அறிவியல் துளிகள் (Post No.6366)

Written by S NAGARAJAN
swami_48@yahoo.com


Date: 10 May 2019
British Summer Time uploaded in London – 5-56 AM

Post No. 6366

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

1-4-2019லிருந்து பாக்யா இதழ் மாதம் இருமுறை வெளிவரும் இதழாக மாறியுள்ளது. 1-5-2019 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஒன்பதாம் ஆண்டு ஏழாம் கட்டுரை) கட்டுரை – அத்தியாயம் 423

அறிவியல் துளிகள்

உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 1

ச.நாகராஜன்

tamilandvedas.com, swamiindology.blogspot.com

    உலகின் அதிக சூப்பர் வலுவான மனிதன் யார் தெரியுமா? ஹூஸ்டனைச் சேர்ந்த டென்னிஸ் ரோஜர்ஸ் (Dennis Rogers) என்பவர் தான் உலகின் அதிக வலுவான மனிதர்! பள்ளியில் படிக்கும் போது 36 கிலோவுக்கும் குறைவாக இருந்த ரோஜர்ஸ்  தொலைக்காட்சியில் வரும் அதிசாகஸ வீரர்களைப் பார்த்து படிப்படியாக அதைப் போல தானும் செய்ய முடியுமா என்று பார்க்க ஆரம்பித்தார். மிக சுலபமாக அவரால் அதைச் செய்ய முடிந்தது. எந்த விளையாட்டு வீரரையும் போலத் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்தவர் அதிசயிக்கத்தக்க விதத்தில் உலகின் பிரபலமான மல்யுத்த வீரர் ஆனார்.

மிக தடிமனாக இருக்கும் போன் டைரக்டரிகளை மிகச் சுலபமாக அவர் தன் வெறும் கையால் கிழித்து விடுவார். இரும்புத் தகடுகளை வளைப்பது அவருக்கு கைவந்த கலை. கனமான பாத்திரங்களை சுருளாக உருட்டுவது, அல்லது  நசுக்கி விடுவது என்பதெல்லாம் அவர் எல்லோருக்கும் முன் செய்து காட்டுவது வழக்கம். யூ டியூபில் அவரது சாகஸ நிகழ்ச்சிகளை அனைவரும் பார்க்க முடிகிறது. அனைவருக்கும் உத்வேகமூட்டும் ரோஜர்ஸ், உடலின் வலு முழுவதும் கைகளில் தான் இருக்கிறது என்கிறார்.

டேனியல் கிஷ் (Daniel Kish) ஒரு அபூர்வமான கண்ணில்லாத ஆனால் ‘பார்வையுள்ள’ மனிதர். 13 மாதக் குழந்தையாக இருந்த போது அவரது இரு கண்களும் அகற்றப்பட்டன. பார்வையற்ற மனிதரான அவர் பார்வையுள்ள அனைவரையும் போல வாழ்க்கையை நடத்த ஆரம்பித்தார். அது எப்படி சாத்தியம்? அவர் எதிரொலியை வைத்து அனைத்துப் பொருள்களும் எங்கு இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்கிறார். வௌவால்களுக்கே இது சாத்தியம் என்பதால் அவரை பேட் – மேன் (வௌவால் மனிதன்) என அனைவரும் அழைக்க ஆரம்பித்தனர். வாழ்க்கையில் சில கசப்பான சம்பவங்கள் நிகழும் போது அதை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியாமல் அனைவரும் விழிக்கின்றனர். குறிப்பாக பார்ப்பது, கேட்பது, பேசுவது போன்ற புலன் சார்ந்த விஷயங்கள் ஒருவருக்கு இல்லை என்று ஆகி விட்டால் அவர் உடைந்து போய் விடுகிறார். ஆனால் அப்படிப்பட்டவர்கள் தனது இதர புலன்களை வைத்து தனது சக்தியை எப்படி விரிவாக்கிக் கொள்ள முடியும் என்பதை டேனியல் அனைவருக்கும் செய்து காண்பித்து வாழ்க்கையைச் சிறப்பாக்கிக் கொள்ள வழி காட்டுகிறார். உத்வேகமூட்டும் வௌவால் மனிதன் உண்மையிலேயே உலகின் ஒரு அதிசய மனிதர் தான்!

நியூயார்க்கைச் சேர்ந்த ஸ்காட் ஃப்ளான்ஸ்பர்க் (Scottt Flansburg)

 என்பவர் தான் உலகின் அதிவேக மின்னல் கணக்கு மன்னர் ஆவார். ஒரு கணக்கைக் கால்குலேட்டர் போடுவதற்கு முன்னாலேயே ஒரு சில விநாடிகளில் மனதினாலேயே அந்தக் கணக்கைப் போட்டு விடையைச் சொல்லி அசத்துபவர் இவர். அவர் கணக்கைப் போடும் போது எம் ஆர் ஐ ஸ்கான் செய்து பார்த்த விஞ்ஞானிகள் மூளையில் கார்டெக்ஸுக்கு அருகில் உள்ள ஒரு வித்தியாசமான பகுதியை அவர் பயன்படுத்துகிறார் என்று கண்டுபிடித்தனர். கணக்கை விளையாட்டாகக் கற்பது எப்படி என்பதை சொல்லிக் கொடுத்து வரும் அவர் மின்னல் வேகக் கணக்கு போடும் முறை பற்றி புத்தகமும் எழுதியுள்ளார். மேத் மாஜிக் – Math Magic என்ற அவரது புத்தகம் பிரபலமான ஒன்று. ஹ்யூமன் கால்குலேட்டர் என்ற பட்டத்தை கின்னஸ் வோர்ல்ட் ரிகார்ட் அவருக்கு 2001,2003 ஆண்டுகளில் தந்து அவரை கௌரவித்தது.

இதே போல இன்னொரு கணித மன்னன் ரான் ஒயிட் (Ron White) என்பவர். கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் இவர்.  ஆனால் மனதில் ஒரு முறை ஏற்றியதை இவர் மறக்கவே மாட்டார். ஆப்கானிஸ்தானத்தில் உயிர் நீத்த ஹீரோக்கள் 2300 பேர்களின் பெயரையும் விடாது வரிசையாகச் சொல்வார் இவர்.

பருந்துப் பார்வை உடைய ஒரு அதிசய மனிதர் பைரன் ஃபெர்கூஸன் (Byron Ferguson). இவரை 15/20 பார்வைக்காரர் என அழைக்கின்றனர். அதாவது மற்றவர்கள் 15 அடி தூரத்தில் பார்க்கும் ஒரு பொருளை இவரால் 20 அடி தூரத்தில் இருந்து பார்க்க முடியும். நான் ஒன்றைப் பார்த்தால் போதும் அதை என்னால் குறி பார்த்து அடிக்க முடியும் (I believe if I can see it I can hit it) என்பது இவரது புகழ் பெற்ற மணி மொழி. ஆம், கையில் வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டால் வெகு தூரத்தில் உள்ள இலக்கை இவர் குறி பார்த்து அடித்து விடுகிறார். நம்ப முடியாத இவரது வில்- அம்புக் காட்சிகளை யூ டியூப் வீடியோ காட்சிகளில் காணலாம். அலபாமாவில் பிறந்த இவர் ஆரம்ப காலத்தில் ஷீட் மெடல் தொழிலாளியாக வேலை பார்த்தார். 12வது வயதில் வில்லையும் அம்பையும் கையிலேந்தி வேட்டையாடுவதில் வல்லவரானார். ஒரு கடையில் வேலை பார்த்து வந்த வாண்டா என்ற பெண் இவரிடம் வில் வித்தையைக் கற்றுக் கொள்ள வர காதல் வித்தை  மலர்ந்து அவரையே மணமுடித்தார். உலகெங்கும் தனது வில் வித்தையைக் காண்பிக்கவே மக்கள் இந்த வில் வீரரை பல ஷோக்களுக்கும் அழைக்கலாயினர். ஜனவரியிலிருந்து மே முடிய வார இறுதி நாட்களில் தன் ஆர்ச்செரி ஷோவில் ஈடுபடும் இவர் ஜூன், ஜூலை, ஆகஸ்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகிறார். செப்டம்பரில் பெரும் கண்காட்சிகளில் பங்கு கொள்கிறார்.

மக்கள் இவரை மாடர்ன் ராபின்ஹூட் என்று செல்லமாக அழைக்கின்றனர்.

அடுத்து இன்னும் சில அதிசய மனிதர்களைப் பார்ப்போம்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

கணினி நிபுணர் ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஏராளமான சம்பவங்களில் இன்னும் ஒன்று :

2004இல் ஜாப்ஸுக்கு கணைய ஆபரேஷன் முடிந்த பின்னர்  கலிபோர்னியாவில் பாலோ ஆல்டோவில் ஸ்டான்ஃபோர்ட் ஷாப்பிங் சென்டரைத் திறக்க வந்தார். 750 சதுர அடி கொண்ட சின்ன ஷாப் தான் அது. மேற்கூரை வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்டிருக்க, ஜப்பானிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சுவர்களின் மேல் பதிக்கப்பட்டிருக்க காற்று வர வசதியாக மேலே துளைகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தத்தில் அழகிய ஸ்டோர் தான் அது. பத்திரிகையாளர்களும் பார்வையாளர்களும் திரளாகக் குழுமி இருந்தனர். ஸ்டீவ் ஜாப்ஸ் கடையைத் திறக்க இருந்த கடைசி நிமிடத்தில் அதைத் திறக்க மறுத்து விட்டார். காரணம் கடையில் தரைப் பகுதியில் எராளமான காலடித் தடங்கள் பதிந்து இருந்தன. அதை அமைத்த பணியாளர்களும் எஞ்ஜினியர்களும் கடுமையாக உழைத்து அதை உருவாக்கி இருந்தாலும் கடைசியில் தரையைச் சுத்தம் செய்யவில்லை.சுவர்களிலோ அவர்களின் கைத் தடங்கள் இருந்தன.

ஒருவாறாக ஜாப்ஸிடம் பேசி கடை திறக்கப்பட்டது. அன்றிரவே அதை அமைப்பதில் ஈடுபட்டிருந்த அனைத்து பணியாளர்களையும் எஞ்ஜினியர்களையும் வரவழைத்த ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களைத் தரையில் அமர வைத்து அதைச் சுத்தமாக்க வைத்தார். சுவர்களும்  நன்கு துடைக்கப்பட்டன.

பின்னால் தரையின் டிசைனையே அவர் மாற்றிய பின்னர் தான் அவர் திருப்தியுற்றார். ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்பது ஸ்டீவ் ஜாப்ஸின் அறிவுரையாக இருந்தது!

****