அன்னை பூமியின் உரிமைகளுக்கு ஒரு சட்டம்!

globe india

Radio Talk written by S NAGARAJAN

Date: 8 November 2015

Post No:2310

Time uploaded in London :– 7-05  AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT !  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்

ச.நாகராஜன்

சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்

 

சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் விதமாக மனித குலம்  முழுவதும் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியின் ஒரு அடையாளமாக பொலிவியா நாட்டின் அன்னைபூமி சட்டம் திகழ்கிறது.

மனிதனுக்குள்ள உரிமைகள் போல அன்னை பூமிக்கும் பதினோரு உரிமைகளை அன்னை பூமி சட்டம் வழங்குகிறது!

வாழ்வதற்கான உரிமை,மனிதனின் சுற்றுப்புறச்சூழல் மாசுகளைத் தடுத்து ஆதார வளங்களைக் காத்துக் கொள்ளும் உரிமை,சுத்த நீரைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை, தூய காற்றை நிலை நிறுத்திக் கொள்ளும் உரிமை,இயற்கையின் சமச்சீரை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை, சுற்றுப்புறச்சூழல் மாசை தடுப்பதற்கான உரிமை,மரபணு மாற்றங்களை இயற்கையின் செல்லுலர் அமைப்புகளில் ஏற்படாமல் பாதுகாக்கும் உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் அன்னை பூமிக்கு உண்டு.

இந்தச் சட்டம் உலக மக்களுக்கு உணர்த்தும் ஒரு பேருண்மை என்னவெனில் “அன்னை பூமி ஒரு உயிருள்ள ஜீவன்!” என்பது தான்! அன்னை பூமி தன்னுள் ஆயிரக்கணக்கான உயிர்களை உருவாக்கி அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருகிறாள். பிரபஞ்ச அமைப்புடன் ஒன்றி இணக்கமுடன் சமச்சீரைப் பாதுகாத்து வருகிறாள்! எல்லாவித சுற்றுப்புறச்சூழல் அமைப்புகளையும், உயிர்களையும் அவற்றின் சுய நிர்வாகத்தையும் அவள் கொண்டிருக்கிறாள் என்ற பெரு நோக்கத்தின் அடிப்படையில் அன்னை பூமியின் உரிமைகளுக்கு சட்ட பூர்வமான உரிமைகள் வழங்கப்பட்டு, அன்னை பூமியும் மனித உரிமைகளைக் கொண்டுள்ள மனிதர்களைப் போலவே சட்டபூர்வமாகப்  பாதுகாக்கப்பட்டவள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சட்டங்களை உலகின் பல நாடுகளும், பல நாடுகளில் உள்ள மாநிலங்களும் இப்போது இயற்றி வருவது ஒரு நல்ல செய்தி!

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் உள்ளிட்ட பல நகரங்களின் நகரசபைகள் அன்னை பூமியின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களை இயற்றியுள்ளன.

அன்னை பூமியின் சட்ட ரீதியான உரிமைகளுக்கு மதிப்புக் கொடுத்து மனித குலம் இனியாவது தூய நீரையோ அல்லது தூய்மையான காற்றையோ இதர சுற்றுப்புறச்சூழல் அமைப்புகளையோ மாசுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக்.  கூடாது.

நமக்கு வாழ்வளித்து நம்மைக் காக்கும் நம் அன்னை பூமியை நாம் காப்போமாக!

**************