
Written by S NAGARAJAN
Date: 3 March 2017
Time uploaded in London:- 5-56 am
Post No.3685
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
24-2-2017 பாக்யா இதழுடன் அறிவியல் துளிகள் தொடரின் ஆறாம் ஆண்டு நிறைவுறுகிறது. அதையொட்டிய கட்டுரை ஆசிரியரின் குறிப்பையும் பாக்யா ஆசிரியர் குழுவின் குறிப்பையும் கட்டுரையின் இறுதியில் காண்லாம். இந்தத் தொடரைப் படித்து ஆதரவு தரும் அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி – ச.நாகராஜன்
எட்கர் கேஸின் ஆரூடப்படி பிரம்மாண்டமான அண்டார்டிகா ஐஸ் பாறை பிளக்கிறது!
ச.நாகராஜன்

“எண்ணமும் உணர்ச்சிகளுமே பிரபஞ்சத்தை வழி நடத்திச் செல்கிறது, செயல்கள் அல்ல” – எட்கர் கேஸ்
உலகில் தோன்றிய விந்தை மனிதர்களுள் ஒருவரான எட்கர் கேஸ் (Edgar Cayce – தோற்றம் 18-3-1937 மறைவு 3-1-1945) ஏராளமானோரின் பூர்வ ஜென்ம விவரங்களை விண்டுரைத்தவர். பலரது தீராத வியாதிகளின் காரணத்தை அதீத உளவியல் ரீதியாக ஆராய்ந்து தீர்த்தவர். (இவரைப் பற்றி 15 ஆண்டுகளுக்கு முன்னர் விந்தை மனிதர்கள் தொடரில் பாக்யா 1-2-2002 மற்றும் 8-2-2002 இதழ்களில் இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரைகளை வாசகர்கள் நினைவு கூரலாம்; பழைய இதழ்களை பாதுகாத்து வைத்திருப்போர் மீண்டும் படிக்கலாம்). உலகில் நடக்கப் போகும் பல்வேறு நிகழ்வுகளைப் பற்றி இவர் பல ஆரூடங்களைக் கூறியுள்ளார்.
அவற்றுள் ஒன்று அண்டார்டிகாவில் உள்ள மிக பிரம்மாண்டமான ஐஸ் பாறைகள் (பனிப்பாறைகள்) பற்றியதாகும். .இந்த பிரம்மாண்டமான ஐஸ்பாறைகள் உருகாமல் இருப்பதாலேயே கடல் மட்டம் ஒரு அளவுக்குள் கட்டுப்பட்டு இருக்கிறது. கடலோர நகரங்கள் கடல்நீர் மட்டம் உயர்ந்து நீரில் மூழ்காமல் இருக்க் இந்த அற்புதமான் ஐஸ்பாறைகளே காரணம்!
இந்த பனிப்பாறைகளைப் பற்றி எட்கர் கேஸ் அன்றே கூறியதைப் பார்ப்போம்:
“பூமியானது பல இடங்களில் பிளவு படும். அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோரம் பௌதிக ரீதியில் மாற்றம் ஏற்படும். கிரீன்லாந்தின் வடக்குப் பகுதிகளில் நீர்ப் பெருக்கு ஏற்படும். கரிபியன் கடலில் புதிய நிலப் பிரதேசம் தோன்றும். தென்னமெரிக்காவின் உச்சியில் உள்ள பகுதி ஆட்டம் காணும், அண்டார்டிகாவில் டியரா டெல் ப்யூகோ பகுதியில் பாய்ந்து வரும் பெரும் வெள்ளப் பெருக்கு ஒன்று ஏற்படும். தென் பகுதியில் உடைபட்டு நிற்கும் ஒரு நிலை தோன்றும். அப்போது பெரும் மோசமான நிலை ஒன்று உருவாகப் போவதன் ஆரம்பம் இதுவே என்று கொள்ளலாம்.”
இந்த அவரது கூற்றை மெய்ப்பிப்பது போல, இன்று விஞ்ஞானிகள் அண்டார்டிகாவில் லார்ஸன் சி என்ற இடத்தில் ஏற்படும் பிரம்மாண்டமான பனிப் பாறைகளின் நிலையைக் கூர்ந்து கவனித்து வருகின்றனர். லார்ஸன் சி என்பது ஸ்காட்லந்தை விட பரப்பளவில் சிறியது. அங்குள்ள பிரம்மாண்டமான பனிப் படலத்தில் ஒரு விரிசல் சிறிதாக ஏற்பட்டது.

இன்று அது 70 மைல் நீள விரிசலாக ஆகியதோடு 300 அடி அகலமாக ஆகி விட்டது. இது பெரிதானால் மிக பிரம்மாண்டமான விளைவு ஏற்படும். முதலில் 2015இல் 20 மைல் நீளமே இருந்த விரிசல் 2016இல் இன்னும் 15 மைல் அதிகமானது. இப்போதோ பிரம்மாண்டமான பிளவாக 70 மைல் நீளத்திற்கு விரிந்து விட்டது. இதனால் நீர் மட்டம் உயரும். அண்டார்டிகாவில் இப்படி ஒரு பெரிய பரப்பு பிளந்து நீர் உருக ஆரம்பித்தால் உலகிற்கே வந்து விடும் அபாயம்!
மிக மோசமான நிலையில் 7 மீட்டர் அளவு கடலில் நீர் மட்ட அளவு உயரும். ஒரு மீட்டர் உயர்ந்தாலேயே ஏராளமான நாடுகளில் கடல் ஓர நகரங்கள் மூழ்கி விடும் என்ற விஞ்ஞானிகளின் எச்சரிக்கையை யாரும் மறந்திருக்க முடியாது.பத்து நாடுகள் முற்றிலுமாகவோ அல்லது அவற்றின் பல முக்கியப் பகுதிகளோ அழியும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.
இந்தப் பத்து நாடுகளின் பட்டியலை விஞ்ஞானிகள் வீடியோ வாயிலாக அனைவரும் பார்க்கும்படி கூறி விளக்குகின்றனர்.
பத்து நாடுகளின் பட்டியல் 1) சீனா 2) வியட்நாம் 3) இந்தியா 4) இந்தோனேஷியா 5) பங்களாதேஷ் 6) ஜப்பான் 7) அமெரிக்கா 8) எகிபது 9)பிரேஜில் 10) நெதர்லாந்து

அருமையான பல கடற்கரை நகரங்கள் அழியும் அபாயத்தைச் சுட்டிக் காட்டும் வீடியோ ஒரு ஆறுதலான செய்தியையும் தருகிறது. இன்னும் நிலைமை மோசமாகவில்லை. உடனடியாக மேலே சொல்லப்பட்ட நாடுகள் கார்பன் டை ஆக்ஸைடு புகையைத் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து பூமி வெப்பமயமாதலைத் தடுத்தால் ஐஸ் படலம் உருகாமல் பனிப்பாறையாகவே நிலைத்திருக்க வாய்ப்பு உண்டு. விரைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
அழிவதும் நீடித்து வாழ்வதும் நமது கையில் என்று முடிகிறது வீடியோ.
எட்கர் கேஸ் கூறிய ஆரூடத்தின் முதல் பகுதி ஆரம்பித்த நிலையில் உடனடிக் கட்டுப்பாட்டை உலக நாடுகள் எடுக்குமா அல்லது ஆருடம் முற்றிலுமாக பலிக்கும் அளவு அலட்சியமாக இருக்குமா என்பதற்கான பதில் காலத்தின் கையில் உள்ளது.
மக்கள் விழித்தெழ வேண்டும்; தங்களால் இயன்ற வழியில் எல்லாம் பூமியின் சுற்றுப்புறச் சூழலில் ஏற்படும் அனைத்து மாசையும் தடுக்க வேண்டும். இது ஒன்றே அழிவைத் தடுக்க வழி!
அறிவியல் அறிஞர் வாழ்வில் ..
இங்கிலாந்தில் பிறந்த பிரப்ல விஞ்ஞானியான ஜான் டால்டன் (தோற்றம் 6-9-1766 மறைவு 27-7-1844) அணு பற்றிய கொள்கையால் பிரப்லமானவர். ‘கலர் ப்ளைண்ட்னெஸ்’ என்று சொல்லப்படும் வண்ணங்களைப் பார்க்க இயலாமையை முதன் முதலில் கண்டு பிடித்தவரும் இவரே.

‘நீங்கள் சிவப்பு என்று கூறும் வண்ணம் எனக்குத் தெரியவில்லை. இதர வண்ணங்கள் சற்று மஞ்சளாகத் தோன்றுகிறது’ என்று கூறிய அவர் ஏன் தனக்கு வண்ணங்கள் தெரியவில்லை என்பதை கூர்ந்து ஆராய ஆர்மபித்தார். அவரது ச்கோதரருக்கும் க்லர் ப்ளைண்ட்நெஸ் இருந்தது. இதை டால்டனிஸம் (Daltonism) என்றே அனைவரும் கூற ஆரம்பித்தனர்.
இறந்தபின்னர் தன் கண்களை எடுத்து ஆராய வேண்டும் என்று அவர் விருப்பம்ம் தெரிவித்தார். அதன்படி அவர் கண்களை ஆராய்ந்ததில் நிபுணர்களுக்கு காரணம் ஒன்றும் புலப்படவில்லை. என்றாலும் அவரது கண்களில் ஒன்று அப்படியே பத்திரமாய் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டது.
1990இல் மீண்டும் அவர் கண்களள டிஎன்ஏ சோதனைப்படி ஆராய்ந்ததில் பச்சை வர்ணத்தை இனம் காண்பிக்கும் ஒரு வண்ணப் பொருள் அவரிடம் இல்லை என்பது தெரிய வந்தது.
பல வித ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்ட டால்டன் கலர் ப்ளைண்ட்னெஸால் பாதிக்கப்பட்டவர் என்பது ஒரு ஆச்சரியகரமான விஷயம்!
****
அறிவியல் துளிகள் தொடரில் ஆறு ஆண்டுகள் முடிந்தன!
தமிழ் இதழ்களில் முற்றிலும் வித்தியாசமாக ‘கமர்ஷியல் சிந்தனை’ இன்றி அறிவு பூர்வமாக வெளி வரும் பாக்யா இதழ் தமிழர்களின் சிறப்பு இதழ். கடந்த பதினெட்டு ஆண்டுகளாக பாக்யாவில் எழுதி வரும் எனது அனுபவம் சுகமான அனுபவம்.. பல தொடர்களை அடுத்து, 4-3-2011 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடர் ஆரம்பமானது. 24-2-2017 இதழுடன் ஆறு ஆண்டுகள் முடிகின்றன. தொடரை தொடர்ந்து படித்து உற்சாகமூட்டிய வாசகப் பெருமக்களுக்கும் தொடரைத் தொடர தொடர்ந்து ஊக்கமூட்டி வரும் பாக்யா ஆசிரியர் டைரக்டர் திரு பாக்யராஜ் அவர்களுக்கும், பாக்யா இதழ் தயாரிப்பில் அர்ப்பண மனோபாவத்துடன் ஈடுபட்டிருக்கும் அனைத்துக் குழுவினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்றாடம் நிகழும் அறிவியல் நிகழ்வுகள் கணக்கிலடங்கா. நவீன கண்டுபிடிப்புகளும் ஏராளம். அறிவியல் அறிஞர் வாழ்வில் நிகழ்ந்த சுவை நிரம்பிய சம்பவத் தொகுப்புகளின் எண்ணிக்கைக்கும் குறைவில்லை. இவற்றில் சுவையான சில துளிகளைத் தொகுத்து வாரந்தோறும் வழங்கும் பணி இனிமையானது. இந்தப் பயணத்தில் ஏழாம் ஆண்டு அடி எடுத்து வைத்துத் தொடர்வோம். நன்றி!
****