
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 15 November 2018
GMT Time uploaded in London –11-35 AM
Post No. 5665
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
அயோடின் என்பது என்ன?
118 மூலகங்களில் ஒன்று.
மூலகம் என்றால் என்ன?
எப்படி வீடு கட்ட செங்கல் தேவையோ,அது போல இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்க ஹைட் ரஜன், நைட் ரஜன், ஆக்ஸிஜன், முதலிய 118+ அடிப்படைப் பொருட்கள் தேவை. அதில் ஒன்று அயோடின்.
இது மனித உடலுக்குத் தேவையான ஒரு இரசாயனப் பொருள்; அயோடின் கூடினாலும் கஷ்டம்; குறைந்தாலும் கஷ்டம்!
சுவையான செய்திகள்
முதலில் அயோடின் IODINE பற்றிய சுவையான செய்திகளைக் காண்போம்.
செயற்கை மழை பொழிவிக்க உதவுவது சில்வர் அயோடைடு (SILVER IODIDE வெள்ளி அயோடைட்) என்னும் பொருள் ஆகும். ஒரு கிராம் சில்வர் அயோடைட் தூவினால் அது ஒரு ட் ரி ல்லியன் (TRILLION) படிகங்களை உருவாக்கும். அதைச் சுற்றி மேகத்திலுள்ள நீர்த் திவலைகள் சேர்ந்து கொட்டோ கொட்டு என்று மழை கொட்டிவிடும். அது சரி! மேகம் இருந்தால்தானே கொட்டும். அதற்கு நாம் எங்கே போக வேண்டும் என்று கேட்காதீர்கள்!
விமானத்தை விண்ணில் மேகத்துக்கு இடையே விமானத்தை பறக்கச் செய்து புகைபோல அயோடின் உப்பு தூவப்படும். இப்படி 1952 ஆகஸ்டில் பிரிட்டிஷார் ஒரு ரகசிய சோதனை நடத்தினர். இது இங்கிலாந்தின் மேற்குப் பகுதியிலுள்ள லின்மவுத் என்னும் ஊரில் அதி பயங்கர மழையைக் கொட்டி திடீர் வெள்ளத்தை உண்டாக்கி 31 பேரைச் சாகடித்தது!
ஏன் ரஹஸிய சோதனை நடத்தினர்? எதிரி நாட்டில் படைகளை அடக்க, மடக்க இது உதவுமா என்று பிரிட்டிஷ் ராணுவ இலாகா செய்த சோதனை இது. டாங்குகள் அணிவகுத்து வருகையில் இப்படி வெள்ளத்தை உண்டாக்கினால் அவை சகதியில் சிக்கி, முன்னேற முடியாதல்லவா? இது என்னாடா பெரிய சோதனை! பெரும் ரோதனையாகப் (அழுகை) போய்விட்டதே என்று மக்கள் அங்கலாய்த்தார்கள்.
கொஞ்சம் வேதியியல் பாடம் நடத்திவிட்டு மேலும் ஒரு சுவையான செய்தி சொல்லுவேன்.

அயோடின் என்பது உலோகம் அல்ல; இது பளபளப்பான கறுப்பு நிற படிகங்கள். இதை சூடாக்கினால் பர்ப்பிள் என்னும் ஊதா நிற புகையை வெளியிடும். இதன் ரஸாயன குறியீடு ‘ஐ’ I ஐ I ஃபார் இண்டியா; ஐ ஃபார் அயோடின்.
இதன் அணு எண் 53. அதாவது பிரியாடிக் டேபிள் PERIODIC TABLE எனப்படும் மூலக அட்டவணையில் 53 ஆவது இடம். உருகு நிலை 114 டிகிரி சி.
இது மருத்துவத் துறையிலும் புகைப்படத் தொழிலிலும் நிறைய பயன்படுகிறது.
நிற்க.
சுவையான செய்தி என்னவென்றால்,
ஒவ்வொரு ஆண்டும் கடல் அலை வீசும் நீர்த் திவலைகள் மூலமும், கடல்பிராணிகள் தாவரங்கள் மூலமும் 4 லட்சம் டன் அயோடின் காற்று மண்டலத்துக்குள் நுழைகிறது. மீண்டும் இவை நிலத்தில் விழுந்து ஆறுகள் வழியே கடலில் கலக்கிறது. இடையே கடற் பாஸி, காளான், முட்டைக்கோசு முதலிய தாவரங்கள் கொஞ்சம் கிரஹித்துக் கொள்ளும்.
செர்னோபிள் CHERNOBLE பற்றிய சோகச் செய்தி
ரஷ்யாவில் செர்னோபிள் என்னும் இடத்தில்1986 ஆம் ஆண்டில் அணு உலை உருகி உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது பழைய செய்தி. இது நிறைய பெயரைப் பலி வாங்கியது. இடி அயோடினும் ஒரு குற்றவாளி! அயோடிந்131 IODINE-131 என்ற கதிரியக்க ஐஸ்டோப் அப்போது வெளியேறியது . இது விரைவில் அழியக்கூடியதே. ஆனால் அது கீழே விழுந்து புல்லில் கலந்து அதை மேந்த ஆடு மாடுகள் தந்த பாலின் வழியே குழந்தைகள், மனிதர்கள் ரத்தத்தில் கலந்து தைராய்ட் THYROID CANCER புற்று நோயை உண்டாக்கியது. தண்ணீரில் கலந்ததும் ஒரு காரணம். பொடாஸியம் அயோடைட் என்னும் உப்பைக் கொடுத்தால் இந்தக் கெடுதியை சரி செய்யலாம் என்பது பின்னர் தெரிந்தது. ஆனால் எல்லாம் நடந்தபின் வந்த இந்த செய்தி கண் கெட்டுப்போனவன் சூரிய நமஸ்காரம் செய்த கதை போல் ஆயிற்று.
புகைப்படத் தொழிலில் புரட்சி
தென் அமெரிக்காவில் சிலி நாட்டிலும் அமெரிக்காவில் கொலராடோ நியு மெக்ஸிகோ பகுதியிலும் இயற்கையாகவே
ஏராளமான அயோடின் உப்பு கிடைக்கிறது
இதைக் கொண்டு புகைப்படங்கள் எடுப்பதைக் கண்டுபிடித்தனர். 1839ல் லூயிஸ் டாகர் என்பவர் ஒரு வெள்ளித் தகட்டில் அயோடின் ஆவியைப் பாய்ச்சினார். அது சில்வர் அயோடைடை உண்டாக்கியது. அதன் மீது வெளிச்சம் பட்டால அது மாறி விடும். எவ்வளவு வெளிச்சம் படுகிறதோ அந்த அளவுக்கு சில்வர் அயோடைட் சில்வராக (வெள்ளி) மாறிவிடும். இதைப் புகைப்படக் கருவியில் வைத்து புகைப்படம் எடுத்த பின்னர் அயோடினை கழுவிவிடலாம். அப்போது தகட்டில் உருவம், புகைப்படம் மட்டும் மிஞ்சும். பிற்காலத்தில் கண்
ணாடி மீது சில்வர் அயோடைட் உப்பை படியச் செய்து இந்த பணியைச் செய்தனர். இப்போதைய யுகத்தில் மொபைல் MOBILE PHONE ஐ பேட் I-PAD வந்த பின்னர் காமெரா பிலிம் வேலைகளும் புகைப் படம் கழுவுதலும் மறைந்து வருகிறது. இனி இவைகளை கண்காட்சி சாலையில் காணலாம்.
இப்போது அயோடினை உப்புக் கரைசல்களில் இருந்தும் எடுக்கின்றன.
அயோடின் உபயோகம்
மருத்துவத் துறை- 25 சதவிகிதம்
பிராணிகளின் தீவனம் 15 %
பிரிண்டிங் இங்க், சாயம்- 15 %
தொழிற்சாலை பயன்பாடு 15 %
புகைப்பட ரசாயனம் 10%
ஏனைய பயன்கள் – 20 %
இவை டைட்டானியம், சில்வர், சிர்கோனியம் அயோடைடுகளாக மாற்றப்பட்டு பயன்படுத்தப் படுகின்றன.
கட்டுரையின் இரண்டாவது பகுதியில் அயோடினின் மருத்துவ உபயோகம், அயோடினால் வரும் நோய்கள், பிரிட்டிஷார் செய்த திருட்டுத்தனம், நெப்போலியனும் அயோடினும் முதலிய விஷயங்களைச் செப்புவேன்.
–தொடரும்
–சுபம்—