மூளை ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வழிகள்! (Post No.3996)

Written by S NAGARAJAN

 

Date: 13 June 2017

 

Time uploaded in London:-  5-56  am

 

 

Post No.3996

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

 

திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் ஹெல்த்கேர் மாத இதழில் ஜூன் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

மூளை ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வழிகள்!

ச.நாகராஜன்

மனிதனின் செயல்பாட்டை நிர்ணயிக்க வல்ல முக்கியமான உறுப்பு மூளை. இதை ஆரோக்கியமாகவும் செயல்திறனுடனும் அதிக ஆற்றலுடனும் வைத்திருக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

நாளுக்கு நாள் முன்னேறி வரும் மூளையியல் ஆராய்ச்சிகள் பல உத்வேகமூட்டும் உதவிக் குறிப்புகளை நல்குகின்றன.

மூளை ஆரோக்கியத்திற்கென மையம் ஒன்றை நிறுவியவர் சான்ட்ரா பாண்ட் சாப்மேன். (Sandra Bond Chapman Ph.D.) டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் இந்தப் பெண்மணி ‘மேக் யுவர் ப்ரெய்ன் ஸ்மார்டர் (Make Your Brain Smarter)  என்ற நூலை எழுதியுள்ளார். மூளை ஆற்றலை மேம்படுத்த  அவர் கூறும்         வழிகளில் முக்கிய,மான சிலவற்றைச் சுருக்கமாகக் கீழே காண்போம் :

அறிவியலின் வேகமான முன்னேற்றத்தால் ஒவ்வொரு மனிதனுடைய ஆயுள் காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. பழைய காலத்தை ஒப்பிடும்போது இது அதிகம். என்றாலும் கூட மூளை ஆரோக்கியத்தைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்பவர் மிகச் சிலரே. சிறிது ஆர்வம் இருந்தால் கூட போதும், ஒருவர் தன் மூளை ஆற்றலை வெகுவாக முன்னேற்றிக் கொள்ளலாம்.

புதிய் விஷயங்களில் ஆர்வம் காட்டுவது, மூளைக்கான பயிற்சிகளை மேற்கொள்வது, தனக்கென பிரத்யேகமான சில பொழுதுபோக்கு ஹாபிகளை தேர்ந்தெடுத்துக் கொள்வது போன்றவற்றால் மூளை ஆற்றல் மேம்படும்., நினைவாற்றலும் கூடும்.

போட்டி மிகுந்த இன்றைய நாட்களில் மூளையை கூர்மையாக வைத்துக் கொண்டிருப்பது மிகவும் அவசியம். சிறிது நேரம் வேலை பார்த்தாலேயே மூளை களைப்புற்று சோர்வை அடைவது இன்றைய நாட்களில் பலருடைய அனுபவமாக ஆகி விட்டது.. இதற்காக வெவ்வேறு சுற்றுலா தலங்களை நாடி புத்துணர்ச்சி பெறுவதும் வாடிக்கையாகி விட்டது.

ஆனால் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான முயற்சியை அன்றாடம் எடுத்து வந்தால் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாமே!

 

எனக்கு கூர்மையான மூளை இல்லையே என்று ஏங்குவோருக்கு ஆறுதலைத் தரும் ஆறு வழிகள் இதோ:-

  • பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்வதைத் தவிருங்கள்

இன்றைய அவசர யுகத்தில் பலரும் பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்ய முயல்கின்றனர். மல்டி டாஸ்கிங் யுகம் இது என்று பெருமையாக வேறு சொல்லிக்  கொள்கின்றனர். மல்டி டாஸ்கிங் ஒருவரது மனோ ஆற்றலைக் குறைக்கிறது. மூளையைச் சீக்கிரம் சோர்வடையச் செய்கிறது. மன அழுத்தத்தை அதிகமாக்குகிறது. மாறாக ஒரே ஒரு காரியத்தை எடுத்துக் கொள்வது அதை செவ்வனே திற்ம்படச் செய்வது என்ற வழி முறையை மேற்கொண்டால் வேலையும் சிறப்பாக முடியும்; மூளையும் சோர்வடையாது.

2)  தேவையான தூக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

தூக்கம் என்பது இன்றியமையாத ஒன்று. ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை அன்றாடம் ஒவ்வொருவருக்கும் உறக்கம் தேவை. தூங்கும் நேரத்தில் தான் மூளை உள்ளார்ந்த ஆழ்நிலை மட்டத்தில் தகவல்களை ஒருங்கு சேர்த்து இணைத்துக் கொள்கிறது. இரவில் வெகு நேரம் முழித்திருந்து தூக்கத்தை தியாகம் செய்தால் மூளை ஆற்றலையும் செயல் திறனையும் தியாகம் செய்ததற்குச் சமம்

  1. உடல்பயிற்சி தேவை

ஒரு நாளைக்கு 30 நிமிட திறந்த வெளி உடற்பயிற்சி செய்வது உத்தமம்..  வாரத்திற்கு கும்றைந்த பட்சம் நான்கு முறையாவது இந்த 30 நிமிடப் பயிற்சியை அவசியம் செய்தல் வேண்டும். இது நினைவாற்றலைக் கூட்டுகிறது. கவனக் குவிப்பை மேமபடுத்துகிறது. மனதை ஒருமைப்படுத்துகிறது. மூளையில் உள்ள் நினைவாற்றலுக்கான பகுதியில் இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது

  1. முக்கிய விஷயங்களைத் தனியே குறித்து வைத்துக் கொள்ளுங்கள்

நீங்கள் படித்தவற்றில் முக்கியமானவற்றின் சுருக்கத்தை தனியே தொகுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கோர்ஸ் அல்லது கருத்தரங்கம் சென்றீர்களா, உங்களுக்குத் தேவையான முக்கியமானவற்றைத் தனியே எழுதுங்கள். நல்ல புத்தகம் படிக்கிறீர்களா, அதன் அடிப்படை செய்தியை தனியே குறித்து வைத்துக் கொள்ளுங்கள். புதிய ஐடியாக்கள் அல்லது யோசனைகள் தனியே குறிப்பது, நல்ல கவிதை அல்லது மேற்கோள்களுக்கான தனி நோட்புக்கைப் பயன்படுத்துவது ஆகியவை மூளையின் நீண்ட கால நினைவாற்றலைக் கூட்ட வழி வகுக்கிறது. இது உலகளாவிய அளவில் உள்ள நல்ல கருத்துக்களை நீங்கள் உள்வாங்கிக் கொள்ளவும், அடிப்படை உண்மைகளைத் திரும்பத் திரும்ப பெற்றுக் கொள்வதற்கும் உதவி செய்கிறது.

5. முக்கிய விஷயங்களில் கூர்மையான கவனக் குவிப்பு தேவை

தேவையற்ற விஷயங்கள் மற்றும் தகவல்களைத் தூக்கி எறியுங்கள். தேவையற்றதை படிக்காமல், பார்க்காமல் இருப்பது மூளை செயல்பாட்டைத் திறம்படச் செய்வதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மூளை ஆரோக்கியம் வேண்டுவோர் ‘இன் டேக் இன்ஃபர்மேஷன்’ எனப்படும் உள் கிரகிக்கும் விஷயங்களில் எதை எடுத்துக் கொள்வது  என்பது பற்றிய கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.

  1. உத்வேகத்துடன் இருங்கள்

எப்போதும் உத்வேகமூட்டப்பட்டுக் கொண்டே இருக்கும் மூளை வேகமாகவும் மிக்க வலுவுடனும் மூளையில் நியூரல் கனெக்‌ஷன்களை – மூளைத் தொடர்புகளைக் கொள்ண்டதாகவும் ஆகிறது. உங்களுக்கு விருப்பமான விஷயங்களை இனம் காணுங்கள். அதில் அக்கறை செலுத்தி அதைப் பற்றி மேலும் மேலும் அறிந்து பரவ்சப்படுங்கள்.

 

ஆறு மனமே ஆறு, மூளையை மேம்படுத்தும் வழிகள் ஆறு!

இவற்றைக் கடைப்பிடித்தால் கூர்மையுடனும் ஸ்மார்ட்டாகவும் ஆகி விடலாம்!

****