
Written by London Swaminathan
Date: 17 NOVEMBER 2017
Time uploaded in London- 17-43
Post No. 4404
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
பெண்கள் சிரித்தால் போர் மூளும் என்பது மஹா பாரத காலத்திலும் உண்மை; 500 ஆண்டுகளுக்கும் முன்னரும் உண்மை!
மயன் கட்டிய மாளிகையில், சலவைக் கல் தரை, கண்ணாடி போல, பளபளத்தது. அதைத் தண்ணீர் என்று நினைத்த துரியோதனன், தன் பட்டாடை நனைந்து விடப் போகிறதே என்று தூக்க, அதை மேலே மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த திரவுபதி அம்மாள் நகைக்க, துரியோதணனுக்குக் கோபம் வர, தீராப் பகை ஏற்பட்டு போராய் முடிந்ததை நாம் மஹாபாரதத்தில் படித்துள்ளோம்.
இதே போல 500 ஆண்டுகளுக்கு முன்பு, தென்னாட்டிலும் நடந்தது. ஆனால் மாபாரதப் போர் போல அழிவு ஏற்படுத்தாமல் ஒரு நூல் உதிக்கக் காரணமாய் அமைந்தது!

பாண்டியர் பரம்பரையில் வரதுங்க பாண்டியன், அதி வீரராம பாண்டியன் என்று இரு சஹோதரர்கள் இருந்தனர். மூத்தவனான வரதுங்கன் தன் மனைவியுடன், தவம் மேற்கொண்டு சிவனடியார்களுக்குத் தொண்டு புரிந்தான். அவன் திருக்கருவை நல்லூரில் வசித்தபோது, இளையவனான அதிவீரராம பாண்டியன், தென்காசியில் இருந்துகொண்டு அரசோச்சி வந்தான். அவன் சைவ புராணங்களின் சாரமான பிரம்மோத்தர காண்டம் என்னும் அரிய நூலை மொழி பெயர்த்தான். திருக்கருவை நல்லூரில் வீற்றிருக்கும் சிவ பெருமான் மீது வெண்பா அந்தாதி, கலித்துறை அந்தாதி ஆகியன பாடி சிவநேசச் செல்வனாய் வாழ்ந்து வந்தான்.
அவன் நள சரிதத்தையும் கவிதை வடிவில் யாத்தனன். பாதி நூல் வரைந்த காலையில், அதனை வரதுங்கனிடம் காட்டினன். இதென்ன அரனைத் துதிக்காமல் அரசன் துதி பாடுகிறாயே (அரன்= சிவன்; அரசன்= நள மஹாராஜா) என்று வருத்தப்பட்டனன். அண்ணன் இப்படிச் சொன்னதால், உப்பு சப்பில்லாமல் அதை ஒருவாறு பாடி முடித்தான். அதனால் அதன் பின்பகுதி சுவையற்றதாயிற்று.
அத்தோடு நில்லாமல், அதைத் தமையன் மனைவியிடம் போய்க் காட்டினான். அண்ணியாவது பாராட்டுவாளோ என்ற ஒரு நப்பாசை. அவளோ கற்றுணர்ந்த பேரரசி; தமிழரசி; புன் சிரிப்புடன் அதைத் திருப்பிக் கொடுத்தாள். எதற்காக்ச் சிரிக்கிறீர்கள்? உங்கள் அபிப்ராயம் என்ன? என்று கேட்டான் அதிவீரராமன்.
அவள் சொன்னாள்: “வேட்டை நாய், வேட்டைக்குப் போகும்போது, வேகமாகச் செல்லும்; வேட்டை முடிந்து திரும்பும்போது ஏங்கி இளைத்து வருமன்றோ! அது போலத் தான் உமது காவியம்” என்று சொல்லி சிரித்தாள்.
இது அவன் செவியில் நாராசம் பாய்ச்சியது போல இருந்தது; கோபத்துடன் வெளியே சென்றான். நால்வகைப் படைகளைத் திரட்டிக்கொண்டு படை எடுத்து வந்தான். அண்ணனுக்குத் தூதும் அனுப்பினான். அந்த தூதன் கொண்டுவந்த செய்தியைப் பார்த்த வரதுங்கன் , “நீ மார்த்தாண்டன் மைந்தனையும், விபீஷணனையும் பஞ்சவரிற் பார்த்தனையும் எண்ணாமல், பரத-ராகவருடைய அன்பை எண்ணுவாயாக” என்ற கருத்துப் பட ஒரு வெண்பாப் பாடலை எழுதி அனுப்பினன்.
அதைப் பார்த்தவுடன், சினம் தணிந்து, வெட்கம் மேலிட, அண்ணன் காலில் விழுந்து, வணங்கி, என் வாழ்வுக்கு வழிகாட்டுவாயாக என்று வேண்டினான் அதி வீர ராம பாண்டியன்.

உடனே அண்ணனான வரதுங்கன், “தம்பி, காசி காண்டத்தைத் தமிழில் மொழி பெயர்; உன் குற்றம் எல்லாம் மறையும்” என்றான். அதற்குப் பின்னர் அண்ணியார் காலடியிலும் விழுந்து வணங்கி ஆசி பெற்று சம்ஸ்கிருதத்தில் உள்ள காசிக் காண்டத்தைத் தமிழில் வடித்தான். நறுந்தொகை என்னும் நீதி நூலையும் இயற்றினான். அதன் மூலம் அவன் புகழ் தமிழ் கூறும் நல்லுலம் முழுதும் பரவிற்று. அதற்குப் பின்னர் கருவைப் பதிற்றுப் பத்து அந்தாதியும் பாடினன். முப்பது பாடலடங்கிய அம்பிகை மாலை, இலிங்க புராண தமிழ் மொழி பெயர்ப்பு என்று மேலும் பல நூல்களும் அவருடைய எழுதுகோல் மூலம் தமிழர்களுக்குக் கிடைத்தது.
–Subham—