ஜாலி எல் எல் பி – Jolly LLB (Post No.3948)

Written by S NAGARAJAN

 

Date: 28 May 2017

 

Time uploaded in London:-  6-54  am

 

 

Post No.3948

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipdia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

சிந்திக்கவும் சிரிக்கவும்

 

பார்த்து மகிழ ஒரு நல்ல திரைப்படம்          ஜாலி எல் எல் பி – Jolly LLB

ச.நாகராஜன்

 

சாதாரணமாக திரைப்படம் பார்க்க எனக்கு நேரமே கிடையாது. இப்போது சான்பிரான்ஸிஸ்கோவில் இருப்பதால் நிறைய நேரம் கிடைக்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் தொலைக்காட்சி சீரியல்களையும் சில திரைப்படங்களையும் பார்க்கும் வசதியும் வாய்ப்பும் நேரமும் இங்கு உள்ளதால் சில தமிழ், ஹிந்தி, ஆங்கிலத் திரைப்படங்களையும் தொலைக்காட்சி சீரியல்கள்கள் சிலவற்றையும் பார்க்க முடிந்தது.

 

இதில் குறிப்பிடத்தகுந்த படமாகத் திகழ்வது ஹிந்தியில் எடுக்கப்பட்ட Jolly LLB  ஜாலி எல் எல் பி என்ற திரைப்படம்.

2013ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது. நையாண்டி படம் என்றோ காமடி திரைப்படம் என்றோ இதை லேசில் ஒதுக்கி விட முடியாது.

அற்புதமாக காட்சிக்கு காட்சி ரசிக்க வைக்கும் திரைப்படம் இது. அத்துடன் தீவிர சிந்தனையைத் தூண்டி விடும் படமாகவும் இது அமைகிறது.

கதையின் ஓட்டத்தில் கதாபாத்திரங்கள் சொல்வதையும் செய்வதையும் மேம்போக்காகப் பார்த்து விட்டாலும் ஒவ்வொரு சீனிலும் அழுத்தம் திருத்தமாக பல உள்ளார்ந்த அர்த்தங்கள் இருப்பதை சிந்தனை செய்து தெரிந்து கொள்கிறோம்.

 

கதை வக்கீல்களைப் பற்றியது; ஒரு கேஸைச் சுற்றிச் சுழல்கிறது. பணக்கார வீட்டுப் பையன் நடைபாதையில் படுத்திருந்த ஆறு பேரை ஒரு காரை ஏற்றிக் கொன்று விட்டான், குடி போதையில்.

அந்த கேஸிலிருந்து தப்பிக்க போலீசுக்கு லஞ்சம். வக்கீலுக்குப் பெருந்தொகை. தப்புக்கு மேல் தப்பு செய்யும் ஒரு பெரிய வக்கீலின் சாகஸ திருப்பங்கள்.

 

நமது கோர்ட் வாசல்களிலும் சுற்றுப்புறங்களிலும் இருக்கும் வக்கீல்களின் கூட்டமும் அவல நிலையும் ஒரு புறம்.

ஓட்டை டைப்ரட்டர்களை வைத்துக் கொண்டு, சார், பெய்ல் வேணுமா என்று கத்தரிக்காய் வியாபாரி போலக் கூவும் வக்கீல்கள். அந்த ஓட்டை டைப்ரட்டரையும் ஒரு பூட்டு போட்டு பாதுகாக்கும் அவலம்!

 

இந்த வக்கீல் கும்பலில் தன் தனித்துவத்தை நிலை நாட்ட விரும்பி, ஆறு பேரைக் கொலை செய்த ஹிட் அண்ட் ரன் கேஸை எடுத்து தன் பெயரை நிலை நாட்டத் துடிக்கும் ஜாலி என்ற வக்கீல் (அர்ஷத் வாஸி நடிகர்)

அவர்  கேஸைக் கையாளும் விதம் அழகுறச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பாக ஜட்ஜ் திரிபாதியாக  நடித்துள்ள சௌரப் சுக்லாவின் நடிப்பைப் புகழ வார்த்தைகளே இல்லை.

லஞ்சம் வாங்கும் சபலப் பேர்வழியோ என்று முதல் காட்சியில் சந்தேகம்; டீ குடித்து விட்டு கேஸ் பேப்பர்களை கண்ணாடி வழியே அருகே வைத்துப் பார்த்து ஏ.சி. இல்லை என்று அலட்டிக் கொள்வது, அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று அனைவரையும் திகைக்க வைக்கும் ஒரு வித்தியாசமான கேரக்டர், பெரிய வக்கீலான ராஜ்பாலைப்( நடித்து அசத்துபவர் நடிகர் பொமன் இரானி) புகழ்வது; அவரை அனுசரிப்பது; ஆனால் தன் போக்கில் வழக்கை மேலே நடத்த அனுமதிப்பது. ராஜ்பால் கத்தும் போது அவருக்கு மேலே கத்தி ‘இது எனது கோர்ட்; இங்கு நான் தான ஜட்ஜ் என்று தீர்க்கமாகச் சொல்வது, கடைசியில் இறுதித் தீர்ப்பை வழங்குவது என எல்லா விதத்திலும் அழகுற நடித்து அசத்துவதோடு நம்மை பெரிதும் சிந்திக்க வைக்கிறார்  சௌரப் சுக்லா – இல்லை, இல்லை ஜட்ஜ் திரிபாதி.

 

குடும்ப உறவைச் சித்தரிக்க காதலி தேவை – அதற்கு அமிர்தா ராவ்!

படத்தில் பல திருப்பங்கள்!

ராஜ்பால் வாதத்தால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியால் மனம் நொந்து கேண்டீன் நடத்தும் பெரியவர்;

 

செக்யூரிடியாக் வந்து இருமி இருமி இளைத்தவராக இருக்கும் போலீஸ் என்றாலும் இறுதியில் தன் பணியைச் செய்யும் செக்யூரிடி போலீஸ்.

இருப்பவரை இறந்ததாக மாற்றும் லஞ்ச லாவண்ய போலீஸ் இன்ஸ்பெக்டர்,

“இறந்து போன”வர் சாட்சி சொல்ல வருவது,

 

பெருந்தொகையைப் பெற தானே ஆளை செட் அப் செய்யும் ‘பெரிய்ய வக்கீல்’ தேஜ்பால்

என இப்படி கேரக்டர்களின் வீச்சு அபாரமாக உள்ளது.

பாட்டுக்கள் கூட பொருள் பொதிந்து இருப்பதால் கேட்க வைக்கிறது.

நமது நியாய ஸ்தலங்கள் எப்படி ஒரு அவல நிலையில் இயங்குகிறது என்பதைச் சுட்டிக் காட்டும் இந்தப் படத்தில் இடம் பெறும் வசனங்கள் ஒவ்வொன்றுக்கும் இன்னொரு மறை பொருள் அர்த்தம் இருக்கும் படி பார்த்துக் கொண்ட் வசனகர்த்தா நம்மை நெடு நேரம் சிந்திக்க வைக்கிறார். இந்தப் படம் 1999ஆம் ஆண்டு ந்டந்த ஒரு ஹிட் அண்ட் ரன் கேஸான சஞ்சீவ் நந்தா கேஸ் மற்றும் பிரியதர்ஷினி மாட்டூ கேஸ் ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்பட்ட உத்வேகத்தால் எடுக்கப்பட்டது.

 

 

படத்தின் டைரக்டர் மற்றும் வசனகர்த்தா சுபாஷ் கபூர். இல்லை இவரை சபாஷ் கபூர் என்றே இனி அழைக்கலாம்.

சிறந்த ஹிந்தி படத்திற்கான நேஷனல் பிலிம் அவார்டை இந்தப் படம் பெற்றுள்ளது.

 

ஜட்ஜ் திரிபாதியாக நடித்த சௌரப் சுக்லாவிற்கு பெஸ்ட் சப்போர்டிங் ஆக்டர் என்ற நேஷனல் பிலிம் அவார்ட் கிடைத்துள்ளது. அட, அவார்டுகளின் மீது கூட ஒரு நம்பிக்கை வருகிறதே, இந்தப் படத்தால்!

அடுத்து ஜாலி எல் எல் பி 2 – இந்த ஆண்டு வெளியாகி இருக்கிறது!

 

அதையும் பார்த்து விட வேண்டியது தான் என்று எண்ணிக் கொண்டேன்.

சிந்திக்க வைக்கக் கூடிய ஒரு தமாஷ் மற்றும் சீரியஸான படத்தைப் பார்க்க 128 நிமிடம் இருந்தால் இதை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்.

எனது மார்க் இந்தப் படத்திற்கு நூற்றுக்கு நூறு!

 

***

திரைப்படங்கள் சிலவற்றைப் பார்த்திருப்பதால் அதைப் பற்றிய தீர்மானமான எனது எண்ணங்களை இன்னொரு கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறேன்.

****

 

 

சம்பூர்ண ராமாயணம் படம் பார்த்த ராஜாஜி

sampoorna-ramayanam-400x400-imadat38gaatymk5

Compiled by S Nagarajan

Article No. 1687; Dated– 3 March 2015.

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 7

by ச.நாகராஜன்

 

ஶ்ரீ ராமராஜ்யம்!


சம்பூர்ண ராமாயணம் படம் பார்த்த ராஜாஜி

 

பொதுவாக திரைப்படங்களைப் பார்க்க விரும்பாத மூதறிஞர் ராஜாஜி திரைப்படங்களைப் பார்க்கத் தமக்கு நேரமில்லை என்று சொல்லி ஒதுங்கி விடுவது வழக்கம். ஆனால் சம்பூர்ண ராமாயணம் படம் பார்க்க அவரை அழைத்த போது படம் பார்க்க வந்ததோடு பரதனாக நடித்த சிவாஜிகணேசனின் நடிப்பு சிறப்பாக அமைந்திருப்பதாகவும் பாராட்டினார்.பொதுவாக ராமாயணம் பற்றிய இதே ஈடுபாடு இந்த தேசத்தில் பிறந்த சிறு குழந்தை முதல் மூதறிஞர் வரை இருப்பதில் வியப்பே இல்லை. ராமாயண மஹாபாரத இதிஹாஸம் என்றால் மக்களுக்குத் தனி ஒரு ஈடுபாடு என்றும் உண்டு.தொலைக்காட்சியில் ராமாயணம் தூர்தர்ஷன் வாயிலாக ஒளிபரப்பப்பட்ட போதும் மக்கள் அனைவரும் குறிப்பிட்ட அந்த ஒளிபரப்பு நேரத்தில் தொலைக்காட்சிப் பெட்டிக்கு குடும்பத்துடன் அடைக்கலமாயினர்.

ramayan1

ஶ்ரீராமராஜ்யம்

இந்த வகையில் ராமாயணம் மீண்டும் தெலுங்குப் படவுலகில் 2011இல் வெற்றிகரமாகப் படமாக்கப்பட்டது.ஶ்ரீராமராஜ்யம் என்ற படம் ராமர் அயோதியில் பட்டம் சூட்டப்பட்ட பின்னர் நடந்த நிகழ்வுகளைக் கொண்ட அருமையான படம்.

பிரபல டைரக்டரான பாபு இதை இயக்க படங்களில் நிரந்தர ராமராக வலம் வந்த என்.டி.ராமாராவின் புதல்வர் சூப்பர்ஸ்டார் பாலகிருஷ்ணா ராமராகவும் நயன்தாரா சீதையாகவும் நடித்த ஶ்ரீராமராஜ்யம் படம் 2011ஆம் ஆண்டு திரையிடப்பட்டது. இது 2012ஆம் ஆண்டு டப்பிங் செய்யப்பட்டு தமிழிலும் மலையாளத்திலும் வெளி வந்தது. 1943ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி படத்தின் தலைப்பே தனக்கு உத்வேகமூட்டியது என்றார் பாபு.

இசை அமைத்தவர் இளையராஜா. ஆத்மார்த்தமாக இசை அமைத்த அவரது பாடல்கள் 170 நிமிட நேர படத்தில் 50 நிமிடம் 25 விநாடிகள் எடுத்துக் கொண்டதென்றால் பாடலின் முக்கியத்துவம் பற்றிக் கேட்க வேண்டுமா என்ன? 15 பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஷ்ரேயா கோஷல் உள்ளிட்ட பல பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் பாடினர்.ஜொன்னவிதூல ராமலிங்கேஸ்வர ராவ் பாடல்களை இயற்றினார். அருமையான பாடல்கள் அனைத்தையும் வரவேற்ற ரசிகர்கள், இன்றும் தவறாமல் அவற்றை யூடியூப் உள்ளிட்ட பல்வேறு இணையதள பாடல்தளங்களில் கேட்டு ரசிக்கின்றனர்.

sankarabharanam-400x400-imad2r8gnyjansmh

சங்கராபரணம்

இதே போல தெலுங்கில் தயாராகி தமிழில் டப் செய்யப்பட்ட 1979ஆம் ஆண்டு திரைப்படமான சங்கராபரணம் குறிப்பிடத் தகுந்த ஒரு படம். இதில் ராமரைப் பற்றிய பத்ராசல ராமதாஸரின் பாடல் ஒன்று இடம் பெற்று அனைவரையும் உருக்கியது. வாணி ஜெயராம் பாடிய பாடலை யாருமே மறக்க முடியாது.

ஏ தீருக நனு தய ஜூசே தவோ, இன வம்சோத்தம ராமா

நா தரமா   பவசாகர மீதனு, நளின தளேக்ஷண ராமா

ஶ்ரீ ரகு நந்தன, சீதா ரமணா, ச்ரித ஜன போஷக ராமா

காருண்யா லய, பக்த வரத நின்னு, கன்னதி காணுபு ராமா

க்ரூர கர்மமுலு, நேரக சேசிதி, நேரமுலெஞ்சகு ராமா

தாரித்ரயமு, பரிகாரமு சேயவே, தெய்வ சிகாமணி ராமா

எப்படி கருணை புரிவாய். எப்படி சாகரம் கடப்பேன், வம்சோத்தம ராமா, ரகு நந்தனனே, சீதையின் ரமணனே, அடியாரைக் காப்பவனே, காருண்யமயமானவனே, பக்தர் தம் வரதனே, க்ரூரமான கர்மங்கள் செய்தாலும் அவற்றை நீக்கி, தரித்திரம் போக்கி அருள்வாய் தெய்வ சிகாமணியே, ராமா!’ என்ற பொருளை உடைய இதை வாணி ஜெயராம் தன் பக்திக் குரலில் பாடியது அனைவரையும் மகிழ்வித்தது!

tel_shankarabharanam

சங்கராபரணம் படத்தை இயக்கியவர் பிரபல டைரக்டரான கே.விஸ்வநாத். இந்தப் படம் வெளின முதல் நாளில் கூட்டமே இல்லை. ஆனால் படத்தைப் பார்த்து வெளியே வந்த ரசிகர்கள் கூறிய அபாரமான புகழ்மொழிகளால் அடுத்த நாளிலிலிருந்து கூட்டம் அலை மோத ஆரம்பித்தது. ஹைதராபாத் ராயல் தியேட்டரில் 216 நாட்கள் ஓட, நாட்டின் இதர பகுதிகளில் உள்ள பல திரையரங்கங்களில் சுலபமாக நூறு நாட்களைத் தாண்டியது!

Sankarabharanam-Movie-Stills (3)

ப்ரோசேவாரெவரு ரா

சங்கர சாஸ்திரியாக நடித்த ஜே.வி.சோமயாஜுலு அந்தப் பாத்திரமாகவே மாறி விட்டார். இதில் ராமரைப் பற்றிய புகழ் பெற்ற இன்னொரு பாடலும் உண்டு.மைசூர் வாசுதேவாசார் இயற்றிய ப்ரோசே வாரெவரு ரா என்ற பாடலை யாருமே மறக்க முடியாது. இதை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் வாணி ஜெயராமும் தங்கள் அற்புதக் குரல் வளத்தால் மெருகேற்றினர்.

மைசூர் வாசுதேவாசார் (தோற்றம் 28-5-1865 மறைவு 17-5-1961) பெரிய ராமபக்தர்.தியாகராஜ ஸ்வாமிகளின் சீடர் பரம்பரையில் வந்தவர். 95 வயது வரை வாழ்ந்த இவர் சுமார் 200 கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை சம்ஸ்கிருதம் மற்றும்ம் தெலுங்கில் உள்ளவை.

நினு விநா ப்ரோசேவாரெவரு ரா – உன்னையல்லால் என்னைக் காப்பவர் யார்?

ரகுவரா – ஓ ரகு குல திலகமே

 நானு நீ சரணாம்புஜமுலு – நான் உன் சரணாரவிந்தங்களை

நே விடஜால கருணாலயால – விட முடியாது, கருணைமயமானவனே!

கமாஸ் ராகத்தில் அமைந்த இந்தப் பாடலைக் கேட்டு உருகாதவர் யாரும் இருக்க முடியாது! படக்காட்சியும் அபிநயங்களோடு அமைந்திருந்தது!

Sankarabaranam Movie in Tamil Photos (6)

இதிஹாஸம் ஏற்படுத்தும் தெலுங்கு, தமிழ் ஒற்றுமை

தெலுங்கு திரைப்பட உலகமும் தமிழ்த் திரைப்பட உலகமும் மிக அன்யோன்யமாகவே ஆரம்ப காலம் முதல் இருந்து வந்துள்ளது. இதற்கான காரணம் பண்பாட்டின் அடிப்படையில் மனதால் அனைவரும் ஒன்று பட்டிருந்த காரணத்தினால் தான்! அரசியல் அந்தக் காலத்தில் திரையுலகில் புகவில்லை! சென்னையில் இருந்த ஸ்டுடியோக்களைத் தாராளமாகப் பயன்படுத்திய திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு இரு மொழிகளில் ஒரே சமயத்தில் படம் எடுப்பது சுலபமாக இருந்தது.

ஆடல் பாடல், கிளுகிளுப்புப் படங்களையே தெலுங்கு உலகம் விரும்பியது என்று சிலர் கூறுவது சரியில்லை. மிக அழகான கலைப் படங்களையும் இதிஹாச புராணப் படங்களையும் தெலுங்கு உலகம் தந்திருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும். சம்பூர்ண ராமாயணம், லவகுசா, ஶ்ரீ ராமராஜ்யம், சங்கராபரணம் போன்ற படங்கள் போதாதா, இதை நிரூபிக்க!

இந்த அற்புதமான தெலுங்கு தமிழ் ஒற்றுமை காலத்தை வென்று நிலை நிற்க ராமரின் அருளை வேண்டுவோம்!

*************