
Date- 9 April 2018
British Summer Time- 6-21 am
Written by S Nagarajan
Post No.4897
Pictures are taken from various sources; thanks.
பாக்யா 30-3-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு ஐந்தாம்) கட்டுரை
அட்லாண்டிஸ் மகா மர்மம் – அதிசயத் தகவல்கள்! – 2
ச.நாகராஜன்

அட்லாண்டிஸ் என்பது கருங்கடல் வெள்ளத்தைப் பற்றிக் கூறும் பழைய புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டது என்பது இன்னும் ஒரு கொள்கை. இந்தக் கொள்கையின் படி அட்லாண்டிஸ் ஒரு கற்பனைக் கதையே. ஆனால் அதன் மர்மமான மறைவு ஒரு உண்மையான வரலாற்று சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது! கிறிஸ்துவுக்கு முன் 5600ஆம் ஆண்டில் மெடிட்டரேனியன் கடலில் பாஸ்பொரஸ் என்ற இடத்தில் ஏற்பட்ட உடைப்பையும் அதைத் தொடர்ந்து கருங்கடலில் ஏற்பட்ட ஒரு பெரிய வெள்ளத்தையும் அடிப்படையாகக் கொண்டது இந்தக் கொள்கை.

அப்போது கருங்கடலின் தண்ணீர் நல்ல ஏரியின் நீராக இருந்தது. இப்போதிருப்பதில் பாதி அளவு தான் அந்த ஏரி இருந்தது. கருங்கடலில் ஏற்பட்ட பெருவெள்ளம் கடற்கரையில் நூற்றுக்கணக்கான அடி அளவு கடற்கரைப் பகுதிகளை ஆழ அமுக்கி அங்கிருந்த நாகரிகங்களையும் மக்களையும் ஒருசேர ஒரே வருடத்திற்குள் அழித்தது! அழிக்கப்பட்ட பகுதியான பெரும் பரப்பளவு என்பதால் அங்கிருந்த மக்கள் பிரளயத்தைப் பற்றியும் அதைச் சுற்றி ஏற்பட்ட சம்பவங்களையும் கதைகளாகப் பரப்பினர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர் பிளேட்டோ இதைப் பயன்படுத்திக் கொண்டார்.
இன்னொரு கொள்கை, அட்லாண்டிஸ் என்பது மினோயன் நாகரிகத்தின் கதை என்பதாகும். இது கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் கிரேக்கத் தீவுகளில் 2500 – 1600 ஆண்டுகளில் ஏற்பட்டது!
தேரா என்ற தீவு கடலிலிருந்து எழும்ப அந்தப் பெரும் அலைகள்
மினோயன்வாசிகளை முற்றிலுமாக அழித்தது!
கிரேக்கத் தீவுகளான க்ரீட் மற்றும் தேராவை மையமாக வைத்து மிகச் சமீபத்தில் ஒரு கொள்கை அறிஞர்களால் தரப்பட்டுள்ளது.
இந்தத் தீவுக்கு இப்போது சாண்டோரினி என்று பெயர். மினோஸ் என்ற புகழ்பெற்ற அரசனின் பெயரால் மினோயன் என்று பெயரிட்டனர் தங்கள் தீவை! 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கதை இது!
மினோயன் நாகரிகம் ஐரோப்பாவின் முதல் பெரும் நாகரிகம் ஆகும். மினோயன்வாசிகள் அருமையான பெரிய அரண்மனைகளைக் கட்டினர். பெரிய சாலைகளை அமைத்தனர். முதன் முதலாக ஒரு மொழியையும் அமைத்ததோடு அதை எழுதும் மொழியாகவும் ஆக்கினர். புகழ் பெற்றிருந்த உச்ச கட்டத்தில் இந்த நாகரிகம் தீடீரென்று மர்மமாக மறைந்தது!
இந்த மகத்தான மர்மம் தான் பிளேட்டோவை வெகுவாகக் கவர்ந்தது! ஆகவே அட்லாண்டிஸைப் பற்றி எழுத ஆரம்பித்தார்.
வரலாற்று அறிஞர்கள் கிறிஸ்துவுக்கு முன் 1600 ஆம் ஆண்டில் ஒரு பெரும் பூகம்பம் தேரா தீவில் ஒரு எரிமலை வெடிப்பை ஏற்படுத்தியதென்றும் அது 100 லட்சம் டன் பாறையைக் கக்கியது என்றும் சாம்பலும் புகையும் வளிமண்டலத்தையே அலங்கோலமாக்கியது என்றும் கூறுகின்றனர்.
இந்த பூகம்பத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமிகள் மினோயன் நகரங்களையே அழித்து ஒழித்தது என்பதும் இவர்கள் கூற்று.

எது எப்படியோ அட்லாண்டிஸ் என்பது ஒரு கற்பனை இடமே; அதை பிளேட்டோ தான் கண்டு பிடித்தார் என்பது பல விஞ்ஞானிகள் மற்றும் வரலாற்று அறிஞர்கள் ஆகியோரின் ஒருமித்த கருத்து.
பிளேட்டோவின் கருத்துப் படி அட்லாண்டிஸ் ஒரு லட்சிய நாகரிகம் அது மறைந்ததன் காரணம் கடவுளர் மனிதனுக்கு அளித்த தண்டனையாகும் என்பதே!
ஒரு சுவாரசியமான விஷயம், அட்லாண்டிஸ் பற்றிய எந்த விதமான எழுத்துபூர்வமான தகவலும் பிளேட்டோவின் உரையாடலைத் தவிர்த்து வேறெங்கும் இல்லை என்பது தான். பழைய கால கிரேக்கத் தீவுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் பழைய சுவடிகள், புத்தகங்கள் கிடைத்துள்ளன. அதில் எதிலும் அட்லாண்டிஸ் குறிப்பிடப்படவில்லை!
இன்றைய நவீன அறிவியல் தரும் சுவாரசியமான ‘லேடஸ்ட்’ தகவல் இது:
இப்போது அதி நவீன தொழில்நுட்பத்தின்படி கடலைப் பற்றிய ஆய்வுகள் மிகப் பிரமாதமான முன்னேற்றத்தைக் கொண்டுள்ளன. கடலை அப்படியே வரைபடமாக ஆக்கும் கலை மிகவும் முன்னேறி உள்ளது; அதன் படி பார்த்தாலும் அட்லாண்டிஸைக் காணோம்!
அடுத்து, இன்னும் சில விவரங்களையும் இது பற்றி அலசி விடுவோம்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..
சமீபத்திய பாக்யா இதழில் (2-2-2018 இதழ்) ஸ்டீபன் ஹாகிங்கின் 76ஆம் ஆண்டை ஒட்டி ‘மெடிகல் மிராக்கிள்’ புகழ் ஸ்டீபன் ஹாகிங்கை வாழ்த்தினோம்.
ஆனால் விதி அந்த மாபெரும் விஞ்ஞானியை நம்மிடமிருந்து புதன்கிழமை – 14-3-2018 அன்று – அதிகாலை பறித்து விட்டது.அவர் கேம்பிரிட்ஜில் தனது இல்லத்தில் காலமானார்.
வீல் சேரிலிருந்து கொண்டே பிரபஞ்சம் எங்கும் சுற்றித் திரிந்த மாபெரும் விஞ்ஞானியின் இழப்பை உடனடியாக அறிவியல் இதழ்களும், பத்திரிகைகளும் சாமான்யர்களும் பரப்பியதோடு அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளன.
அவருக்கு நோபல் பரிசு கிடைக்காத குறையை அனைவரும் சுட்டிக் காட்டியுள்ளனர். ஆப்ஸர்வேஷன் எனப்படும் உற்றுக் கவனித்தல் என்பதன் அடிப்படையில் கண்டுபிடிக்கப்படும் கண்டுபிடிப்புகளுக்கு மட்டுமே நோபல் பரிசு வழங்க வேண்டும் என்பது விதி. ஆனால் மனோ சஞ்சாரம் மூலமாக புத்தியால் அலசி ஆராய்ந்து அவர் விளக்கிய பிரபஞ்ச மர்மங்கள் இந்த ஆப்ஸர்வேஷன் வகையில் வரவில்லை. ஆகவே தான் அவருக்கும் நோபல் பரிசு கிடைக்கவில்லை. போகட்டும், விடுங்கள்!
‘ப்ளாக் ஹோல்’ எனப்படும் கருந்துளை பற்றிய அவரது விளக்கம் அவரை ஐன்ஸ்டீனுக்கு அடுத்த மாபெரும் விஞ்ஞானியாக ஆக்கி விட்டது.
இறுதி வரை அவர் செயல்பாடுடன் கூடிய விஞ்ஞானியாகவே விளங்கினார்.
அன்னாருக்கு உலக மக்களுடன் பாக்யா வாசகர்களின் அஞ்சலியும் சேர்கிறது!
***