கடவுள் தந்த இரண்டு மொழிகள்

shiva
பம் பம் பம் பம் பம் பம் பாஜே டமரு
டம் டம் டம் டம் டமருக நாதா (பஜனைப் பாடல்)

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1408; தேதி 13 நவம்பர், 2014.

இந்தியர்களாகப் பிறந்தவர்கள் உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலிகள். தமிழ், சம்ஸ்கிருதம் என்னும் இரண்டு அரிய, பெரிய, பழைய மொழிகள் அவர்கள் நாட்டுக்குளேயே புழங்கி வருகின்றன வீட்டுக்குளேயே பவழங்கி வருகின்றன -. உலகிலுள்ள எல்லா மொழிகளையும் இந்த இரண்டு மொழிகளுக்குள் அடக்கிவிடலாம். இதைவிடப் பெரிய சிறப்பு இவ்விரு மொழிகளும் கடவுளால் படைக்கப்பட்டன. இவ்விரு மொழிகளையும் சிவ பெருமான் கொடுத்ததாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புலவர்கள் பாடி வருகின்றனர்.

பாரதியின் தமிழ்ப் பற்றை சந்தேகிப்பார் எவரேனும் உளரோ? அவரே ஆதி சிவன் இந்த தெய்வீகத் தமிழ் மொழியை உருவாக்கியதையும் அதற்கு அகத்தியன் என்று ஒரு பிராமணன் இலக்கணம் செய்து கொடுத்ததையும் சம்ஸ்கிருத (ஆரியம்) மொழிக்குச் சமமாக தமிழ் மொழி, வாழ்ந்ததையும் பாடுகிறார்:-

damaruka

தமிழ்த் தாய் – என்னும் பாடலில் பாரதியார் பாடுகிறார்:

ஆதி சிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணஞ் செய்துகொடுத்தான்

ஆன்ற மொழிகளுக்குள்ளே – உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் — (பாரதியார் பாடல்)

சிவபெருமான் தனது உடுக்கையை வாசிக்கும்போது அதன் ஒரு புறத்திலிருந்து தமிழும் மறு புறத்திலிருந்து சம்ஸ்கிருதமும் வந்ததாக ஆன்றோர்கள் கூறுவர். பாணினி என்னும் உலக மகா அறிஞன், உலகின் முதலாவது இலக்கண வித்தகன் சிவபெருமானுடைய ‘’டமருகம்’’ என்னும் உடுக்கை ஒலியில் இருந்து எழுந்த 14 ஒலிகளைக் கேட்டு சம்ஸ்கிருத இலக்கணம் செய்தார். இதை மஹேஸ்வர சூத்ரம் என்று கூறுவர்.

இதே போல அகத்தியர் என்பார் தமிழுக்கு இலக்கணம் செய்தார். ஆக இவ்விரு மொழிகளும் பாணினி, அகத்தியர் என்போருக்கு முன்னதாகவே வழங்கின. ஆனால் காலத்துக்கு காலம் இலக்கணம் மாறுபடும் என்பதால் அவ்வப்போது வரும் பெரியோர் இத்தகைய பணியை ஏற்பர். தமிழில் தொல்காப்பியருக்கு முன்னரும் இலக்கண வித்தகர்கள் இருந்தனர். பின்னரும் பலர் வந்து நூல்களை யாத்தனர். இது போலவே பாணினிக்கு முன்னரும் இலக்கண அறிஞர்கள் இருந்தனர்.

வட கோடு (இமய மலை) உயர்ந்து, தென் நாடு தாழவே, பூபாரத்தை சமனப் படுத்த அகத்தியனை தென் திசைக்குச் செல்லுமாறு சிவ பெருமான் கட்டளையிட்டதை முன்னரே உலகின் முதல் மக்கட்தொகைப் பெருக்கப் பிரச்சனை என்ற கட்டுரை வாயிலாகத் தந்துள்ளேன்.

shiva2

காளிதாசன் வழங்கும் முதல் சான்று
காளிதாசன் என்னும் கவிஞன் கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் கவிஞன். இவனைப் போல நாடகம், காவியம், கவிதைகள் எனும் முத்துறையிலும் சிறப்புற விளங்கியவர் உலகில் மிக மிகக் குறைவு. அவனது ரகு வம்ச காவியத்தில் (6-61, 6-62) ராவணன் – பாண்டியன் – அகத்தியன் ஆகிய மூவரையும் இணைத்துப் பாடியதில் இருந்து நமக்கு அரிய செய்திகள் கிடைக்கின்றன. அவன் அகத்தியன் பற்றியும் பாண்டியன் பற்றியும் பாடியது வட இந்தியாவரை அகத்தியன் – தமிழ் உறவு தெரிந்திருந்ததைக் காட்டுகிறது. ராவணன் — பாண்டியர் சமாதான உடன்படிக்கை பற்றி நான் முன்னரே எழுதிவிட்டேன்.

புறநானூறு முதலிய சங்க கால நூல்களில் பொதிய மலையையும் இமய மலையையும் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடுவர். பொதியில் குன்று என்பது அகத்தியர் ஆசிரமம் இருந்த இடம். ஆதாலால் இப்படிச் சிறப்பு எய்தியது.

மாணிக்கவாசகர் தரும் சான்று
ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகியோர் நுற்றுக் கணக்கான இடங்களில் தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் ஏத்தித் துதிபாடிவிட்டனர். ஓரிரு எடுத்துக் காட்டுகளைத் தருவன்:–

தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானே என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகர் குறிப்பிடுவது சிவனையே என்பது அவருக்குப் பின்னோர் வந்த பாடலில் மேலும் உறுதிப்படுத்தப்படும்.

வானவர் காண் வானவர்க்கும் மேலானான் காண்
வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண் (அப்பர்—ஆறாம் திருமுறை)

முத்தமிழும் நான் மறையும் ஆனான் கண்டாய் (அப்பர்)
தமிழ் சொல்லும் வடசொலுந் தாணிழற்சேர (தேவாரம்)

மந்திபோல திரிந்து ஆரியத்தோடு செந்தமிழ்ப் பயன் தெரிகிலா
அந்த்தகர்க்கு எளியேன் இலேன் – சம்பந்தர் தேவாரம்
(இந்தப்பாடலில் தமிழ் சம்ஸ்கிதரும் ஆகிய இரண்டின் பெருமையையும் அறியாதோரை குரங்கு, குருடர் — என்பார் சம்பந்தர்)

trishul-damaru

தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் ஒப்பிட்டு எது பெரிது என்றே சொல்ல முடியாது. ஏனெனில் சம்ஸ்கிருதத்தில் வேதம் இருக்கிறது. தமிழிலோ திருக்குறள் இருக்கிறது என்று பெருமைப்படுவார் வண்ணக்கன் சாத்தனார்:-

ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனின் இனிது
சீரியது ஒன்றைச் செப்பல் அரிதால் – ஆரியம்
வேதம் உடைத்து; தமிழ் திருவள்ளுவனார்
ஓது குறட்பா உடைத்து.

shiva3
கம்பர் தரும் சான்று
உழக்கும் மறை நாலினும் உயர்ந்து உலகம் ஓதும்
வழக்கினும் மதிக்கவியினும் மரபின் நாடி
நிழற்பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண்
தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான் — (கம்ப ராமாயணம்)

தமிழ் மொழியை நெற்றிக் கண் கொண்ட சுடர்க் கடவுள் சிவ பெருமான் தான் தந்தான் என்பதை கம்பன் பட்டவர்த்தனமாகப் பாடிவிட்டான்.

அகத்தியன் பற்றிக் கம்பர் கூறியவை:
‘’தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தான்’’ (சலதி = கடல்)
‘’நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்’’

பரஞ்சோதி முனிவர் தரும் சான்று
வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை, உலகமெலாம் தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்
கடல் வரைப்பின் இதன் பெருமை யாவரே கணித்தறிவார்
–பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம்

shiva on coin

சிவஞான முனிவர் கருத்து
இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவரியல் வார்ப்ப
இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசை பரப்பு
இருமொழியுமான்றவரே தழீஇயனா ரென்றாலி
இருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதோ

தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டு மொழிகளுக்கும் சிவனே கர்த்தா. இரண்டும் கண்ணின் இரு விழிகள். இவ்விரு மொழிகளும் சமம் என்பதில் என்ன சந்தேகம்? என்பார் காஞ்சிப் புராணம் எழுதிய சிவஞான முனிவர்.

தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் இரு கண்கள் எனப் பாவித்து இரு மொழி கற்போம் !!

எனது முந்தைய கட்டுரைகளையும் காண்க:
தமிழுக்கு எத்தனை பெயர்கள்? (ஜூன் 9, 2014)
புத்தர் செய்த தவறு: சுவாமி விவேகாநந்தர் ( 28 மார்ச் 2014)
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
தமிழ் ஒரு கடல்

Ravana-Pandya Peace Treaty: Kalidasa solves a Tamil Puzzle (24th June 2014)
Population Explosion: Oldest Reference is in Hindu Scriptures (posted on 2nd February 2013)

தமிழ், சம்ஸ்கிருத இலக்கியத்தில் சிங்கம்!

Lion seems to be symbol of Pallava Dynasty
Pallava symbol lion in Mamallapuram (Narasimha Pallavan has lion in his name)

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1402; தேதி 10 நவம்பர், 2014.

நாம் எல்லோரும் சிறுவயதில் படித்த கதைகள் பஞ்ச தந்திரக் கதைகளும் ஈசாப் கதைகளும் ஆகும். சின்னச் சின்னக் கதைகளில் பறவைகளையும் மிருகங்களையும் கதாபாத்திரமாக வைத்து நமக்கு பல நீதிகளைப் புகட்டினர். இது எல்லாம் இந்தியாவில் இருந்து உலகம் முழுவதும் சென்றது பலருக்கும் தெரியாது. உலகின் மிகப் பழமையான நூலான ரிக் வேதத்திலேயே இந்தக் கதைகளில் சில உவமை வடிவத்தில் இருக்கின்றன.

ஈசாப் என்ற கிரேக்க அடிமை, தான் கேட்ட கதைகளை எழுதிவைத்தார். இவர் கேட்ட கதைகளில் பல இந்தியர்களிடமிருந்து கேட்டவை என்பதை மயில் முதலிய பறவைகள் மூலம் அறியலாம். ஏனெனில் உலகம் முழுதும் மயில் என்னும் அதிசயப் பறவைகளை ஏற்றுமதி செய்தவர்கள் நாம் ஒருவரே. ஈசாப் வாழ்ந்த நாட்டில் மயில் கிடையாது. நிற்க.

nahapana newwwww

சிங்கம் பற்றிய சுவைமிகு விஷயங்களைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

1.ஜூலியஸ் சீசர், ஆக்டேவியஸ் சீசர் என்று பல மன்னர் பெயர்களை ரோமானிய வரலாற்றைப் படித்தவர்கள் அறிவர். இதில் உள்ள சீசர் என்பது கேசரி என்ற சம்ஸ்கிருத பெயரில் இருந்து வந்தது. கேச+அரி = மயிர் உடைய மிருகம். ஆண் சிங்கத்தின் பிடரி மயிர் காரணமாக கேசரி என்ற பெயர் உண்டாயிற்று.

2.ஏரியல்: ஏரியல் என்ற ஹீப்ரு பெயரில் உள்ள அரி என்பது சிங்கம் என்பது ஹீப்ரூ (எபிரேய) மொழி படித்தவர்கள் அறிவர்.

3.சங்க இலக்கியத்தில் அரி: சங்க இலக்கிய நூலான ஐங்குறு நூற்றில் கபிலர் பாடிய குறிஞ்சிப் பகுதியில் (265, 268) அரி என்ற சொல்லைக் காணலாம். இது வட மொழியில் சிங்கத்துக்கு உள்ள பெயர். சிங்கத்தை ஹரி என்பர். தமிழில் “ஹ” இல்லாததால் அது “அரி” ஆய்விட்டது. இது ஹீப்ரூ வரை சென்றுவிட்டது.
தமிழில் அரி என்ற சொல் பறை, கிணை ஆகியவற்றுடனும் பல இடங்களில் வருகிறது. ஆயினும் அந்த இடத்தில் சிங்கத்தின் பொருளை எழுதவில்ல. ஆனால் அதர்வ வேதத்திலும் ரிக் வேதத்திலும் டமார, முழவு கர்ஜனையுடன் சிங்க கர்ஜனை ஒப்பிடப்படுவதால் அரி + ஓசை என்ற இடமெல்லாம் சிங்க கர்ஜனை எனவே பொருள் கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன்

4. சிம்ஹ, சிம்ம: ரிக் வேதத்தில் மட்டும் சிங்கம் என்னும் சொல் கிட்டத்தட்ட 20 இடங்களில் வருகிறது. பிற்கால பிராமணங்கள் முதலியவற்றில் மேலும் பல இடங்களில் வருகிறது. இது போலவே அதர்வண, யஜூர் வேதங்களிலும் உள்ளன. சுருங்கச் சொல்லின், வேறு எந்த வன விலங்கையும் விட சிங்கமே அதிகம் இடம்பெறுகிறது.

(இருபதுக்கும் மேலான குறிப்புகளை எனது ஆங்கிலக் கட்டுரையில் காண்க)

5.இலங்கைக்கு வங்க நாட்டில் இருந்து குடியேறிய சிம்ம பாஹூவை வைத்து சிங்கள என்ற இனம் வந்ததும் அந்நாட்டுக் கொடியில் சிங்கம் இருப்பதும் அனைவரும் அறிந்ததே. ஈரானில் கோமெய்னி புரட்சி வெடிக்கும் முன், அந்நாட்டுக் கொடியில் இலங்கை போலவே வாள் ஏந்திய சிங்கம் இருந்தது. இந்தியாவின் தேசிய சின்னத்தில் சிங்கம் இருக்கிறது.

6.சிங்கபுரம் என்பதே சிங்கப்பூர் ஆனதாகச் சொல்லுவர். இன்னும் சிலர் ஸ்ருங்கபுரம் (கொம்பு போல நீண்ட பகுதி — என்பர். இரண்டும் சம்ஸ்கிருதச் சொற்கள். மலேய தீபகற்ப வரைபடத்தைப் பார்ப்போர்க்கு இது விளங்கும்).

7.இலங்கையில் கி.மு.ஆறாம் நூற்றாண்டு முதலே (சிம்மபாஹு—விஜயன்) சிங்கம் பிரபலமானது. ஆனால் இந்தியாவின் தென்பகுதியிலோ, தென் கிழக்காசிய நாடுகளிலோ இது கிடையாது. ஆயினும் சிற்பங்களிலும், படங்களிலும், இலக்கியங்களிலும் உண்டு.

yali

யாளி என்ற விநோத விலங்கு

8.யாளி, வ்யால= லியோ= லியாண்டர்
வ்யால/ யாளி என்ற ஒரு மிருகம் இந்துக் கோவில் தூண்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இப்போது இல்லாத மிருகம். சிங்கத்தை விட வலியது என்பர். நிறைய கிறிஸ்தவப் பெயர்கள் லியோ, லியாண்டர், லியார்னடோ என்பனவும் ஆங்கிலச் சொற்களான லயன் (சிங்கம்) லியோ (சிம்ம ராசி) முதலியனவும் யாளி, வ்யால என்பதில் இருந்து வந்தன. யாளி என்ற சொல்லை கண்ணாடியில் பார்த்தால் லியா என வரும் இவ்வகை சொற்களை கண்ணாடி உருவச் சொற்கள் என்பர். இப்படியும் வந்திருக்கலாம். அல்லது வ்யால என்னும் மிருகம் பெயர் லயன், லியோ என்றும் நேராகவும் வந்திருக்கலாம்.

9. இந்தியாவுக்குப் பாரதம் என்ற பெயர் ஏற்படக் காரணமானவன் இந்தியாவின் முதல் சக்ரவர்த்தியான பரதன் என்பதைப் பலரும் அறிவர். இந்தப் பரதன் சிங்கத்துடன் விளையாடுவான் அதனால் அவனுக்கு சர்வ தமனன் என்ற பெயரும் உண்டு. இதைப் பாரதியாரும் பாடுகிறார்:–

சகுந்தலை பெற்றதோர் பிள்ளை சிங்கத்தினைத்
தட்டி விளையாடி – நன்று
உகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி
ஒளியுறப் பெற்ற பிள்ளை.

iran flag

வேதத்தில் சிங்கக் கதைகள்

10.உலகில் கதை இலக்கியத்தை உருவாக்கியவர்கள் இந்தியர்களே. வேத, உபநிஷத, பிராமண, ஆரண்யக, இதிஹாச, புராணங்களில் பிராணிகளை வைத்துச் சொல்லப்படும் ஏராளமான நீதிக்கதைகள் உள்ளன. இவைகளில் பலவற்றை புத்த, சமண மத நூல்களிலும் காணலாம். பஞ்சதந்திரக் கதைகளும் ஹிதோபதேசக் கதைகளும் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலகெங்கும் பரவின. இன்று உலகம் முழுதும் பரவிய ஆங்கில ஹாரிபாட்டர் கதைக்கான “கரு” எல்லாம் விக்ரமாத்தித்தன் வேதாளக் கதைகளிலும், கதைக்கடல் (கதாசரித்சாகரம்) என்னும் வடமொழி நூல்களிலும் உள்ளன.

11.ரிக்வேதத்தில் (கி.மு1700க்கு முன்) எல்லா மண்டலங்களிலும் சிங்கம் பற்றிய குறிப்புகள் இருப்பதால் ஒரு காலத்தில் சரஸ்வதி நதிதீரம் முதல் கங்கைச் சமவெளி வரை சிங்கம் உலவி இருக்கவேண்டும். இப்பொழுது குஜராத் மாநிலக் காடுகளில் மட்டுமே சிங்கம் உளது. ஆண்டாள் திருப்பாவையில் சிங்கம் பற்றி தத்ரூபமாகப் பாடியிருப்பது பற்றி எனது முந்தைய கட்டுரையில் காண்க.

12..ரிக் வேதத்தில் சிங்கம் பற்றி வரும் இரண்டு உவமைகள் அக்காலத்திலேயே பஞ்சதந்திரக் கதைகள் போன்ற கதைகள் இருந்ததற்குச் சான்று பகரும் (RV 10-28-4 and 7-18-17).
சுதாசன் என்ற மன்னனுக்கு இந்திரன் வழங்கிய உதவியால் அவன் மகத்தான வெற்றி பெற்றன். பல மன்னர்கள் எதிர்த்த பத்துராஜா யுத்தத்தில் அவன் வெற்றி பெற்றது “சிங்கத்தை ஆடு தோற்கடித்தது” போல இருக்கிறது என்று ஒரு ரிஷி பாடுகிறார். வேறு ஒரு இடத்தில் “நரி சிங்கத்தைத் தோற்கடித்தால் அது அதிசயமன்றோ!” என்று இன்னொரு புலவர் வியக்கிறார். இவை எல்லாம் கதைக்கான கருக்கள்.

13.வடமேற்கு இந்தியா முழுதும் சிங்கம் சீறிப்பாய்ந்த போதும், சிந்து சமவெளியில் ஒரு சிங்க முத்திரையும் இல்லை. இதே போல குதிரைப் படமும் பசு மாட்டின் படமும் இல்லை!! காளை மாட்டை வரைந்த சிந்துவெளியான், பசுமாட்டை மறந்தது ஏனோ!— இது ஒரு பெரிய மர்மம். ஒருவேளை பசு, அஸ்வமேத யாகக் குதிரை இவைகளை முத்திரையில் பொறிப்பது அபசாரம் என்று கருதிவிட்டானோ!!!

LAKSHMI-NARASIMHA_statue_at_Hampi
Narasimha from Hampi (Picture from Wikipedia)

14.இந்துக்கள் வாழ்வில் பின்னிப் பிணைந்தது சிங்கம். விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று நர+சிம்ம அவதாரம்= பாதி மனிதன்+பாதி சிங்கம்!

15.சிம்மாசனம் என்னும் சொல் ,இந்து மத தோத்திரங்களிலும், கதைகளிலும் நூற்றுக் கணக்கான இடங்களில் வருகின்றது. இந்தக் கருத்தை உலகிற்கு தந்தவனும் இந்துவே. சிங்கத்தைக் காட்டு ராஜாவாக உயர்த்தியதும் நம்மவரே என்பது வடமொழி இலக்கியத்தில் இருந்து தெரிகிறது. விக்ரமாதித்தன் சிம்மாசனம், ஸ்வயமேவ ம்ருகேந்த்ரதா – என்ற சம்ஸ்கிருத மரபுச் சொற்றொடர்கள் இதற்குச் சான்று.

16.பாபர், ஹைதர், ஷேர் (ஷா), சிங், சிம்ம, கேசரி – முதலிய மன்னர் பட்டங்கள் அனைத்தும் சிங்கம் எனப் பொருள்படும். முஸ்லீம் மன்னர்களும் கூட நம்மிடமிருந்து அவ் வழக்கத்தைக் கற்றனர்.

17.சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோவிந்த சிம்மன் தனக்குப் பிறகு எல்லா சீக்கியர்களும் சிங் (கம்) என்ற பெயரைச் சூடவேண்டும் என்று சொன்னதால் சீக்கியர் அனைவரும் சிங் என்ற பின்னொட்டுப் பெயர் வைத்துள்ளனர். மற்ற வட இந்திய ஜாதியினரும் சிங் என்று பெயர் வைப்பர். ஆகையால் எல்லா சிங் – குகளும் சீக்கியரல்ல.

18.ரிக்வேதத்தில் அக்னி, ருத்ரன் ஆகியோரை சிங்கத்துடன் ஒப்பிட்டுப் பாடிய துதிகள் உள. சிம்ம கர்ஜனை, இடி முழக்கம் போன்ற ஒலியுடைய முரசுடன் ஒப்பிடப்படுகின்றது சிங்க வேட்டை பற்றிய வருணனைகளும் இருக்கின்றன. பெண் சிங்கத்தின் வலிமையையும் வீரத்தையும் பாராட்டும் பாடல்களும் உள.
simhasanam
Lion Throne (Simha Asanam) at Louvre Museum, France;photo by london swaminathan.

19.உலகின் முதல் அகராதி- நிகண்டு ஆன அமரகோசம் வடமொழியில் சிங்கத்துக்குரிய பத்து சொற்களைப் பட்டியலிடுகிறது:-

சிங்க, ஹரி, கேசரி, ஹர்யாக்ஷ, ம்ருகேந்த்த்ர, பஞ்சாஸ்ய, ம்ருகத்ருஷ்டி, ம்ருகரிபு, ம்ருருகச்ன, கண்டிரவோ எனப் பல பெயர்களைத் தருகின்றது.

20.இலங்கைத் தமிழர் பெயர்களில் புலிகளை விட பாலசிங்கம், விக்ரமசிங்கம் போன்ற சிங்கம் பெயர்களே அதிகம்!!

srilankan coins
–சுபம்–

contact swami_48@yahoo.com

சுமேரு, குமேரு, பாமேரு, மேரு

sumeru_parvat9742

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1400; தேதி 9 நவம்பர், 2014.

சுமேரியா/ சுமேரு என்னும் நாகரீகம் தழைத்த இடம் இராக்
பாமீர்/ பாமேரு என்னும் பீடபூமி இருப்பது தாஜ்கிஸ்தான், கிர்கிஸ்தான் பகுதி
குமேரு என்பது தென் துருவம்; குமரி என்பது தென் கோடி மலை, க்மேர் என்பவர் கம்போடியர்
மேரு என்பது இந்துக்களின் புனித மலை.

இவை எல்லாவற்றிலும் மேரு இருப்பதன் மர்மம் என்ன?

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் 12-10-1932ல் சென்னையில் நடத்திய சொற்பொழிவில் சொல்கிறார்:
“ வடக்கே உள்ளதற்கு ஸுமேரு என்று பெயர். தெற்கே உள்ளதற்கு குமேரு என்று பெயர். ஸூமேருவிலிருந்து குமேரு வரை ஏழு ஸமுத்ரங்களும் த்வீபங்களும் இருக்கின்றன என்று காணப்படுகிறது. இப்பொழுது உள்ளாற்றைப் பார்த்தால் அது பொய் என்று தோற்றுகிறது. ஏழு த்வீபங்களைக் காணோம், ஏழு ஸமுத்ரங்களும் இல்லை. இதைப் பற்றி கொஞ்சம் யோசிக்கலாம்.”
இப்படிச் சொல்லிவிட்டு பின்னர் பூமியின் அச்சு ஒரு காலத்தில் துருவ நட்சத்திரத்துக்கு நேராக இருந்ததும் பின்னர் அது சிறிது சிறிதாக நகர்ந்து இப்போழுது தள்ளி இருக்கிறது என்றும் அது நேராக இருந்த காலத்து இருந்த நிலையையே புராணங்கள் கூறுவதகாவும் விளக்குகிறார். ஆடிவிட்டு நிற்கப் போகும் பம்பரம் போல பூமி தலை சாய்ந்து சுற்றுவதும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை துருவ நட்சத்திரம் மாறுவதும் விஞ்ஞான உண்மை. நிற்க.

((காண்க: —ஸ்ரீ ஜகத்குருவின் உபதேசங்கள், முதற்பாகம், பக்கம்75, ஸ்ரீகாமகோடி கோசஸ்தானம், சென்னை, 1957, வில ரூ3.))

sumermap2 in modern Iraq

நாம் காண வந்த விஷயம் குமேரு. அதற்காகத்தான் காஞ்சிப் பெரியவரின் உரையை மேற்கோள் காட்டினேன். இதைத்தான் நாம் குமரிக் கோடு என்கிறாம். அதாவது ஒரு காலத்தில் குமரி மலை (கோடு) என்று ஒன்று இருந்ததும் அது சுனாமி தாக்குதலில் கடலுக்குள் சென்றதும் தமிழ் இலக்கியம் வாயிலாக நாம் அறிகிறோம். குமரி என்பது குமேருவில் இருந்து வந்திருக்கலாம். அல்லது தென் துருவம் குமேரு என்றும் அது போல உள்ள மலை குமரிக்கோடு என்றும் வந்திருக்கலாம்.

கலைக் களஞ்சியங்களைப் படிப்போருக்கு ஒரு விஷயம் தெரியும் — க்மேர் எனப்படும் கம்போடிய இனம், சுமேரிய இனம் ஆகியவற்றின் மூலமும் இதுவரை மர்மமாகவே இருக்கிறது. இதற்கு விளக்கமே கிடைக்கவில்லை. காஞ்சிப் பெரியவர் சொல்வதன் அடிப்படையில் நான் சொல்வது குமரி என்பதும் க்மேர் என்பதும் குமேருவில் பிறந்த சொற்கள் என்பதே!

mount-meru
Meru in Kenya, East Africa

க்மேர் என்னும் இனம் கம்போடியாவில் ஆட்சி புரிந்தது — இன்றும் இருக்கிறது. அவர்கள் காம்போஜர்கள். அதை இப்பொழுது கம்போடியா என்போம். இந்த இனம் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஒரு காலத்தில் இருந்ததை வடமொழி புராண, இதிஹாசங்கள் மூலம் அறிகிறோம். அவர்கள் 1500 ஆண்டுகளுக்கு தென்கிழக்காசிய நாடுகள் முழுதும் இந்துப் பண்பாட்டைப் பின்பற்றினர். அவர்கள் குமரி வழியாகப் போனதன் நினைவாக க்மேர் என்ற பெயர் நிலைத்திருக்கலாம் .அகத்தியர் கடல் கடந்து இவர்களைக்கொண்டு சென்றதாலோ அல்லது அவர்களுக்கு நாகரீகத்தைக் கற்பித்ததாலோ இன்றுவரை அகத்தியர் சிலைகள் அந்த நாடுகள் முழுதும் இருப்பதையும் நாம் அறிவோம்.

காம்போஜர்கள் கட்டிய உலகப் புகழ்பெற்ற அங்கோர்வட் என்னும் இந்துக் கோவில் மேருமலை வடிவத்தில் அமைக்கப்படதையும் அதைத் தொடர்ந்து இந்தோநேசியாவில் போரொபுதூரில் மேருமலை வடிவத்தில் கோவில் கட்டப்பட்டதையும் உலக மக்கள் அறிவர். இத்தகையோர் க்மேர்– குமேர்—குமேரு – மேரு என்று பெயர் கொண்டதில் வியப்பதற்கு ஏதேனும் உண்டோ?

pameru
Pamir– Roof of the World

இனி சுமேரியாவைக் கண்போம். சு+மேரு என்பதன் பொருளும் யாருக்கும் தெரியவில்லை. அருகில் வசித்த அக்கடியர்கள் இவர்களை சுமேரம் என்று குறித்தனர். ஆனால் சுமேரியர்கள் யார்? அவர் மெசபொடோமியாவுக்கு வெளியே இருந்துவந்த வந்தேறு குடிமக்களா? என்று அறிஞர் உலகம் இன்றும் காரசாரமாக விவாதித்து வருவதாக லண்டன் பிரிட்டிஷ் மியூசியம் வெளியிட்ட “அண்மைக் கிழக்கு நாட்டு அகராதி” கூறும். அந்த நூலைப் பன்முறை படித்த நான் கூறுவது, “ சுமேரியர்கள் இந்தியாவின் ஏதோ ஒரு பகுதியில் இருந்து குடியேறியவர்களே என்பதாகும். அல்லது ஒரு பிரிவு மக்கள் இந்தியக் குடியேறிகளாக இருக்கலாம்.

சுமேரியர்களுக்கு சப்த ஸ்வரங்களைக் கற்பித்தவர்கள் அக்கடியர்கள் என்பதும் மற்ற எல்லா சங்கீத விஷயங்களையும் கற்பித்தவர்கள் ஹிட்டைட்ஸ் என்பதும், அந்த ஹிட்டைட்ஸ் என்பவர்கள் சம்ஸ்கிருத மொழியுடன் தொடர்புடைய மொழி பேசியோர் என்பதும் பிரிட்டிஷ் மியூசியம் வெளியிட்ட அகராதி தரும் தகவல் ஆகும். ஆகவே, நான் செய்த சொல் ஆராய்ச்சியில் தெரிவதும் அவர்கள் இந்தியத் தொடர்புடைய ஒரு பழங்குடி என்பதேயாகும். இன்ன பிற காரணங்களால் சுமேரியா என்பது சு+மேரு என்று கொள்வதே சாலப் பொருத்தம்.

maha-meru-yantra
Sri Chakra and Meru: Hindu Goddess Worship

இனி பாமீர் மலைத் தொடரைக் காண்போம். பாமேரு என்பதன் சிதைந்த வடிவே பா மீர் என்பதாகும். அராபிய, உருது மொழிகளில் மீர் என்னும் அடைமொழி காட்டும் பொருள்: உயர்ந்தவன், சிறந்தவன், மதிப்பு மிக்கவன். இதனால் முஸ்லீம் பெயர்களில் மீர் காசிம், மீர் முகமது முதலிய பல பெயர்களைக் காண்கிறோம். இந்த “மீர்” பெயர்களுக்குப் பின் வருவதும் உண்டு. ஆக உலகின் கூரை என்றழைக்கப்படும் மிக உயர்ந்த சிகரத்தை பா+மேரு என்று அழைத்ததில் வியப்பில்லை. பா என்னும் முன் ஒட்டுடன் பல வடமொழிச் சொற்கள் பயிலப்படுகின்றன. எ.கா. பாமதி.

ஆகவே குமேரு, சுமேரு, பாமேரு, மேரு என்பனவெல்லாம் நாம் உலகிகு வழங்கிய கொடையே. இமய மலையை பிற்காலத்தில் நாம் மேரு என்று சொன்னதும் வடதுருவச் சிறப்பால் அன்றோ! இந்து சமய தேவி உபாசனையில் ஸ்ரீசக்ரமும் அதன் மத்தியில் உயர்ந்து நிற்கும் மேருவும் போற்றப்படுவதும் இதனால் அன்றோ.

khmer new year
Khmer people celebrating New Year

“திருநெல்வேலி ஐயரின் வடதுருவ யாத்திரை” — என்ற கட்டுரையில் வடதுருவச் சிறப்பை விளக்கி இருக்கிறார். மேருவில் ஆறுமாதம் பகல், ஆறுமாதம் இரவு என்ற புராணக் குறிப்புகள் பற்றி அவர் விளக்குகிறார்.

-சுபம்–

contact swami_48@yahoo.com

இந்துக்களின் 18 பிரிவுகள் : பதினெண் கணங்கள்

Samudra manthan
சமுத்ர மந்தனம், பாங்காக், தாய்லாந்து

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1399; தேதி 9 நவம்பர், 2014.

வெளிநாட்டுக்காரர்கள் தங்கள் ஆட்சியை நிலைநாட்டவும் மதத்தைப் பரப்பவும் இந்தியாவுக்குள் நுழைந்தனர் —– பைபிளிலும் குரானிலும் செய்ய பயப்படும் ஆராய்ச்சிகளை, துணிந்து இந்துமத நூல்களில் மட்டும் செய்தனர் —– “இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்” என்ற பழமொழிக்கு இணங்க இந்துக்கள் என்னும் இளிச்சவாயன்களைக் கண்டனர். ரிக்வேதம் பற்றியும், சிவலிங்கம் பற்றியும் கைக்கு வந்த படியும் வாய்க்கு வந்தபடியும் எழுதித் தள்ளினர். “ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி: என்ற பழமொழியும், இந்துக்கள் விஷயத்தில் உண்மை ஆயிற்று—– அவர்கள் குனியக் குனியக் குட்டு வாங்கினார்கள். “இந்தியர்கள் எல்லாம் ஓரினம் அல்ல; அவர்கள் ஆரியர்கள், திராவிடர்கள், கிராடர்கள், முண்டாக்கள் என்னும் நான்கு பிரிவினர்” — என்று சொல்லி வெள்ளைக் காரர்கள், கதைத்தனர்; நகைத்தனர்.

பட்டத்துக்காகவும் பதவிக்காகவும் நம்மூர் அறிஞர்கள் “ஆமாம்சாமி” போட்டனர். இன்னும் சிலர், பிராமணர்களின் மேலாதிக்கததையும் அடாவடித்தனத்தையும் பொறுக்கமாட்டாமல் வெள்ளைக்கரன் சொன்னது உண்மையே என்று எண்ணி கட்சி துவக்கினர். இப்போது தூசிப் புயல் அடங்கி புதிய சிந்தனை மலர்ந்து வருகிறது.

“அட, வெள்ளைக்காரன் சொன்னது இருக்கட்டும். வெள்ளைகாரன் காட்டுமிராண்டியாகத் திரிந்த நாட்களுக்கு முன்னரே நம்மூர் தமிழ் ,வடமொழி இலக்கியங்கள், நாகரீகத்துடன் எழுதப்பட்டு விட்டனவே, அவை என்ன சொல்கின்றன?” என்று பார்ப்போம் என்று பார்க்கத் துவங்கிவிட்டனர்.

அரக்கர்கள், அசுரர்கள், இயக்கர்கள், தைத்யர், தானவர் அனைவரும் வானவர் புதல்வர். எல்லோரும் ரிஷி முனிவர்கள் வழி வந்தவர்கள் என்று நம் இலக்கியங்கள் பகர்வதைக் கண்டு கண் திறந்தனர்— விழிப்புற்றனர்.

பகச் சொல்லி கேளிர் பிரிக்கும் பாங்குடைய வெளி நாட்டுக்கார அறிஞர்கள் சொன்னதெல்லாம் பொய் என்று நகச் சொல்லத் துவங்கிவிட்டனர்.
devasura

ஆரியனுக்கு கூரிய, வீரிய, நேரிய, பாரிய, சீரிய மூக்கு, திராவிடனுக்கு போண்டா மூக்கு என்று வெள்ளைக்காரன் எழுதியதெல்லாம் இப்பொழுது குப்பைத் தொட்டியில் விழுந்து வருகின்றன. விழித் தெழுந்த தமிழன் கேட்கிறான்:–

விஷ்ணு என்பவன் கறுப்பன்
வியாசன் என்பவன் கறுப்பன்
இராமன் என்பவன் கறுப்பன்
கிருஷ்ணன் என்பவன் கறுப்பன்
அகத்தியன் என்பவன் கறுப்பன்
தீர்க்கதமஸ் என்பவன் கறுப்பன்
காளி என்பவள் கறுப்பாயீ
திரவுபதி என்பவள் கறுப்பாயீ
எல்லாம் ஒரே கறுப்பு மயம்!!

எங்கள் ஊர் திராவிடக் கழக சட்டைகளில் கூட இவ்வளவு கறுப்பு கண்டதில்லை. இந்துக்கள் என்றாலே கறுப்பண சாமி மதம் என்று சொல்லிவிடலாம் போல இருக்கிறதே என்று திருப்பித் தாக்கத் துவங்கி விட்டனர். போண்டா மூக்கு அகத்தியனுடன் படுக்க வரமட்டேன் என்று லோபாமுத்திரை போட்ட கண்டிஷன் ( நிபந்தனை ) எல்லோருக்கும் தெரியும். மஹா அசிங்கமான உடலுடைய கறுப்பு வியாசனைக் கண்ட பெண்களுக்கு பிறந்த அங்கஹீன திருதராஷ்ட்ரன், பாண்டு கதையும் நம்க்குத் தெரியும். அகத்தியனும், வியாசனும் அவ்வளவு கறுப்பு, அவ்வளவு அவலட்சணம். ஆனால் நாம் வணங்கும் கடவுளர் – மாமுனிவர்கள் அவர்களே!

18 குடி மக்களை துவாரகையில் இருந்து அழைத்து வந்து தமிழுக்கு இலக்கணம் செய்தவன் அகத்தியன் ((தொல்காப்பியம், புறம் 201 நச்சி. உரை , புறம். கடவுள் வாழ்த்து காண்க)). “ தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தவன்” – என்று கம்பனால் புகழப்பட்டான். தென் கிழக்காசிய நாடுகள் அனைத்துக்கும் தமிழனைக் கடல் கடந்து அழைத்துச் சென்றவன் அகத்தியன். வியாசரோ உலக மகா சாதனை செய்தார். கங்கு கரை காண முடியாத வேதங்களைப் பகுத்தார். பல லட்சம் பாக்களைக் கொண்ட புராணங்களைத் தொகுத்தார். உலகிலேயே மிக நீண்ட மதப் புத்தகமான மஹாபரதத்தை எழுதிச் சலித்தார்; ஒரு சவாலும் விட்டார். இதில் இல்லாத பொருள் உலகில் இல்லை என்றார். இன்று வரை அது முற்றிலும் உண்மை.

churning3

இந்து மஹா ஜனங்களோவெனில் விழித்தெழுந்து நேற்று கூட அமெரிக்க பெண்மணி வெண்டி டோனேகர் எழுதிய அவதூறு புத்தகததை பெங்குவின் நிறுவனத்தினரை வாபஸ் வாங்க வைத்துவீட்டனர். இந்துக்கள் விழித்தெழுந்ததைக் கண்ட பெங்குவின் புத்தக நிறுவனம் இப்பொழுது நடு நடுங்குகிறது. இவர்களும் மாற்று மதத்தினர் போல பொங்கி எழுந்து நமது உடைமைகளைத் தீக்கிரையாக்கிவிடுவர் என்று அஞ்சி நடுங்குகின்றனர்.

மஹாமாயா என்பவள் மகமாயீ
காத்யாயனி என்பவள் காத்தாயீ
மூகாம்பிகை என்பவள் மூக்காயீ
ராகா தேவி என்பவள் ராக்காயீ

அடப் பாவி மகனே!! எங்களிடம் பொய் சொல்லி இவை எல்லாம் திராவிட தெய்வம்,தமிழர்களின் கிராமீய தெய்வங்கள், வெள்ளைத்தோல் ஆரியன் வணங்குவதெலாம் வேறு தெய்வம் என்று சொன்னாயே என்று “அது”களைக் கேள்வி கேட்கத் துவங்கி விட்டனர் இந்துக்கள்.

வேத நூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பளோ பாரத தேவி!!

மாட்சி தீர் மிலேச்சர் மனப்படி ஆளும்
ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் அல்லன்

என்ற பாரதி வாக்குப்படி இந்துக்களும் சீறி எழத் துவங்கிவிட்டனர்.

வெள்ளைத் தோல் வெளி நாட்டினன் வந்து ஆரிய—திராவிட விஷ விதை தூவுவதற்கு முன், புற நானூற்றில் (கடவுள் வாழ்த்து மற்றும் புறம் 201), இன்ன பிற சங்க இலக்கிய நூல்கள் ஆகியவற்றிலும் ராமாயண மஹா பாரத நூல்களிலும் என்னதான் சொல்லி இருக்கிறது என்று பார்த்தால் அங்கு ஆரிய திராவிட என்னும் சொற்கள் இனத் துவேஷ பொருளில் எங்கேயுமே காணோம்.
பாரதி என்னும் தூய தமிழ்ப் புலவன் – சொற்தேரின் சாரதி —தனது பாடல்களில் நூற்றுக் கணக்கான இடங்களில் “ஆரிய” என்ற சொல்லை எந்த நற்பொருளில் பயன் படுத்தினானோ அதே பொருளில்தான் புற நானூற்றுப் பதிற்றுபத்துப் புலவர்களும் பயன்படுத்தினர் எனக் கண்டு மகிழ்ந்தனர் தமிழர்கள்.
நம்முடைய இதிஹாச, புராண செந்தமிழ் பைந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் செப்புவது யாதெனின், லோகவாசிகள் 18 கணத்தினர்.

ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி (தமிழ் கலைக் களஞ்சியம்) தரும் பட்டியல்:

அமரர்
சித்தர்
அசுரர்
தைத்தியர்
கருடர்
கின்னரர்
நிருதர்
கிம்புருடர்
கந்தர்வர்
இயக்கர் (யக்ஷர்)
விஞ்ஞையர் (வித்யாதரர்)
பூதர்
பைசாசர்
அந்தரர்
முனிவர்
உரகர்
ஆகாயவாசியர்
போகபூமியர் — (பிங்கலம்)

இந்த பிங்கலந்தை நிகண்டு கூறும் செய்தி பல பொருள் உடைத்து. சிலர் பூலோக வாசிகள்; சிலர் மேல் லோக வாசிகள். சிலர் காற்றில் சஞ்சரிப்போர். அவர்களை திரிகூட ராசப்ப கவிராயர், திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகள் போன்றோர் வானில் கண்டு அழகுபட தெள்ளு தமிழில் அள்ளித் தெளித்திருக்கின்றனர்.

Assurbanipal_op_jacht
அஸீரிய மன்னன் அசுர பானிபால்

வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பர்
கமன சித்தர் வந்து வந்து காய சித்தி விளைப்பார்
தேன் அருவி திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக் காலும் தேர்க் காலும் வழுகும்
கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே

சித்தர்கள் ஆகாய மார்க்கமாக வந்து அருள் புரிவர். இதுபோல பல விஷயங்கள் 18 கணங்களில் உள.
18 கணங்களையும் பொதுவான குழுக்களாகவும் பிரிப்பர்:
1.அமரர், சித்தர், கிம்புருடர், கந்தர்வர், விஞ்ஞையர் (வித்யாதரர்), ஆகாயவாசியர், போகபூமியர் , முனிவர், கின்னரர்
2.இயக்கர் (யக்ஷர்), நாகர்( உரகர்), கருடர்
3.அசுரர், தைத்தியர், பூதர், பசாசர், நிருதர் (ராக்ஷசர்)
இந்தப் பட்டியல் சில மாறுதல்களுடன் ஏனைய நூல்களில் இடம்பெறும்.

எனது முந்தைய கட்டுரைகளில் மேல் விவரம் காண்க.
எனது முந்தைய கட்டுரைகள்:
அரக்கர்கள்,அசுரர்கள் யார்? (நவம்பர் 7, 2014)
அசுரர்கள், அரக்கர்கள் அகராதி (அக்டோபர் 23, 2014)
திராவிடர்கள் யார்?
அகத்தியரை நியூசிலாந்து மக்கள் வணங்குவது ஏன்?

இந்தியாவில் இருந்து அசீரீயா, பாரசீகம் (ஈரான்) முதலிய நாடுகளுக்குச் சென்ற வேத கால இந்துக்களில் ஒரு பிரிவினர் தங்களை அசுரர் என்று அழைத்துக் கொண்டனர். ரிக்வேதத்தில் இந்திரன், அக்னி, வருணன் என்போர் அசுரன் என்று போற்றப்படுகின்றனர். பிற்காலத்தில் பாரசீகம் சென்ற கோஷ்டியால் இப்பெயர் பொலிவிழந்தது. அவர்கள் வருணன் போன்ற வேத கால தெய்வங்களை அசுரன் என்று போற்றினர். சௌராஸ்ட்ரத்தில் (குஜராத்) இருந்து சென்ற சௌரஷ்ட்ரர் (ஜொராஷ்ட்ரர்) என்ற பெயரில் ஒரு மதமும் துவங்கினர். அஸீரிய மன்னர்கள் அசுர என்ற பெயரை தங்கள் பட்டங்களில் சேர்த்துக் கொண்டனர்.

–சுபம்–

மணமகளே, மணமகளே வா,வா! உன் வலது காலை எடுத்துவைத்து வா வா!!

Griha-Pravesh
Hindu Bride entering the house with her right foot stepping first

மணமகளே, மணமகளே வா,வா! உன் வலது காலை எடுத்துவைத்து வா வா!!

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1397; தேதி 8 நவம்பர், 2014.

தமிழ்நாட்டில் திருமணப் பந்தல்களில் அடிக்கடி ஒலிக்கும் தமிழ் திரைப்படப் பாடல் “மணமகளே, மணமகளே வா வா! உன் வலது காலை எடுத்து வைத்து வா வா!!” — ஏன் வலது காலை எடுத்து வைக்க வேண்டும். இடது கால் கூடாதா?

உலகம் முழுதும் வலதுசாரிகளுக்கு கொஞ்சம் மதிப்பு அதிகம். இந்தக் கொள்கையை உலகம் முழ்ழுதும் பரப்பியோர் இந்துகளாகத்தான் இருக்க வேண்டும் என்பது கீழ்கண்ட விஷயங்களால் தெரிகிறது:

1.கடிகாரம் ஏன் வலமாகச் சுற்றுகிறது? இந்துக்கள் ஏன் கோவிலை வலமாகச் சுற்றுகிறார்கள்? இரண்டையும் ஒப்பிட்டால் நாமே கடிகாரத்தை வலமாகச் சுற்றவைத்தவர்கள் என்றும் தோன்றுகிறது. இந்துக்கள் எந்த சுப காரியத்தையும் வலப் பக்கமாகவே செய்வர்.

2.இடது கையை — சுத்தம் செய்யப் பயன்படுத்துவதால் மட்டும் வலது கைக்குப் பெருமை என்று எண்ணி விடக்கூடாது. சிலர் பிறப்பிலேயே இடது கையை அதிகமாகப் பயன்படுத்துவர். இப்படிப்பட்ட இடது கைக் காரர்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டனர். இடது கையரைவிட வலது கைக்காரர்கள் ஒன்பது ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ்கிறார்கள். சர்வே, புள்ளி விவரம் எதுவும் நடத்தாமலேயே இந்துக்களுக்கு அந்தக் காலத்திலேயே இந்த விஞ்ஞான உண்மை தெரிந்திருக்கிறது.

right foot
Hindu Griha Pravesh Ceremony

3.இந்துக்கள் வீட்டில் யாராவது இடது கைப்பழக்கத்தோடு பிறந்து விட்டால் அவர்களை அதட்டி மிரட்டி வலது கைக்காரர்களாக மாற்றி விடுவர். வலது காலை எடுத்து வைத்துதான் கல்யாணப் பெண் வீட்டுக்குள் வரவேண்டும். கிரஹப் ப்ரவேசம், பூஜைகள் எல்லாவற்றிலும் எதையும் வலது புறமகவே செய்ய வேண்டும்

4.பிராமணச் சிறுவர்கள் செய்யும் சமிதாதானம், எல்லோரும் செய்யும் சந்தியா வந்தனம் ஆகியவற்றிலும் வலது கைப்புறமாகவே முத்திரைகள், பொட்டு வைக்கத் துவங்குவர்.

5.தமிழன் கண்ட அதிசயம்
சங்க இலக்கியத்தில் அடிக்கடி ஒரு உவமை வரும். அதாவது புலியால் தாக்கப்பட்ட மிருகம் வலப் பக்கம் விழுந்தால்தான் புலி சாப்பிடுமாம். இதை பத்துப் பதினைந்து புலவர்கள் பாடி விட்டார்கள்! ஆக மணப் பெண்ணை வலது காலை வைக்கச் சொன்ன தமிழன், காடுகளில் புலியையும் கவனித்திருக்கிறான் (காண்க புறம். 190, அகம் 238, 252).

6.இந்துக்கள் கோவில்களுக்குப் போனாலும், உணவகங்களுக்குப் போனாலும் வலது கையை மட்டுமே பயன்படுத்துவர். அதே போல சாது சந்யாசிகளும், கோவில் குருக்களும் கூட வலது கை மூலம் மட்டுமே எல்லாம் செய்வர்.

7.ஒரே ஒரு இடத்தில் மட்டுமே – மயானத்தில் மட்டுமே—சடலத்தை வலம் வராமல் – இடமாக வருவர். இதே போல பிராமணர்கள் தர்ப்பணம் செய்கையில் இடது தோளின் மீதிருக்கும் பூணூலை வலது தோளில் மாற்றி (அதாவது பூணூல் இடப்பக்கமாக சரியும்படி) நீர்க்கடன் செலுத்துவர். இந்துக்கள் செய்யும் பூஜைகளில் பெண்கள் எப்போதும் வலப்பகம் நிற்க வேண்டும்.

entering-the-new-house

8. இன்னும் ஒரு இடம் இறைவனே தனது இடப்பக்கத்தை உமை அம்மைக்குக் கொடுத்ததாகும். அர்த்த நாரீஸ்வரன் கதைதான் பைபிளில் ஆதாம்—ஏவாள் கதையாக வந்தது. இடப்பக்க எலும்பை உடைத்து பெண்ணை உருவாக்கினான் இறைவன். சம்ஸ்கிருதத்தில் பெண்ணுக்கு வாமா (இடது) என்ற பெயரும் உண்டு. (காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் சொற்பொழிவில், வேதத்தில் உள்ள ஒரு கதைதான் இது என்பார். ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் இருந்தன. ஒரு பறவை பழம் சாப்பிடாமல் ஆனந்தமாக இருந்தது மற்றொன்று பழத்தைச் சாப்பிட்டது என்பது வேதக் கதை–. இதுவே ஆடம் எனபவர் ஆப்பிள் சாப்பிட்டகதையாக வந்தது. ஆத்மா என்பது ஆதாம் என்றும் ஈவ் என்பது ஜீவ்+ஆத்மா= ஜீவாத்மா என்றும் மாறியது.)

9.கிரேக்க கவிஞர் ஹோமர் எழுதிய ஆடிஸியில் பல இடங்களில் வலது பக்கப் பெருமையை எழுதி இருக்கிறார். ஒரு கருடன் வலப் பக்கமாகப் பறந்தவுடன் கடவுளே நல்ல சகுனம் காட்டிவிட்டார் என்று பாடுகிறார். இது போலப் பல இடங்களில் வலது என்பது அதிர்ஷ்டம் என்று எழுதுகிறார்.

left-right-handedness-dominance

வலப் பக்கம் இலை வந்தால், கணவர் நல்லவர்!

10.இங்கிலாந்தில் ஒரு குறிப்பிட்ட செடியை பூஞ்சட்டியில் வைத்துப் பெண்கள் தொங்க விடுவர் என்றும் அதன் இலைகள் வலப் பக்கம் திரும்பினால் கணவர் நல்லவர் என்றும், இலைகள் இடது பக்கம் திரும்பினால் கணவன் மற்ற பெண்களுடன் தொடர்பு கொண்டவன் என்றும் நம்பினர். இந்தச் செடிக்கு “மிட் சம்மர் மென்” என்று பெயர். ஆக ஐரோப்பவிலும் இந்த நம்பிக்கை இருந்தது தெரிகிறது.

11. வால்மீ கிராமாயண யுத்த காண்டத்தில் ராமன் சொல்கிறான்: இதோ எனது வலது கண் துடிக்கிறது. நான் யுத்தத்தில் வெற்றி பெறுவேன் என்கிறார். ஆண்களுக்கு வலது கண் துடித்தால் அதிர்ஷ்டம். பெண்களுக்கு வலது கண் துடித்தால் கெட்டது. உத்தர காண்டத்தில் சீதை புலம்புகிறாள்: என் வலது கண் துடிக்கிறது சகுனங்கள் சரியில்லை. எனக்கு தீங்கு நடக்கப்போகிறது”. அவள் சொன்னது சரிதன் — இதற்குப்பின், அவளை ராமன் காட்டிற்கு அனுப்பிவிட்டான்.

இதிலும் விஞ்ஞான உண்மை இருக்கலாம். பெண்களுக்கு வலப் பக்க மூளையும் ஆண்களுக்கு இடப்பக்க மூளையும் பலம் வாய்ந்தவை என்பது மருத்துவ அறிவியல் காட்டும் உண்மை. ஆனால் வலது மூளை உடலின் இடது பக்கத்தையும் இடது மூளை உடலின் வலது பக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது என்பதையும் மருத்துவ நூல் கூறுகிறது. ஆகவே வால்மீகி ராமயணம் சொல்வது உண்மையே.

12.இதே போல ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும், லத்தின் மொழியிலும் வலதைப் பாராட்டியும் இடது புறத்தை இகழ்ந்தும் பல பல மரபுத் தொடர்கள் உள்ளன ( எனது ஆங்கிலக் கட்டுரையில் முழு விவரங்களும் உள்ளன.)

13.இந்துக்கள் கிழக்கு நோக்கி நின்று பூஜை செய்வர். பிறகு வலது பக்கம் திரும்புவர். அது தெற்கு திசை — தட்சிண திசை. ஆகையால் இப்படி வலப்பக்கம் செல்வது ப்ர+தக்ஷிணம் எனப்படும்.

traditional_banana_leaf_meal
You have to use only right hand for eating

நீங்கள் இடதா? வலதா?

14.வாமாசாரம் என்பது இந்துக்களில் ஒரு வழிபடும் முறை. இதற்கு இடது புற முறை என்று பெயர். அவர்களுக்கு ஐந்து “ம” முக்கியம். அதாவது மது, மாது, மத்ஸ்யம் (மச்சம்=மீன்), முத்ரா (முத்திரைகள்), மைத்துனம் (செக்ஸ்) என்பன ஆகும். ஆகையால் இது கெட்ட பெயர் எடுத்தது . ஏனெனில், இந்த வழியும் கடவுளை நோக்கி அழைத்துச் செல்லுமானாலும், பாதியில் வழுக்கி விழும் வாய்ப்புகள் அதிகம்.

book on left

15.முடிவுரை:–

1.கிரேக்க, லத்தீன், பிரெஞ்சு, ஆங்கில மொழிகளில் உள்ள சொற்றொடர்கள் உலகம் முழுதும் இந்த வழக்கம் இரூப்பதைக் காட்டினாலும் இந்து மத நூல்களில் ஏராளமான குறிப்புகள் இருப்பதாலும் இன்று வரை நாம் மட்டுமே இதைப் பயன்படுத்துவதாலும் நாமே இதைத் துவக்கியவர்கள் என்று சொல்லலாம்.
2.வலது கால், வலது கை ஆகியவற்றின் பெருமைதனைக் கூறும் சொற்றொடர்கள் ஐரோப்பிய மொழிகளில் இருப்பதும் கருடன் பற்றிய குறிப்புகள் இருப்பதும் நம்முடைய தொடர்பைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.

3.வலம்புரிச் சங்கு போன்ற புனிதப் பொருட்களும் வலதின் மகிமையை உணர்த்தும்

left_verse_right_brain

contact swami_48@yahoo.com

அரக்கர்கள்,அசுரர்கள் யார்?

mask-dance,bhutan
Mask dance in the Himalayan kingdom Bhutan

Research paper written by London Swaminathan
Research article No.1395; Dated 7th November 2014

முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா? முடியும்!!
எங்கே? இந்துக்கள் எங்கெங்கே வசிக்கிறார்களோ அங்கே!!!!
அது என்ன கதை? என்று கேட்கிறீர்களா?

ஆரியர்கள் தேவர்களாம்; திராவிடர்கள் அரக்கர்களாம்; ராக்ஷசர்களாம். இப்படி ஒரு கட்டுக்கதையை எட்டுக்கட்டினான் வெளிநாட்டு “அறிஞன்”. அதை இந்துக்கள், அதிலும் குறிப்பாக தமிழ் இந்துக்கள் நம்பிவிட்டார்கள்

நமது வேத இதிஹாச புராணங்களில் ஆரிய என்ற வார்த்தை உள்ளது. திராவிட என்னும் சொல் வேத காலத்துக்கு மிகவும் பின்னால் காணப்படுகிறது. அந்த இரண்டு சொற்களும் இப்போது பயன்படுத்தப்படும் இனம் என்னும் பொருளில் பயனபடுத்தப் படவில்லை. பல லட்சம் பாடல்கள், துதிகள் கொண்ட இந்து மதக் கடலில் இருந்து இங்கொன்றும் அங்கொன்றுமாக ஸ்லோகங்களைத் தெரிவு செய்து ஆங்கிலத்தில் தவறாக எழுதியதால் பலரும் நம்பிவிட்டனர்.

masks

இதோ சில உண்மைகள்:—-

1.புராண, இதிஹாசங்களில் வரும் ராக்ஷசர்கள் –( அரக்கர்), அசுரர்கள், தானவர்கள், தைத்யர்கள் ஆகிய அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் புதல்வர்கள் என்று நமது நூல்கள் தெள்ளத் தெளிவாக இயம்புகின்றன.

2.ராக்ஷச ராவணன் முதல் சிவனை ஓட ஓட விரட்டிய பஸ்மாசுரன் வரை அனைவருக்கும் வரம் கொடுத்தவர்கள் பிரம்மா, விஷ்ணு, சிவ பெருமான் தான். இவர்கள் நம்மவர்களாக இல்லாவிடில் அவர்கள் வரம் கொடுத்ததாக ஆயிரக் கணக்கான கதைகள் தோன்றி இருக்குமா?

3. தைத்யர்கள் யார்?
அசுரர், அரக்கர், தைத்யர், தானவர் ஆகியோரின் தந்தையர் பிரஜாபதி அல்லது அவரது புதல்வரான காஷ்யபர் என்றும் தாயார் தீதி என்றுமே நம் புராணங்கள் பகரும். ராவணன் என்பான் புலஸ்த்யர் என்னும் பிராமண ரிஷியின் பேரன். அவருடைய புதல்வர் விஸ்ரவசுக்கும் ராக்ஷச குலப் பெண் நிகஷாவுக்கும் பிறந்தவர். ராவணனின் மனைவியான மண்டோதரி யை மஹா உத்தமியாக எல்லா ராமாயணங்களும் சித்தரிக்கின்றன. அவர் மயன் என்னும் அசுரனின் மகள்.

அவளையும் மற்ற அசுரர்களையும் இந்துக்கள் தினமும் காலையில் வணங்கித்தான் மற்ற காரியங்களைச் செய்வர் ( பிராதஸ்மரணம் என்னும் பிரார்த்தனையில் மண்டோதரி, தாரா, பலி, விபீஷணன் முதலியோரை இந்துக்கள் வணங்குகின்றனர். எனது பாட்டி, அம்மா ஆகியோர் குளிக்கும் போதும், சில நேரங்களில் சமைக்கும் போதும் இந்த ஸ்லோகங்களை சொல்லுவர். ஆர். எஸ்.எஸ்.காரர்கள் நடத்தும் ஷாகாக்களில் இன்றும் பல லட்சம் பேர் இதை அனுதினமும் சொல்கிறார்கள்.

இதே போல இந்திரன் ,அக்னி, வருணன் ஆகியோரை ரிக் வேதத்தின் மிகப் பழைய பகுதி அசுரன் என்றே பாராட்டி வருணிக்கிறது. குஜராத்தில் உள்ள சௌராஷ்டிரா பகுதியைச் சேர்ந்த ஒருவர், கோபித்துக் கொண்டு வேதக் கட்சியைப் பிளந்தார். பின்னர் பாரசீக (ஈரான்) நாட்டுக்கு ஓடிப்போனார். அவரை சௌராஷ்ட்ரர் (ஜொராஷ்ட்ரர்) என்பர். நம் ஊரில் தி.க. என்னும் கட்சி—— சுக்கு நூறாக உடைந்தவுடன் ஒவ்வொரு பிரிவும் ஒரு தலைவரைப் பாராட்டுவதையும் மற்றவரை இகழ்வதையும் பார்க்கிறோம். இதே போல வேதக் கட்சியை உடைத்த சௌராஷ்ட்ரார் இந்திரனைப் பாரட்டாமல் வருணனே மிக உயர்ந்த தெய்வம் என்பார். தேவர்கள் என்பவரைத் தீயோராகவும் அசுரர்கள் என்போரை நல்லவர்களாகவும் சித்தரிப்பார். அசல் தமிழ் “பாலிடிக்ஸ்!!! எடுத்துக்காட்டாக எம்.ஜி.ஆரை ஒரு கட்சி பாராட்டுவதையும் இன்னொரு கட்சி கிண்டல் செய்து சொற்பொழி வாற்றுவதையும் இன்றும் காணலாம். அப்படி ஓடிப்போன சௌராஷ்டிரர் சிஷ்யர்கள், ஈரானை முஸ்லீம்கள் பிடித்துக் கொடுமைப் படுத்தியவுடன் தாய்நாட்டுக்கே – அதே குஜராத்துக்கே – திரும்பி வந்தனர். இந்தியாவின் மிக உயர்ந்த அணுசக்தி விஞ்ஞானிகள், பெரும் தொழில் அதிபர்கள் இந்த வம்சத்தினரே!

அசுரர்கள் நம்மவர்கள் இல்லாவிடில் இன்றும் பல கோடி இந்துக்கள் அவர்களை வணங்குவார்களா?

Bhutan masked dancers  4

4.தானவர்கள் யார்?
தக்ஷப் பிரஜாபதியின் மகளான தனுவுக்கும் காஷ்யபருக்கும் பிறந்தவர்கள் தானவர்கள். இவர்களில் ஹயக்ரீவர், புலோமர், சம்பரன், வைஸ்வானர, விப்ராச்சி, விரூபாக்ஷ, விருஷபர்வா கதைகள் புராணங்களில் காணக் கிடக்கின்றன. இவர்கள் எல்லோர் பெயர்களும் சம்ஸ்கிருதத்தில்தான் உள்ளன!!!

5.த, த, த — கதை (பிப்ரவரி 19, 2014-ல் நான் எழுதிய கதையின் பகுதி)–ஐ.நா. சபையில் திருமதி எம்.எஸ். பாடுவதற்காக காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் எழுதிய பாடலில் வரும் “தாம்யத – தத்த – தயத்வம்” என்ற சொற்றொடர் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் வருவதாகும். அது குறித்த கதை:

ஒரு சமயம் தேவர்கள், மானுடர்கள், அசுரர்கள் ஆகிய மூன்று இனத்தாரும் ப்ரஜாபதி (ப்ரஹ்மா) யிடம் உபதேசம் வேண்டினர். அவர் தமது உபதேசத்தை த-த-த என்ற இடியின் ஒலியாகக் கூறி அருளினார். ‘த ‘ என்பதை தேவர்கள், ‘தாம்யத’ எனப் பொருள் கொண்டனர். அப்பதத்துக்குப் ‘புலன்களைக் கட்டுப்படுத்துங்கள்’ என்று அர்த்தம். மானுடரோ ‘த’ என்பதை ‘தத்த’ எனப் பொருள் கொண்டனர். ‘தத்த’ என்பதற்கு ஈகை உடையவர் ஆக இருங்கள் என அர்த்தம். அசுரர்கள் ‘த’ என்பதை ‘தயத்வம்’ – அதாவது, தயையுடன் இருங்கள் – எனப்பொருள் கொண்டனர். ஆதிசங்கரர் இதற்கு உரை எழுதுகையில், மானுடரிலேயே தெய்விக குணமும், அசுர குணமும் உடையவர்கள் இருப்பதால் இம்மூன்று உபதேசங்களுமே மானுடர்களுக்கானவை எனத் தெளிவு செய்துள்ளார்.

இந்தக்கதை வரும் பிருஹத் ஆரண்யக (பெரிய காடு) உபநிஷத்தை வெள்ளைக்காரர் கூட கி.மு. 800 என்று தேதி குறித்துள்ளனர். இதில் அசுரர்களும் சம உரிமையுடம் பிரஜாபதியை அணுகியதும், அவர்களுக்கு ஏற்ற உபதேசத்தை அவர் அருளியதும் சமத்துவத்தைக் காட்டுகிறது. அசுரகளும் பிரஜாபதியிடம்தான் உபதேசம் பெறச் சென்றதும் அவர்களுக்கும் பிராமணரான சுக்ராச்சாரியார்தான் குரு என்பதும் ஈண்டு நோக்கத்தக்கது.

ஆனால் வெளிநாட்டுக்காரன் ஆங்கிலத்தில் என்ன எழுதினான்? இவர்கள் பழங்குடிமக்கள், ஆரியர்களால் விரட்டப்பட்ட திராவிடர்கள் என்று பொய்க் கதை கட்டி, திராவிடர்களை கோழைகளாகவும், முட்டாள்களாகவும் சித்தரித்தான்.
Jaws_
Jaws Villain in James Bod film

இன்று நம்மிடையேயும் அரக்கர், அசுரர், தைத்யர், தானவர் எல்லோரும் வாழ்வதைக் காண்கிறோம். அவர்கள் கோர்ட்டுகளில் குற்றவாளிக் கூண்டுகளில் நிறுத்தப்பட்டு சிறைத் தண்டனை பெறுவதையும் பார்க்கிறோம். விடுதலையான பின்னர் பலர் அதே குற்றத்தை மீண்டும் செய்து மீண்டும் சிறை செல்வதையும், சிலர் நல்லவர்களாகத் திருந்தி பெரிய பதவிகளை அடைவதையும் காண்கிறோம். இது போலவே அந்தக் காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதி முறைகளை எதிர்த்தவர்கள், மீறியவர்கள், மற்றவர்கள் சுதந்திரத்தில் அல்லது உடைமைகளில் கை வைத்தவர்கள் முதலியோர் அரக்கர், அசுரர் எனப்பட்டனர். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் திரைப்படத்தில் கொடுமை செய்யும் வில்லன்களாக வரும் அனைவரும் அரக்கர்களைப் போன்றவர்களே!

அமரகோசம் என்னும் உலகின் முதல் அகராதி–நிகண்டு ராக்ஷசர்கள் என்பதற்கு 15 சம்ஸ்கிருத்ச் சொற்களைத் தருகிறது. இதில் எல்லாவற்றிலும், பச்சையாக மாமிசம் (சமைக்காமல்) சாப்பிடுவோர், நர மாமிசம் உண்ணுவோர், ரத்தம் குடிப்போர், இரவு நேரத்தில் சஞ்சரிப்போர், பயங்கரவாதிகள், மாயத் தோற்றம் உள்ளோர் என்றெல்லாம் வருணித்துள்ளனர்.

dracula
Bllod sucking Dracula

இதன் முழு விவரம் வேண்டுவோர் இதே தலைப்பில் வெளியான எனது ஆங்கிலக் கட்டுரையில் (எண் 1381 அக்டோபர் 31, 2014) காண்க.

வால்மீகி ராமாயணத்தில் அனுமன் கண்ட ராக்ஷசர்கள் பல்வேறு கோர உருவத்தில் இருந்ததாக எழுதப்பட்டுள்ளது. பொதுவாக குற்றம் செய்வோர் மற்றவர்களை பயமுறுத்தவும், தனது அடையாளம் தெரியாமல் இருப்பதற்காகவும் வேறு வேஷம் போடுவதை இன்றும் பத்திரிக்கைகளில் படிக்கிறோம். நாங்கள் வாழும் லண்டன் மாநகரத்தில் தலைக்கு ஹூட் (முட்டாக்கு) போட்டுக்கொண்டு யாரும் கடைகளுக்குள் வரக்கூடாது என்று சட்டமே போட்டுவிட்டனர். ஏனெனில் கடைகளில் திருட வருபவர்களும் வங்கிகளைக் கொள்ளையடிக்க வந்தோரும் இப்படி தனது அடையாளத்தை மறைத்து வந்தனர்.

இதேபோல திருட்டுத் தனம் செய்யும் ராக்ஷசர்கள் எப்போதும் இரவு நேரத்தில் அட்டூழியம் செய்ததால் அவர்களுக்கு “இரவில் உலவுவோர்” என்றும் வடமொழியில் ஒரு பெயர் உண்டு. ஆக இராக்கதர்கள் குதிரை போலவும், யானை போலவும் உருவம் உடையோர் என்று எழுதி இருப்பதெல்லாம் அவர்கள் முகத்தில் வரைந்த சித்திரங்கள் அல்லது போட்டு வந்த முகமூடிகளையே குறிக்கும் என்க.

Kummatti-Kali-Onam-Dance
Masks in Kerala

இலங்கையில் இன்றும் கூட முகமூடி நடனம் உண்டு. பூதஸ்தான் என்னும் நாட்டில் (இமயமலையில் உள்ள பூட்டான்) இப்போதும் திருவிழாக்களில் முகமூடி டான்ஸ் உண்டு. இது நமது திருவிழாக்களில் சிலர் அனுமன், கருடன், அரக்கன் போல வேஷம் போட்டுக்கொண்டு ஊர்வலத்தில் வருவது போன்றதாகும். இன்றும் கூட முகமூடி போட்டு ஆடும் வழக்கம் கேரளத்தில் கதகளி, கர்நாடகத்தில் யக்ஷகானம் முதலியவற்றில் உள்ளன. ஆக அரக்கர்களின் கோர உருவம் அவர்களின் உடலில் இல்லை. வேஷத்திலும் மன விஹாரங்களிலும் இருந்தது என்பதே பொருந்தும்.

மாற்றான் மனைவி மீது கை வைத்த இராவணனை சொந்தம் கொண்டாடுவோரும் அரக்க வம்சத்தினரே என்பது அவர்கள் ஆதரிக்கும் கொள்கையில் இருந்து தெற்றென விளங்கும். இதற்குப் பின்னும் விளங்கிக் கொள்ளாதவர்கள் “விளங்காதவர்களே!” என்பதை வருத்தத்துடன் சொல்லவேண்டி இருக்கிறது.
எல்லோரும் இன்புற்று இருப்பது அன்றி யாது ஒன்றும் அறியேன் பராபரமே—தாயுமானவர்.
லோகாஸ் சமஸ்தோ சுகினோ பவந்து – வேத இலக்கியம்.

–சுபம்—

பதிற்றுப்பத்து ரகசியங்கள்!

cheran-senguttuvan
Cheran Senguttuvan in procession with Kannaki statue

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1391; தேதி 5 நவம்பர், 2014.

சங்க இலக்கியத்தில் 18 மேல் கணக்கு நூல்கள் உள்ளன. இதற்குப் பின்னர் சங்கம் மருவிய காலத்தில் எழுந்த திருக்குறள் உள்ளிட்ட 18 கீழ்க் கணக்கு நூல்கள் உள்ளன. இந்த 36 நூல்களைத் தவிர ஐம்பெருங் காப்பியங்கள் உள்ளன. இவற்றைப் படித்து முடிக்கவே பல ஆண்டுகள் ஆகும். இது தவிர தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம், திருமந்திரம், கம்பராமாயணம் என்பன கடல் போல் பெருகும்.

இவைகளை எல்லாம் படிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றால் நிங்கள் அதமர். இவைகளை எல்லாம் படிக்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் வந்தால் நீங்கள் மத்யமர். இவைகளைப் படிக்கத் துவங்கி விட்டாலோ நீங்கள் உத்தமர்.

இவைகளோடு சம்ஸ்கிருதம் என்னும் பெருங் கடல் – மஹா சமுத்திரம் – மொழியில் உள்ள நூல்களைப் படிக்கத் துவங்கி விட்டாலோ மஹா அறிவாளி— பேரறிஞர் –ஞானி ஆகிவிடுவீர்கள். நிற்க.

இவற்றில் மேல் கணக்கு நூல்களில் பத்துப் பாட்டு, எட்டுத்தொகை என்ற இரண்டு தொகுப்புகளில் உள்ள 18 நூல்களும் பழம் தமிழகத்தை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. எட்டுத் தொகையில் ஒரு நூல்தான் பதிற்றுப்பத்து.— பதிற்றுப்பத்தில் நூறு பாடல்கள் இருக்கவேண்டும் ஆனால் நமக்கு முதல் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்காததால் 80 பாடல்களே உள்ளன. இவை அனைத்தும் சேர மன்னர்கள் பற்றியவை.

map-sangam-1
Location of Chera Nadu in South India

இனி பதிற்றுப்பத்தில் உள்ள சில அதிசயச் செய்திகளை மட்டும் காண்போம்:

1.புறநானூற்றில் பாடல் இரண்டில், அந்தாதி இலக்கியத்துக்கான அறிகுறி தென்படுகிறது. ஆயினும் தமிழில் முதல் அந்தாதிப் பாடல் பதிற்றுப்பத்தில் நான்காம் பத்தில்தான் இருக்கிறது. இதைப் பாடியவர் காப்பியாற்றுக் காப்பியனார். பிற்காலத்தில் காரைக்கால் அம்மையார், அபிராமி பட்டர் போன்றோர் இதை நூறு பாடல் வரை மேலும் விரிவாக்கினர்.

2.பிரான்சிலும், சுவீடனிலும், பிரிட்டனிலும் பல மியூசியங்களுக்குச் சென்றபோது நவரத்னக்கற்ளுடன் ஜ்வலிக்கும் கிரீடங்களைக் கண்டு வியந்தேன். அது போல நூறு மடங்கு மதிப்புள்ள கிரீடங்கள், மணி முடிகள் நமது நாட்டில் இருந்தன. இப்போது அவைகள் எங்கே? என்ற கேள்விக்குப் பதிற்றுப்பத்தில் விடை உள்ளது. இரண்டாம் பத்தில், சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், ஏழு மன்னர்களை வென்று அவர்களுடைய மணி முடிகளை உருக்கி தங்க மாலை செய்துகொண்டார் என்று பாடுகிறார் குமட்டூர் கண்ணனார். — இதே கதைதான் வடக்கிலும். காளிதாசனும் இப்படிச் சில செய்திகளைச் சொல்கிறான்! — கடைசியாக இருந்த கிரீடங்களை முஸ்லீம் படை எடுப்பாளர்கள் எடுத்துச் சென்று விட்டனர். அதற்கும் பின்னர் எஞ்சியிருந்ததை நம்மவரே செட்டியார் கடையில் போட்டு நகை செய்துகொண்டு விட்டனர்!!

3.பதிற்றுப்பத்தில் 2-ஆம் பத்தில் முதல் எழுவள்ளல்களில் ஒருவரான அக்குரன் என்பவரை சேர மன்னனுடன் ஒப்பிட்டுப் புகழ்கின்றனர். நமக்கு கடை எழுவள்ளல்கள் தெரியும். ஆயினும் இந்த முதல் ஏழு வள்ளல்களில் அக்குரன் யார் என்று உ.வே.சா. போன்ற மாமேதைகளுக்கும் தெரியவில்லை. நாம் அறிந்த மஹாபாரத அக்குரன் திறமைசாலி, ராஜ தந்திரி, கிருஷ்ணனின் நண்பன். ஆயினும் அவர் கொடை பற்றி எந்தச் செய்தியும் மஹா பாரதத்திலோ, பாகவதத்திலோ இல்லை. ஒருவேளை இது கர்ணனாக இருக்கலாமோ என்று ஐயுறுவோரும் உண்டு.

750px-Chera_monarchs_family_tree

4.இமயவரம்பனைப் பற்றிய அதிசயச்செய்திகளில் ஒன்று அவன் 58 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகும். அவன் மேலைக் கடலில் வாலாட்டி வந்த யவனர்களைப் பிடித்து தலையை மொட்டை அடித்து, கைகளைப் பின்னே கட்டி, தலையில் எண்ணை ஊற்றினானாம்.

தமிழர்களின் காவல் மரங்கள்

5.வேறு எங்கும் காணப்படாத தமிழ் வழக்கம் —– ஒவ்வொருவரும் காவல் மரம் வைத்துக்கொண்டு அதைப் பாதுகாப்பதாகும்.— கடற் கொள்ளையர்கள் ஒரு தீவுக்கு நடுவில் காவல் மரமாக ஒரு கடம்ப மரம் வைத்திருந்த தாகவும் அதனை சேரலாதன் வெட்டி வீழ்த்தி அதில் வெற்றி முரசு செய்து கொண்டதாகவும் நூல் இயம்புகிறது. இதே போல தமிழ் முருகன், கடல் நடுவே இருந்த சூரபத்மனின் மாமரத்தை வெட்டியதையும் கந்தபுராணம் வாயிலாக அறிகிறோம். இங்கும் அதைச் சொல்லி முருகனுக்கு இணையானவன் சேரன் என்கிறார் புலவர். — நன்னன் என்பானுடைய காவல் மரம் வாகை. அதை களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் வெட்டி வீழ்த்தியதை ஒன்பதாம் பத்தில் காணலாம்—. பழையன் என்பானுடைய காவல் மரம் வேப்ப மரம். அதை சேரன் செங்குட்டுவன் வெட்டி வீழ்த்தியதை ஐந்தாம் பத்தில் காணலாம்.

6.ஐந்தாம் பத்தில் சரகர், சுஸ்ருதர் போன்றோர் வடமொழியில் எழுதிய மருத்துவ அறுவைச் சிகிச்சை போல ஒரு குறிப்பு வருகிறது. சேர மன்னனின் வீரர்கள் ஊசி கொண்டு தைக்கப்பட்ட மார்பை உடையவர்கள். அந்த ஊசி மீன்கொத்திப் பறவையின் கூரிய அலகு மாதிரி இருக்கும் என்று பரணர் பாடுகிறார்.

cheran flag
Chera Flag: Bow and Arrow

தமிழர் செய்த கொடிய செயல்

7.ஐந்தாம் பத்தில் சேரன் செங்குட்டுவன் செய்த ஒரு அடாத செயலையும் பரணர் போற்றிப் புகழ்கிறார். இந்தக் காலத்தில் இது நடந்திருந்தால் பத்திரிக்கை நிருபர்கள் பரணரையும், செங்குட்டுவனையும் சொற்களால் பிரட்டிப் பிரட்டி அடித்திருப்பர். அது என்ன அப்படிப்பட்ட கொடிய செயல்? செங்குட்டுவன் பல சிற்றரசர்களையும் பேரசர்களையும் வென்றான். கணவனை இழந்த பெண்மணிகளின் கரிய கூந்தலைக் களைந்தான். அம் மயிரால் திரிக்கப்பட்ட கயிற்றால் யானைகளை வண்டியில் பூட்டி, பழையன் என்பானுடைய காவல் மரத்தை தலை நகரத்துக்கு எடுத்துச் சென்றான்.

பழையன் காக்கும் கருஞ் சினை வேம்பின்
முழாரை முழுமுதல் துமியப் பண்ணி
வாலிழை கழிந்த நறும்பல் பெண்டிர்
பல்லிருங் கூந்தல் முரற்சியால்
குஞ்சர ஒழுகை பூட்டி வெந்திறல்
ஆராச் செருவின் ———————-

8.உழவர்கள் பகன்றைப் பூவை தலையில் சூடிக்கொண்டு நிலத்தை உழுததை அரிசில் கிழார் பாடிய எட்டாம் பத்தில் படிக்கலாம். அவர், பெரிய கப்பல்கள் பழுது பார்ப்பதை உவமையாகப் பயன்படுத்துவதால் அக்காலத்தில் கப்பல் பொறியியல் ( Marine Engineering) மரைன் எஞ்சினீயரிங் ) நன்கு முன்னேறி இருந்தது தெரிகிறது. புகார் நகர சதுக்க பூதங்களைச் சேரன் தனது வஞ்சிக்குக் கொண்டுவந்ததையும் அவர் பாடுகிறார்.

9.அவரே கட்டிப் புழுக்கு என்னும் ஒரு உணவுப் பண்டத்தையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அவரை முதலியவற்றின் விதையை இடித்துப் பொடியாக்கிச் சர்க்கரை கலந்து செய்வது கட்டிப் புழுக்கு ஆகும். இது கொங்கு நாட்டு உணவு.

Kodungallur_Bhagavathi_Temple
Kodungallur Bhagavathy/Kannaki Temple

10.எட்டுத்தொகையில் மிகவும் கடினமான நூல் பதிற்றுப்பத்து தான். இதைக் கண்டுபிடித்து நமக்கு அளித்தவர் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர். பதிற்றுப்பத்தில் மற்ற சங்க நூல்களைவிட கூடுதலாக மாமிச உணவு, குருதி கலந்த சோற்று பலி, வேள்வி, தேவலோகம், பூதம், துணக்கை ஆடல், இமயம் – குமரி சொற்றொடர், சிவன் – திருமால் முதலியவற்றைக் காண்கிறோம்.

பதிற்றுப்பத்தில் உள்ள வடவைத் தீ ( கடலில் தோன்றும் வடமுகாக்னி) சொர்க்க பூமியான உத்தரகுரு, பலவகை முரசுகள், வடநாடு போலவே எதிரி நாட்டில் கழுதை பூட்டி ஏர் உழுதல், தங்கக் காசு பரிசுகள், பாலைக் கவுதமனார் என்ற பிராமணர் வேள்வியில் மாயமாய் மறைந்தது, சதுக்க பூதங்கள், உன்ன மரம் ஜோதிடம் போன்ற அதிசயச் செய்திகளை ஏற்கனவே தனித்தனி கட்டுரைகளில் விரிவாக எழுதிவிட்டேன்.

பதிற்றுப் பத்தைப் படித்துப் பயன் பெறுக!

–சுபம்–

பூமி துந்துபி: ரிக் வேதம் சொல்லும் அதிசயச் செய்திகள்

chinese drums from incredipedia
Drum in China

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1387; தேதி நவம்பர் 3, 2014.

உலகிலேயே மிகப் பழைய நூல் ரிக் வேதம்— ஜெர்மன் ‘அறிஞர்’ மாக்ஸ் முல்லர் கி.மு. 1200-க்குக் கீழ் இதை யாரும் கொண்டு வரவே முடியாது என்று எழுதிவிட்டுச் சென்றார். இப்போது வேத கால சரஸ்வதி நதி நீர் பாலை வனத்துக்கு அடியில் செல்வதும், அதை ரேடியோ ஐசடோப் முறையில் ஆராய்ந்து அதன் பழமையைக் கண்டதும் வேதத்தை மெதுவாக கி.மு. 1700-க்குக் கொண்டு சென்றுள்ளது. இந்துக்களைச் சீண்டுவவதையே பொழுது போக்காக – தொழிலாகக் கொண்ட அமெரிக்க ‘அறிஞர்களும்’ ரிக் வேதத்தின் பழைய பகுதி கி.மு 1700 என்று எழுதத் துவங்கிவிட்டனர்.

ஆனால் ஸ்ரீகாந்த் தலகாரி போன்றோர் ரிக்வேத மன்னர் வம்சாவளிகளை வரிசைப்படுத்தி இது இன்னும் பழமையுடையது என்று நிரூபித்து வருகின்றனர். இதை எல்லாம் கொண்டு பார்க்கையில் உலகில் முரசு, டமாரம் ஆகியவற்றைக் கண்டுபிடித்ததும் நாமே என்று சொல்லத் தோன்றுகிறது. ஆயினும் எகிப்து போலவோ, பாபிலோனியா போலவோ நம்மால் “படம் காட்ட” முடியவில்லை!! ( நம்மிடையே படங்கள் இல்லை!!)

எது எப்படியாகிலும் இலக்கியச் செய்திகளில் நம்மை விஞ்ச எவரும் இல்லை இத்துறையில் — சங்கத் தமிழ் இலக்கியத்தில் உள்ள அதிசய தமிழ் முரசுச் செய்திகளைத் தனியே தந்துவிட்டேன்.

???????????????????????????????
Drums in Japan

பூமி துந்துபி என்னும் ஒரு வாத்தியம் பற்றி வேத இலக்கியங்கள் சொல்லும். அதாவது பூமியில் பெரிய குழி வெட்டி அதன் மீது மிருகத்தின் தோலைப் போர்த்தி அதை வாசிப்பது பூமி துந்துபி என கீத், மக்டொனல் தயாரித்த வேதிக் இண்டெக்ஸ் கூறும். இது மஹாவ்ரத யாகம் செய்யும்போது வாசிக்கப்படும் – துஷ்ட சக்திகளை விரட்ட இதன் இசை ஒலி உதவும் — சூரியன் தென் திசை செல்லுகையில் வட கோளார்த்தத்தில் இருளும் குளிரும் சூழும். அப்போது இது நிகழும்.

மஹா வ்ரத யாகம் பற்றி அக்னிஹோத்ரம் ராமானுஜாச்சாரியார் என்னும் பேரறிஞர் எழுதிய விஷயம் இந்து நாளேட்டில் வெளியாகி இருக்கிறது. அப்போது வேத கால இன்னிசைக் குழு (ஆர்க்கெஸ்ட்ரா) வாசித்தது. ஏராளமான வாத்தியங்களின் பெயர்களை வேத கால இலக்கியங்களும் அதற்குப் பின் எழுந்த அமர கோஷம் போன்ற நிகண்டுகளும் அள்ளித் தருகின்றன. இதோ மஹவ்ரத யாக இன்னிசை நிகழ்ச்சி:

‘ வேத யாகங்களில் உத்காதா, ஹோதா, அத்வர்யூ என்று பல பொறுப்புகளில் புரோகிதர்கள் இருப்பர். இவர்களில் உத்காதா நாற்காலியில் அமர்ந்து இருக்க, ஹோதா ஊஞ்சலில் ஆடுவார்; அத்வர்யூ பலகையில் அமர்வார். அப்போது சுமார் 100 கம்பி கொண்ட வானா என்ற இசைக்கருவி உள்பட சுமார் 20 வகை இசைக்கருவிகள் இசைக்க, பெண்கள் வட்ட வடிவில் நின்று கால்களால் தாளமிட்டு நகர்வர். அவர்கள் தலைகளில் நீர்க்குடங்கள் இருக்கும் அதாவது கரக ஆட்டம் ஆடுவர். இதுதான் கரக ஆட்டத்தின் தோற்றம்!!
garo tribals of meghalaya
Drums in Meghalaya, India

வாண என்ற இசைகருவியே தமிழில் — பண், பாண, யாழ் பாண — என்ற சொற்களை கொடுத்ததா என்று ஆராய்தல் நலம். வேதத்தில் உள்ள யசஸ் – தமிழில் இசை என்று மாறியது. இரண்டுக்கும் புகழ், புகழ் பாடுதல் என்ற பொருள்கள் உண்டு. இது போன்ற நூற்றுக் கணக்கான சொற்களைப் பார்க்கும் எனக்கு, இரண்டு மொழிகளும் ஒரே மூலத்தில் இருந்து உதித்தன என்ற கருத்து வலுப்பட்டு வருகிறது. நிற்க.

(வேதத்தில் எந்தெந்த இடங்களில் இந்தக் குறிப்புகள் உளது என்று அறிய விரும்புவோர் எனது ஆங்கிலக் கட்டுரையைக் காண்க)

ஆடம்பரம் – தோன்றிய வரலாறு

வேதத்தில் ‘’ஆடம்பர’’ என்னும் டமாரம் பற்றியும் வேறு பல முரசுகள் பற்றியும் செய்திகள் உள. தமிழில் “அவர் ஆடம்பரமாக கல்யாணம் செய்தார், ஆடம்பரமாக வாழ்கிறார்” — என்று சொல்லுவோம். உண்மையில் இந்த ஆடம்பரம் என்னும் கொட்டு கொட்டிக் கொண்டு நிகச்சிகள் செய்ததையே அப்படி சொல்கிறோம் என்றே தோன்றுகிறது. ஆக ஆடம்பரம் என்ற சொல் அத்தகைய நிகழ்ச்சிகளில் வாசிக்கப்படும் வாத்யமாகும்.

துந்துபி= தும் தும் பி = என்ற சொல்லில் இருந்து டமாரம், ட்ரம் என்ற சொற்கள் உருவானதையும் காணலாம். அமளி துமளி என்பதில் துமுல என்பது வடமொழிச் சொல். அதாவது “அமர/சமர துமுல” என்பது போர்க்கள ஒலியாகும். இவை எல்லாம் பகவத் கீதை முதல் அத்தியாயத்தில் உள. இதில் இருந்தே “டமல்சுவஸ்” என்ற ஆங்கிலச் சொல்லும் உருவானது.

chenda vadhya
Chenda Mela in Kerala

போர்க்களத்தில் பீஷ்மர் சங்கு ஊதி போரைத் துவக்கினார். அப்போது யார் யார் என்ன சங்கு ஊதினர், பணவ கோமுக வாத்தியங்கள் திருதராஷ்ட் ரர்களின் நெஞ்சையும் விண்ணையும் மண்ணையும் எப்படி அதிரச் செய்தன என்றெல்லாம் பகவத் கீதை முதல் அத்தியாயம் எடுத்த எடுப்பிலேயே வருணிக்கிறது. இதில் துமுல, பணவ (சங்க இலக்கியத்தில் பணை= முழவு= முரசு) என்ற சொற்களைக் காண்க. போர்க்களத்தில் முரசு கொட்டும் வழக்கம் வேத கால வழக்கம் என்பது ரிக்வேதத்தில் ஐயம் திரிபற உறுதியாகிறது.

ரிக் வேதத்தில் உள்ள சம்ஸ்கிருதச் சொற்களை நாம் அன்றாடம் தமிழ் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம். பூமி என்றும் அதையே தமிழ்ப்படுத்தி புவி என்றும் சொல்லுகிறோம்

வேதம் கூறும் லம்பர, வனஸ்பதி, ஆடம்பர ஆகிய டமாரங்கள் தவிர சிவனின் டமருகம் தான் சம்ஸ்கிருத மொழியின் மூல எழுத்துக்களான 14 மாஹேஸ்வர சூத்ரங்களைக் கொடுத்தது என்பர் ஆன்றோர். அதையே தமிழுக்கும் மறைமுகமாகச் சொல்வர் பரஞ்ஜோதி முனிவர். வடமொழியைப் பாணிணிக்கும் அதற்கு இணையான தமிழ் மொழியை குட முனிக்கும் (அகஸ்தியர்) கொடுத்தவனே என்று சிவனைப் புகழ்வார் பரஞ்சோதி. ஆக தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்தில் வந்தவை என்பது இப்பாட்டில் இருந்து தெள்ளிதின் விளங்கும். இதனாலன்றோ ஆழ்வார்களும் நாயன்மார்களும் இவ்விரு மொழிகளைக் கண் எனப் போற்றினர்.
kollam
Drums in Kollam, Kerala

‘’டாம்டாம்’’ என்ற ஆங்கிலச் சொல்லும் (தமுக்கு அடித்தல்) இந்தியர் உருவாக்கிய சொல்லே. இதை ஆங்கில அகராதியில் காணலாம். நான் சிறு வயதாக இருக்கையில் மதுரையில் தொற்று நோய்கள் (அம்மை, காலரா) பரவும்போதும் , 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதும் இப்படி தமுக்கு அடித்துச் சொன்னதை கேட்டிருக்கிறேன். வள்ளுவர் யானை மீது இருந்து பறை அறிவித்து அரசு ஆணைகளை வெளியிட்டவர் என்பதை முன் ஒரு கட்டுரையில் தந்துள்ளேன்.

நாமும் தமுக்கு அடிப்போம்: தமிழும் சம்ஸ்கிருதமும் ஒன்றே என்று!!
நாமும் பறை கொட்டுவோம்: தமிழும் சம்ஸ்கிருதமும் இரு கண் என்று!
jaffna
Drum in Jaffna Temple, Sri Lanka

contact swami_48@yahoo.com

தமிழ் முரசு, டமாரம் பற்றிய அதிசயச் செய்திகள்

modi in Japan
Prime Minister Modi in Japan trying to play on drums

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1386; தேதி நவம்பர் 3, 2014.

((கட்டுரையின் மற்றொரு பகுதியில் ரிக் வேதத்தில் வரும் அதிசய வாத்தியம் ‘’பூமி துந்துபி’’, ரிக்வேத கால ‘’ஆர்க்கெஸ்ட்ரா’’, தமிழில் உள்ள ‘’ஆடம்பரம்’’ என்னும் சொல்லின் பொருள், பல ஆங்கிலச் சொற்களின் தோற்றம் ஆகியவற்றைக் கூறுவேன்.))

தமிழில் முரசு, பணை, முழவு, பறை பற்றிய பல சுவையான செய்திகள் இருக்கின்றன. முதலில் 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியச் செய்திகளைக் காண்போம்.

1.அரசனுக்குப் பத்து அடையாளச் சின்னங்கள் உண்டு. அதில் ஒன்று முரசு. சங்கத் தமிழ் நூல்களில் முரசுடை மூவேந்தர் என்று சேர சோழ பாண்டியர் பாராட்டப்படுவர். மாணிக்கவாசகப் பெருமான் சிவபெருமானை அரசனாக வைத்துப் பாடிய திருத் தசாங்கத்திலும் பாரதியார், பாரத மாதாவை ராணியாக வைத்துப் பாடிய திருத் தசாங்கத்திலும் முரசு பற்றிய பாடல்களைக் காணலாம் (தச + அங்கம் = தசாங்கம்)
இன்பான் மொழிக் கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன்
முன்பான் முழங்கு முரசு இயம்பாய் — அன்பாற்
பிறவிப் பகை கலங்கப் பேரின்பத் தோங்கும்
பருமிக்க நாதப் பறை (திருத் தசாங்கம், திருவாசகம்)

2.கோட்டை வாயில் கொத்தளங்களில் முரசுகள் வைக்கப்படிருந்தன. கம்ப ராமாயண பால காண்ட, திரு அவதாரப்படலத்தில் கம்பனும் அயோத்தி மாநகர கோட்டையின் மேல் முரசுகள் முழங்கியதைப் பாடினன்.

rajasthani drum
Rajasthani Drum

3.முரசுகள் மூவகைப்படும்: கொடை முரசு, படை முரசு, மண முரசு என்னும் மூவகை முரங்களும் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கு மாகலின் முரசு முழங்கு நெடுநகர் எனப்பட்டது என்று பதிற்றுப்பத்து பாடலுக்கு (2-7) உரை எழுதிய மி.பொன். இராமநாதன் செட்டியார் கூறுவர்.

4.போரில் முழக்கப்படும் வெற்றி முரசினைத் தெய்வமாகவே கருதி வீரர்கள் வழிபட்டதை சங்க இலக்கிய நூல்களில் பரக்கக் காணலாம். வீரர்கள் தாம் பெற்ற வெற்றி மகிழ்ச்சியில் ஆடிக் கொண்டே சென்று முரசை வழிபாட்டனர் என்று பதிற்றுப்பத்து (2-17-5/10) கூறும்

5.முரசில் உறையும் தெய்வத்துக்கு மாமிசம், ரத்தம், சோறு கலந்த பிண்டம் பலியாகத் தரப்பட்டது. இது பற்றி பதிற்றுப்பத்து (3- வரி30/39) உரையில் செட்டியார் அவர்கள் கூறுவதாவது:- தன் படை வீரர்கட்கு கடிய சினம் தோன்றுமாறு பேரொலியுடன் உச்சரிக்கப்படும் மந்திரத்தால் அரிய வெற்றியினைத் தரும் மரபுடைய முரசுறைக் கடவுளை வணங்கும் பொருட்டு, அக்கடவுளை வழிபடுவோன் பெறுதற்கரிய பிண்டத்தினைத் தன்கையில் ஏந்தி நின்றான். அப்பிண்டத்தைக் கண்டு கொடிய கண்களையுடைய பேய்ப் பெண் கைபுடைத்து நடுங்கினாள். அப் பிண்டம் போன்றே இரத்தம் கலந்த, நிறைந்த கள்ளினையுடைய பெரிய பலியினை எறும்பும் மொய்க்காது. பருந்தும் காக்கையும் மட்டுமே உண்ணும்.
nagara,rajasthan
Nagara drum, Rajasthan

6.முரசு வைக்கப்படும் கட்டில் புனிதமானது. மோசிகீரனார் என்ற சங்கப் புலவர் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேர அரசனைப் பாடி பரிசில் பெற வந்தார். வந்த களைப்பில் முரசுக் கட்டிலில் படுத்து உறங்கிவிடார். இந்தக் குற்றத்துக்கு மரண தண்டனை கிடைத்திருக்கும். ஆயினும் புலவரின் நிலைமை கண்ட மன்னன் அவருக்கு கவரி வீசி மேலும் நன்றாகத் தூங்க உதவினான். வறுமை கண்டு மனம் இறங்கி அவருக்குப் பரிசு கொடுத்தான் என்று சங்க இலக்கியம் (புறம்.50) மூலம் அறிகிறோம்.

7. முரசுக்குப் போர்த்தும் தோல் வீரம் மிகுந்த காளை மாட்டின் தோலாக இருக்க வேண்டும் என்பது தமிழர் கொள்கை புலியைக் கொன்ற காளை மாட்டின் தோலை வைத்து முரசு தயாரிப்பர். புனை மருபு அழுந்தக் குத்திப் புலியொடு பொழுது வென்ற கனை குரல் உருமுச் சீற்றக் கதழ் விடை (காளை) உரிவை (தோல்) போர்த்த துனை குரன் முரசத் தானை (படை) – என்று சிந்தாமணிச் செய்யுள் கூறும்.

8.இனி ஆ.சிங்காரவேலு முதலியார் அபிதான சிந்தாமணி எனப்படும் தமிழ் என்சைக்ளோபீடியாவில் (கலைக்களஞ்சியம்) சொல்லும் சுவையான செய்திகளைக் காண்போம்: வீர முரசு, நியாய முரசு, தியாக முரசு என்று முரசு, மூன்று வகைப்படும். இதனை ‘’இமிழ் குரல் முரசு மூன்றுடனாளும் தமிழ் கெழு கூடல்’’ என்பதால் அறிக. இதனுள் வீர முரசினை நீராட்டிக் கடலேற்றி ஒலி நெடும் பீலியும், ஒண் பொறி மணித்தாரும் (மயில் தோகை + மாலை ), பொலங் குழை உழிஞையும் பொலியச் சூட்டி ( உழிஞைப் பூ) குருதிப் பலியீந்து (ரத்தம் கலந்த சோறு) பூசித்தல் பண்டைய வழக்கு (புறநானூறு பாடல் 50).

9. புறப் பொருள் வெண்பா மாலையில் முரசவாகை என்னும் துறை — பலியைப் பெறும் முரசு பற்றிக் கூறும் துறை என்றும் —பொன்னால் செய்த உழிஞை அணிந்து ஆடு வெட்டி பலி கொடுக்கும் முரசின் தன்மையைக் கூறும் துறை முரச உழிஞை என்றும் சொல்லப்பட்டுள்ளது.

Thiruvalluvar-
Valluvar with Punul

.
வள்ளுவர் யார்:–
10.வள்ளுவர் யார்:– திருக்குறளை யாத்து உலகப் புகழ்பெற்ற — தமிழுக்கு உலகப் புகழ் பெற்றுத் தந்த — வள்ளுவர், பறை அறிவிக்கும் ஜாதியைச் சேர்ந்தவர் என்று பழைய நூல்கள் பகரும். இது பற்றி சிங்கார வேலு முதலியார் (அபிதான சிந்தாமணி) கூறுவதாவது: பழங்குடியினரில் பாணரை அடுத்து திராவிடரால் மதிக்கப்படவர் இவ்வகுப்பினர். இவர் அரசர் பால் கருமத் தலைவராயும், யானை மேலிருந்து முரசு அறைந்து அரசாணை சாற்றுவோராயும் (அதாவது அரசரின் உத்தரவுகளை யானை மீது ஏறிச் சென்று அறிவிப்போர்) விளங்கினர். இக்குடியினர் இன்றும் உளர்.

இவர் பறையில் சற்று உயர்ந்தவர். இவர்கள் பறையர்களுக்குப் புரோகிதர்கள்— இவர்கள் பிராமணர்கள் புரோகிதர் ஆகாமுன் பல்லவ அரசர்களுக்குப் புரோகிதம் செய்திருந்தவர்கள். இவர்களில் சிலர் புரோகிதம் செய்தும் சோசியம் சொல்லியும் வாழ்கிறார்கள். இவர்களிர் சிலர் தாசிரியராகவும் பூணூல் தரிப்பவராகவும் இருப்பர். இவர்களில் லிங்கதாரிகளும் உண்டு. இவர்களில் இரண்டு பிரிவுகள்: -அறுபது கக்ஷி, நாற்பது கக்ஷி. முதல் கூறியவன் நந்திக்குருக்களின் சந்ததியான்; மற்றவன் சிதம்பர சாயுச்சிய ஐயங்கார் வகையினன்; திருப்பணாழ்வார் குலம் என்பர். இவர்கள் திருவள்ளுவரைத் தங்களினத்தவர் என்பர் (தர்ஸ்டன்)

(அதாவது தர்ஸ்டன் என்பவர் ஜாதிகள் பற்றிச் சேகரித்து ஆங்கிலத்தில் ஏராளமான தொகுதிகளாக வெளியீட்டதில் இருந்து முதலியார் மொழி பெயர்த்தது)
valluva-nayanar1
Valluvar from English book

11.தோல் இசைக் கருவிகள் என்ற தலைப்பில் தமிழ்ச் சொற்றொடர் அகராதி (வீ ஜெ செல்வராசு) தரும் தகவல்:–
முழவு:- குளிர், குடமுழா, முழவம், முழா
முழவு:– பேரிகை, படகம், இடக்கை, மத்தளம், தேசி, சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பரை, தமருகம், தண்ணுமை, தவில், தடாரி, அந்தரி, முழவொடு, சந்திர வளையம்,மொந்தை, முரசு, கண்விடு தூம்பு, நிசாலம், துடுமை, சிறுபறை, அடக்கம், ஆசில், தகுணிச்சம், விரலேறு, பாகம், தொக்க உபாங்கி, துடி, பெரும்பறை,
முழவுக்கான மரங்கள்:- கருங்காலி, செங்காலி, வேம்பு, பலா, கஞ்சம், குரவம், மண்; முழவுக்கான தோல்: இளம் பசுவின் வயிற்றுத் தோல்.

தமிழ்க் கள்ளர் தாக்குதல்கள்

12. ஆப்பிரிக்க நாடுகளில் டமாரம் மூலம் செய்திப் பரிவர்த்தனை செய்வர். — பழங்குடி மக்கள் முரசு ஒலி மூலமே பேசிக்கொள்வர். இது போன்ற செய்தி, இரண்டு சங்கப் பாடல்களிலும் வருகிறது. பாலைவனம் வழியாக அல்லது காடு வழியாக வணிகர்கள் செல்வர். கொள்ளையர் தாக்குவர் என்பதாலும், ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும் என்பதாலும் வண்டிகளில் தொடர்ச்சியாகச் செல்லுவர். இவர்களை மரம் அல்லது குன்று உச்சியில் இருந்து உளவு பார்க்கும் கள்ளர்கள் தண்ணுமை என்னும் பறையை முழக்கிக்கொண்டு வந்து தாக்குவர். இது பற்றி குறுந்தொகை (390) அகநானூறு (63) ஆகிய பாடல்களில் கருவூர்க் கண்ணம்புல்லனாரும், உறையூர் முதுகொற்றனும் சில செய்திகளைத் தருவர்:–
காதலனும் காதலியும் பாலைவனம் வழியே போவதைக் கண்ட பெரியோர், “சூரியன் மறைந்து விட்டான், பொழுது சாய்ந்துவிட்டது, ஆறலைக் கள்வரின் தண்ணுமை ஒலி கேட்கத் துவங்கும். போகாதீர்கள்”.
ஒரு தாய் தன் மகளிடம் கூறுகிறாள்:

bangalorebulldrummachine
Bangalore Temple drum operated by machine

காதலனுடன் அவள் போய்விட்டாள் என்பதற்கு நான் வருந்தவில்லை. களவுத் தொழிலை உடைய எயின மறவர் இசைக்கும் தண்ணுமை ஒலி கேட்டு இவள் பயப்படுவாளே என்றுதான் வருந்துகிறேன்.

இது பழைய தமிழகத்தின் நிலையைப் படம்பிடித்துக் காட்டும். இரவுநேரத்தில் வறண்ட பாலை வழியாகச் செல்வோரை கள்ளர்கள் பறை ஒலி எழுப்பிக் கொண்டு வந்து தாக்குவர். அவர்கள் ஒலி கொடுப்பது மற்றவர்களை நடுங்கச் செய்யவும், தனது கூட்டத்தினருக்கு செய்தி கொடுக்கவும் என்று சொல்லலாம்.

TashaF
Marathi drums

Pictures are taken from other websites;thanks.

கல்வி பற்றிய 30 தமிழ் பாடல் மேற்கோள்கள்

classroom1

சிந்தனைச் சிற்பிகள் (ஜய வருடம்) 2014 நவம்பர் மாத காலண்டர்

Post No. 1378; Date: 30 அக்டோபர் 2014
Prepared by London swaminathan (copyright)

முக்கிய நாட்கள்: நவம்பர் 4 முஹர்ரம்; அமாவாசை:22;
சுபமுஹூர்த்த நாள்:– 2, 9, 12, 13, 21; பௌர்ணமி – 6; ஏகாதசி- 3, 18;

நவம்பர் 1 சனிக் கிழமை
எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் – கொன்றை வேந்தன்

நவம்பர் 2 ஞாயிற்றுக் கிழமை
கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி – கொன்றை வேந்தன்

நவம்பர் 3 திங்கட் கிழமை
ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம் — உலக நீதி

நவம்பர் 4 செவ்வாய்க் கிழமை
இளமையிற் கல்; ஓதுவது ஒழியேல்; வித்தை விரும்பு – ஆத்திச்சூடி

நவம்பர் 5 புதன் கிழமை
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே – வெற்றிவேற்கை

Class_Room2

நவம்பர் 6 வியாழக் கிழமை
எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு – திருக்குறள்

நவம்பர் 7 வெள்ளிக் கிழமை
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே – புறநானூறு

நவம்பர் 8 சனிக் கிழமை
தனக்குப் பாழ் கற்றறிவில்லா உடம்பு – நான்மணிக் கடிகை

நவம்பர் 9 ஞாயிற்றுக் கிழமை
கல்லா ஒருவனுக்கு அவன் சொல்லே கூற்றாக முடியும் – நான் மணிக்கடிகை

நவம்பர் 10 திங்கட் கிழமை
எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியிற் கற்றோரை வருக என்பர் – வெற்றி வேற்கை

vedapatasala
Picture of Rajaveda patasama

நவம்பர் 11 செவ்வாய்க் கிழமை

கல்லாத மூத்தானைக் கைவிட்டுக் கற்றவன் இளமை பாராட்டும் உலகு – நான் மணிக்கடிகை

நவம்பர் 12 புதன் கிழமை
நெஞ்சத்து நல்லம் யாம் என்னும் கல்வியழகே அழகு – நாலடியார்

நவம்பர் 13 வியாழக் கிழமை
பிச்சைப் புக்காயினும் கற்றல் மிகவினிதே – இனியவை நாற்பது

நவம்பர் 14 வெள்ளிக் கிழமை
கணக்காயர் இல்லாத ஊரால் நன்மை இல்லை – திரிகடுகம்

நவம்பர் 15 சனிக் கிழமை
ஒருமைக் கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமைக்கும் ஏமாப்புடைத்து — திருக்குறள்

balavedapatasala
Picture of Bala Veda Patasala

நவம்பர் 16 ஞாயிற்றுக் கிழமை
எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்வி போல்
மம்மர் அறுக்கும் மருந்து – நாலடியார்

நவம்பர் 17 திங்கட் கிழமை
எண் அவன் காண் எழுத்து அவன் காண்
இன்பக் கேள்வி இசை அவன் காண் – அப்பர் தேவாரம்

நவம்பர் 18 செவ்வாய்க் கிழமை
பயிற்றிப் பல கல்வி தந்து – இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும் – பாரதி பாடல்

நவம்பர் 19 புதன் கிழமை
ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாதவருள்
அறிவுடையோனால் அரசுஞ் செல்லும் –புறநானூறு

நவம்பர் 20 வியாழக் கிழமை
தேடு கல்வியிலாதொரு ஊரைத் தீயினுக்கிரையாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதம் எம் அன்னை கேண்மைகொள்ள வழி இவை கண்டீர்–பாரதியார்

shantiniketan

நவம்பர் 21 வெள்ளிக் கிழமை
வெள்ளதால் போகாது வெந்தணலால் வேகாது
வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது (கல்வி) –

நவம்பர் 22 சனிக் கிழமை
கல்வி கரையில, கற்பவர் நாள் சில – நாலடியார்

நவம்பர் 23 ஞாயிற்றுக் கிழமை
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளூம்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பாலொருவனும் அவன்கட் படுமே – புறநானூறு

நவம்பர் 24 திங்கட் கிழமை
நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான் சோழன்
குலவிச்சை கல்லாமற் பாகம் படும் — பழமொழி

நவம்பர் 25 செவ்வாய்க் கிழமை
கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக – திருக்குறள்

shantiniketan2
Picture of Shantiniketan, West Bengal

நவம்பர் 26 புதன் கிழமை
நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு – வாக்குண்டாம்

நவம்பர் 27 வியாழக் கிழமை
கேள்வி முயல்; நூற் பல கல்; எண் எழுத்து இகழேல் – ஆத்திச்சூடி

நவம்பர் 28 வெள்ளிக் கிழமை
கடைநிலத்திற் பிறந்தவர் எனினும் கற்றறிந்தவரைத் தலைநிலத்து வைப்பர் – நாலடியார்

நவம்பர் 29 சனிக் கிழமை
பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய கற்றலின்காழ் இனியதில் — இனியவை நாற்பது

நவம்பர் 30 ஞாயிற்றுக் கிழமை
கற்றோர்க்கு கல்வி நலனே கலன் அல்லால்
மற்றோர் அணிகலம் வேண்டாவாம் –– நீதிநெறிவிளக்கம்

-Study-Under-Bridge
Picture of school under Delhi bridge

In each month’s calendar you can read beautiful Tamil quotations!
Contact swami_48@yahoo.com

school_under_bridge_02