித்தே
அகிலம் முழுதும்காந்தி அருளைப் பரப்புதற்கே (விடு)

 

நாமக்கல் கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

பாடல் 96

 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல்

பாரதி

பாரதிக்கு நிகர் பாரதியேமண்ணில் 

யாரெதிர்த்தாலும் மக்கள் 

சீருயர்த்தும் பணியில் (பாரதி)

ஆறோ டிரண்டு திக்கும் 

அதிரப் பறை முழக்கும்
அச்சமில்லாத் தமிழில் 

அறிவில் நிறைந்திருக்கும் (பாரதி)

வீரமும் நெஞ்சந் தன்னில் 

ஈரமும் வேண்டும் என்றான்
வேற்றாரைக் கண்டஞ்சுவார் 

வீணரென்றே புகன்றான்

சோர்வகற்றி யாவரும் 

ஓர் முகமாய் எழுந்தால்
சூழும் அடிமையிருள் 

சொல்லாமல் ஓடும் என்றான் (பாரதி)

பாதகம் செய்பவரைப் 

பாட்டாலே உமிழ்ந்தான்
பஞ்சைகளின் நிலையைப் 

பார்த்து உள்ளம் நெகிழ்ந்தான்

பேதங்கள் வளர்ப்பவரைப் 

பித்தர் என்றே இகழ்ந்தான்
பெண்மையைச் சக்தியை 

உண்மையைப் புகழ்ந்தான் (பாரதி)

[ தோழர் ஜீவாவின் கட்டுரையிலிருந்து எடுத்த பாடல்

 

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (தோற்றம் 13-4-1930 மறைவு: 8-10-1959) தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான் காடு என்ற சிற்றூரில் பிறந்தவர். சிறந்த திரைப்படப் பாடலாசிரியர். கவிஞர். சமூக சிந்தனை மிக்க சிந்தனையாளர். கிராமியப் பண்ணில் பாடல் இயற்றுவது இவரது தனிச் சிறப்பு. எளிய தமிழில் அரிய கருத்துக்களை வழங்கியவர்..
குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.

****

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 13 (Post No.4532)

Date: 23  DECEMBER 2017

 

Time uploaded in London- 5-25 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4532

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 13

  பாடல்கள் 88 முதல் 92

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

நாமக்கல் கவிஞர் பாடல்கள்

பாடல்கள் 88 முதல் 92

பாரதி நினைவு

 

சுப்ரமண்ய பாரதியை நினைத்திட் டாலும்

சுதந்தரத்தின் ஆவேசம் சுருக்கென் றேறும் ;
இப்ரபஞ்சம் முழுதும்நமக் கினமாய் எண்ணும் ;
‘இந்தியன்நான்’ என்றிடும்நல் லிறுமாப் புண்டாம் ;
எப்பெரிய காரியமும் எளிதாய்த் தோன்றும் ;

எல்லையற்ற உற்சாகம் எழுந்து பொங்கும்
ஒப்பரிய ‘தமிழன்’எனும் உவகை ஊறும் ;

உள்ளமெல்லாம் துள்ளியெழும் ஊக்க முண்டாம்.

அச்சமெனும் பெரும்பேயை அடித்துப் போக்கும் ;

அடிமைமன விலங்குகளை அறுத்துத் தள்ளும் ;
துச்சமென வருதுயரம் எதையும் தாங்கிச்

சுதந்தரத்தை விட்டுவிடாத துணிவு தோன்றும் ;
கொச்சைமிகும் பிறநாட்டு மயக்க மெல்லாம்

கூண்டோடு விட்டொழிக்கத் தெளிவு கூட்டும் ;
மெச்சிடுநம் தாய்நாட்டின் நாக ரீகம்

மேன்மையெல்லாம் பாரதியார் பாட்டால் மேவும்.

தரித்திரத்தின் கொடுமையெல்லாம் சேர்ந்து வாட்டத்

தன்வீட்டில் உணவின்றித் தவித்த நாளும்
சிரித்தமுகம் மாறாமல் செம்மை காத்துத்

தேசத்தின் விடுதலையே சிறப்பா யெண்ணித்
தெருத்தெருவாய்த் தேசீய பஜனை பாடிச்

சென்னையிலும் உணர்ச்சிவரச் செய்த தீரன்
உருத்தெரியா திப்போதும் இங்கே நம்மை

ஊக்குவதும் பாரதியின் உரைக ளேயாம்.

பெண்ணுலகம் புதுமைபெறப் பழமை பேசிப்

பெருமையவர் உரிமைகளைப் பெரிதும் போற்றி
மண்ணிலவர் இழிவுபெறச் செய்து வைத்தோர்

மடமைமிகும் கொடுமைகளை மறுத்துப் பாடிக்
கண்ணியத்தைப் பிற்காலக் கவிஞர் தம்முள்

காத்ததுநம் பாரதியின் கவியே யாகும் ;
எண்ணஎண்ணத் தமிழ்மொழிக்கோர் ஏற்ற மாகும் ;

பாரதியின் திருநாமம் என்றும் வாழ்க!

எங்கேயோ எட்டாத உலகம் தன்னில்

இருப்பரென நாம்படித்த தெய்வம் எல்லாம்
இங்கேயே எம்முடனே எவரும் காண

ஏழைமக்கள் குடிசையிலும் இருப்ப தாக்கும்
சிங்காரப் புதுக்கவிகள் பாடி பலம்முத்

தேவரெல்லாம் தமிழ்நாட்டின் திரியச் செய்தோன்
மங்காதாம் பாரதியின் நினைவைப் போற்றி

மறவாமல் தமிழ்நாட்டார் வாழ்த்த வேண்டும்.

நாமக்கல் கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.
குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.

****

 

 

கம்பன் மனைவி ரொம்ப மோசம்! ராமாயணத் தகவல் (Post No.4531)

Written by London Swaminathan 

 

Date: 22 DECEMBER 2017 

 

Time uploaded in London- 18-38

 

 

Post No. 4531

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

அட, நம்ம  வீட்லதான், டெலிவிஷன் ஸீரியல் (SERIAL) பார்க்கும் ஆர்வத்துல அடுப்புல பாலைப் பொங்கவீட்டு வீடு முழுதும் மணக்க  வைக்கறா என் மனைவின்னு நான் நினைச்சேன்; தப்பு; தப்பு; தப்பு.

 

 

இதெல்லாம் நம்ம வீட்ல மட்டும் இல்ல. கம்பன் வீட்லேயும்தான். அவன் ஆயிரம் ஆண்டுக்கு முன் வாழ்ந்தபோதும் அவன் மனைவி அரட்டைக் கச்சேரியில் மற்ற பெண்களோட சேர, வீட்ல பால் பொங்கியது கூடத் தெரியல்ல. கம்பன் போய், பாலில் தண்ணீரைத் தெளித்து பால் பொங்குவதை நிறுத்தினான்.

இதெல்லாம் எப்படி உங்களுக்குத் தெரிஞ்சுச்சு? என்று கேட்கிறீர்களா?

 

கம்ப ராமாயண யுத்த காண்டம் படித்தபோது அவன் பத்தே பாடல்களில் அள்ளித் தெளித்த மூன்று உவமைகளில் ஒன்று, அடுப்பில் பால் பொங்கும்போது, அதைத் தணிக்க தண்ணீர் தெளிக்கும் உவமையாகும்!

என்ன அற்புதமான உவமை பாருங்கள். நாம் அன்றாடம் காணும் நிகழ்ச்சி கம்பன் வீட்டிலோ அல்லது அவர் போன நண்பர் வீட்டிலோ நடந்திருக்க வேண்டும். அதைக் காளிதாசன் போல தகுந்த இடத்தில் பயன்படுத்தியதே அவன் சிறப்பு.

இதோ பாருங்கள் கம்பன் பாடலை:-

இராமன் சினம் எப்படித் தணிந்தது என்று வருணனை வழி வேண்டு படலத்தில் இது வருகிறது.

பருப்பதம் வேவது என்னப் படர் ஒளி படரா நின்ற

உருப்பெறக் காட்டி  நின்று நான் உனக்கு அபயம் என்ன

அருப்பறப் பிறந்த கோபம் ஆறினான் ஆறா ஆற்றல்

நெருப்பு உறப் பொங்கும் வெம்பால் நீர் உற்றது அன்ன நீரான்

 

பொருள்

ஒரு பெரிய மலை எரிகின்றது என்று கண்டோர் எண்ணுமாறு பரவுகின்ற ஒளியுடைய தீ படர்கின்ற தன் வடிவத்தை நன்கு புலப்படுத்தி நின்று வருணன், ‘ நான் உன்னிடம் அடைக்கலம் அடைகிறேன்’ என்று கெஞ்சினான். அதனால் எரியும் தீயினால் பொங்கும் பாலில் நீர் தெளித்தது போன்ற தன்மை கொண்டவனாய் இராமன், சினம் தணியப் பெற்றான்.

 

அதாவது பொங்கும் பாலில் நீர் தெளித்தால் அது எப்படித் தணியுமோ அது போல பொங்கிய சினம் /கோபம் தணிந்தது.

 

இரண்டாம் உவமை- தீவினை உடையார்க்கே தீங்கு வரும்

 

இன்னொரு பாட்டில் எப்படி ‘நாரதர் கலகம் நன்மையில் முடியும்’ என்று நாம் சொல்லுகிறோமோ அப்படி நல்லோர் கோபமும் நன்மையில் முடியும்’ என்கிறான் கம்பன்.

ஆய்வினை உடையர் ஆகி அறம் பிழையாதார்க்கெல்லாம்

ஏய்வனே நலனே அன்றி இறுதி வந்து அடைவது உண்டோ

மாய் வினை இயற்றி முற்றும் வருணன் மேல் வந்த சீற்றம்

தீவினை உடையார் மாட்டே தீங்கினைச் செய்தது அன்றே

பொருள்

தருமம் தவறாதவர்க்கு எல்லாம் நன்மையே வரும்; கெடுதல் வருமா? அழிவைச் செய்யக்கூடிய ராமனின் கோபம் வருணனுக்குத் தீமை செய்யாது அவுணர்க்கே தீமையைச் செய்தது அன்றோ!

 

பெரியோர் கோபம்= தீயோர்க்கு அழிவு

 

மூன்றாம் உவமை– தீபமும் சாபமும்

 

பாபமே இயற்றினாரை பல்நெடுங்காதம் ஓடி

தூபமே பெருகும் வண்ணம் எரியெழச் சுட்டது அன்றே

தீபமே அனைய ஞானத் திருமறை முனிவர் செப்பும்

சாபமே ஒத்தது அம்பு தருமமே வலியது அம்மா

 

பொருள்

இராமனின் அம்பு பல தூர காதம் சென்று புகையும் தீயும் தோன்றப் பாவச் செயலைச் செய்தவரைச் சுட்டதன்றோ? அந்த அம்பு எதைப் போன்றது என்றால் ஞான  தீபமாக விளங்கும் மறைகளில் வல்ல முனிவர்கள் சபிக்கும் சாபத்தைப் போன்றது.

அதாவது ராமனின் அம்பு, முனிவரின் சாபம் போலத் தவறாமல் இலக்கைத் தாக்கி அழிக்கும்

அருமையான உவமை

இராமனின் அம்பு= முனிவரின் சாபம்

TAGS:-பால் பொங்குதல், முனிவ்ர் சாபம், ராமன் அம்பு, தீங்கு இழைத்தோர்

–SUBHAM–

பாரதியார் பற்றிய நூல்கள் – 45 (Post No.4529)

Date: 22  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-26 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4529

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – Part 45

எஸ்.திருச்செல்வம் எழுதியுள்ள ‘மகாகவி பாரதி’

 

ச.நாகராஜன்

1

மஹாகவி பாரதியாரின்  வாழ்க்கை வரலாறைமகாகவி பாரதி (வரலாற்றுச் சுருக்கம்) பாரதி நூற்றாண்டு நினைவு வெளியீடு என்று அழகிய சிறு நூலாக வெளியிட்டுள்ளார் எஸ்.திருச்செல்வம் என்னும் பாரதி அன்பர்.

22 பக்கமே அடங்கியுள்ள சிறு நூல் தான் என்றாலும் சிறப்பான நூல். சீரிய முயற்சி.

 

 

இந்த நூலுக்கு பிரார்த்தனை உரையாக இலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி.கணபதிப் பிள்ளை அவர்கள் வழங்கிய அழகிய உரையில் சில பகுதிகள்:

பாடாமல் இருக்க மாட்டாமை, பாரதியாருக்குப் பிறவிச் சொத்து. பாரதியாரின் இருதயம் பரிசுத்தமானது. அதில் ஒரு எண்ணம் குதிக்குமானால், அக்கணமே அவ்வெண்ணம் பாடல்களாய்க் குதிக்கும்.

 

 

பாடல்கள் பாலர் தொடக்கம் பண்டிதர்வரை யாரையும் இனிக்க வைப்பவை. பாடல்களைப் போலவே, வசனங்களும் புத்தம் புதியவை.

இந்த ஆண்டு பாரதி நூற்றாண்டு வானொலியிலும் பத்திரிகைகளிலும் அடிக்கடி பாரதியாரைத் தரிசிக்கின்றோம். இச் சந்தர்ப்பத்தில், அவருக்கு ஒரு வரலாறு எழுதி வெளியிடுவது பொருத்தம், வெகு பொருத்தம்.

மகாகவி பாரதிஎன்ற தலைப்பைக் கொண்ட இந்நூல், பாரதியார் வரலாற்றைத் தெளிவு பெற விளக்கஞ் செய்கின்றது. அவ்வளவிலமையாது, வேண்டிய இடங்களில் பாரதியாரின் இலக்கிய இரசனை சுரப்பதையும் ஒரு அளவுக்குத் தொட்டுக் காட்டுகின்றது. இவ்வாற்றான் இந்நூல் போற்றற்பபாலது”.

வெகு சுருக்கமாக நூலைப் பற்றிய முன்னுரை இது.

 

2

யாழ்ப்பாணத் தமிழர் 1982 டிசம்பரில் வெளியிட்டுள்ள இந்த நூல் பாரதியாரின் வரலாற்றை ஆரம்ப முதல் ஆண்டு வாரியாக முக்கிய விஷயங்களைத் தொட்டுக் காட்டி சிரத்தையோடு அமைக்கப்பட்டுள்ளது.

நூலின் சில பகுதிகள்:

பதினொரு வயதுப் பையனுக்குபாரதிஎன்ற பட்டமா என்று தழிழறிந்தோர் ஆச்சரியப்பட்டனர்.

காசி இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்று, மெட் ரிகுலேஷன் பரிட்சையிலும் சித்தி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து அலகபாத் சர்வகலாசாலையில் புது முகத் தேர்வுப் பரிட்சையில் முதன் நிலையில் சித்தி பெற்றார். வடமொழியுடன், இந்தியையும் கற்கும் சந்தர்ப்பமும் இவ்வேளையில் பாரதியாருக்குக் கிடைத்தது.

“1902-ம் ஆண்டு வரை இங்கு வசித்து வந்த பாரதியார், இருபது வயதுக்குரிய வாலிப மிடுக்குடன் திகழ்ந்தார். மீசை வளர்த்து, கச்சம், வால் விட்ட தலைப்பாகையும் அணியும் பழக்கம் இந்நாட்களிலேயே அவருக்கு ஏற்பட்டது.

 1903-ம் ஆண்டில் எட்டயபுரம் மன்னரின் வேண்டுதலுக்கு இசைந்து, அரசவைக் கவிஞர் பதவியை ஏற்றுக் கொண்டார். ஆனாலும் நீண்ட காலம் இவர் இப்பதவியில் இருக்கவில்லை. ஆனாலும் ஒரு வருட காலம் மட்டுமே இப்பதவியை அவர் வகித்தார்.

இருபத்தொரு வயதிலேயே அரசவைக் கவிஞர் பதவியை வகித்த ப்ருமை பாரதியாருக்குக் கிடைத்தது.

கப்பலோட்டிய தமிழர் ..சிதம்பரபிள்ளையுடனும் தொடர்பு கொண்டதுடன் வங்கிக் கிளர்ச்சியிலும் நேரடியாகவே ஈடுபட்டார்.”

 

“1908-ம் ஆண்டு பாரதியாரின் முதலாவது கவிதை நூல் வெளியானது. “ஸ்வதேச கீதங்கள்என்பது இந்நூலின் பெயர்.”

 

“1912-ம் ஆண்டே பாரதியாரின் வாழ்க்கையில் உழைப்பு மிக்க வருடமாகும். பகவத் கீதையை இவ்வாண்டிலேயே தமிழில் மொழி பெயர்த்தார்.

கண்ணன் பாட்டு, குயில் பாட்டு ஆகிய கவிதை நூல்களும் வெளியாகின. “பாஞ்சாலி சபதத்தின்முதலாம் பகுதியும் அச்சேறியது.

 

“1918, நவம்பர் 20-ம் திகதிபுதுவையிலிருந்து புறப்பட்டு, பிரிட்டிஷ் எல்லையில் காலடி எடுத்து வைத்தபோது பாரதியார் கைது செய்யப்பட்டார்.”

 

பாரதியாரை மாபெரும் கவிஞர் என்று  மட்டுமே மக்கள் அறிவர்.

அவர் ஒரு சிறந்த கதாசிரியர், கட்டுரையாசிரியர், மேடைப் பேச்சாளர் என்பது பலருக்குத் தெரியாது.”

 

பாரதியாரின் பேரர்கள், பூட்டர்கள் பலர் கனடா, கலிபோர்னியா, மலேஷியா, டோரண்டோ ஆகிய இடங்களில் இன்று தொழில் புரிகின்றார்கள்.”

 

பாரதி வாழ்ந்த எட்டயபுரத்தில் 1948 செப்டம்பரில் மணிமண்டபம் கட்டப்பட்டது.”

1960 செப்டம்பர் 11-ம் திகதி பாரதியாரின் 78ஆவது பிறந்த தினத்தன்று அவரது முத்திரையை இந்திய அரசு வெளியிட்டுக் கௌரவித்தது.

அவரது கவிதைகள் பல ரஷ்ய, ஆங்கில, ஸ்பானிய, ஆர்மீனிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

சுமார் இருநூற்றுக்கதிகமான பாரதி தொடர்பான நூல்கள் தமிழகத்தில் கடந்த பன்னிரெண்டு மாதங்களிலும் வெளி வந்துள்ளன.

 

3

நூலில் 18வது பகுதியில் டாக்டர் திருமதி விஜயா பாரதியின் நூலில் உள்ள சில

முக்கியப் பகுதிகள் தரப்பட்டுள்ளன.

இந்தப் பகுதியில் விஜயா பாரதி அவர்கள் கீழ்க்கண்டவாறு பாரதியார் சுதேசமித்திரனில் சேர்ந்தது பற்றிக் கூறுகிறார்:

பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிகையில் உதவியாசிரியராகச் சேர்ந்தது எவ்வாறு என்பது பற்றிப் பல கதைகள் அடிபடுகின்றன.

சுதேசமித்திரன் ஆசிரியராகவிருந்த ஜி.சுப்பிரமணிய ஐயர் மதுரைக்கு வந்த போது பாரதியாரின் திறமைகளை அறிந்து அவரை அழைத்துச் சென்றதாகச் சிலர் கூறுகின்றனர்.

பாரதியாரின் தூரத்து உறவினரான லட்சுமண ஐயர் என்பவர், பாரதியாரின் வேண்டுதலுக்கிணங்க சுதேசமித்திரனில் சேர்த்து விட்டதாக வேறு சிலர் சொல்கின்றனர்.

பாரதியார் தமது சகபாடியான அய்யசாமி அய்யரைக் கேட்டதற்கிணங்க, அவரது மாமாவான இராஜாராம அய்யர் (இந்து பத்திரிகை நிருபராகக் கடமையாற்றியவர்) உதவியால் வேலை கிடைத்ததாக மற்றும் சிலர் கூறுகிறார்கள்.”

மேற்படி பல தகவல்களில் எது உண்மை? இந்தத் தொடரில் 44ஆம் அத்தியாயத்தில் பண்டித வித்துவான் தி.இராமானுசன் எழுதியுள்ள‘வரகவி பாரதியார்’ என்ற நூலில் கோபாலகிருஷ்ணையர் என்பவர் ஜி.சுப்பிரமணிய ஐயரின் நண்பர் என்றும் அவரது உதவியினாலேயே பாரதியார் சுதேசமித்திரனின் சேர்ந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

ஆக பல்வேறு செய்திகளில் எது உண்மை என்பதை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் தான் இன்றும் உள்ளோம்!

 

4

எஸ்.திருச்செல்வம் அவர்கள் மிகச் சுருக்கமாக, அழகாக பாரதியார் வரலாறை எழுதியுள்ளார்.

 ஒரு குறிப்பிடத்தகுந்த முயற்சி இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.

பாரதியாரின் ஆதார பூர்வமான தேதியிட்ட வரலாறு இன்னும் வெளியிடப்படவில்லை.

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றில் அவர் மேலை நாடு சென்றதிலிருந்து நாள் வாரியாக அவர் எங்கிருந்தார் என்ற அரிய நூல் வெளியிடப்பட்டிருப்பதை இங்கு நினைவு கூரலாம்.

அதே போல மகாகவியின் வாழ்க்கை வரலாறும் ஆதார பூர்வமாக தேதிவாரியாக வெளியிடப்பட்டால் பாரதி அன்பர்கள் அதைப் பெரிதும் வரவேற்பர்.

நூற்றாண்டு விழாவில் வெளி வந்த இந்தச்  சிறு நூல் யாழ்ப்பாணத் தமிழர்களின் சிரத்தையும் அன்பும் கூடிய பாரதி பக்தியில் விளைந்த நல்ல மலர்.

பாரதி இயலுக்கு அணி சேர்க்கும் நூல்களில் இதுவும் ஒன்று!

இதை இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

***