
Picture of Invisible Cloak
Written by S Nagarajan
Date: 14 August 2018
Time uploaded in London – 7-55 AM (British Summer Time)
Post No. 5318
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
17-8-2018 தேதியிட்டபாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு இருபத்திநான்காம்) கட்டுரை
விஞ்ஞான உலகின் அபாயகரமான ஆயுதங்கள் – 2
ச.நாகராஜன்
மனித குலத்தைப் பதைபதைக்க வைக்கும் ஆயுதங்களின் பட்டியலுக்கு முடிவே இல்லை. இன்னும் சில தயாரிப்புகளைப் பற்றிப் பார்ப்போம்.
மனத்தை பேதலிக்க வைக்கும் BZ குண்டு
மனிதர்களைக் காயப்படுத்துவது தான் ஆயுதம் என்பதில்லை. மனதைப் பேதலிக்க வைக்கும் ஆயுதங்களும் உண்டு. இப்படிப்பட்ட ஒன்றை ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் சி ஐ ஏ கண்டுபிடித்தது. இதன் பெயர் BZ குண்டு. இது ஹாலுசினோஜென் 3 என்ற மனதை பேதலிக்கும் பொருளாலானது. இதைச் சோதித்து பார்த்த ஒரு ராணுவ வீரர் பயங்கரமான கனவுகள் வருவதாகத் தெரிவித்தார். தாங்க முடியாத தலைவலியும் ஓய்வற்ற தன்மையும் ஏற்படுவதாகத் தெரிவித்தார். ஆனால் இந்த பி இஸட் குண்டு தயாரிக்கப்படவில்லை. ஏனெனில் இதன் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.

ஐஸ்பெர்க் ஏந்தும் விமானம்
இரண்டாவது உலக மகா யுத்தத்தில் பிரிட்டன், ஐஸின் குளிர் தன்மையைக் கொலைகார ஆயுதமாக மாற்ற நினைத்தது. பிரம்மாண்டமான ஐஸ்கட்டியை – பனிப்பாறையை ஏந்திச் செல்லும் விமான வடிவமைப்பை ப்ராஜக்ட் ஹபாக்குக் (Project Habakkuk) என்ற பெயரில் தயாரிக்க ஆரம்பித்தது. பனிப்பாறையை மரத்தூளுடன் கலந்து உடைக்கமுடியாதபடி ஆக்கி விடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. வின்ஸ்டன் சர்ச்சில் திட்டத்திற்கு அங்கீகாரம் அளித்தார். ஆனால் அவ்வளவு பெரிய விமானத்தை உருவாக்குவது என்பது எளிதாக இல்லை. ஆகவே திட்டம் கைவிடப்பட்டது. இந்த திட்டத்தில் முனைப்பாக இருந்த கனடிய விஞ்ஞானி சார்லஸ் ஃப்ரெடெரிக் குடேவ் பின்னால் இதை வெளிப்படுத்தினார்.

பிக் பாபிலோன்
ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் ஒரு பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் தனது கண்டுபிடிப்பான பிரம்மாண்டமான ராட்சஸ துப்பாக்கி பற்றித் தெரிவித்தார். அந்த சூப்பர் கன் 512 அடி நீளமுடையது. அதன் பெயர் பிக் பாபிலோன். ஏனெனில் அதை விண்வெளியிலிருந்து பாபிலோனைப் பார்க்க முடிவது போலப் பார்க்க முடிவதால் அதற்கு அந்தப் பெயர் தரப்பட்டது. ஆனால் இதன் தயாரிப்பில் பிரிட்டன் அவ்வளவாக ஆர்வம் காட்டாததால் இதன் வடிவமைப்பாளரான கனடாவைச் சேர்ந்த ஜெரால்ட் புல் இதை இரானின் சர்வாதிகாரியான சதாம் ஹுசைனுக்குத் தர முன் வந்தார். 1988இல் ‘மாதிரி சூப்பர் கன்’ உருவாக்கப்பட்டது. ஆனால் இவ்வளவு பிரம்மாண்ட ஆயுதத்தை யுத்த களத்தில் நகர்த்திக் கொண்டு செல்வது கடினம் என்பதால் யாரும் இதில் ஆர்வம் காட்டவில்லை.
பார்க்க முடியாத மேலாடை
2016இல் ராணுவம் உபயோகிக்கத்தக்க யாருமே பார்க்க முடியாத சீருடையைத் தயாரிக்க முடியுமா என்று அமெரிக்கா ஆராய ஆரம்பித்தது. மலைகள், சமவெளிப்பகுதிகள் போல அனைத்துப் பகுதிகளிலும் இதை ராணுவத்தினர் அணியும் போது அதை யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி இருக்க வேண்டும்! 2006இல் ஒளியை வளைத்து இப்படி ஒரு வடிவமைப்புடன் கூடிய மேலாடையை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறினர். இதை உருவாக்க முயலும் பொருள்களுக்கு மெடாமெடிரீயல் (metamaterials) என்று பெயர். 2015இல் ஒரு விஞ்ஞானி மிக மிக மெலிதான செராமிக் பொருள் வெவ்வேறு அலைநீளங்களில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறது என்றார். ஆனால் இப்படிப்பட்ட மாயாஜால உடை இப்போதே புழக்கத்தில் இருக்கிறது. அணு ஆயுதங்கள் மற்றும் குண்டுகளை ஏந்திச் செல்லும் பி 2 விமானங்களில் உள்ளோர் அணியும் ஆடையில் மேலே ஒரு பூச்சு பூச்சப்படுகிறது. இதனால் அவர்கள் ஆடை கண்ணுக்குத் தெரியாது. அதாவது அதை அணிந்தோர் கண்ணுக்குத் தெரியமாட்டார்கள்.

வலி கொடுக்கும் கதிர்கள்
அமெரிக்க ராணுவத்தின் அதிரடித் தயாரிப்புகளில் ஒன்று ‘ஆக்டிவ் டினையல் சிஸ்டம்’ என்னும் ஆயுதம். அதாவது வலி கொடுக்கும் கதிர்கள் என்று இதற்கு அர்த்தம். இதை பிரயோகப்படுத்தினால், இது மனிதர்களின் மீது பாய்ந்து அவர்களின் உடல் வெப்பத்தை அதிகரித்து தாங்க முடியாத வலியைத் தரும். சந்தேகத்திற்கு இடமாக ராணுவ முகாம்கள், தளங்களில் நடமாடும் ஒற்றர்களைக் கொல்லாமல் அவர்களை வலியினால் துடிதுடிக்க வைத்து விரட்டி விடுவதே இதன் நோக்கம். லாஸ் ஏஞ்சலிஸில் இது கைதிகள் தப்பி ஓடி விடாதபடி செய்யப் பயன்படுத்த முடியுமா என்று சோதனை செய்து பார்க்கப்பட்டதாம். தேவையற்ற கிளர்ச்சியாளர்களையும் இது விரட்டிவிடும்.
பக்கிள் கன்
உலகின் முதல் அபாயகரமான ஆயுதத்தை 1718இல் ஜேம்ஸ் பக்கிள் என்பவர் கண்டுபிடித்தார். இவர் கண்டுபிடித்த துப்பாக்கி குண்டுகள் நாம் இன்று காண்பது போல வட்டமாக இருக்காது. மாறாக சதுரமாக இருக்கும். ஒரு நிமிடத்திற்கு ஒன்பது குண்டுகள் பாயும். சதுர குண்டுகள் அதிகமான வலியைத் தரும் என்பதால் இதை இப்படி உருவாக்கினார் பக்கிள். இது தான் உலகின் முதல் மெஷின் கன். ஆனால் இதைச் சுடுவது நம்பகத்தன்மை இல்லாததாக இருந்ததால் இது புழக்கத்திற்கு வரவே இல்லை.
ஆக இப்படி நூற்றுக் கணக்கில் அபாயகரமான ஆயுதங்கள் உலகில் தயாரிக்கப்பட்டன; தயாரிக்கப்படுகின்றன.
இரகசியமாக இவை இருப்பதால் நமக்கு எத்தனை ஆயுதங்கள் எப்படியெல்லாம் இருக்கின்றன என்பது தெரியாது. அவை என்ன செய்யும் என்பது தெரியாது. பலவிதமாக நமக்குத் தெரிந்தவற்றுள் சிலவற்றைத் தான் மேலே பார்த்தோம்.இன்னும் கெமிக்கல் ஆயுதங்களைப் பற்றி சரிவரத் தெரியவில்லை. இந்த இரசாயன ஆயுதங்கள் நச்சைப் பாய்ச்சும் ஆயுதங்கள் என்பதால் நினைக்கவே பதைபதைக்க வைக்கும்.
உலகை இப்படிப்பட்ட ஆயுதங்களிலிருந்து காப்பாற்ற மனிதரின் மனதில் தான் மாற்றம் வரவேண்டும். அதுவரை நமக்கு மிஞ்சுவது ஏமாற்றமே!

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..
இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் கணினி விஞ்ஞானிகளில் மிகவும் பிரபலமானவர் அமெரிக்க விஞ்ஞானியான டொனால்ட் க்னுத்.(Donald Knuth பிறப்பு 10-1-1938). சிறந்த கணிதமேதையான அவர் தனது முதல் விஞ்ஞான கட்டுரையை பள்ளி பத்திரிகை ஒன்றில் 1957இல் எழுதினார். கம்ப்யூட்டர் ப்ரோகிராமிங் பற்றிய அவரது மிகப் பிரபலமான புத்தகம் ‘தி ஆர்ட் ஆஃப் கம்ப்யூட்டர் ப்ரொக்ராமிங்’ (The Art of Computer Programming) என்பதாகும். ஐம்பது வருடங்களுக்கு மேலாகியும் கூட இதில் இருக்கும் விஷயங்கள் இன்றைக்கும் பொருந்துவதாக இருப்பது வியப்பை அளிப்பதாகும். அதுவே இதன் சிறப்பு.
ப்ரொக்ராமிங் பற்றி அறிய விரும்புவோர் தவறாது நாடுவது இந்தப் பல பாகங்கள் கொண்ட நூலையே!
மனிதர் மிகவும் நகைச்சுவையாளர். தனது புத்தகத்தில் தவறைக் கண்டுபிடிப்போருக்கு ‘கண்டுபிடிப்பு பரிசு’ ஒன்றை அவர் அறிவித்தார். அதன் படி ஒரு தவறைக் கண்டுபிடித்துச் சுட்டிக் காட்டினால் அப்படிக் காட்டியவருகு இரண்டு டாலர் 56 சென்டை பரிசாக அளித்தார். இவரது செக்கைப் பெறுவது ஒரு பெறுதற்கரிய ஒரு பெரிய விருதாக கம்ப்யூட்டர் உலகில் கருதப்படுகிறது.
இவரது புகழ் பெற்ற மேற்கோள் வாசகம் ஒன்று இவரது மேதைத்தன்மையைப் புலப்படுத்துகிறது. “ஒரு உணவு விடுதிக்குச் சென்று அங்கு உணவு வகைகளை என்னால் ஆர்டர் செய்ய முடியாது. ஏனெனில் மெனுவில் உள்ள எழுத்து வடிவங்களைத் தான் நான் பார்க்கிறேன். ஐந்து நிமிடம் கழித்துத் தான் அது ஒரு உணவு வகையைப் பற்றியும் கூறுகிறது என்பதை நான் உணர்கிறேன். (I can’t go to a restaurant and order food because I keep looking at the fonts on the menu. Five minutes later I realize that it is also talking about food.”)
***