நோபல் பரிசை வென்றார் இந்தியர் அபிஜித் (Post No.7195)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 9  NOVEMBER 2019

Time  in London – 6-08 am

Post No. 7195

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

பாக்யா 1-11-2019 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு பத்தொன்பதாம் கட்டுரை – அத்தியாயம் 435

நோபல் பரிசை வென்றார் இந்தியர் அபிஜித் விநாயக் பானர்ஜி!

ச.நாகராஜன்

இந்த ஆண்டில் (2019) அறிவிக்கப்பட்ட நோபல் பரிசுகள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் வியப்பையும் அளித்துள்ளன என்றால் அது மிகையல்ல.

இந்தியாவில் மும்பையில் பிறந்து கல்கத்தாவில் வளர்ந்து டெல்லியில் படித்து இப்போது அமெரிக்காவில் வசிக்கும் அபிஜித் விநாயக் பானர்ஜி பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசைத் தன் மனைவி எஸ்தர் டஃப்லோ மற்றும் சக ஆய்வாளர் மைக்கேல் கிரெமர் ஆகியோருடன் இணைந்து பெற்றுள்ளார்.

இந்தியாவின் பெருமிதத்திற்கான தருணம் இது.

ரபீந்திரநாத் தாகூர், சர் சி.வி.ராமன், ஹர் கோபிந்த் கொரானா, மதர் தெரஸா, எஸ். சந்திரசேகர், அமார்த்ய சென், வி.ராமகிருஷ்ணன், கைலாஷ் சத்யார்த்தி ஆகியோரைத் தொடர்ந்து ஒன்பதாவதாக இந்தப் பரிசை வென்றுள்ள இந்தியர் என்ற பெருமையைப் பெறுகிறார் அபிஜித்! (பிறப்பு : 1961 பிப்ரவரி 21- வயது 58)

அவர் பரிசு பெற்றதற்கான காரணம் இன்னும் அதிக பெருமையைத் தரும். உலகளாவிய விதத்தில் வறுமையைக் குறைப்பது எப்படி என்பது பற்றிய சோதனை பூர்வமான ஆய்வுக்காகவே அவர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

பாக்யாவின் வாழ்த்துக்களை உளங்கனிய நோபல் பரிசை வென்ற அபிஜித் அவர்களுக்கு வழங்குகிறோம்.

அடுத்து, மொபைல் போன், கம்ப்யூட்டர், லேப் டாப் உள்ளிட்ட சாதனங்களை வைத்துள்ளோர் அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்படும் வண்ணம் லிதியம்-அயான் பேட்டரிகளைக் கண்டுபிடித்துள்ள மூன்று விஞ்ஞானிகளுக்கு இரசாயனத்திற்கான நோபல் விருது வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பேராசிரியரான ஜான் குட்எனஃப் (John Goodenough)-க்கு வயது 97. நோபல் பரிசைப் பெற்றவர்களிலேயே மிக அதிக வயதுடையைவர் இவர் தான் என்ற சாதனையும் இவரைச் சேர்கிறது. நோபல் பரிசு பெற வயது ஒரு தடை இல்லை என்பதை இந்தப் பரிசு நிரூபிக்கிறது!

இவருடன் இந்தப் பரிசைப் பகிர்பவர்கள் ஸ்டான்லி விவ்விங்ஹாம் (வயது 77) என்ற பிரிட்டிஷ்-அமெரிக்க பேராசிரியரும், அகிரா யோஷினோ (வயது 71) என்ற ஜப்பானியப் பேராசிரியரும் ஆவர்.

படிம எரிபொருள் பயன்பாட்டை நீக்கி மறுசுழற்சிக்குள்ளாக்கும் ஆற்றலைக் கண்டுபிடித்ததே இவர்களின் சிறப்பு. நீடித்துழைக்கும் பேட்டரியினால் ஆற்றல் சேமிப்பு அதிகமாகிறது என்பதோடு எதிர்காலத்தில் இன்னும் அதிக ஆற்றலைச் சேமிக்கும் கண்டுபிடிப்புகளுக்கு இது அடித்தளமாக அமையும்.

அடுத்து இயற்பியலில் 2019ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பதை புரிய வைக்கும் முயற்சிகளில் அரிய சேவை ஆற்றியதற்காகவும் பிரபஞ்சத்தில் பூமி எந்த இடத்தை வகிக்கிறது என்பதை அறிந்து கூறியதற்காகவும் மூவருக்கு அளிக்கப்படுகிறது.

பரிசில் பாதியை ஜேம்ஸ் பீபிள்ஸ் பெறுகிறார். மீதிப் பாதியை மிகேல் மேயரும் டிடியர் க்லாஸும் பெறுகின்றனர். சோலார் வகை நட்சத்திரத்தைச் சுற்றி ஒரு எக்ஸோ பிளானட் இருப்பதைக் கண்டு பிடித்ததற்காக இவர்கள் இருவருக்கும் பரிசு வழங்கப்படுகிறது.

(சூரிய மண்டலத்தில் அனைத்து கிரகங்களும் சூரியனைச் சுற்றியே வருகின்றன. சூரிய மண்டலத்திற்கு அப்பால் இதர நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கிரகங்கள் எக்ஸோபிளானட் என்று குறிப்பிடப்படுகின்றன.)

 சூரிய மண்டலத்திற்கு அப்பால் உள்ள ஒரு கிரகத்தை இவர்கள் சுட்டிக் காட்ட பால்வீதி மண்டலத்தில் சுமார் 4000 எக்ஸோபிளானட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆகவே தான் இவர்களை நோபல் கமிட்டி பாராட்டி பரிசை அளித்துள்ளது.

அடுத்து சமாதானப் பரிசைப் பெறுபவர் எதியோப்பியாவின் பிரதம  மந்திரியான அபி அஹ்மத் அலி. எதியோப்பியாவுக்கும் அண்டை நாடான எரிட்ரியாவிற்கும் நடந்து வந்த மோசமான போரை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக இந்த சமாதானப் பரிசு இவருக்கு வழங்கப்படுகிறது. இத்தனைக்கும் இவருக்கு வயது 43 தான்.

ஆயிரத்திதொள்ளாயிரத்து அறுபதுகளில் எதியோப்பியா எரிட்ரியாவைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஆனால் எரிட்ரியா மக்கள் ஓட்டெடுப்பில் தனித்து இருப்பதை விரும்பவே அப்படியே இரு நாடுகளும் 1993இல் தனி நாடுகளாக ஆயின.  ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் பாட்மே என்ற எல்லை ஓர நகரின் உரிமை பற்றி கருத்து வேறுபாடு எழுந்தது. பெரும் வன்முறை எழுந்தது. 2000 முதல் 2002க்குள் சுமார் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டனர். பன்னாட்டு எல்லை கமிஷன் பாட்மே நகரை எரிட்ரியாவிற்கு வழங்கித் தீர்ப்பளித்தது. ஆனால் எதியோப்பியா அந்த நகரைத் தரவில்லை. ஆகவே ஒரு போர் சூழ்நிலை நிரந்தரமாக அங்கு உருவானது. எரிட்ரியாவை உலகினர் ‘ஆப்பிரிக்காவின் வடகொரியா’ என அழைக்க ஆரம்பித்தனர். எரிட்ரியாவில் நீடித்த எமர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டது. 18 வயது ஆனவுடன் தேசீய சேவைக்காக அனைத்து எரிட்ரியாவாசிகளும் அழைக்கப்பட்டனர். பெரும்பாலானோர் ராணுவ சேவைக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில் எதியோப்பியாவின் பிரதம மந்திரியாக அபி அஹ்மத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்ந்தெடுக்கப்பட்டவுடனேயே சுறுசுறுப்புடன் செயல்பட ஆரம்பித்த அபி நூறு நாட்களுக்குள்ளாகவே பல்லாண்டுகளாக நீடித்து வந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு கண்டார். முதலில் எதியோப்பியாவில் இருந்த எமர்ஜென்ஸியை ரத்து செய்தார். ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளை விடுதலை செய்தார்.

பன்னாட்டு எல்லை கமிஷன் கூறுவதை ஏற்பதாகவும் அவர் அறிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே தகவல் தொடர்பு, விமானப் போக்குவரத்து உள்ளிட்டவை ஆரம்பமாயின.

அதிக உற்சாகத்துடன் இப்படி தீவிரமாக சமாதானத்திற்காகப் பாடுபட்ட, பாடுபட்டு வரும் அபியை ஊக்குவிக்கும் விதமாக இந்த சமாதானப் பரிசு தருவதாக நோபல் பரிசுக் கமிட்டி கூறி இருப்பதை உலகில் சமாதானத்தை நிலை நிறுத்த விரும்பும் அனைவரும் வரவேற்றுள்ளனர்.

என்ற போதும் இந்த சின்ன வயதிலேயே இப்போது தான் பிரதம மந்திரியான ஒருவருக்கு சமாதான பரிசை அளிப்பது சரிதானா என்றும் சிலர் முணுமுணுக்கின்றனர். எரிட்ரியாவும் இந்த அளவிற்கு சமாதானத்தில் முனைப்பு காட்டவில்லையே என்பது தான அவர்களின் அங்கலாய்ப்பு.

ஆனால் போர் நிறுத்தப்பட்டு விட்டது. தடை செய்யப்பட்டிருந்த ஊடகங்கள் தடை நீங்கிச் செயல்பட ஆரம்பித்து விட்டன.

நல்ல மாறுதலை உலகம் வரவேற்கும் இந்த நிலையில் அபி அஹ்மதுக்கு உலகமே வாழ்த்துத் தெரிவிக்கிறது – நாமும் தான்.

இன்னும் மருத்துவம் மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

நோபல் பரிசு பெற்ற அனைவருக்கும் நமது  வாழ்த்துக்கள்

அறிவியல் அறிஞர் வாழ்வில் :;

சோவியத் விண்வெளி வீரரான அலெக்ஸி லியனோவ் முதலில் விண்வெளியில் நடந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றவர். 1934ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் தேதி பிறந்த லியனோவ் தனது 85வது வயதில் அக்டோபர் 11ஆம் தேதி 2019இல் மரணமடைந்தார்.

1965ஆம் ஆண்டு துணிந்து விண்கலத்திலிருந்து வெளியே வந்து நடந்து அவர் சாதனை படைத்தார். மனிதனை சுமந்து சென்ற 17வது விண்கலத்தில் மார்ச் 1965இல் அவர் விண்வெளி ஏகினார். விண்கலத்திலிருந்து வெளியேறிய சில நிமிடங்களிலேயே அவரது விண்வெளி உடை உப்ப ஆரம்பித்தது. அவரது சகாவான பவேல் பெலயாவாலாலும் உதவிக்கு வர முடியவில்லை. இப்படி உப்பிய நிலையில் அவரால் மீண்டும் விண்கலத்திற்குள் நுழையவே முடியாது. துணிந்து தன் விண்வெளி உடையின் அழுத்தத்தைக் குறைக்க அதிலிருந்து காற்றை வெளியேற்ற ஆரம்பித்தார். இதனால் விண்கலத்தை அடைவதற்குள் அவரது ரத்தத்தில் நைட்ரஜன் கொதிக்க ஆரம்பிக்கும் என்பது அவருக்கு நன்கு தெரியும். ஒரு வழியாக விண்கலத்திற்கு மீண்டார். 12 நிமிடம் 9 விநாடிகள் விண்கலத்திற்கு வெளியே இருந்து விண்வெளியில் மனிதன் இருக்க முடியும் என்பதை அவர் நிரூபித்தார். பின்னர் மறுநாள் 19-3-1965 அன்று பூமி திரும்பினார். இதனால் சந்திரனில் மனிதன் இறங்க முடியும் என்பது நிரூபணமானது.

விண்கலத்திலிருந்து வெளியே வந்தவுடன் தன் பார்வையை பிரபஞ்சத்தை நோக்கிச் செலுத்திய லியனோவ், “ஆஹா பூமி உருண்டையாக இருக்கிறது. மேலே நட்சத்திரங்கள். கீழே நட்சத்திரங்கள். இடப்புறமும் வலப்புறமும் நட்சத்திரங்கள்! சூரியனின் ஒளி என் முகத்தில் அடிக்கிறது” எனக் கூவினார்.

1975இல் மீண்டும் விண்வெளி சென்ற லியனோவ் அங்கு அபல்லோ விண்கலத்தில் சென்ற அமெரிக்க விண்வெளி வீரர்களைச் சந்தித்தார்.

மொத்தத்தில் 113 முறை அவர் பூமியின் சுற்றுப்பாதையில் வலம் வந்தார். 7 நாட்கள் 32 நிமிடங்கள் அவர் மொத்தமாக விண்வெளியில் இருந்திருக்கிறார்.

அவரை கௌரவிக்கும் வண்ணம் ஏராளமான விருதுகள் அவருக்குத் தரப்பட்டுள்ளன.

அவரது மறைவு குறித்து விண்வெளி ஆர்வலர்கள் தங்கள் சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

****