Post No. 15,253
Date uploaded in London – 8 December 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து, வைஷ்ணவி ஆனந்த்தும் லதா யோகேஷும் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் மாதம் 7- ம் தேதி , 2025-ம் ஆண்டு.
***
முதலில் தேசீயச் செய்திகள்
அதிபர் புடினுக்கு பகவத் கீதையின் ரஷ்ய பதிப்பை பரிசளித்த மோடி
இந்தியா வந்துள்ள அதிபர் புடினுக்கு, பகவத் கீதையில் ரஷ்ய பதிப்பை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இருநாள் அரசுமுறை பயணமாக டில்லி வந்தடைந்தார். பாலம் விமான நிலையத்தில் தரையிறங்கிய புடினுக்கு ஏ.ஆர்.ரகுமானின் இசையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில், ரஷ்ய அதிபர் புடினை, பிரதமர் மோடி நேரில் சென்று ஆரத்தழுவி வரவேற்று, தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு பிரதமர் மோடி ஏற்பாடு செய்திருந்த விருந்தில் புடின் பங்கேற்றார். பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடினுக்கு பகவத் கீதையில் ரஷ்ய பதிப்பை பரிசாக வழங்கி உள்ளார்.
இது தொடர்பாக புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: ரஷ்ய மொழியில் கீதையின் பிரதியை அதிபர் புடினுக்கு வழங்கினேன். கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கானவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
***
காசி தமிழ் சங்கமம் நான்காவது ஆண்டு விழா துவக்கம்:
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் நான்காவது பதிப்பு டிசம்பர் 2 ஆம் தேதி துவங்கியது.. மத்திய கல்வி அமைச்சகம் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை இதை நடத்துகிறது. இதன் கருப்பொருளாக ‘ தமிழ் கற்கலாம்’ என அறிவிக்கப்பட்டு உள்ளது.
துவக்க விழாவில் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்.முருகன் தமிழக கவர்னர் ரவி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும் சென்னை ஐ.ஐ.டியும் இணைந்து நடத்தும் இவ்விழாவில் முதல் கட்டமாகத் தமிழ்நாட்டில் இருந்து 7 குழுக்கள் காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இரண்டாம் கட்டமாகத் தமிழ்நாட்டில் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதிவரை நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் வாரணாசியில் இருந்து 300 மாணவர்கள் தமிழகத்திற்கு வந்து தமிழ் மொழியை கற்க உள்ளனர்.
***
வேத உலகில் சாதனை படைத்த இளைஞர்:
வேதமூர்த்தி தேவவ்ரத மகேஷ் ரேகே 19 வயது இளைஞர், காசியில் சுக்ல யஜுர் வேதத்தை தண்டக்ரம முறையில் பாராயணம் செய்து சாதனை புரிந்துள்ளார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவரைப் பாராட்டி விருதுகள் வழங்கினார் ;பிரதமர் மோடியும் தனது நிகழ்ச்சி ஒன்றில் அவரைப் பாராட்டினார் .
தண்டக்ரம முறை பாராயணம் என்பது கடினமான முறை.
தண்டக்ரம பாராயணத்தில் 25 லட்சத்திற்கும் அதிகமான ஸ்லோகங்களைத் நினைவில் கொண்டு பிழையின்றி தொடர்ந்து 50 நாள்களுக்கு மேல் முழுவதையும் சொல்லி முடித்துள்ளார்.
இது மாபெரும் சாதனையென்று வேதமறிந்த அறிஞர்கள் கூறியுள்ளனர். தெய்வீக திறமை, உண்மையான தபஸ், மற்றும் நமது குரு பரம்பரையின் காலத்தால் அழியாத வலிமைக்கு இது ஒரு சான்று. என்று அவர்கள் பாராட்டினர்.
***

Hindu Front Leader
Ram in Goa

19 year old Vedic Scholar
கோவிலில் தங்கப் பல்லியை திருட முயற்சி; ஐகோர்ட்டில் வழக்கு
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பழமையான தங்கப்பல்லி சிற்பத்தின் தங்கக் கவசத்தை திருட நடந்த முயற்சி தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க கோரிய மனுவுக்கு காவல் துறை பதிலளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோவில் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தின் உத்தரத்தில், தங்கப்பல்லி, தங்கச்சந்திரன், தங்கச்சூரியன், வெள்ளிப்பல்லி ஆகிய சிற்பங்கள் உள்ளன.
கோவிலில் பல நுாற்றாண்டுகளாக உள்ள இந்த சிற்பங்களின் தங்கம் மற்றும் வெள்ளி கவசங்கள், சிலைகளை கோவில் அர்ச்சகர்களுடன் சேர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் திருட முயற்சித்துள்ளனர். ஏற்கனவே உள்ள சிலைகளை அகற்றிவிட்டு, அதே போன்ற சிலைகளை வைக்கவும் முயன்றுள்ளனர்.

Golden Lizard in Kanchii Temple Stolen

எவ்வித அனுமதியும் பெறாமல், இதுபோல சிலைகளை மாற்றுவது ஆகம விதிகளுக்கு முரணானது. பழங்கால பொருட்களை, உரிய அனுமதியின்றி அகற்ற அறநிலையத்துறை சட்டம் தடை விதிக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து, சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக் ஆஜராகி, “மனுதாரரின் புகார் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டது.
‘ ‘விசாரணையில், சிலை திருட்டு ஏதும் நடக்கவில்லை என தெரியவந்தது. அதையடுத்து, புகார் முடித்து வைக்கப்பட்டது. அதுகுறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,” என்றார்.
அதற்கு மனுதாரர் தரப்பில், ‘முழு விசாரணை நடத்தாமல் புகாரை முடித்து வைத்ததற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளேன்.
அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு மாறாக, சிலைகளை மாற்றி உள்ளனர்’ என கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், இந்த மனுவுக்கு மூன்று வாரங்களில் காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
****
திருக்கார்த்திகை தீபத் திருவிழா
டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி புதன்கிழமை திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடந்தது திருவண்ணாமலையில் கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது . தீபத்திற்கான 300 கிலோ எடை கொண்ட கொப்பரை மற்றும் 1500 மீட்டர் திரி,4500 கிலோ நெய் ஆகியவையும் மலை மீது முதல் நாளன்றே கொண்டு செல்லப்பட்டது.
.அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றும் உரிமை பருவத ராஜகுலத்தினருக்கு மட்டுமே உண்டு. இவர்கள் பரம்பரை பரம்பரையாக தலைமுறை தலைமுறையாக இந்த புனிதமான பணியை செய்து வருகின்றனர். பர்வத ராஜகுலத்தினர் பார்வதி தேவி அவதரித்த மரபில் வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் மீன் பிடிக்கும் தொழிலை மேற்கொள்பவர்கள். ஆகையால், இவர்கள் மீனவர்கள் என்றும் செம்படவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
****
தீபம் ஏற்றாமல் நீதிமன்ற அவமதிப்பு; டிசம்பர்.9 ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றாமல் நீதிமன்ற உத்தரவை அவமதித்த வழக்கை, டிச.,9க்கு ஒத்தி வைத்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டும், அமல்படுத்தாமல் தி.மு.க., அரசு பிடிவாதம் காட்டியது. இதனால் ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார் மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் செயல் அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணை இன்று (டிச.,05) காலை 10.45 மணிக்கு மீண்டும் ஐகோர்ட் மதுரைக்கிளையில் நீதிபதி சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுவாமி நாதன் வழக்கு விசாரணையை டிசம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
***
தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்: ஹிந்து முன்னணி அறிவிப்பு
தி.மு.க., அரசின் இரட்டை வேடத்தை கண்டித்து, தமிழகம் முழுதும் இன்று போராட்டம் நடத்த உள்ளதாக, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் துாணில் தீபம் ஏற்றுவது தொடர்பான விஷயத்தில், மேல்முறையீடு என்ற பெயரில் இந்த அரசு இரட்டை வேடம் போடுகிறது.
தி.மு.க., ஆட்சியில், 158 கோவில்களை இடித்துள்ளதாக தகவல் வந்துள்ளது; 200 கோவிலுக்கு மேல் வரும் என்று நினைக்கிறோம். ஹிந்துக்கள் மீது, இந்த அரசுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. சிறுபான்மையினர் ஓட்டுக்காக இந்த அரசு இப்படி செயல்படுகிறது.
மதசார்பற்ற அரசு என்று கூறுபவர்கள், தீபம் ஏற்ற அனுமதி அளித்திருக்க வேண்டும். இவ்விஷயத்தை எல்லாம் கண்டித்து, தமிழகம் முழுதும் போராட்டம் நடத்த உள்ளோம் என்று ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறினார்.
*****


சபரிமலை சன்னிதானத்தில் போட்டோ எடுக்க தடை
சபரிமலையில் போட்டோ எடுக்கவும், அய்யப்பன் சிலைகளை கொண்டு செல்லவும் தேவசம் போர்டு தடை விதித்துள்ளது.கேரள உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சபரிமலையில் நடப்பு சீசனில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரியும் பூஜாரிகளுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
சபரிமலை சன்னிதான திருமுற்றத்தில், பக்தர்கள் தங்கள் மொபைல் போன்களில் போட்டோ எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களின் மொபைல் போன் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
***
இருமுடியை சோதனையிடாமல்விமானத்தில் எடுத்து செல்லலாம்
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்ச கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி செல்கின்றனர்.
வழக்கமான சோதனை எதுவும் இல்லாமல் விமானத்துக்குள் எடுத்து செல்ல இருமுடிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை விமான துறை அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் ஜன. 20-ம் தேதி வரை அமலில் இருக்கும்.
****
பாகிஸ்தானில் 37 ஹிந்து கோவில்கள், குருத்வாராக்கள் மட்டுமே செயல்படுகின்றன: அதிர்ச்சி தரும் செய்தி
பாகிஸ்தானில் மொத்தமுள்ள 1817 ஹிந்து கோயில்கள் மற்றும் சீக்கிய வழிபாட்டு தலங்களில் 37 மட்டுமே செயல்பட்டு வருகிறது என அந்நாட்டு பார்லிமென்ட் குழு முன்பு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்த குழு தலைவர் டானேஷ்குமார் கூறியதாவது: சிறுபான்மையினர் பாதுகாப்புக்கு அரசியலமைப்பு அளித்த வாக்குறுதியை பார்லிமென்ட் குழுவானது நிறைவேற்ற வேண்டும். எனக்கூறினார்.
ரமேஷ்குமார் வன்க்வானி என்ற எம்பி கூறியதாவது: சொத்து மீட்பு குழுவானது, தனது கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் குருத்வாராக்களை கவனிப்பதை கைவிட்டுவிட்டது. இந்த குழுவின் தலைமைப்பதவியை முஸ்லிம் அல்லாத நபரிடம் வழங்க வேண்டும். அப்போது தான் புறக்கணிக்கப்பட்ட மத சொத்துகளை மறுசீரமைத்து முறையாக பராமரிக்க முடியும். என்றார்.
கேசோ மால் கேல் தாஸ் என்ற எம்பி கூறுகையில், நாடு பிரிவினைக்கு பிறகு பெரும்பாலான கோவில்கள் மற்றும் குருத்வாராக்கள் கைவிடப்பட்டன. உள்ளூரில் வசித்த ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர் என்றார்.
***
சென்ற வாரச் செய்திகள்
சென்ற ஞாயிற்றுக்கிழமை நமது ஒலிபரப்பு நடக்காததால் அந்த வாரத்தில் நடந்த மூன்று முக்கிய விழாக்களை சுருக்கமாகக் காண்போம்
பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அன்று ராமர் கோவிலின் உச்சியில் தர்ம கொடியை ஏற்றி வைத்தார்
22 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்ட இந்த காவி நிறக் கொடி, பாராசூட் தர துணியால் ஆனது. இது ஒரு தடிமனான நைலான் கயிற்றைக் கொண்டு கோவிலின் உச்சியில் ஏற்றப்பட்டுள்ளது. இது 161 அடி உயர கோபுரத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ளது. கொடியில் சூரியன் சின்னம் உள்ளது. இது ராமர் பகவானின் சூர்ய வம்சத்தைக் குறிக்கிறது. மேலும், ஓம் மற்றும் கோவிதாரா மரத்தின் சின்னங்களும் உள்ளன. கோவிதாரா மரம், ராம் ராஜ்யத்தின் மாநில மரமாக விவரிக்கப்படுகிறது.
****
குருக்ஷேத்ரத்தில் சங்கு சின்னம் திறப்பு

பஞ்ச பாண்டவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சிறப்பான சங்கை வைத்திருந்தனர். அதற்குத் தனியான பெயரும் உண்டு. அதே போல கிருஷ்ண பரமாத்மாவும் கையில் சங்கு வைத்திருப்பார் ; கிருஷ்ணனின் சங்கின் பெயர் ‘பாஞ்சஜன்யம்’
முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவுப்படி சிரச்சேதம் செய்யப்பட்ட ஒன்பதாவது சீக்கிய குரு தேஜ் பகதூரின் 350-ஆம் ஆண்டு உயிா்த் தியாக நினைவு தினத்தையொட்டி, ஹரியாணாவின் குருக்ஷேத்ரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றாா்.
அப்போது மஹாபாரத வளாகத்தில் கிருஷ்ணனின் பாஞ்சஜன்ய சங்குச் சின்னதத்தைத் திறந்து வைத்தார் அதன் எடை சுமார் 5 டன். அது ஐந்து மீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது;
மஹாபாரத காட்சிகளைச் சித்தரிக்கும் புதிய வளாகம் குருக்ஷேத்ரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
***
77அடி வெண்கல ராமர் சிலை திறப்பு
கோவாவில் உள்ள ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண ஜீவோத்தம் மடத்தில், 77 அடி உயர வெண்கல ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே உயரமான இந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
மேலும் மடத்தால் உருவாக்கப்பட்ட ராமாயண தீம் பார்க் கார்டனையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். விழாவை முன்னிட்டு பத்ரிநாத்திலிருந்து கோவா வரை ஒரு பிரமாண்டமான ஸ்ரீ ராம யாத்திரை நடைபெற்றது. விழாவில் சுமார் 1 லட்சம் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
***
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்; லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு டிசம்பர் 14 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் 12 மணிக்கும், இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
வணக்கம்.
—SUBHAM—-
Tags- Gnanamayam, Broadcast, News, 7 12 2025, Vaishnavi










