
Picture from Guruji Gopalavallidasar post.
Written by London Swaminathan
Date: 18 MARCH 2018
Time uploaded in London – 7-02 am
Post No. 4827
Pictures shown here are taken by London swaminathan
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
ஆண்டாளும் ஆதி சங்கரரும் சொல்லும் அதிசய அழிஞ்சில் மரம் ! (Post No.4827)
உலக சைவ சித்தாந்த மஹாநாட்டில் கலந்துகொண்டு பேச வந்த அழைப்பினை ஏற்று மார்ச் 2018 முதல் வாரம் சென்னை சென்றேன். இடையிடையே எனது தம்பியுடன் க்ஷேத்ராடனம் செய்தேன்; பார்க்காத கோவில்களைப் பார்க்க ஆவல் கொண்டேன். சென்னைக்கு அருகில் காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள சிங்கப் பெருமாள் கோவிலுக்குச் சென்றேன். பல அதிசயங்களைக் கண்டேன். ஒரு அதிசயம் பற்றி இக்கட்டுரையில் கதைக்கிறேன்.
அழிஞ்சில் மரம் என்பது ஒரு அதிசய மரமாகக் கருதப்படுகிறது. இது பற்றி ஆதி சங்கரர் சிவானந்த லஹரி ஸ்துதியில் பாடியுள்ளார். ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியின் உரையிலும் இது காணப்படுகிறது. இந்த அதிசய மரத்தை சிங்கப் பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்மரை வலம் வரும் இடத்தில் கண்டு ஆனந்தம் அடைந்தேன்.

மந்திரத்தால் மாமரம் வளருமா? என்பார்கள்; பெரியவாச்சான் பிள்ளை எழுதிய பேருரையில் இது பற்றி வியப்பான தகவலைத் தருகிறார்.
நாச்சியார் திருமொழி– நாலாம் திருமொழி– நாலாம் பாட்டு ‘ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட’– என்று துவங்கும்.
இதன் உரையில் காணும் விஷயத்தின் சுருக்கம் இதோ:-
கடம்ப மரம், காளியன் எனும் பாம்பு கக்கிய விஷத்தில் எரிந்து கருகியது. கண்ணன் காலடி பட்டவுடன் பூத்துக் குலுங்கியது. இது எப்படி சாத்தியம்? அட, விஷ்ணுவின் பாதம் எப்போதும் அமிர்தம் சுரப்பதால் இது நடக்கvமுடியாதா? ராமன் கால் பட்டவுடன் கல்லாகக் இருந்த அஹல்யா, அழகிய பெண்மணியாக எழுந்திருக்கவில்லையா?
“அங்கோலத் தைலம் தடவப்பட்ட மாம்பழக் கொட்டையைத் தரையில் நட்டால், அப்போதே முளைத்துப் பெரிய மரமாய் சாய்த்துப் பழுக்கும் என்று சொல்லும்போது, விஷ்ணுவினுடைய மேலான திருவடியில் அமுதம் வெள்ளமிடுகிறது — என்று வேதத்தால் சொல்லப்பட்ட பெருமானுடைய திருவடி பட்டு பட்ட மரம் தளிர்க்கச் சொல்ல வேண்டுமோ?
அங்கோல மரம்= அழிஞ்சில் மரம்
அழிஞ்சில் மரத்தின் பழங்கள் அம்மரத்தின் கீழே உதிர்ந்திருக்கும்; வானில் மின்னல் மின்னினால், அக்கணத்திலேயே அப்பழம் மரத்திலே பழையபடி ஓட்டிக் கொள்ளும்; அக்கணத்தில் அப்பழத்தை எடுத்து வந்து தைலமாக்கி (எண்ணை ஆக்கி) ஒரு மாங்கொட்டையில் தடவி தரையில் நட , அப்போதே முளைத்துப் பெரிய செடியாகி காய்த்துப் பழுக்கும் என்பர்……………………”
இவ்வாறு உரைகாரர்கள் சொல்லுகின்றனர்.
ஆண்டாளுக்கும் முன்னர் அவதரித்த உலக மஹா தத்துவ ஞானி ஆதிசங்கரர் பக்த்திக்குச் சொல்லும் ஐந்து இலக்கணங்களில் அங்கோல மர விதைகளும் ஒன்று ஆகும்.
(ஆதி சங்கரர் கி.மு.வில் இருந்தவர் என்று காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சொன்னதற்கு நான் தமிழ் இலக்கிய சான்றுகளை அளித்து ஆராய்ச்சிக் கட்டுரை வரைந்துள்ளேன்; இதே பிளாக்கில் படித்து இன்புறுக)

சிவானந்த லஹரியின் 61-ஆவது ஸ்லோகம்
‘அங்கோலம் நிஜபீஜ சந்ததி’ —- என்று துவங்கும். இதன் பொருளாவது:
உண்மையான பக்த்தி என்பதற்கு ஐந்து உதாரணங்கள் உள்ளன; ஈஸ்வரனுக்கும் பக்தனுக்கும் இடையே உள்ள உறவு- அங்கோல மரமும் அதன் விதைகளும், காந்தமும் இரும்பு ஊசியும், கற்புக்கரசியும் அவளது கணவனும், மரமும் அதைச் சுற்றிப் பற்றும் படரும் கொடியும், ஆறுகளும் கடலும் போலும் இணைந்து இருக்கும்.
இதற்கு பாஷ்யம் எழுதியோர் அங்கோல/ அழிஞ்சில் மரத்தின் அற்புத குணத்தை விளக்கியுள்ளனர். அங்கோல மர விதைகள் கீழே விழுந்தவுடன், மரத்தின் மீது ஏறிச் சென்று ஒட்டிக்கொள்ளும் என்று.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ள இந்த நம்பிக்கையை விஞ்ஞான முறையில் ஆராய்வது நலம் பயக்கும்..
சிங்கப் பெருமாள் கோவில் பிரஹாரத்தில் மரத்தை ஒட்டி சுவரில் எழுதப்பட்ட அறிவிப்பு– இந்த மரத்தின் மீது ஆடையிலிருந்து ஒரு நூலைப் போடுவோருக்கு அறிவு வளரும்; மணம் முடிக்காதவர்கள் விரைவில் கல்யாணம் செய்வர்; குழந்தை இல்லாதவர் விரைவில் குழந்தை பெறுவர் என்று செப்புகிறது.
மருத்துவ நூல்களோவெனில் இதன் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை முதலிய மருத்துவ குணங்களை வருணிக்கிறது.
எப்படியாகிலும் இது ஒரு அதிசய மரமே.
அடுத்த முறை சிங்கப் பெருமாள் கோவிலுக்குச் சென்றால் நரசிம்மருடன் மரத்தையும் கண்டு களிக்க.
சிங்கப் பெருமாள் கோவிலின் நெற்றிக் கண் நரசிம்மர், சூடான மிளகு தோசை, நரசிம்மர் பூட்டு, சில் மாதங்களில் பெருமாள் மீது விழும் சூரிய ஒளி ஆகியன பற்றி அடுத்த கட்டுரையில் நுவல்கிறேன்.
இதுவரை இயம்பி யவற்றை நினைவிற் போற்றுக.

—சுபம் சுபம்—
(யாரைக் கடவுள் காப்பாற்றுவான்? பிளாக்குகளிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல், சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும், குறை கூறவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது? மற்றவர் படஙகளையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)