
WRITTEN BY S NAGARAJAN
Date: 11 November 2016
Time uploaded in London: 5-09 AM
Post No.3341
Pictures are taken from various sources. Thanks.
Contact: swami_48@yahoo.com
சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 8
இந்தக் கட்டூரையில் புறநானூற்றில் உள்ள பாடல்கள் 367 மற்றும் 305 ஆகியவை இடம் பெற்றுள்ளன
புறநானூற்றில் அந்தணரும் வேதமும் ! – 5
ச.நாகராஜன்
ஔவையார் பாடிய பாடல் ஒன்று (வாழ்த்தியல் துறை) புறநானூற்றில் 367ஆம் பாடலாக மலர்கிறது. பாடப்பட்டோர் : மூன்று தமிழ் மன்னர்கள்! சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, சேரமான மாவெங்கோ!
மிகுந்த மகிழ்ச்சியுடன் மூவேந்தர் மூவரையும் வாழ்த்திப் பாடுகிறார் பெரும் புலவர் ஔவையார்.
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து
அந்த மன்னர்கள் எப்படிப்பட்டவர்கள்? தகுந்த பிராமணர்களுக்கு (ஏற்ற பார்ப்பார்க்கு) நீரினால் ஈரம் நிறைந்த கையினால் (ஈர்ங்கை நிறைய) பூ, பொன் ஆகியவற்றை கைவழியே நீரினால் சொரிந்து (பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து) தருகின்றனர்!
பாடலின் பின் பகுதியில் வரும் வரிகள் இவை:
ஒன்று புரிந்து அடங்கிய இரு பிறப்பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
மூன்று தமிழ் மன்னர்களையும் ஒரு சேரப் பார்ப்பது எப்படி இருக்கிறது? புலவருக்கு அந்தணரும் அவர்களது தீ வளர்ப்புமே ஞாபகத்திற்கு வருகிறது – உவமையாக.
அறம் ஒன்றையே கூறும் வேதத்தை நன்கு உணர்ந்து (ஒன்று புரிந்து) நன்கு புலன்களை அடக்கிய இரு பிறப்பை – தாயின் கருப்பை வழியே பூமியில் பிறக்கையில் முதல் ஜனனம், பூணூல் போடும் போது அடையும் ஞானப் பிறவி இரண்டாம் பிறப்பு, ஆக இரு பிறப்பு (அடங்கிய இரு பிறப்பாளர்) அடைந்தோர், மூன்று அக்கினிகளை வளர்த்து ஹோமம் செய்வது போல (முத்தீப் புரையக் காண் தக) இருக்கிறது. (முத்தீ விளக்கம் முந்தைய கட்டுரையில் தரப்பட்டு விட்டதால் இங்கு மீண்டும் தரப்படவில்லை).
ஔவையார் மனதார வாழ்த்தும் இந்தப் பாடலை முழுதுமாகப் படித்து அனுபவிக்க வேண்டும்! அத்துடன் சோழ மன்னனின் பெயரில் உள்ள ராஜசூய யாகம் என்ற வார்த்தை அவன் அந்தப் பெரிய யாகத்தை முறைப்படி நடத்திப் பெரும் புகழ் பெற்ற்வன் என்பதை அறிவிக்கிறது என்பதையும் அறிந்து மகிழலாம். சங்க காலத்தில் இப்ப்டிப்பட்ட பிரம்மாண்டமான யாகங்களை மன்னர்கள் செய்வது அவர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இருந்திருக்கிறது!
இன்னொரு பாடலைப் பார்ப்போம். ஏற்கனவே பார்ப்பன வாகையில் ஒரு பாடலைப் பார்த்தோம். இன்னொரு பாடல் எண் 305 இதைப் பாடியவர் மதுரை வேளாசான் என்னும் புலவர்.
வயலைக் கொடியின் வாடிய மருங்கின்
உயவல் ஊர்திப் பயலைப் பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்குச்
சொல்லிய சொல்லோ சிலவே அதற்கே
ஏணியும் சீப்பும் மாற்றி
மாண் வினை யானையும் மணி களைந்தனவே.
அடும் போர் ஒன்று நடைபெற இருக்கிறது. அதைத் தடுக்க வேண்டும்.
போர் நடக்கப் போகிறதே என்ற துக்கத்துடன் இரவு நேரத்தில் இளம் வயதுப் பார்ப்பனன் ஒருவன் வருகிறான். சில வார்த்தைகளையே சொல்கிறான். உடனே முற்றுகைக்காக இருந்த ஏணியும் வாயிலில் இருந்த கதவின் அடைப்பும் நீக்கப் பட அவனது விஜயம் வெற்றிகரமாக ஆனது.
தூதனாக வந்த தூயவன் சில சொற்களைச் சொல்ல – ஆம் – போர் நின்று விட்டது.
அந்தணனின் சில சொற்களுக்கு அவ்வளவு மஹிமை!

மெலிதான வயலைக் கொடியைப் போன்ற (வயலைக் கொடியின் வாடிய மருங்கின்) அந்தண இளைஞன் (பயலைப் பார்ப்பான்) துக்கத்துடன் வந்து (உயவல ஊர்தி) யாருக்காகவும் காத்திருக்காமல் (நில்லாது) உள்ளே நுழைந்து (புக்கு) சொல்லிய சொற்கள் சில தான்! (சொல்லிய சொல்லோ சிலவே). அதன் பின்னர் உடனேயே (அதற்கே) கதவில் இருந்த முற்றுகைக்கான ஏணியும் கதவடைப்பும் நீக்கப்பட்டன. ((ஏணியும் சீப்பும் மாற்றி)
போருக்குக் கிளம்பும் தருணத்தில் இருந்த, அழகிய போர் புரியும் யானைகளின் மீதிருந்த ரத்தினங்களும் களையப்பட்டன! (மாண் வினை யானையும் மணி களைந்தனவே.
சண்டை என்றவுடன் மன வேதனை அடைந்து சில சொற்களால் பெரும் போரை நிறுத்திய தூதுவனான ஒரு இளம் பார்ப்பானைப் போற்றிப் பாடப்படும் பாடல் இது!
போர் என்றால் அந்தக் காலத்திலும் வேதனையே மிகுந்திருந்தது என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. அதை நிறுத்துவதில் தான் அந்தணர் உள்ளம் இருந்தது.
“ஸர்வே ஜனா: ஸுகினோ பவந்து”
எல்லா மக்களும் சுகத்துடன் இருக்கட்டும்!
அந்தணர் வாழ்த்தும் வாழ்த்தில் தான் எத்தனை உயரிய சிந்தனை! சுகமான சிந்தனையும் கூட!!
*****
புறநானூற்றுப் பாடல்களை
அதிகமாகச் சுவைத்த மகிழ்ச்சியுடன் அடுத்த சங்க இலக்கியத்திற்குள் புகுவோம். (தொடரும்)
குறிப்பு: அன்பர்கள் இதுவரை வெளியாகியுள்ள எட்டுக் கட்டுரைகளையும் ஒன்றன் பின் ஒன்றாகப் படித்தால் தொடர்பு புரியும்.