
Written by S NAGARAJAN
Date: 8 August 2018
Time uploaded in London – 7-28 AM (British Summer Time)
Post No. 5298
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
பாக்யா 10-8-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு இருபத்திமூன்றாம்) கட்டுரை
விஞ்ஞான உலகின் அபாயகரமான ஆயுதங்கள் – 1
ச.நாகராஜன்
மனித குலம் தோன்றிய நாளிலிருந்து சண்டை சச்சரவுகளும் தோன்றி விட்டன. மண்ணாசை, பெண்ணாசை, அதிகார ஆசை, தான் சரி என்பதை அடுத்தவர்கள் மீது திணிக்கும் ஆசை என்று இப்படிப் பல காரணங்கள் ஒருவரை ஒருவர் கொல்ல வழி வகுத்ததோடு பெரிய போர்களுக்கும் காரணமாக ஆகி விட்டன.
கற்களை ஆயுதமாகப் பயன்படுத்த ஆரம்பித்து, கடைசியில் அணுகுண்டைப் போடுவது வரை சண்டைகளில் பயன்படுத்தப்பட்ட பயங்கரமான ஆயுதங்களை உலக வரலாறு பார்த்து விட்டது.
வளர்ந்து விட்ட விஞ்ஞான உலகில் பல வித பயங்கரமான ஆயுதங்களை உருவாக்க பல நாடுகளும் முயன்றன; முயல்கின்றன! இது பற்றி சாமான்யர்கள் யாருக்கும் தெரியாது. ரகசியமான இந்த ஆயுதங்கள் அபாயகரமானவை. இவை பற்றி அறிந்தால் குலை பதறும். எந்தெந்த மாதிரியான ஆயுதங்கள் உருவாக்கப்பட்டன, உருவாக்கப்படுகின்றன என்பதை அறிய ஒரு சிறிய பட்டியலை மாதிரிக்காகப் பார்க்கலாம்:
ரொபாட் நாய்
யுத்தங்களில் குண்டுகள் புதைக்கப்பட்டிருக்கின்றனவா என்பதைக் கண்டுபிடிக்க நாய்களின் மோப்ப சக்தி உதவும் என்பதால் அவை பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால் போஸ்டன் டைனமிக்ஸ் என்ற நிறுவனம் ‘பிக் டாக்’ என்ற ஒரு சாதனத்தைத் தயார் செய்தது. சாதாரணமாக மனிதர்கள் ஏற கஷ்டப்பட்டும் கரடுமுரடான பாதைகள், மலைப் பகுதிகள் ஆகியவற்றில் இந்த ரொபாட் நாய் அனாயாசமாக பெரிய பாரத்தை முதுகில் சுமந்து கொண்டு வேகமாக ஏறும். இது இப்போது ஆப்கானிஸ்தானத்தில் சோதனை செய்யப்படுகிறது. தேனீக்களின் ரீங்காரத் தொனியோடு குலுக்கல் நடையோடு இந்த சடைநாய் மெதுவாக முன்னேறும். 109 கிலோகிராம் எடையை இது சுமக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 45 கிலோகிராம் எடையை தூக்கிச் சென்றது.ஆகவே ராணுவ வீரர்கள் இந்த அளவு எடையைத் தூக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் இது போடும் சப்தம் ராணுவ வீரர்கள் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுத்து விடும் என்பதால் இது பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படவில்லை. இதை மேம்படுத்துவதற்கான சோதனைகள் தொடர்கின்றன.
கண்ணைக் குருடாக்கும் துப்பாக்கி
இந்தத் துப்பாக்கி ஆளைக் கொல்லாது. இது கண்களைக் குறி வைக்கும். இதன் லேஸர்கள் ஒரு ஆளின் கண்களைச் சிறிது நேரத்திற்குக் குருடாக்கும். கிரிமினல்களைச் செயலிழக்க வைத்து கைது செய்ய இது பயன்படும். போரிலும் எதிரிகளைத் தற்காலிகமாக செயலிழக்கச் செய்ய இது பயன்படும். ஆனால் 1995ஆம் ஆண்டில் ஐநா கண்களைக் குருடாக்கும் ஆயுதத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று ஜெனிவா ஒப்பந்தத்தின் படி அறிவித்திருக்கிறது. இதன் முழுப் பெயர் PHASR. (Personal halting and stimulation response rifle) என்பதாகும்.
புறாக் குண்டுகள்
ப்ராஜக்ட் பீஜன் என்ற இந்த திட்டம் 1944இல் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்டது. பின்னர் மீண்டு 1948இல் ப்ராஜக்ட் ஆர்கான் என்று ஆரம்பிக்கப்பட்டது. இப்போது மின்னணு சாதனங்கள் ஏராளமாகக் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால் புதிய அளவில் புறாக் குண்டுகள் என்ற இந்த பயங்கரமான திட்டம் உருவாகி விட்டது. இதன்படி புறாக்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்படும். ஒரு திரையின் எதிரில் புறாக்கள் உட்கார்த்தி வைக்கப்படும். அந்தத் திரையில் குண்டு போட வேண்டிய இடம் நன்கு காண்பிக்கப்படும். பின்னர் புறாக்கள் குண்டுடன் பறக்க விடப்படும். தான் திரையில் பார்த்த இடத்தை அடைந்தவுடன் அதைக் கண்டு கொள்ளும் புறாக்கள் குண்டை அங்கு போடும். விளைவு தெரிந்தது தானே!
சோவியத்தின் ‘தாக்கும் டால்பின்கள்’
மிருகங்களைப் போரில் ஈடுபடுத்துவதில் சோவியத் யூனியனும் சளைக்கவில்லை. போர் புரியும் டால்பின்களை அது பயிற்சிக்குத் தயாராக்கியது. இந்தத் திட்டத்த்தை அது ஆயிரத்திதொள்ளாயிரத்து அறுபதுகளில் ஆரம்பித்தது. நீரில் மூழ்கி போர் புரியும் திட்டம் இது. இதே போல இந்த உத்தியை அமெரிக்காவும் ஆராய ஆரம்பித்தது. ஆனால் இவற்றை குண்டு ஏந்திக் கொண்டு செல்ல பயிற்றுவிக்க முடியாது. ஏனெனில் டால்பின்களுக்கு எதிரிகள் யார் நண்பர்கள் யார் என்பதை வேறுபடுத்தி பார்க்கத் தெரியாது.

கோழி அணுகுண்டுகள்
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஒரு புது ஆயுதம் உருவாக்கப்பட்டது. 8 டன் எடை கொண்ட இந்த அணு ஆயுதத்தின் பெயர் ‘ப்ளூ பீகாக்’ – நீல மயில் என்பதாகும். பிரிட்டனின் திட்டத்தின் படி, ஜெர்மனியில் இது புதைத்து வைக்கப்படும். சோவியத் கிழக்கிலிருந்து படையெடுத்து வந்தால் இது பயன்படுத்தப்படும். ஆனால் இதில் ஒரு பிரச்சினை இருந்தது. குளிர்காலம் என்பது மிக மிகக் கடுங்குளிரை உருவாக்குவதால் சுரங்கக் குண்டுகள் வெடிக்கவே வெடிக்காது. ஆகவே கோழிகளை இந்த குண்டுகளுக்கு வெப்பமூட்டத் தீர்மானிக்கப்பட்டது. ஒரு கூண்டில் கோழிக்கான ஒரு வாரத் தீனி போடப்படும். உணவு, நீர் ஆகியவற்றுடன் கோழிக் குண்டுகள் இருப்பதால் சுரங்கக் குண்டுகள் ஒரு வாரம் வரை நன்கு செயல்படும். ஆனால் இந்தத் திட்டம் அணு ஆயுதத்தின் எதிர் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதால் கைவிடப்பட்டது..
அடுத்து இன்னும் சில பயங்கர ஆயுதங்களைப் பார்ப்போம்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .
.
மிஹைல் கலஷ்னிகோவ் ஒரு ரஷிய விஞ்ஞானி.(பிறப்பு 10-11-1919 மறைவு 23-12-2013).தாய்நாட்டைக் காப்பதற்காக ரஷிய ராணுவத்தில் சேர்ந்தார் அவர். அவரது தோழர்கள் அபாயகரமான துப்பாக்கிகளுக்குப் பதிலாக எளிதாக இயக்கக் கூடிய துப்பாக்கி வேண்டும் என்று அவரிடம் சொன்னதால் புதிய ரக துப்பாக்கி ஒன்றை அவர் கண்டு பிடித்தார். அது அவர் பெயராலேயே இன்றும் அழைக்கப்படுகிறது. அவ்டோமெட் கலஷ்னிகோவ் மாடல் 1947 (Avtomat Kalashnikove Model 1947) என்பதைனச் சுருக்கி இன்று ஏகே47 என்று அது அழைக்கப்படுகிறது. உலகில் இன்றைய மிகத் திறன் வாய்ந்த துப்பாக்கி அது தான். எடை குறைவு. உயிருள்ள ஒரு கோழிக் குஞ்சின் விலையை விட அதன் விலை குறைவு. எந்த சீதோஷ்ண நிலை இருந்தாலும் அதை எளிதில் இயக்க முடியும். இந்தக் கண்டுபிடிப்பால் அவர் ரஷியாவின் மிகச் சிறந்த வீரராகக் கருதப்படுகிறார். ஆனால் இந்த துப்பாக்கியை தீவிரவாதிகள் தங்களது ஆயுதமாகக் கையாளுவதைக் கண்ட அவர் மிகவும் நொந்து போனார். கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில், “ எனது கண்டுபிடிப்பால் நான் கர்வப்படுகிறேன். ஆனால் இதைத் தீவிரவாதிகள் பயன்படுத்துவதைக் கண்டு மனம் நொந்து போகிறேன். இதற்கு பதில் விவசாயிகள் பயன்படுத்தக் கூடிய அறுவடை மெஷினைக் கண்டுபிடித்திருப்பதையே நான் விரும்புகிறேன்” என்றார்.
2009ஆம் ஆண்டு வரை 10 கோடி ஏகே 47 துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பாதி போலியானவை. இதனால் இன்னும் நொந்து போன கலஷ்னிகோவ் ரஷிய ஆர்தோடாக்ஸ் சர்ச்சுக்கு மன்னிப்புக் கேட்டு ஒரு கடிதம் எழுதினார். “93 வயதான மிஹைல் கலஷ்னிகோவ் என்னும் விவசாயியின் மகனான நான் எனது துப்பாக்கி பலரது உயிரை இழக்கச் செய்திருப்பதால் ஆன்மீக ரீதியான எனது வலி பொறுக்கமுடியாததாக இருப்பதால் மன்னிப்புக் கேட்கிறேன்”
சர்ச் அவருக்கு மன்னிப்பு வழங்கியது. அதன் பின்னர் ஆறு மாதம் கழித்து அவர் காலமானார்.
***