

Written by S NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 9 AUGUST 2019
British Summer Time uploaded in London –8-33 AM
Post No. 6750
Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
கோகுலம் கதிர் மாத இதழில் ஆகஸ்ட் 2019 இதழில் வெளி வந்துள்ள கட்டுரை.
உலக உலா
உலக உலாவில் இடம் பெறும் இரண்டாம் நாடு இங்கிலாந்து!
ச.நாகராஜன்

சூரியன் அஸ்தமிக்காத நாடு!
சூரியன் அஸ்தமிக்காத நாடு என்ற புகழ் பெற்ற ஒரே நாடு உலகில் இங்கிலாந்து தான். அதற்கு உரிமையாக 14 நிலப் பகுதிகள் இருப்பதால் ஏதோ ஒரு பகுதியில் சூரியன் உதித்துக் கொண்டே இருப்பான். ஆகவே தான்
“Rule, Britannia! Britannia, rule the waves!
Britons never, never,never shall be slaves.
(பிரிட்டனே! உலகை ஆள்வாயாக! அலைகடலை ஆட்சி செய்! பிரிட்டானியர்கள் ஒரு போதும் அடிமையாக ஆக மாட்டார்கள்) என்ற பிரசித்தி பெற்ற பாடல் எழுந்தது.
ஜான் வில்ஸன் என்பவர் “ஒருபோதும் சூரியன் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் அஸ்தமிப்பதில்லை” (The Sun never sets on the British Empire) என்று எழுதினார். இது பிரபலமான வாக்கியமாக ஆகி விட்டது!
ஒரு காலத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யமானது உலகின் கால் பகுதியை ஆண்டது!
கையளவே உள்ள ஒரு சிறிய நாடு முப்பது கோடி மக்களை உடைய இந்தியாவை அடக்கி ஆண்டது என்றால் அதன் அதிகார ஆணவத்தையும் பலத்தையும் புரிந்து கொள்ளலாம். பல தியாகங்களைச் செய்து இடைவிடாத சுதந்திரப் போரால் நாம் சுதந்திரம் பெற்றோம்.
இத்தனைக்கும் அதன் நிலப்பரப்பு 93,600 சதுர மைல்கள் தான்! அதன் எந்தப் நிலப்பகுதியிலிருந்தும் கடல் 70 மைல் தூரத்தில் தான் உள்ளது!

அதிசயமான இந்த நாட்டில் அரசிக்குப் பெரும் மரியாதை உண்டு. அதன் தேசிய கீதமே கடவுள் அரசியைக் காப்பாராக (God Save the Queen) என்பது தான்! அரசர் ஆண்டால் கடவுள் மன்னரைக் காப்பாராக (God Save the King) என தேசீய கீதம் மாறும்.
க்வீன் எலிஸபத் 116 நாடுகளுக்கு பாஸ்போர்ட் இல்லாமல் விஜயம் செய்திருக்கிறார். ஏனெனில் பாஸ்போர்ட் வழங்கும் அதிகார உரிமை பெற்றவர் அவர் தானே! அவர் தனது அடையாளத்தை உலகில் யாருக்கும் காண்பிக்கத் தேவை இல்லை அல்லவா!
ஜனநாயகம் கண்ட நாடு
இங்கிலாந்தின் புகழுக்குக் காரணங்கள் பல!
உலகிலேயே முதன் முதலில் பாராளுமன்ற நடைமுறை பிரிட்டனில் தான் 1707இல் ஆரம்பித்தது. பின்னர் தான் ஸ்வீடனில் 1721இல் தோன்றியது. ஆக ஜனநாயக நடைமுறையின் தாயகமாக பிரிட்டன் விளங்குகிறது. 650 பாராளுமன்றத் தொகுதிகள் பிரிட்டனில் உள்ளன!
ஆங்கிலம் உலகின் பொதுமொழியாக விளங்குகிறது. உலக ஜனத்தொகையான 750 கோடிப் பேரில் 150 கோடிப் பேர் ஆங்கிலம் பேசுகின்றனர்! 36 கோடி பேர் இதைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.

ஷேக்ஸ்பியரின் நாடு
ஆங்கிலத்தின் இலக்கிய வளம் அகன்றது. ஷேக்ஸ்பியரை அறியாதோர் இருக்க முடியாது. அவர் தன் வாழ்நாளில் 37 இலக்கிய நூல்களைப் படைத்தார். அவர் பயன்படுத்திய மொத்தச் சொற்கள் 8,35,997! குறைந்த சொற்களாக 14701 சொற்களைக் கொண்டு அவர் எழுதிப் படைத்த படைப்பு Comedy of Errors. அதிகச் சொற்களாக 8,35,997 சொற்களைக் கொண்டு அவர் படைத்த படைப்பு புகழ்பெற்ற Hamlet! அவர் தன் படைப்புகளில் தொடாத துறைகளே இல்லை. இது தவிர வோர்ட்ஸ்வொர்த், மில்டன், ஷெல்லி, ஜான் கீட்ஸ், பைரன்,டென்னிஸன் என ஆங்கிலக் கவிஞர்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

உலகை மாற்றிய விஞ்ஞான நாடு
உலகிற்கு விஞ்ஞானத் துறையில் இங்கிலாந்தின் பங்களிப்பு மிகப் பெரியது. குறைந்த பட்சம், உலகின் போக்கை மாற்றிய பெரிய 50 கண்டுபிடிப்புகளை உடனே சொல்லி விடலாம்.நியூட்டனின் விதிகள் பற்றித் தெரியாதவரே இருக்க முடியாது. டெலஸ்கோப்பை 1668இல் நியூட்டன் கண்டுபிடித்தார். ஏன் டூத் பிரஷ் கூட இங்கிலாந்தின் கண்டு பிடிப்பு தான். 1770இல் வில்லியம் அடிஸ் என்பவர் டூத் பிரஷை அறிமுகப்படுத்தினார்.
உலகில் ரயில் போக்குவரத்தை அறிமுகப்படுத்தியது இங்கிலாந்து தான். 1698இல் தாமஸ் சேவரி ஸ்டீம் எஞ்ஜினைக் கண்டுபிடித்தார். பின்னர் ஜேம்ஸ் வாட் அதை நன்கு அபிவிருத்தி செய்து நடைமுறைக்கு உகந்ததாக மாற்றினார். தந்தி அனுப்பும் முறையை (1837இல்) உருவாக்கியதும் பிரிட்டனே. சிமெண்ட், டின் கேன்,ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல், ஹோவர் கிராப்ட், யுத்தத்தில் பயன்படுத்தும் டேங்க் என இப்படிப் பல கண்டுபிடிப்புகளும் பிரிட்டனில் உருவானவையே!
இரண்டாம் உலகப் போர் பிரிட்டன் கண்ட பிரம்மாண்டமான போர். ஹிட்லரை வீழ்த்த பிரிட்டானியர்கள் ஓரிழையில் ஒருங்கு திரண்டனர். இங்கிலாந்தின் முப்படை வீரர்களும் ஆற்றிய சாகஸங்களைப் பற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மெய்சிலிர்க்க வைப்பவை!
ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்கள்

ஏஜண்ட் 007 – ஜேம்ஸ் பாண்டை அறியாத திரைப்பட ரசிகரே உலகில் இருக்க முடியாது. ஐயான் ப்ளெமிங்கால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் ஜேம்ஸ் பாண்ட். ‘டாக்டர் நோ’வில் ஆரம்பித்து இதுவரை 25 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றின் வசூலோ பிரம்மாண்டம்! ஸ்கை ஃபால் என்ற ஒரு படம் மட்டுமே உலகெங்குமாக 111 கோடி டாலர்களைச் சம்பாதித்து ரிகார்டை ஏற்படுத்தியது. (ஒரு டாலரின் இந்திய மதிப்பு சுமார் 69 ரூபாய்கள்)
பிரிட்டன் இன்றுடன் புகழுடன் விளங்கக் காரணங்கள் பல என்றாலும் கூட அங்கு இருப்போரின் அழகும், பொறுமைக் குணமும் ஒரு முக்கியமான காரணம்! சிவந்த மேனியையும் மினுமினுப்பான அழகையும் கொண்ட பிரிட்டிஷ் அழகிகள் உலகெங்கும் மதிக்கப்படுகின்றனர்! எம்மா வாட்ஸன், செரில் கோல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் நடிகைகள் ஹாலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கின்றனர்.
Awesome நாடு
பிரிட்டனில் பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. சேரிங் க்ராஸ் லண்டனில் ஆறு சாலைகளின் பிரபல சந்திப்பாக விளங்குகிறது. லண்டனில் பாண்ட் ஸ்ட்ரீட்டில் உள்ள கடைகளில் ஷாப்பிங் செய்யாத பிரபலங்களே உலகில் இல்லை!ஸ்டான்லி கிப்பன் தபால் தலை சேகரிப்போர் செல்லும் பிரபல ஷாப்!
பிரிட்டனில் உள்ள வெஸ்ட்ரே மற்றும் பாபா வெஸ்ட்ரே ஆகிய இரு தீவுகளுக்கு இடையே செல்லும் விமானப் பயணம் தான் உலகின் மிகக் குறுகிய விமானப் பயணம். இந்தப் பயணத்திற்காக ஆகும் நேரம் இரண்டு நிமிடங்கள் தான்!
உலகில் அதிகமாக இந்திய உணவு விடுதிகளைக் கொண்ட ஒரே நாடு இங்கிலாந்து தான்!
தேம்ஸ் நதி உள்ளிட்ட அனைத்து லண்டனின் முக்கிய இடங்களையும் காண்பிக்கும் டூரிஸ்ட் பஸ்களின் திறந்த அமைப்பு கொண்ட மேல் தளத்தில் உட்கார்ந்து லண்டனைப் பார்ப்பது ஒரு தனி அனுபவமாக இருக்கும்.
தனி மனித சுதந்திரம் பெரிதும் மதிக்கப்படும் முதல் நாடு பிரிட்டனே. ஆரோக்கியம் மற்றும் கல்வித் துறையில் சிறப்பாக விளங்குவதும் பிரிட்டனே. ஆக்ஸ்போர்ட் உள்ளிட்ட இடங்களை உலகெங்குமுள்ள கல்வி ஆர்வலர்கள் நாடுவது இதனால் தான்!
விளையாட்டிலோ என்றால் கிரிக்கெட், ஃபுட் பால், ஹாக்கி, பேட்மிண்டன் போன்றவற்றை அறிமுகப்படுத்தியதே இங்கிலாந்து தான். விம்பிள்டன் டென்னிஸ் என்றால் தொலைக்காட்சி முன்னால் அமர்பவர்கள் கோடானு கோடி பேர்கள்.
ஆனால் அப்படிப்பட்ட நாட்டையே தனது மென் சிரிப்பாலும் இடையில் கட்டிய அரைத் துண்டாலும் , அஹிம்சை வழி முறையாலும் வென்றவர் நமது மகாத்மா காந்திஜி என்பது நமக்குப் பெருமை சேர்க்கும் ஒரு விஷயம்!
ஒரு வார்த்தையில் பிரிட்டனைப் பற்றிச் சொல்லுங்கள் என சமூக ஊடகங்கள் விடுத்த அழைப்பில் வந்த வாக்கியங்களில் சில : Awesome! Breathtaking! Beauty! Inspiring!, Colourful! Contentment!
இதற்கு மேல் இந்த நாட்டைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?
****
