பாரதி போற்றி ஆயிரம்- 90 (Post No.5008)

Compiled by S NAGARAJAN

 

Date: 14 MAY 2018

 

Time uploaded in London –  5-47 AM   (British Summer Time)

 

Post No. 5008

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 90

  பாடல்கள் 977 முதல் 1000

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

6 கவிஞர்கள் இயற்றியுள்ள 24 பாடல்கள்!

பல கவிஞர்கள் பாரதியாரைப் போற்றி எழுதியுள்ளனர். அவர்களுள் 6 கவிஞர்கள் இயற்றியுள்ள 24 கவிதைகளை  இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

 

என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்!

இயற்றியவர் : ஹா.கி.வாலம் அம்மையார்

 

வீரக் கனல் பொங்கும் வெற்றி மணிச் சிங்கம்!
விண்ணாடு மண்ணாடு வியந்து பணி தங்கம்!
கோரப் பகை அடிக்கும் கொடிய மணிக் கதிர்வேல்! ‘
கொடியவர்கள் கொட்டமழி நெடிய மணி நேமி                                      ஆருக்கும் அஞ்சாத ஆரமர் செல்வன்
அன்புக்கு என்பு தரும் அருளாளன் அண்ணல்                                         போருக்கு ரகுராமன்! புலமைக்கு வாணி!
பொற்புக்கும் நட்புக்கும் புண்ணியக் கண்ணன்
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்…..சுப்ரமணிய பாரதியின் பெருமையை என்னென்று சொல்வேன்…                என்று கவிதை தொடர்கிறது.

***

பாரதி கீதமே பாடுவோமே நிதமே

இயற்றியவர்: ப.ஜீவானந்தம்

 

பாரதிதாசன் நடத்தி வந்த “ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்” எனும் இதழில் 1935இல் ஜீவா அவர்கள் எழுதிய “பாரதி கீதம்” எனும் தலைப்பிட்ட பாடலை இங்கு தரப்படுகிறது.

இந்தப் பாடலை ஸ்ரீ தியாகையர் சுவாமிகள் இயற்றிய “ஸ்ரீ ராம பாதமா” எனும் பாடலமைந்த ராகத்தில் பாடவேண்டும் என்ற குறிப்பையும் அவர் கொடுத்திருக்கிறார். அந்த பாடல் வருமாறு:–

 

பல்லவி

பாரதி கீதமே பாடுவோம் நிதமே

பயன் தரும் போதமே.

 

அநுபல்லவி

வீரமுங் காதலும் வீறுடன் வாழ்தலும்

வெற்றிதேச பக்தியூட்டும் முற்றிலும் விநோதமே

 

சரணங்கள்

வீழ்ந்த நற்றமிழர் வாழ்ந்திட அமிழ்தம்

விரும்பி யளிக்குமே நிதம்

சூழ்ந்த நற்பொருளே சொல்லிய தெருளே

சுத்தமெய்ச் சுதந்திரம் சமத்துவம் விதைத்திடும்

 

பாரததேச பக்த ராவேசம்

பரிவுடனே வாசம்

சேரிதத் தூண்டுகோல் சீர்கவி வேண்டுகோள்

ஜீவானந்தன் தோத்திரப்பா மேவும் ஸ்ரீசுப்ரமண்ய

 

ப.ஜீவானந்தம் நாடறிந்த நல்ல பாரதி ஆர்வலர். பல கூட்டங்களிலும் பாரதி பற்றிப் பேசி வந்தவர்.

 

***

 

என் நாவினிலே குடி கொள்வாய்!

இயற்றியவர் : தேனம்மை லட்சுமணன்

 

பாரதத்தின் விடுதலைக்காய்

பா ரதத்தில் உலா வந்தவர்.
பெண் விடுதலை மண் விடுதலை

பெண் கல்வியைப் பாடியவர்
சமத்துவமற்ற சமுதாயத்தையும்

சாதி பேதங்களையும் சாடியவர்.
இளைய சமுதாயத்தின் முன்னேற்றம் நாடியவர்.
பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய

அந்த நெருப்புக் கவிஞன்
நாற்பதாண்டுகள் கூட வாழாமல்

நாலாயிரம் ஆண்டுகளுக்கான பாடல்கள் பாடியவன்..
மகா கவியே நின்னைச் சரணடைந்தேன்
என் நாவினிலே குடி கொள்வாய்.

 

9-11-2017 காரைக்குடி பாரதி தமிழ்க் கழகம் பாரதி விழா – கவியரங்கத்தில் தேனம்மை லட்சுமணனின் பாடல்களில் இரண்டு பாடல்கள் மட்டும் மேலே தரப்பட்டுள்ளது.

***

வளங்கள் பெருகவென்று பாடியவன்!

இயற்றியவர்: கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி

 

அறிவு ஓங்கி வையம் தழைக்கப் பாடியவன் – உலகில்

ஆணும் பெண்ணும் ஓர் நிகரெனப் பாடினான் – அடிமைச்

சிறுமை வாழ்வுச் சிதைவுறுமெனப் பாடினான் – நாட்டின்

திறமை மேவும் தொழில் வளங்கள் பெருகவென்று பாடினான்’’

 

நாடறிந்த திரைப்படக் கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி. நாடகத்துறை, திரைப்படத் துறை, படைப்பிலக்கியம் என பல்வேறு துறைகளிலும் கட்டாயத்திற்காக எழுதாமல் மனோதர்மத்தின் படி எழுதிய படைப்பாளி. அவரது ஒரு பாடல் மேலே தரப்பட்டுள்ளது.

***

நம் பாரதி மூலமே

இயற்றியவர் : மன்னை பாஸந்தி

 

எழுச்சி கண்டோம் அவர்தம் முறுக்குமீசை மூலமே

ஏற்றம் கண்டோம் அவர்தம் தலைப்பாகை மூலமே

சமநீதி கண்டோம் அவர்தம் கருப்புக்கோட்டு மூலமே

சமத்துவம் கண்டோம் சகலரும் நம் பாரதி மூலமே

 

பாரதியின் பாஞ்சாலி சபதம் காவியம் மூலமே

பாரதியின் கண்ணன் பாட்டு கவிதைகள் மூலமே

பாரதியின் தேசியப் புரட்சி பாடல்கள் மூலமே

பாரதம் முன்னேறிய பாதையும் நம் பாரதி மூலமே

 

பாரத அடிமைச்சங்கிலி தகர்ந்திடக் கண்டோமே

பாரதத்தாயின் மணிக்கொடி பறந்திடக் கண்டோமே

பாரத சுதந்திரக் கனவு பலித்திடக் கண்டோமே – நாம்

பாரத தேசப்பற்று மிகுந்தோம் நம் பாரதி மூலமே

 

பிறப்பு உதயமாவது அன்னை தந்தை மூலமே

பிறந்தபின் அறிவு உதயமாவது ஆசானின் மூலமே

இறந்தபின் பலனடைவது நம் நற்செயல் மூலமே – நாம்

பிறவிப் பயனை அடைந்ததும் நம் பாரதி மூலமே

 

எத்துணை இடர்களை வாழ்வினில் சந்தித்தாலும் – அன்று

பித்தனே என்று பலபேர் அவரை பழித்துரைத்தாலும்

நித்தமும் தன்வழிநின்று இளவயதில் மறைந்தாலும் -இது

சத்தியம் நல்வழிப்பாதை தமிழுக்கு நம் பாரதி மூலமே

***

தேசிய மகாகவி பாரதி

இயற்றியவர் மன்னை பாஸந்தி

 

பார்த்தனுக்கு சாரதி பார்த்த சாரதி

பாரினில் தமிழுக்கு சாரதி நம்பாரதி

பாரதிபோல் தேசியமகாகவி பார்தனில் எவருமுண்டோ?

ஏர்பிடிக்கும் உழவன் முதல் செல்வந்தர்கள் வரை வணங்கிடும்

 

காவியங்கள் பலவும் உதித நம் தாய்த்திருநாடு – திருக்

கோயில்கள் பலவும் அமைந்த நல் தவத்திருநாசு – பல

தலைவர்கள் பிறந்த பெருமை மிகுந்த பொன்னாடு

அன்னியரும் போற்றிடும் பலம்வாய்ந்த இந்தியநாடு

 

வீ ரதீரத்தைப் போதித்த எட்டயபுர சுப்ரமணிய மகாகவி

அபாரன்  மஹாதீரன் அதிசுந்தர ரூபன் புரட்சிக்கவி

போர்முழக்கமிட்டு வீ ரர்களைத் தட்டி எழுப்பிய எழுச்சிக்கவி

பாரத மக்களுக்கு சுதந்திரதாகம் ஊட்டிய தேசியமகாகவி

 

சிறியோர் பெரியோர் எல்லோர்க்கும் சிறந்த அபிமானி

ஒருவருக்குமே அஞ்சாத சுதந்திர வீரத்திருமேனி

வருவதை முன்கூட்டியே தெரிவிக்கும் அருள்ஞானி

திருவல்லிக்கேணியில் வாழ்ந்த நற்பெரும்ஞானி

 

எத்துணை சிறந்த பாடல்கள் கவிதைகள் படைத்தான்

உத்தமனாய் விளங்கியே நம் துயர்தனைத் துடைத்தான் – கவி

வித்தகனாய் நம் இந்திய மக்களுக்காகவே உயிர்நீத்தான்

பக்தியுடன் பராசக்தி அருளுடன் தேசிய மகாகவியானான்

மன்னை பாஸந்தி சென்னையைச் சேர்ந்த நிதித்துறை கம்பெனியில் வேலை பார்த்து வந்ததோடு அவ்வப்பொழுது கதை,கட்டுரை ஆகியவற்றை எழுதி வருபவர். பல் துறை சான்ற விற்பன்னர்களுக்குத் தனது டிரஸ்ட் மூலமாக விருது அளித்து வருபவரும் கூட.

***

 

பாட்டிற்கோ பாரதியே தான்

இயற்றியவர் : ச.நாகராஜன்

செய்யு(ள்) நலம் சீரழிந்து செந்தமிழும் வாடுகையில்
உய்யு(ம்) நலம் காட்டியவன் ஓர் கவிஞன் – நெய்யுமொரு
கூட்டிற்கோ தேன் கூடு கொட்டு தமிழ்ச் சந்த மொழிப்
பாட்டிற்கோ பாரதியே தான்

வெந்துயரில் வீழ்ந்திருந்த பாரதத்தை வாழவைக்கத்

தந்துயரம் பாராத சான்றோருள்இந்தியமா

நாட்டிற்கோ காந்தியெனில் நாமெழவே கூவிட்ட

பாட்டிற்கோ பாரதியே தான்

 

வீட்டிற்கோ குலமகளிர் வீதிக்கோ நல்லோர்பள்ளி

காட்டிற்கோ உயிர்தருமொரு சஞ்ஜீவனிஇந்தியமா

நாட்டிற்கோ வேதரிஷிகள் கவிதையெனில் தமிழ்ப்

பாட்டிற்கோ பாரதியே தான்

வேறு

இந்தியர் தம் நெஞ்சினிலே தேசப்பற்றை ஊட்டினான்

வஞ்சக வெள்ளையரை நாட்டைவிட்டு ஓட்டினான்

தமிழர்க்குத் தமிழ் போற்றும் வழி காட்டினான்

புகழோங்கு பாரதத்தை நிலை நாட்டினான்

புதியதொரு பாதையைப் புவியினிலே காட்டினான்

புகழவோர் வார்த்தையிலை புகழுக்கே புகழ் ஊட்டினான்

புண்ணியன் சுப்பிரமணி பாரதியின் பெருமையினை

எண்ணியெண்ணி அவன்வழி நடப்போம் உயர்வோம்

********

 

 

அமிழ்தினிய பா ரதியே! தினமுனைப் பணிவோம் பாரதியே!

 

இயற்றியவர் : ச.நாகராஜன்

 

 

இருளகற்றும் இனிய தமிழ் பெருமையினை நிலை நாட்டினாய்

மருளகற்றும் விதமெனவே வெள்ளையரை விரட்டி ஓட்டினாய்

****

நல்லோர்கள் புகழ்தம்மை நாளும் சொல்லிக் கவி பாடினாய்

அல்லோர்கள் அரக்கர்தமை இனம் காட்டிச் சாடினாய்

**                        தெய்வ பக்தி தேசபக்தி இரு கண் என இனிய மொழி கூறினாய்

செய்வதறியா மக்களுக்கோர் வழிகாட்டிப் புகழேணியில் ஏறினாய்

***

தமிழ்க்கவியே! சொற்கள் எனும் தேர் ஓட்டும் சாரதியே!

அமிழ்தினிய பா ரதியே! தினமுனைப் பணிவோம் பாரதியே!

***

கற்க கசடற!

இயற்றியவர் : ச.நாகராஜன்

 

கற்க கசடற பாரதி பாக்களை

நிற்க அதற்குத் தக

 

பல்பொருளும் பாரிதனில் பார்க்க வேண்டின்

நல்கவிஞன் பாரதியை நாடு

 

தெய்வபக்தி தேசபக்தி இவ்விரண்டும் முன்வைத்த

தெய்வகவி பாரதி யே

 

போற்றுமின் பாரதியை போற்றுமின் பொற்கவியை

போற்றுமின் பா-ரதியை பாடுமின் பாடல்களை

ஏற்றுவந்தே இனிது வாழ்க!

 

ச.நாகராஜன்இந்த பாரதி போற்றி ஆயிரம் தொடருக்கான கவிதைகளைத் தொகுத்தவர்.

3500 கட்டுரைகள் எழுதியவர். பல்வேறு தமிழ் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். http://www.tamilandvedas.comஇல் தொடர்ந்து இவரது படைப்புகள் வெளியாகி வருவதை அன்பர்கள் அறிவர். இவரது 52 புத்தகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

 

தொகுப்பாளன் முடிவுரை:

பாரதி போற்றி ஆயிரம் தொடரைத் தொடங்கும் போது பாரதியைப் போற்றி இருக்கும் ஆயிரக்கணக்கான பாடல்களில் ஒரு ஆயிரத்தைத் தொகுப்பது சுலபம் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் கவிதைகளைத் தேடி எடுப்பது, கவிஞர்களைப் பற்றிய குறிப்புகளை சேகரிப்பது, பிரசுரகர்த்தாவிடமிருந்து அனுமதி பெறுவது, கவிஞர்களின் அனுமதியைப் பெறுவது, இணையதளத்தில் வெளியிட்டோரின் அனுமதியைப் பெறுவது போன்ற விஷயங்கள் அசாத்தியமான காரியம் என்பதை உணர்ந்து கொண்டேன். பலரும் பதிலே போடவில்லை. காரணங்கள் பலவாக இருக்கலாம் என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.

சுமார் எழுபது வருட காலத்தில் வெளியான கவிதைகளைத் தொகுப்பதும் அக்கவிதைகளுக்கான அனுமதியைப் பெறுவதும் சாதாரணமான விஷயமல்ல என்பதை எனக்கு இந்தப் பணி உணர்த்தியது.

என்றாலும் ஆரம்பித்த பணியை பாரதி ஆர்வம் என்ற ஒரே உந்துகோல் வழி நடத்திச் சென்று முடித்து வைத்தது.

இதனை வெளியிட்ட http://www.tamilandvedas.com இணையதளத்தை நடத்தி வரும் திரு ச.சுவாமிநாதனுக்கு எனது நன்றி. பல்வேறு பதிப்பகங்கள், கவிஞர்கள், இணையதளங்கள், ப்ளாக்குகள் அவற்றிற்கான உரிமையாளர்கள் மற்றும் படைப்பாளிகள், கவிஞர்கள் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதைத் தொடர்ந்து படித்து ஊக்கமூட்டிய அனைத்து வாசகப் பெருமக்களுக்கும் எனது நன்றி.

பாரதி நாமம் வாழ்க!

அன்பன் ச.நாகராஜன்

பெங்களூரு

7-5-2018

இந்தத் தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறது.

***

பாரதி போற்றி ஆயிரம் – 89 (Post No.5001)

Compiled by S NAGARAJAN

 

Date: 12 MAY 2018

 

Time uploaded in London –  5-49 AM   (British Summer Time)

 

Post No. 5001

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 89

  பாடல்கள் 949 முதல் 976

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

20 கவிஞர்கள் இயற்றியுள்ள 28 பாடல்கள்!

பல கவிஞர்கள் பாரதியாரைப் போற்றி எழுதியுள்ளனர். புதுவையில் பாரதியாரின் பிறந்த தினத்தை ஒட்டி 20 கவிஞர்கள் இயற்றியுள்ள 28 கவிதைகள் இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளன. அவற்றை இங்கு வழங்குகிறோம்

20 கவிஞர்களின் 28 பாடல்கள்

 

பாரதியின் பாட்டுத் திறம்

இயற்றியவர்: கலைமாமணி புலவர் நாகி,
புதுச்சேரி – 9

 

குருதியிட்ட தூவலினால் கொழுகொம் பின்றி

…..கொடிபோலத் துவன்றிட்ட மக்கள் தம்மைக்

குருதிகொட்டப் போராடும் தலைவ னொப்பக்

…..குன்றெனவே நின்றுபெரும் உண்மையான

ஒருமையுடன் வாழ்வதற்கு உணர்த்தும் பாட்டை

…..உலவவிட்ட காரணத்தால் உலகில் நாமும்

பெருமையுடன் வாழுகின்றோம் பிழை யில்லாப்

…..பாரதியின் வீரமிக்கப் பாட்டி னாலே!

***

 

பாரதிபோல்
வித்தாகி வாழ விரும்பு

இயற்றியவர்: தமிழ்மாமணி புலவர் சீனு.இராமச்சந்திரன்
புதுச்சேரி-9

 

ஊருக்கு நல்லது சொல்லி உழைத்தநம்

பாரதியைத் தேருக்குள் ஏற்றியே – பாருக்குள்

தாரணி சூட்டியே தாய்த்தமிழைப் போற்றியே

சாரதியே நீயென்று சாற்று.

 

எத்தனை நாள்வாழ்வோம் இம்மண்ணில் என்றெண்ணி

முத்தான நற்செயல்கள் செய்யாமல் – இத்தரையில்

சத்தாக சாப்பிட்டுப் பயனென்ன, பாரதிபோல்

வித்தாகி வாழ விரும்பு.

***

 

சொடுக்கி விட்ட சாரதி

இயற்றியவர்: கலைமாமணி இலந்தை இராமசாமி
கனடா

 

தொடுத்தெ டுத்த சொல்லிலே

……….சூடு போட்ட நாயகன்

கொடுக்க என்றே தோன்றினான்

……….கோயில் நெஞ்சில் ஊன்றினான்

முடுக்கி விட்ட வார்த்தைகள்

……….மூச்சு விட்டு வாழவே

சொடுக்கி விட்ட சாரதி

……….சுப்ர மண்ய பாரதி

***

சொல்லுடன் கலந்துநின்ற சுப்பிரமணிய பாரதி

இயற்றியவர்: கவியோகி வேதம்
சென்னை

 

காட்டினுள்ளே அடரிருள்போல் சொல்வ ளர்த்த

கவிஞருள்ளே, நெல்வேலிச் சீமை மண்ணைத்

தேட்டையிட்டுப் படருகின்ற பசும்வ யல்போல்

தெவிட்டாத அழகுகொஞ்சும் சொல்லே வேய்ந்த

பாட்டையிட்டுத் தமிழ்நெஞ்சில் “பாட்டைப்” போட்டான்

பாட்டனெங்கள் பாரதி!எச் சொல்லின் உள்ளும்

பாட்டனவன் மீசையில்கை வைத்த வண்ணம்

பார்த்திருப்பான்! அதனால்தான் பாரை யாண்டான்!

***

 

சிந்து வேந்தர் பாரதி

இயற்றியவர்: பாவலர் எஸ். பசுபதி,
கனடா

 

கந்தன் மொழியை வேலன் பேரில்

காக்க வந்த சொல்லயில்;

இந்தி யக்க விஞர் வானில்

என்றுங் கூவும் பூங்குயில்

சிந்து வேந்தர் பார திக்கென்

சென்னி யென்றுந் தாழுமே!

செந்த மிழ்க்க விக்கு முன்பென்

சென்னி யென்றுந் தாழுமே!

 

******

 

பாரதி நமை வளர்த்தான்

இயற்றியவர்: கலைமாமணி கல்லாடன்
புதுச்சேரி

 

பாட்டில் அருளினை அன்பினை ஊட்டியே

பாரதி நமைவளர்த்தான் – தேன்

கூட்டில் இழிதரும் நற்சுவை கூட்டியே

கொள்க எனவுரைத்தான் – நம்

நாட்டில் நிலவிய அடிமை ஒழித்திட

அல்லல் பலவேற்றான் – தன்

பாட்டுத் திறத்தினால் வையம் முழுவதும்

பாலித்திட நினைத்தான்.

 

எட்டுத் திக்கும் வெற்றி கொட்டுமுரசென

யீடில் கவிபடைத்தான் – பகை

வெட்டியே வீழ்த்திட வெற்றியே சூடிட

வீர உணர்வளித்தான் – அன்று

தட்டி எழுப்பிய விடுதலை உணர்வினால்

தாயகம் மீட்டோமே – அவன்

சுட்டிய அருளினை அன்பினைக் கைவிட்டுச்

சுயநலங் கொண்டோமே!

 

***

Picture- Ramanan as Bharati in Bharatiyar Drama, directed by Raman.

பாரதி என்றொரு புலவன்

இயற்றியவர்: பாவலர் அண்ணா. தருமலிங்கம்
புதுச்சேரி

 

பாரதியென் றொருபுலவன் பாரதிரப் பாட்டெ ழுதி

பார்ப்பவனைப் படிக்கவைத்தான் படித்தவனைப் புரிய வைத்தான்.

வீரத்தை எழுத்தாக்கி வீட்டுக்குள் அனுப்பி வைத்தான்

விடுதலையை நாட்டுக்குள் விளையாட வைத்து விட்டான்

வோரத்தில் நடந்தவனும் உரிமைக்குக் குரல்கொ டுத்தான்

ஒற்றுமைதான் வாழ்க்கைக்கு உரியவழி யெனச் சொல்லி

கூறவந்த எண்ணத்தைக் குழந்தைக்குக் கொடுத்து விட்டு

மனிதநேயம் நம்மெதிரில் மலரும்பார் எனச் சொன்னான்.

 

***

 

பாரதியை வாழ்த்துவோம்

இயற்றியவர்: புலவர் செ. இராமலிங்கன்
புதுச்சேரி

 

பாரதியின் பாட்டெல்லாம் சமுதா யத்தைப்

பண்படுத்தும் பாட்டாகும்! தமிழுங் கொஞ்சும்!

சீரதிகம் கொண்டதவன் பாக்க ளெல்லாம்

சீர்திருத்தம், விழிப்புணர்வை எடுத்துக் காட்டும்!

வேரதிர வெள்ளையரின் ஆதிக் கத்தை

வெடிவைத்துத் தகர்த்தவன் வேட்டுப் பாட்டே!

கூரதிகம் கொண்டவன் பாட்டின் சொற்கள்!

கொண்டாடி பாரதியை வாழ்த்து வோமே!

 

***

 

நந்தமிழுக்குத் தூண் பாரதி

இயற்றியவர்: புலவர் துரை. மாலிறையன்
புதுச்சேரி

 

பாட் டெடுத்துப் பாடிநம் பாஞ்சாலி சீர்மிகுத்தார்

கூட் டமிழ்தப் பாட்டால் குயில்புகழைக் – காட்டுகின்ற

வண்ணம் தமிழ்பாடி வாழ்கின்றார் பாரதியார்

கண்ணன்பாட் டாலுங் கனிந்து.

 

வோசை நயங்கொஞ்சும் உணர்வுடையப் பாப்புனைந்தே

ஆசையினால் சான்றோர் அனைவரையும் – பேசவைத்தார்

வாய்மை வழிநின்ற வண்புலவர் பாரதியின்

தூய்மைநலம் நந்தமிழுக்குத் தூண்.

 

***

தந்தையர் நாடெனும் தனிப்புகழ் சேர்த்தவர் பாரதி

இயற்றியவர்: பாவலர் சூரிய விசயகுமாரி
புதுச்சேரி

 

“செந்தமிழ் நாடு” என்று

செப்பிடும் போதே காதில்

வந்துதேன் பாயு மென்னும்

வாய்மையை யெடுத்துக் கூறி

நந்தமிழ்ப் பெருமை தன்னை

நாட்டவர் அறியச் செய்தார்

தந்தையர் நாடென் கின்ற

தனிப்புகழ் தனையும் சேர்த்தார்!

 

ஈடிலாப் புகழும் கொண்ட

பாரதி இந்த நாட்டின்

ஊடெலாம் கலந்து மக்கள்

உளத்தெலாம் கவிதைப் பாய்ச்சிப்

பீடெலாம் பெற்று வாழும்

பேறெலாம் நமக்குத் தந்தார்

ஏடெலாம் வாழ்த்து கின்ற

ஏற்றத்தின் சிறப்பி னாலே!

 

******

 

பாரதியே வணங்குகின்றேன்

இயற்றியவர்: கவிஞர் தே. சனார்த்தனன், 
புதுச்சேரி

 

ஒற்றுமைக்குப் பாடுபட்டாய்! ஒப்பி லாத

உயர்கவிகள் பாடிவிட்டாய்! உரிமை யோடு

பற்றுவைத்தாய் பாரதத்தாய் நாட்டின் மீது!

பாழ்மூடப் பழக்கத்தை வெறுக்கச் செய்தாய்!

கற்றவரும் மற்றவரும் காதல் கொள்ளும்

கருத்தோடு விடுதலையை வேண்டி நின்றாய்!

பெற்றதிரு நாட்டினது பெருமை காத்த

பெரும்புலவன் பாரதியே! வணங்கு கின்றேன்!

 

***

பாழ்நிலை நீக்க வாராய்

இயற்றியவர்: பாவலர் வே. முத்தையன்,
புதுச்சேரி

ஒன்றுபட்டால் வாழ்வுண்டாம் என்று ரைத்த

வோங்குபுகழ் பாரதியே! ஊரார் அந்நாள்

ஒன்றுபட்டே வோரணியாய் நின்ற தாலே

ஒண்டவந்த அயலவரு மோட்டம் பெற்றார்!

பெற்றுவிட்ட விடுதலையை வானு லாவப்

பேசியிங்குப் பெருமைகொள்ளும் நம்மோர் நாட்டுப்

பற்றற்றுப் போயினரே! பாழாய்ப் போகும்

பாரோரின் நிலைநீக்க வாராய் இங்கே!

 

***

 

பாரதியைப் போற்றுகின்றேன்

இயற்றியவர்: பாவலர் கி. பாரதிதாசன்,
பிரான்சு.

 

சாதிமதிச் சழக்குகளைச் சாடி, நல்ல

சமதர்மப் பாதைதனைத் தேடி, வல்ல

நீதிநெறி யோங்கிடவே யோடி, இந்த

நீள்புவியில் தமிழெடுத்துப் பாடி, மண்ணில்

மோதிவரும் அறியாமை மாய, ஏட்டில்

முற்போக்குத் தத்துவத்தை யூட்டி, இங்குக்

கோதில்சீர் பெண்ணினத்தின் பெருமை காக்கக்

குரல்கொடுத்த பாரதியே! போற்று கின்றேன்

 

***

சூழ்பகை துரத்திய பாரதி

இயற்றியவர்: கவிஞர் வ. பழனி,
புதுச்சேரி

 

பாட்டுப் பாடிப் பாரதம் காத்த

நாட்டுக் கவிஞர் நலமிகு பாரதி

அடிமை வாழ்வை அறவே வெறுத்துக்

குடிமை உயரவே குவலயம் காத்தார்.

நாட்டு நடப்பை நரம்பு புடைக்க

ஏட்டில் எழுதி ஏற்றஞ் செய்தவர்.

புவியில் சிற்ந்து புதுமை செய்தே

கவியால் உயர்ந்து கடமை புரிந்தவர்.

தாழ்ந்த மக்கள் வாழ்வில் உயர

சூழ்ந்த பகையை துரத்தினார் இவரே!

 

***

 

பாரதிச் சீரையெண்ணி சிந்தை மகிழ்வோம்.

இயற்றியவர்: கவிஞர் மு. தியாகராசன்,
புதுச்சேரி

 

கல்லார் இல்லா உலகங் காண

இல்லார் இல்லா மக்கள் காண

எல்லா இனமுஞ் சமமென எண்ணப்

பொல்லா மூடப் பொய்மைகள் மாயச்

சொல்லார் பாரதி தோன்றினன் மாதோ!

வீதிகள் தோறும் பள்ளிகள் செய்திட

சாதி பேதச் சழக்குகள் சாய்க்கக்

கொஞ்சுங் குழந்தை கூடியே ஆடிட

செஞ்சொல் குழைத்துச் செப்பினான் பாரதி!

அடிமையில் உழன்றே அல்ல லுற்றநாம்

விடுதலை காண விழைந்தான் பாரதி!

உலகில் தமிழே உயர்ந்தது கண்டான்;

இலகு செம்மொழி ஏற்றம் இந்நாள்

பாரே போற்றும் பாரதிச்

சீரை யெண்ணிச் சிந்தை மகிழ்வமே!

 

***

பாரதி பாவெல்லாம் தேன்

இயற்றியவர்: கவிஞர் இராச.தியாகராசன்
புதுச்சேரி

 

சொல்லுக்கு வேந்தனாம் சுப்ரமண்ய பாரதி

வில்லுக்கு வேந்தன் விசயனெனச் செந்தமிழில்

கொள்ளித் தழலெனவே கும்பினியர் ஆட்சியற

தெள்தமிழில் பாடியதோ தேன்!

 

தேனமுத வாரிதியாய்த் தீந்தமிழின் காவலனாய்க்

காணிநிலங் காளியிடங் கேட்டவனின் பாக்களிலே

காணும் வருங்காலக் கனவென்னுஞ் சிந்தனைதான்

தோன்று மெனதுள்ளச் சொல்!

***

செயல் வடிவம் ஆக்கல் வேண்டும்

இயற்றியவர்: புலவர் மு. இறைவிழியனார்
ஆசிரியர் *நற்றமிழ்* – புதுச்சேரி

 

பாரதிக்கு விழாவெங்கும் எடுக்கக் கண்டோம்

……….பாரதியின் பாடலெங்கும் பாடக் கேட்டோம்

தீரவில்லை சாதிமதப் பூச லிங்கே!

……….தீந்தமிழில் பெயரில்லை ஒப்ப மில்லை

ஊரெல்லாம் பெண்ணடிமை பேசல் கேளீர்

……….உரிமையுடன் உழைப்பாளர் வாழ்கின் றாரா?

பாரதியின் புகழ்பரவ அவரின் கொள்கை

……….பாருணரச் செயல் வடிவ மாக்கல் வேண்டும்!

***

 

பாரைப் புதுக்கிய பாரதி

இயற்றியவர்: பாவலர் சிவ. இளங்கோ
புதுச்சேரி

 

பாட்டினில் புரட்சி செய்தான் பாவையர் உரிமை சொன்னான்

கேட்டினை அடையா வாழ்க்கை கேள்வியிற் சிறந்தா லென்றான்

கூட்டினை திறந்து விட்டுக் குறைவிலாக் களிப்பி லின்பக்

காட்டினில் சுற்றி வந்தான் கடவுள துவென்று சொன்னான்.

 

சாத்திரம் பொய்க ளென்றான் சடங்கின்றி வாழச் சொன்னான்

ஆத்திரங் கொள்க வென்றான் அவனியை வெல்க என்றான்.

கோத்திரங் குலங்க ளெல்லாம் குறுகிய வழிக ளென்றான்

பாத்திறம் காட்டிப் பாரை பாரதி புதுக்கிட் டானே!

 

******

முண்டாசுக்காரன் உண்டாக்கிய குணம்

இயற்றியவர்: கவிஞர் முனைவர் உரு. அசோகன்
புதுச்சேரி

 

முண்டாசுக் காரன் முறுக்கு மிளமீசை

கண்டாலே கூசுமக் கண்ணன் இவந்தானே!

உண்டாக்கி விட்டான் உணர்வை அதனாலே

கொண்டேன் செருக்கு குணம்

 

தலைமேல் விடாது தவழ்கின்ற மேகத்தை

காலை எழுந்த கதிரவனை மாலையில்

காண்கின்ற வெண்ணிலவைக் காணாத காற்றையும்

நாணுவகைச் செய்வேனே நான்.

 

***

பேரினிடை வாழ்கவி பாரதி

இயற்றியவர்: கவிஞர் ந. இராமமூர்த்தி,
புதுச்சேரி

 

இன்பம் பெருக்கும் இனியபல பாவியற்றி

இன்னல் இருளகற்றி ஏந்திழையாள் சீருரைத்து

கன்னல் மொழியெனக் கற்றமிழை வாழவைத்தான்

தன்னந் தனியான கவி!

 

மிக்க புரட்சியதும் மேலான உண்மையதும்

தக்க கவியும் முறைபாடிப் – பக்குவமாய்

ஊர்நலமும் வாழ்முறையும் கூறுகின்ற பாரதியார்

பேரினிடை வாழ்கவிப் பார்!

 

தொகுப்பாளர் குறிப்பு: இருபது கவிஞர்களின் 28 பாடல்களை வெளியிட்டுள்ள இணையதளம்:

 

http://www.pudhucherry.com/pages/makavi.html

 

புதுச்சேரி மின்னிதழான இது பாரதி பற்றிய பாடல்களைத் தொகுத்து வழங்கியுள்ளது. அரிய இந்த பணியை ஆற்றிய பாரதி ஆர்வலர்கள் அனைவருக்கும் நமது நன்றி. இந்த இணையதளத்திற்கும் நமது நன்றி.

 

கவிஞர்களைப் பற்றிய விரிவான குறிப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், தமிழின் சுவையும் கவிதைகளின் கருத்தாழமும் இவர்களைப் பற்றி நம்மை நன்கு உணர வைக்கிறது. கவிஞர்கள் அனைவருக்கும் நமது நன்றி.

 

***

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 88 (Post No.4995)

Compiled by S NAGARAJAN

 

Date: 10 MAY 2018

 

Time uploaded in London –  5-54 AM   (British Summer Time)

 

Post No. 4995

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 88

  பாடல்கள் 919 முதல் 948

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

புலவர் கு.ப. பெருமாள் இயற்றிய       பாரதியின் “பா”ரதம்

 

இந்த பாரதியாரின் வரலாற்று நூலில் பல அத்தியாயங்கள் உள்ளன. நூலை முழுவதுமாகத் தர இயலாத நிலையில் தேர்ந்தெடுத்த கவிதைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. இங்கு  பெண்ணினப் பெருமை என்ற அத்தியாயத்தில் உள்ள 5 பாடல்களையும் கடைசி அத்தியாயமான கடயத்தில் கவிஞன் என்ற அத்தியாயத்தில் வரும் 25 பாடல்களையும் படித்து மகிழலாம். நூலின் பக்கங்களை அப்படியே காணலாம்.

இணைப்பாகத் தரப்படுபவை :

பெண்ணினப் பெருமை – 5 பாடல்கள்

கடயத்தில் கவிஞன் – 25 பாடல்கள்

 

இத்துடன் இந்த நூல் முடிகிறது.

தொகுப்பாளர் குறிப்பு:
புலவர் கு.பொ.பெருமாள் பல்வேறு சந்தங்களில் மரபு நிலை மாறாது பாடல்களை யாத்துள்ளார்.

இவரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மாவட்டம் புளியம்பட்டியில் இருக்கும் புலவர் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.

கவிஞர் கு.பொ.பெருமாள் அவர்களுக்கும் புலவர் பதிப்பக உரிமையாளருக்கும் நமது நன்றி.

***

 

அனுமனுக்கு அயிந்திரம் தெரியும்! கம்பன் தகவல் (Post No.4989)

அனுமனுக்கு அயிந்திரம் தெரியும்! கம்பன் தகவல் (Post No.4989)

 

Written by London Swaminathan 

 

Date: 8 May 2018

 

Time uploaded in London – 9-19 am (British Summer Time)

 

Post No. 4989

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

இயைந்தன இயைந்தன இனைய கூறலும்

மயிந்தம் துயிந்தனும் என்னும் மாண்பினார்

அயிந்திரம் நிறைந்தவ நானை ஏவலால்

நயம் தெரி காவலர் இருவர் நண்ணினார்

 

பொருள்

படையின் முன்பக்கத்தில் இருந்த வானரர் இவ்வாறு மனத்திற்பட்டதைச் சொல்லுகையில், நீதி முறை அறிந்த காவலர்களான மயிந்தன், துமிந்தன் என்ற சிறப்புமிக்க இரு வானரர்கள் ஐந்திர இலக்கணத்தை நன்கு அறிந்தவனான அனுமன் கட்டளையால் அங்கு வந்தனர்.

–வீடணன் அடைக்கலப் படலம், யுத்த காண்டம்

 

இப்படிப் போகிற போக்கில் அனுமனுக்கு அயிந்திரம் தெரியும் என்று சொல்லிவிட்டுப் போகிறான கம்பன்.

 

அனுமனை நவ வியாகரண பண்டிதன் என்றும் ராமாயணம் வருணிக்கும். நவ என்றால் இரண்டு பொருள் உண்டு. புதிய மற்றும் ஒன்பது என்று.

அயிந்திரம் பற்றிய குறிப்பு தொல்காப்பியத்திலும் வருகிறது.

தொல்காப்பியனார் பாடிய தொல்காப்பியத்துக்கு பனம்பாரனார் அளித்தச்  சிறப்புப் பாயிரத்தில்

ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்

பல்புகழ் நிறுத்த படிமையோனே

 

இதற்கு உரை எழுதிய பாஷ்யக்காரர்கள், “வடமொழிக் கண் புகழ்பெற்ற ஐந்திரம் என்னும் இலக்கணத்த்தைக் கற்றுப் புலமை வாய்ந்தவரும்’ என்று எழுதியுள்ளனர்.

 

ஆக ஐந்திரம் என்பது சம்ஸ்க்ருத இலக்கண

நூல் என்பது தெரிகிறது. இது கம்பன் காலத்தில் கூடக் கிடைத்ததாக தோன்றுகிறது.

 

பிருஹஸ்பதி என்பவர் தேவர்களின் குரு. அவர் எழுதிய நூலுக்குப் பெயர் ‘சப்த பாராயணம்’. அதை அவர் இந்திரனுக்குப் போதித்தார். வ்யாகரணம் (இலக்கணம்) என்பது ‘மரணாந்த வியாதி’ என்று உசநா என்ற மாபெரும் கவி கூறியதாக பிருஸ்பதி சொல்கிறார். அதாவது ‘ இலக்கணம் என்பது சாகும் வரை உள்ள நோயாம்’. உண்மைதான்! இலக்கணம் படித்தவன் அதை சாகும் வரை பின்பற்றி, விவாதித்து, வரம்பு மீறியவர்களைக் குறை கூறி, அதிலேயே பொழுதைக் கடத்துவான்.

 

பாரதியார் வாழ்க்கையில்…….

பாரதியார் வாழ்க்கையில் கூட இப்படி ஒரு சம்பவம் நடந்ததை ஆக்கூர் அநந்தாச்சாரியார் எழுதியுள்ளார். சிலர் பாரதியின் பாட்டில் இலக்கணப் பிழை கண்டனர். பாரதி அவர்களை அழைத்தார். உம் கவிதையில் குறை உளது என்றனர்.

என்ன குற்றம்? சொற் குற்றமா? பொருட் குற்றமா ? என்று அவர் வினவினார்.

இரண்டும் இல்லை இலக்கணப் பிழை என்றனர்.

அவர் கேட்டார்? கவிதை முதலில் வந்ததா?

அல்லது இலக்கணம் முதலில் வந்ததா?

 

வந்தவர்கள் சொன்னார்கள்: கவிதைதான் முதலில் வந்தது- என்று.

நான் கவிதைதான் எழுதுகிறேன்; இலக்கணம் அன்று- என்று சொல்லி அவர்களை ஓட்டி விட்டார் பாரதியார்.

‘’இலக்கியமன்றேல் இலக்கணம் இல்லை’’ — என்பது ஆன்றோர் வாக்கு.

 

பிருஹஸதியின் கதைக்குத் திரும்பி வருவோம்.

யார் இந்த தகவலைக் கூறியது. பாணினியின் வியாகரண நூலான அஷ்டாத்யாயீக்கு பேருரை எழுதியவர் பதஞ்சலி முனிவர். அவர் எழுதிய மஹாபாஷ்யம்தான் இந்திரனுக்கு பிருஹஸ்பதி உபதேசித்த சப்த பாராயணம் பற்றி விளம்புகிறது.

 

இது பற்றி தைத்ரீய ஸம்ஹிதை மேலும் ஒரு சுவையான செய்தியைச் சொல்லுகிறது; அந்தக் காலத்தில் லக்ஷண விதிகள் இல்லையாம். லக்ஷண என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்து வந்ததே இலக்கணம்; இதே போல லக்ஷியம் என்ற சொல்லில் இருந்து வந்ததே இலக்கியம் என்று ஆன்றோர் வழங்குவர். ஆக இந்திரன் பகுதி, விகுதி— இவைகளை எல்லாம் பிரித்து ஒரு இலக்கண நூல் செய்தான். அதுதான் ஐந்திரம்;

அயிந்திரம் என்பதே இந்திரன் என்ற சொல்லில் இருந்து பிறந்ததே!

 

தைத்ரீய ஸம்ஹிதைக்கு உரை எழுதிய ஸாயணாச்சாரியார் சொல்கிறார்:-

முன் காலத்தில் சொல் என்பது விளக்கப்படாமல் இருந்தது. தேவர்கள் வந்து அதை விளக்கும் படி கேட்டனர்; அப்போதுதான் இந்திரன் சொல்லின் ‘பகுதி, விகுதி’களைப் பிரித்து தனி இலக்கணம் எழுதினான்.

அந்தக் காலத்தில் இரண்டு வகையான இலக்கண மரபுகள் இருந்தன. ஐந்திர மரபு, மாஹேஸ்வர மரபு என்று.

இந்திரன் உண்டாக்கியது ஐந்திரம்.

பாணினி உண்டாக்கியது மாஹேஸ்வர மரபு- பாணிணீயம்

மொத்தம் எட்டு வகை இலக்கணங்கள் இருந்ததாகத் தெரிகிறது: பிரம்மா, சிவன், இந்திரன், பிருஹஸ்பதி, ப்ரஜாபதி, த்வஷ்டா, அபிசலி, பாணினி—-

 

ரிக்வேத கல்பத்ருமமும் எட்டு பேர் இலக்கணம் இயற்றியதாக இயம்பும்: வாயு, வருணன், ஸோமன், விஷ்ணு, இந்திரன், யமன், சந்திரன், ரௌத்தன்

 

பிற்கால நூலான, போப தேவர் இயற்றிய, ‘கவி கல்பத்ருமம்’ எட்டு இலக்கண ஆசிரியர்களின் பெயர்களை விளம்பும்; ஆபிசலி, பாணினி, காசக்ருத்சனன், சாகடாயனன்,இந்திரன், சந்திரன், ஜைனேந்திரன்.

 

ஸ்ரீ தத்வநிதி என்ற வைணவ நூல் ஒன்பது பெயர்களைத் தெரிவிக்கிறது—

 

ஐந்திரம், சாந்த்ரம், காச கிருஷ்த்ணம், கௌமாரம், சாகடாயனம், ஸாரஸ்த்வம், சாகல்யம், ஆபீசலம், பாணீணீயம்

 

ஐந்திரம் முதலியவை லௌகீக சாஸ்திர இலக்கணங்கள்; ப்ரதிசாக்யம் முதலியன வைதீக நூல் இலக்கணங்கள்.

 

பாணீணீயம், ஆபிசலம் ஆகியன லௌகீக, வைதீக நூல்கள் இரண்டுக்கும் பொருந்துவன.

 

பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார் (கி.மு ஏழாம் நூற்றாண்டு). அவருக்கு முன்னர் 35 ஸம்ஸ்க்ருத இலக்கண வித்தகர்கள் இருந்தனர்!! ஐந்திர வ்யாகரண நூலை நிறைய ஸம்ஸ்க்ருத, தமிழ், ப்ராக்ருத நூல்கள் குறிப்பிடுகின்றன.

 

 

25 மடங்கு பெரிது!

 

12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மஹாபாரத உரை ஆசிரியர் தேவ போதர் செப்புகிறார் :— பாணினி இலக்கண நூலைப் போல 25 படங்கு பெரியது ஐந்திர வ்யாகரண நூல்!

 

ஐந்திர இலக்கண நுல் வெகு காலத்துக்கு முன்னரே அழிந்துவிட்டது என்று கதைக் கடல் (கதா சரித் சாகரம்) சொல்லும்.

 

ஆனால் பிற்கால நூல்கள் ஐந்திர இலக்கண நூலின் சூத்ரங்களை மேற்கோள் காட்டுவதால் இப்படி ஒரு நூல் இருந்தது என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை!

 

கி.மு முதல் நூற்றாண்டைச் சேர்ந்த  பட்டாரக ஹரிச்சந்திரர், ‘ஸரக ந்யாச’ என்ற உரை நூலில் ஒரு சூத்திரத்தை மேற்கோள் காட்டுகிறார்.

 

‘’அத வர்ண ஸமூஹ’’ என்பது ஐந்திரத்தின் முதல் சூத்திரம்; இதன் பொருள்:- ‘பிறகு எழுத்துக்களின் தொகுப்பு’—

 

தொல்காப்பியமும் முதலில் எழுத்துகளைப் பற்றியே நுவலும்:

எழுத்தெனப்படுப

அகர முதல் னகரம் இறுவாய்

முப்பஃது என்ப

சார்ந்துவரல் மரபின் மூன்று அலங்கடையே.

 

‘அர்த்த: பதம்’ என்னும் இன்னொரு சூத்திரத்தை துர்காச்சாரியாரின் நிருக்த விருத்தியில் காண்கிறோம்; இதன் பொருள்:-  ‘பொருள் உள்ள எழுத்துக்களின் கூட்டுதான்’ சொல் எனப்படும்.

 

பிற்காலத்தில் சுஷேண வித்யாபூஷணர் எழுதிய ஒரு நூலிலும், பரதர் எழுதிய நாட்டிய சாஸ்திரத்திலும் ஐந்திரம் குறிப்பிடப்படுவதால் அவர்கள் காலத்தில் இது இருந்திருக்கவேண்டும். ஆயினும் பாணினியின் இலக்கணம் பிரபலமானவுடன் ஐந்திரம் வழக்கொழிந்து போயிருக்கலாம்.

 

ஐந்திரம் பற்றிப் பல தவறான கருத்துகளும் உண்டு; சமண மதத்தின் 24ஆவது தீர்த்தங்கரரான மஹாவீரர், அல்லது பௌத்த சமயத்தைச் சேர்ந்த இந்திர கோமீதான் இதை இயற்றியவர் என்றும் இயம்புவர்.  இது தவறு.

 

தேவநந்தி என்ற பூஜ்யபாதர் எழுதிய ஜைனேந்திர வியாகரணம்தான் ஐந்திரம் என்ற தவறான பிரச்சாரமும் உள்ளது.

 

–Subham–

 

பாரதி போற்றி ஆயிரம் – 87 (Post No.4988)

Compiled by S NAGARAJAN

 

Date: 8 MAY 2018

 

Time uploaded in London –  6-46 AM   (British Summer Time)

 

Post No. 4988

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 87

  பாடல்கள் 884 முதல் 918

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : .நாகராஜன்

புலவர் கு.. பெருமாள் இயற்றிய     பாரதியின் பாரதம்

இந்த பாரதியாரின் வரலாற்று நூலில் பல அத்தியாயங்கள் உள்ளன. நூலை முழுவதுமாகத் தர இயலாத நிலையில் தேர்ந்தெடுத்த கவிதைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. இங்கு  புதுவையில் புரட்சிக்கவி என்ற அத்தியாயத்தில் அடுத்து வரும் 35 பாடல்களையும் படித்து மகிழலாம். நூலின் பக்கங்களை அப்படியே காணலாம்.

இணைப்பாகத் தரப்படுபவை :

புதுவையில் புரட்சிக்கவி அடுத்து வரும் 35 பாடல்கள்

 

 

 

 

 

தொகுப்பாளர் குறிப்பு:
புலவர் கு.பொ.பெருமாள் பல்வேறு சந்தங்களில் மரபு நிலை மாறாது பாடல்களை யாத்துள்ளார்.

இவரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மாவட்டம் புளியம்பட்டியில் இருக்கும் புலவர் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.

கவிஞர் கு.பொ.பெருமாள் அவர்களுக்கும் புலவர் பதிப்பக உரிமையாளருக்கும் நமது நன்றி

***

 

ராமனின் கலர் என்ன? அனுமனின் கலர் என்ன? (Post No.4986)

Hanumar stamp released by U N O.

Written by London Swaminathan 

 

Date: 7 May 2018

 

Time uploaded in London – 13-39 (British Summer Time)

 

Post No. 4986

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

ஜவஹர்லால் நேரு எழுதிய டிஸ்கவரி ஆப் இந்தியா (DISCOVERY OF INDIA) புத்தகத்தில் ராமாயணம் குறித்து பிரெஞ்சு வரலாற்று அறிஞர் மிஷலெ (MICHELET)சொன்னதை மேற்கோள் காட்டுகிறார்–

ராமாயணம் இந்து மஹா சமுத்திரம் போலப் பரந்து விரிந்தது. அங்கே நாம் ஒரு தெய்வீக நல்லிணக்கத்தைப் பார்க்க முடிகிறது. பிணக்குகளிடையே பேரமைதி, அளப்பறிய இனிமை, உயிர்கள் அனைத்துடனும் எல்லையற்ற சஹோதரத்துவம், கடல் போன்று பரந்த அன்பு, கருணை, மன்னித்து அருளும் அருங்குணம் நிறைந்தது இந்தப் பெருங் காவியம்”

 

என்ன அற்புதமான வருணனை!

 

ராமனின் வர்ணம் பச்சை; லெட்சுமணனின் நிறம் தங்க நிறம்; அனுமனின் நிறம் ஊதா; ராவணனின் கலர் கருப்பு!!! எங்கே என்று கேட்கிறீர்களா? தாய்லாந்து நாட்டில்!

 

இந்திய- தாய்லாந்து உறவு பற்றிய சில சுவையான செய்திகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

 

2300 ஆண்டுகளுக்கு முன்னர், மாமன்னன் அசோகன், புத்த மதத்தைப் பரப்புவதற்காக இரண்டு துறவிகளை அனுப்பினான். ஏற்கனவே இந்தியாவுடன் இருந்த தொடர்பு காரணமாகவே இப்படி அனுப்பினான்.

தாய்லாந்தின் பழைய பெயர் சியாம தேசம்’ அதுவே சயாம் (SIAM) என்று மருவியது. இந்திய வணிகர்கள் தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் வணிகம் செய்த காலத்தே, இப்பகுதியை சுவர்ண பூமி (தங்க நாடு) என்று அழைத்தனர்.

 

குறிப்பிட்ட ஒரு காலத்தில் ஆண்ட மன்னர்கள் தங்களை ராமா என்று அழைத்துக் கொண்டனர். அத்தோடு தலைநகரை அயோத்தியா (AYUTHTHAYA) என்றும் அழைத்தனர். அந்த அளவுக்கு ராமாயண காவியத்தின் தாக்கம் அங்கே இருந்தது.

 

தனபுரி என்னும் பகுதியை ஆண்ட மஹா தக்ஷின் என்பவர் ராமாயணக் கவிதைகளை எழுதத்துவங்கினார். பின்னர் முதலாவது ராமா (1782-1780) அதை 10,000 ஸ்லோகங்களாக எழுதி முடித்தார்.

 

முதலாவது ராமா ராமகியான் என்று அழைக்கப்படும் ராமாயணத்தை காவிய வடிவில் கொடுத்தார்; இரண்டாவது ராமா (1809-1824)  அதை . நாடகம் வடிவில் கொடுத்தார். ஆயினும் 1349 முதல்  ராமாயணம் சிறு சிறு பகுதிகளாக எழுதப்பட்டது. நாடகம், ஓவியம், கதைகளில் இடம்பெற்றது.

 

அருகிலுள்ள வியட்நாம், லாவோஸ், இந்தோநேஷியாவில் இந்து மத அரசர்கள் இருந்ததால் எல்லையோரப்   பகுதிகளில் ராமாயணம் பலவகை உருப்பெற்றது. வால்மீகி  ராமாயணத்துக்கும் தாய் மொழி ராமகியனுக்கும் பல வேறுபாடுகள் உண்டு.

 

இந்தோநேஷியாவில் இருந்து நிழல் நாடகம் (பொம்மலாட்டம்) இறக்குமதியானது. இதில் தோல் பயன்படுத்தப்படுவதால் ஹநாங் (தோல்) என்ற பெயரில் இது அறிமுகமானது. இதில் பொம்மலாட்டத்தில் பயன்படுத்தப்படும் கயிறு, நூல் இல்லாமல் கைகளினாலேயே ராமாயண கதாபாத்திரங்கள் செயலில் இறங்குவார்கள்.

இதில் ராமன் பச்சை வர்ணத்திலும், லெட்சுமணன் தங்க நிறத்திலும், ஹனுமார் ஊதா நிறத்திலும், ராவணன் கருப்பு நிறத்திலும் காட்டப்படுவர். பாமர மக்கள் கதையை அறிந்துகொள்ள இது உதவும். இவ்வாறு ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு வர்ணத்தில் இருப்பது தாய் பொம்மல்லாட்டத்தின் சிறப்பு ஆகும்.

தாய் ராமாயணத்தில் பல விநோதக் கதைகளும் உண்டு. ஹனுமார் லோப் பூரியை ஆண்ட கதையை, அடுத்த கட்டுரையில் சொல்கிறேன். லோப் பூரி என்பது லவ புரி என்பதன் மரு ஆகும். லவன், குசன் ஆகிய இருவரும் ராமனின் புதல்வர்கள் என்பது எல்லோரும் அறிந்ததே; லாவோஸ் என்னும் நாடே லவனின் பெயரால் வந்த நாடுதான் என்பர் அறிஞர் பெருமக்கள்!

 

வாழ்க தாய் ராமாயணம்!! வளர்க ராமன் புகழ்!!!

சுபம்–

பாரதி போற்றி ஆயிரம் – 86 (post No.4981)

COMPILED by S NAGARAJAN

 

Date: 6 MAY 2018

 

Time uploaded in London –  5-28 AM   (British Summer Time)

 

Post No. 4981

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 86

  பாடல்கள் 852 முதல் 883

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

புலவர் கு.ப. பெருமாள் இயற்றிய       பாரதியின் “பா”ரதம்

இந்த பாரதியாரின் வரலாற்று நூலில் பல அத்தியாயங்கள் உள்ளன. நூலை முழுவதுமாகத் தர இயலாத நிலையில் தேர்ந்தெடுத்த கவிதைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. இங்கு காவலரை வென்ற கவி என்ற அத்தியாயத்தில் உள்ள 11 பாடல்களையும் புதுவையில் புரட்சிக்கவி என்ற அத்தியாயத்தில் முதல் 21 பாடல்களையும் படித்து மகிழலாம். நூலின் பக்கங்களை அப்படியே காணலாம்.

இணைப்பாகத் தரப்படுபவை :

காவலரை வென்ற கவி – 11 பாடல்கள்

புதுவையில் புரட்சிக்கவி – முதல் 21 பாடல்கள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

தொகுப்பாளர் குறிப்பு:
புலவர் கு.பொ.பெருமாள் பல்வேறு சந்தங்களில் மரபு நிலை மாறாது பாடல்களை யாத்துள்ளார்.

இவரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மாவட்டம் புளியம்பட்டியில் இருக்கும் புலவர் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.

கவிஞர் கு.பொ.பெருமாள் அவர்களுக்கும் புலவர் பதிப்பக உரிமையாளருக்கும் நமது நன்றி

***

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 85 (Post No.4975)

Compiled by S NAGARAJAN

 

Date: 4 MAY 2018

 

Time uploaded in London –  5-05 AM   (British Summer Time)

 

Post No. 4975

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 85

  பாடல்கள் 820 முதல் 851

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

புலவர் கு.ப. பெருமாள் இயற்றிய       பாரதியின் “பா”ரதம்

இந்த பாரதியாரின் வரலாற்று நூலில் பல அத்தியாயங்கள் உள்ளன. நூலை முழுவதுமாகத் தர இயலாத நிலையில் தேர்ந்தெடுத்த கவிதைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. இங்கு சூரத்தில் மாநாடு என்ற அத்தியாயத்தில் உள்ள 19 பாடல்களையும் பரங்கியர் பாட்டு என்ற அத்தியாயத்தில் உள்ள 13 பாடல்களையும் படித்து மகிழலாம். நூலின் பக்கங்களை அப்படியே காணலாம்.

இணைப்பாகத் தரப்படுபவை :

சூரத்தில் மாநாடு – 19 பாடல்கள்

பரங்கியர் பாட்டு – 13 பாடல்கள்

 

 

 

 

தொகுப்பாளர் குறிப்பு:
புலவர் கு.பொ.பெருமாள் பல்வேறு சந்தங்களில் மரபு நிலை மாறாது பாடல்களை யாத்துள்ளார்.

இவரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மாவட்டம் புளியம்பட்டியில் இருக்கும் புலவர் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.

கவிஞர் கு.பொ.பெருமாள் அவர்களுக்கும் புலவர் பதிப்பக உரிமையாளருக்கும் நமது நன்றி

***

 

 

கம்பன் கவிதையில் உபநிஷதம், ஓம்! (Post No.4972)

Written by London Swaminathan 

 

Date: 3 May 2018

 

Time uploaded in London – 6-39 am (British Summer Time)

 

Post No. 4972

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராமாயணத்தைத் தமிழில் தந்தான் கம்பன்; இதன் மூலம் இலக்கிய உலகை வென்றான். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் யூபம், வேதம் முதலிய ஸம்ஸ்க்ருதச் சொற்களை சங்கப் புலவர்கள் அப்படியே பயன் படுத்தியது போலவே கம்பனும் ஓம், உபநிஷதம் போன்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களை அப்படியே பாடலில் பயன்படுத்துகிறான்; அக்காலத்தில் வேத வேள்விகளும் ஓம் என்னும் வேதத்தின் முதல் சொல்லும் வேதத்தின் முடிவான (வேதம்+ அந்தம்= வேதாந்தம்) உபநிஷதமும் தெய்வத் தமிழ்நாட்டில் எவ்வளவு பிரஸித்தம் என்பதற்கு இவைகள் சான்று பகருகின்றன.

 

கம்பன் பாடிய இரணிய வதைப் படலத்தில் (யுத்த காண்டம்) இந்து மத தத்துவங்கள் அனைத்தும் பிரஹலாதன் வாயின் வழியாகத் தரப்படுகின்றன. அதில் சில பாடல்கள்:

அளவையான் அளப்பரிது அறிவின் அப்புறத்து

உளவை ஆய் உபநிடதங்கள் ஓதுவ

கிளவி ஆர் பொருள்களான் கிளக்குறாதவன்

களவை யார் அறிகுவார் மெய்ம்மை கண்டிலார்.

 

பொருள்

இறைவனின் நிலை கண்கூடாகத் தெரியக்கூடிய பிரமாணங்களைக் கொண்டு அளவிட முடியாதது; அறிவுக்கும் எட்டாத தொலைவில் இருக்கிறது. ஐயனே! உபநிடதங்கள் சொல்கின்ற சொற்களால் கூறமுடியாதவனான  அவனுடைய மாயத் தன்மையை அறியவல்லவர் யாவர்? அந்த மெய்மையைக் கண்டவர் எவருமிலர்.

 

(இதிலுள்ள ‘சொற்களால் கூற முடியாத’ என்பது கூட உபநிஷத வாக்கியம் ஆகும்)

இன்னொரு படலில் வேதம் சொல்லுவோர் ஓம் என்ற சொல்லுடன் துவங்குவர் என்பதை ‘சிந்தையின்……. முந்தை ஓரெழுத்து என வந்து’ என்று ஓம் என்னும் ஓரெழுத்தின் புகழைப் பாடுகிறார்.

 

அடுத்தொரு பாடலில் ஓம் என்ற சொல்லை அப்படியே பயன்படுத்துகிறார். இதோ அந்தப் பாடல்:

 

ஓம் எனும் எழுத்து அதனின் உள் உயிர்

ஆம் அவன் அறிவினுக்கு ஆறிவும் ஆயினான்

தாமு மூவுலகமும் தழுவிச் சார்தலால்

தூமமும் கனலும் போல் தொடர்ந்த தோற்றத்தான்

 

ஓர் எழுத்தாக உள்ள ஓம் என்னும் பிரணவத்தினுள்ளே பொருந்திய அ, உ , ம் என்ற மூன்றினுள் அகார உயிராகத்திகழும் அந்த இறைவன் (அகர முதல எழுத்தெல்லாம்-குறள்) அந்த உயிர்களின் அறிவுக்கு எல்லாம் உள் நின்று உணர்த்தும் ஞானமாகவும் விளங்குகின்றான்; பரந்த மூவுலகங்களையும் பரவிப் பொருந்துவதால் புகையும் நெருப்பும் போல பல இடங்களிலும் பரவும் தன்மை கொண்ட வனாயும் உள்ளான்.

 

விறகில் தீயினன், பாலில் படு நெய் போல் உள்ளவன் என்று தேவாரமும் சொல்லும். ஆங்கிலத்தில் ஆண்டவனை எங்கும் நிறைந்தவன், எல்லாம் அறிந்தவன், எல்லாம் வல்லவன் (Omnipresent, Omniscient, Omnipotent) என்பர். அதை எல்லாம் கம்பன் பாடல் வடிவில் இங்கே கூறுகிறான்.

இங்கே நாம் பார்க்க வேண்டியது இரண்டே விஷயங்கள்தாம்:

1.கம்பனின் வேதாந்த அறிவு; மாண்டூக்ய உபநிஷதம் ‘ஓம்’ எனும் பிரணவாகாரத்தின் புகழ்பாடும்; அதைக் கம்பன் படித்து உணர்ந்து இருக்க வேண்டும்

2.கம்பன் காலத்தில், ‘ஓம்’, ‘உபநிஷதம்’ போன்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தி இருக்க வேண்டும்.

 

இரணிய வதைப் படலம் முழுவதையும் படித்து இன்புறுக.

 

வாழ்க தமிழ்; வளர்க கம்பன் புகழ்

பாரதி போற்றி ஆயிரம் – 84 (Post No.4965)

Compiled by S NAGARAJAN

 

Date: 1 MAY 2018

 

Time uploaded in London –  7-22 AM  (British Summer Time)

 

Post No. 4965

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 84

  பாடல்கள் 779 முதல் 819

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : .நாகராஜன்

புலவர் கு.. பெருமாள் இயற்றிய     பாரதியின் பாரதம்

இந்த பாரதியாரின் வரலாற்று நூலில் பல அத்தியாயங்கள் உள்ளன. நூலை முழுவதுமாகத் தர இயலாத நிலையில் தேர்ந்தெடுத்த கவிதைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. இங்கு காசியில் காங்கிரசு என்ற அத்தியாயத்தில் உள்ள 17 பாடல்களையும் கொடிக்கீழ் குமுறல் என்ற அத்தியாயத்தில் உள்ள 24 பாடல்களையும் படித்து மகிழலாம். நூலின் பக்கங்களை அப்படியே காணலாம்.

இணைப்பாகத் தரப்படுபவை :

காசியில் காங்கிரசு – 17 பாடல்கள்

கொடிக்கீழ் குமுறல் – 24 பாடல்கள்

 

தொகுப்பாளர் குறிப்பு:
புலவர் கு.பொ.பெருமாள் பல்வேறு சந்தங்களில் மரபு நிலை மாறாது பாடல்களை யாத்துள்ளார்.

இவரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மாவட்டம் புளியம்பட்டியில் இருக்கும் புலவர் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.

கவிஞர் கு.பொ.பெருமாள் அவர்களுக்கும் புலவர் பதிப்பக உரிமையாளருக்கும் நமது நன்றி

***