யார் உபந்யாசம் செய்யலாம்? யார் செய்யக்கூடாது? (Post No.3922)

Written by London Swaminathan

 

Date: 19 May 2017

 

Time uploaded in London: 21-30

 

Post No. 3922

 

Pictures are taken from various sources such as Face book, google and Wikipedia; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

‘ஊருக்குத்தாண்டி உபதேசம்,உனக்கல்ல’ என்ற கதையை எல்லோரும் கேட்டிருப்பீர்கள். அறநெறிச் சாரம் என்ற நூல் யார் உபதேசமோ, உபந்யாசமோ செய்யத் தகுதி உடையவர், யார் அந்த தகுதி இல்லாதவர்கள், யார் உபதேசம் கேட்கலாம், கேட்கக்கூடாது என்றெல்லாம் மிக அழகாகக் கூறுகிறது. முனைப்பாடியார் என்ற புலவர் இயற்றிய  இந்த நூலில் 226 வெண்பாக்கள் உள.

 

1.அறம் உரைப்பவன் இயல்பு

 

அற கேட்டு அருள் புரிந்து ஐம்புலன்கள் மாட்டும்

இறங்காது இருசார் பொருளும் – துறந்து அடங்கி

மன்னுயிர்க்கு உய்ந்து போம் வாயில் உரைப்பானேற்

பன்னுதற்குப் பாற்பட்டவன்

 

பொருள்:

அற நூல்கள் பல கேட்டவன், அருள் உடையவன், ஐம்புல இன்பங்களை நுகர ஆசைப்படாதவன், பற்றுதல்களை விட்டவன், அடக்கம் உடையவன், நிலைபெற்ற வீடுபேற்றை அடைய உயிர்களுக்கு உதவுபவன் என்று ஒருவன் இருப்பானேயாகில் அவனே அறம் உரைத்தற்கு உரியவன் ஆவான்.

 

இதிருந்து பேச்சாளர் எல்லாம் புனிதர்கள் அல்ல; காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் போன்றோர் கூறியதே ‘தெய்வத்தின்’ குரல் என்பது தெளிவாகும்.

 

 

2.யார் உபந்யாசம் செய்யக்கூடாது?

 

பிள்ளை பேய் பித்தன் பிணியாளன் பின்னோக்கி

வெள்ளை களிவிடம்பன், வேட்கையான் – தெள்ளிப்புரைக்க பொருளுறுணர்வான்  என்றிவரே நூலை

உரைத்தற்குரிமை இலாதார்

பாலகன்,பேய் பிடித்தவன், பைத்தியம், நோயாளி, நெடு நோக்கில்லாதவன், முட்டாள், கள் குடிப்பவன், விஷமக்காரன், பேராசை பிடித்தவன், குற்றங்களை மட்டும் பேசுபவன் – ஆகிய இவர்கள் நூற்பொருளை மற்றவர்களுக்கு உபதேசம் செய்யத் தகுதி அற்றவர்களாவர்.

 

 

3.யார் அற நூல்களைக் கேட்கலாம்?

 

தடுமாற்றம் அஞ்சுவான் தன்னை உவர்ப்பான்

வடுமாற்றம் அஞ்சி தற்காப்பான் – படுமாற்றால்

ஒப்புரவு செய்தாண் டுறுதிச் சொல் சேர்பவன்

தக்கான் தரும உரைக்கு

பொருள்:

சோர்வுபட விரும்பாதவன், பிறர் தன்னைப் புகழும்போது அதை வெறுப்பவன்,  பழி வராதபடி தற்காத்துக் கொள்பவன், தன்னால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவி செய்து, பெரியோரிடம் நல்ல மொழிகளைக் கேட்டு அதைப் பின்பற்றுபவன் தரும உரை கேட்பதற்குத் தகுதி உடையவன்.

 

4.உபந்யாசம்,  சொற்பொழிவுகள் கேட்கக்கூடாதவர் யார்?

 

தன்சொல்லே மேற்படுப்பான் தண்டி தடி பிணக்கன்

புன்சொல்லே போதரவு பார்த்திருப்பான் இன்சொல்லை

என்றிருந்தும் கேளாத ஏழை என இவர்கட்கு

ஆன்றவர்கள் கூறார் அறம்

 

பொருள்:

தான் கூறியதே சிறந்தது என்று வாதாடுபவன், மானமுள்ளவன், மிக்க கருத்து வே,றுபாடு உடையவன்,  பிறர் சொல்லும் இழிசொற்களுக்காக காத்திருப்பவன்,  நல்ல விஷயங்களைக் கேட்பதற்கு காலமும் இடமும் வாய்ப்புக் கொடுத்தும் அதைக் கேளாத மூடன ஆகிய இவர்களுக்குப் பெரியோர்கள் தர்ம உபதேசம் செய்ய மாட்டார்கள்.

 

 

அறநெறிச் சாரத்தில் கண்ட இந்த நான்கு உபதேசங்களையும் நீங்கள் படிக்கத் தடை ஏதுமில்லை. அனைவருக்கும் பரப்புங்கள்.

 

–சுபம்–