அடியே! சொன்னதைச் செய்யடி!!

IMG_4372

Don’t Reblog it at least for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.

 

Compiled by London swaminathan

Date : 8 September  2015

Post No. 2135

Time uploaded in London: – 5-31 AM

இது ஒரு கிராமப்புற கதை! ஒரூ ஊரில் படிக்காத ஒரு பட்டிக்காட்டான் இருந்தான்; சரியான முரடன். தினமும் மனைவியைக் காரணமில்லாமல் அடிப்பான். அவளும் பொறுத்துப் பார்த்தாள். ஒரு நாள் சிந்தித்தாள்; “இந்த ஆளுக்கு எப்படி நல்ல புத்தி புகட்டுவது? சரி! அவரையே கேட்டுவிடுவோம். நான் என்ன தப்பு செய்தேன்? ஏன் இப்படி தினமும் அடிக்கிறீர்கள்” என்று.

ஒரு நாள் நல்ல தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள். “ஏங்க! நான் ஒரு தப்பும் செய்யாத போதும் ஏன் இப்படி என்னை தினமும் அடிக்கிறீங்க? என்று கேள்வி கேட்டாள்.

அவன் சொன்னான், “அடியே! நான் சொன்னதை நீ செய்வதில்லை. அதனால்தான் உன்னை அடிக்கிறேன். அடியாத மாடு படியாது” – என்றான்.

அவள் சொன்னாள்: “சரி, இனிமேல் நீங்கள் சொல்வதை அப்படியே செய்கிறேன். என்னைத் தொடக் கூடாது. சத்தியம் செய்யுங்கள்” என்றான். அவனும் அவள் தலை மேல் அடித்து சத்தியம் செய்துவிட்டான்.

அவளோ அடிபட்ட பாம்பு போலப் பழிவாங்கக் காத்திருந்தாள். அவன் வழக்கம்போல, “அடீ! நான் சாப்பிட வந்துவிட்டேன்” என்றான்.

அவள் ஒரு கம்பை எடுத்துக்கொண்டு, போட்டாள் ஒரு போடு, அவன் தலையில்!

“ஏய், ஏய், ஏன் என்னை அடித்தாய்?” என்றான்.

நீங்கள் ‘அடி’என்று சொன்னீர்களே என்றாள்.

மறுநாள் அவன் சாப்பிட வந்த போது தலையில் நிறைய ‘உமி’ யைத்தூவிக் கொண்டு வந்து சாப்பாடு போட்டாள். “அட, தலை எல்லாம் உமி!” என்றான்.

அவள் அவன் தலை முழுதும் ‘தூ தூ’ என்று துப்பித் தீர்த்தாள். “அடீ, ஏன் இப்படி துப்புகிறாய்?” – என்றான்.

கம்பால் போட்டாள் ஒரு போடு! அவன் காரணத்தைக் கேட்கும் முன்னர் அவளே சொல்லிவிடாள்: “முதலில் தலையில் உமி(ழ்) என்றீர்கள்; பின்னர் அடீ என்றீர்கள் – இரண்டையும் உடனே செய்துவிட்டேன்”.

அந்த சத்தியம் தவறாத ‘உத்தமன்’ பேசாமல் போய்விட்டான். மறு நாளைக்கு அவன் முதலாளியிடம் கூலி வாங்கிவந்தான். வழக்கத்தை விடக் கூடுதலாகப் பணம் கிடைத்த மகிழ்ச்சியில், “அடீ, இதைக் கொண்டு போய் வை”  – என்றான்.

போட்டால் ஒரு போடு அவன் மீது கம்பால்! “முட்டாள் பய கொண்டுவந்த பணம், மடப்பய கொண்டுவந்த பணம், எந்த நாய் இந்தப் பணத்தைக் கொடுத்ததோ” – என்று வையத் துவங்கினாள்.

“ஏய், ஏய், உனக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? ஏன் இப்படி வைகிறாய்?” – என்றான்.

“என்னங்க! முதலில் அடி என்றீர்கள் அடித்தேன். அப்புறம் பணத்தைக் கொண்ட்போய் “வை” என்றீர்கள். நன்றாக வைது தீர்த்துவிட்டேன். நீங்கள் சொன்னதை நான் மறுக்கலாமா?” என்றாள்.

பட்டிக்காட்டனுக்கு சங்கதி புரிந்தது. இவள் சரியான ஏட்டிக்குப் பூட்டியான பெண்; இனிமேல் நாம் ஒழுங்காக இல்லாவிட்டால் வண்டி ஓடாது என்று புரிந்து கொண்டான். மனைவியிடம் போய், இனிமேல் நான் உன்னை அடிக்கமாட்டேன். சரியான காரணமே இல்லாமல் உன்னைத் தண்டித்தேன். நீயும் என்னை அதே போல சரியான காரணமே இல்லாமல் தண்டித்து பாடம் புகட்டிவிட்டாய் – இனிமேல் அடிதடி இல்லாமல் வாழ்வோம்” என்றான். அவளுக்கும் மெத்த மகிழ்ச்சி!

கிராமப்புற மக்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாவிடாலும், வயல்காட்டிலும், மரத்தடியிலும், வீட்டுத் திண்ணையிலும் இப்படிப் பல கதைகள் சொல்லி, அரிய, பெரிய கருத்துக்களை கல்மேலிட்ட எழுத்துபோல மனதில் பதித்தனர்.

 —-xxxxx—–