
Written by S. NAGARAJAN
Date: 24 October 2016
Time uploaded in London: 9-34 AM
Post No.3283
Pictures are taken from various sources; thanks.
Contact :– swami_48@yahoo.com
பாக்யா 21-10-2016 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் 299வது அத்தியாயமாகப் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை
இந்த ஆண்டு இக்நோபல் பரிசு பெற்ற மேதைகள்! – 2
கார்களிலிருந்து வெளியேறும் புகையைச் சமாளித்தல்
இரசாயனத்திற்கான இந்த ஆண்டின் இக்நோபல் பரிசு பிரபல கார் உற்பத்தி நிறுவனமான வோல்ஸ்வேகனுக்கு அளிக்கப்படுகிறது. இது காரிலிருந்து வெளியேறும் புகையைக் குறைத்த விதமே அலாதி தான்! கார்கள் சோதனை செய்யப்படும் போது ஆடோமேடிக்காக குறைந்த புகையே வெளியேறுவது போலக் காட்டும் வண்ணம் அது கார்களை வடிவமைத்தது! இந்த அபாரமான சாதனைக்காகத் தான் அதற்கு இந்தப் பரிசு. இந்த மோசடியில் வோல்ஸ்வாகன் 14.7 பில்லியன் டாலர்களை (அதாவது 1470 கோடி டாலர்கள்) நஷ்ட ஈட்டுத் தொகையாக இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தருவதாக ஒத்துக் கொண்டதால் மனம மகிழ்ந்து இக்நோப்ல பரிசு வழங்கப்படுகிறது! ஒரு மென்பொருளை காரினுள் நிறுவி இந்த மோசடியை வோல்ஸ்வேகன் நிறுவனம் செய்திருந்தது. சட்டம் அனுமதிக்கப்படும் புகை அளவையே அந்த மென்பொருள் சோதனையின் போது காட்டும். இதை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது. இதனால் அபராதத் தொகையை வேறு வோல்ஸ்வேகன் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

சொறிதலுக்கு ஒரு பரிசு
மருத்துவத்திற்கான இக்நோபல பரிசு ஜெர்மனியில் உள்ள ஐந்து விஞ்ஞானிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரிப்பு ஏற்பட்ட போது சொறிதலுக்கான் அதிசய ஆராய்ச்சிக்காக அவர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. PLOS ONE – ப்ளாஸ் ஒன் என்ற பத்திரிகையில் 2013ஆம் ஆண்டு அவர்கள் தங்கள் ஆராய்ச்சி முடிவை வெளியிட்டிருந்தனர். ஒரு மனிதனுக்கு இடது கையில் முன் பக்கம் அரிப்பு ஏற்பட்டால அவர் கண்ணாடி முன்னே நின்று கொண்டு தங்களது வலது கை முன் பக்கத்தில் அதே இடத்தில் சொறிந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட “கண்ணாடி பிரதிபலிப்பு சொறிதலானது; சில தோல் வியாதிகள் கொண்டவர்களுக்கு சொறிய வேண்டும் என்ற அரிப்பு உணர்ச்சியை அறவே நீக்குமாம். இது தான் அவர்களது கண்டு பிடிப்பு! இந்த அபாரமான ஆராய்ச்சிக்காக இக்நோபல் பரிசைப் பெற்ற விஞ்ஞானிகள் கிறிஸ்தோப் ஹெல்ம்சென், கரினா பால்மெர், தாமஸ் எஃப் முண்டே, சில்க் ஆண்டர்ஸ் மற்றும் ஆண்ட்ரியாஸ் ஸொரெஞ்சர் ஆவர். (Christoph Helmchen, Carina Palzer, Thomas F.Munte, Silke Anders, Andreas Sprenger)
பொய் சொல்வதில் நிபுணத்வம்
உளவியலுக்கான பரிசு ஐந்து ஆய்வாளர்களுக்கு – எவ்லீன் டெப்பி, மார்டென் டி ஷ்ரிவெர், கார்டன் லோகன், க்ரிஸ்டினா சுஷோட்ஸ்கி மற்றும் ப்ரூனோ வெர்ஷுர் (Evelyne Debey, Maarten De Schryver, Gordon Logan, Kristina Suchotzki, Bruno Verschuere) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆறிலிருந்து 77 வயதான ஆயிரம் பொய்யர்களை எவ்வளவு அதிகம் அவர்கள் பொய் சொன்னார்கள் என்று இவர்கள் ஆராய்ந்தனர். அவர்களின் பதிலைக் கேட்டறிந்த ஆய்வாளர்கள் இதில் உண்மையைத் தான் அவர்கள் சொல்கிறார்களா என்று முதலில் ஆராய வேண்டியிருந்தது.
எவ்வளவு அடிக்கடி பொய் சொல்கிறார்கள், அதில் அவர்களது நிபுணத்வம் எப்படி இருக்கிறது என்பதை ஆராய்வதே ஆய்வின் நோக்கம். இதிலிருந்து அவர்களின் பொய் சொல்லும் நடத்தையையும் வயது மாற மாற இதில் எற்படும் மாறுபாட்டையும் ஆய்வு செய்ய வேண்டியிருந்தது. குழந்தையாக இருந்த போது ஆரம்பித்த பொய் சொல்லும் பழக்கம் வளர்ச்சி அடைந்து இளவயதில் அபாரமாக முன்னேறிப் பின்னர் மிகவும் மோசமடைந்தது. அதே போல பொய் சொல்லும் எண்ணிக்கை அளவும் குழந்தையாக இருந்த போது ஆர்ம்பித்து வளர்ச்சி அடைந்து இள வயதில் முன்னேறி பின்னர் சற்று குறைந்தது.
இதை 2015ஆம் ஆண்டில் அவர்கள் ஆக்டா சைகோலாஜிகா (Acta Psychologica) என்ற பத்திரிகையில் வெளியிட்டனர்.
இந்த அரிய ஆராய்ச்சிக்காக அவர்களுக்கு உளவியல் பரிசு வழங்கியது பொருத்தம் தானே!

மிருகங்களாக மாறி ஆராய்ந்தவர்கள்!
உயிரியலில் இக்நோபல் பரிசைப் பெறுவபர்கள் சார்லஸ் ஃபாஸ்டர் (Charles Foster) மற்றும் தாமஸ் த்வைட்ஸ் (Thomas Thwaites) ஆகிய இரு விஞ்ஞானிகள் ஆவர். இவர்களில் சார்லஸ் காடுகளில் வெவ்வேறு கால கட்டங்களில் பூமியில் வாழும் பாலூட்டி இனங்களில் ஒன்றான பேட்ஜர், மான், நரி, பறவை போல எல்லாம் தானே மாறி அவைகளுடன் வாழ்ந்து ஆராய்ந்தவர். தாமஸ் ஒரு வெள்ளாடு போல செயற்கை அவயவங்களுடன் வெள்ளாடாக மாறி ஆல்ப்ஸ் மலையில் வெள்ளாட்டுக் கூட்டத்தில் வாழ்ந்து பார்த்தவர். ஆடுகள் எப்படி மலைகளில் மேய்ந்து உணவைத் தின்னுமோ அது போலவே ஒரு செயற்கை வயிறை உருவாக்கிக் கட்டிக் கொண்டு அதில் புல் போன்ற உணவு வகைகளை உண்டு ஆராய்ந்தார். ‘கோட் மேன் – ஹௌ ஐ டுக் எ ஹாலிடே ஃப்ரம் பீயிங் ஹ்யூமன்’ (Goat Man – How I Took a Holiday from Being Human) என்ற புத்தகத்தில் தனது அனுபவங்களை இவர் விவரித்துள்ளார்.
சார்லஸும், ‘பீயிங் எ பீஸ்ட்’ (Being a Beast) என்ற புத்தகத்தில் தனது அனுபவங்களை விவரித்துள்ளார்.பேட்ஜர் மிருகமாக மாறி வெல்ஷ் மலையில் புழுக்களை உண்டு தான் வாழ்ந்த விதத்தையும் நீரில் நீந்தி மீன்களை லபக்கென்று வாயால் கவ்வியதையும் அவர் விவரிக்கும் விதம் ருசிகரமானது.
ஆக வித்தியாசமான இந்த மிருகங்களுக்கு – மன்னிக்கவும் – மிருக ஆராய்ச்சியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது நியாயம் தானே!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
பிரபல விஞ்ஞானியான அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (AlexanderGrahamBell) த்னது 29ஆம் வயதிலேயே டெலிபோனைக் கண்டு பிடித்தார். அதனால் மிகவும் புகழ பெற்றதோடு பெரிய பணக்காரராகவும் ஆனார். புதுப் புது யோசனைகள் தோன்றவே வாழ்நாள் இறுதி வரை எதையாவது கண்டு பிடித்த வண்ணம் இருந்தார். அவருக்கு வானில் பறக்கும் விமானம் ஒன்றைக் கட்ட வேண்டும் என்ற ஆசை தோன்றவே அயிரத்தி எண்ணூற்று எண்பதுகளில் சிலரின் துணையோடு ஒரு விமானத்தைக் கட்டலானார். பெரிய பட்டம் போன்ற அமைப்பை உடைய அவரது விமானம் ஒரு மோட்டார் மற்றும் ஒரு பைலட்டைத் தாங்கிச் செல்லக் கூடிய வகையில் வடிவமைப்பைக் கொண்டிருந்தது. ஒரு மலை உச்சியில் தன் ‘பட்ட விமானத்தை’ வைத்துக் கொண்டு நல்ல காற்றுக்காகக் காத்திருப்பது அவர் வழக்கம். பல வாரங்கள் இப்படிக் காத்திருக்க வேண்டியிருக்கும் மலையின் அடிவாரத்தில் ஒரு கோபுரம் ஒன்றை அவர் கட்டினார். அவரது தந்தையார் அதில் அமர்ந்து தனது மகன் விமானத்தில் பறப்பதைப் பார்க்க வசதியாக இருக்கும் படி அது கட்டப்பட்டது.
1907ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் க்ரஹாம் பெல்லின் பட்டம் போன்ற விமானம் ஒன்று 168 அடி உயரம் பறந்தது. பின்னர் கடலில் விழுந்தது. அதில் இருந்த பைலட் நீந்தி ஒருவாறு க்ரை சேர்ந்தார். பெல்லினால் விமானத்தை நீடித்துப் பறக்கச் செய்ய முடியவில்லை என்றாலும் அமெரிக்க விமான இயல் துறைக்கு அவரது பங்களிப்பு மகத்தானது. 1922ஆம் ஆண்டு அவர் இறந்த போது அவர் கட்டிய கோபுரத்தின் அடியிலேயே அவர் உடல் புதைக்கப்பட்டது.
*****
You must be logged in to post a comment.