ஆறே பாடல்களில் பகவத்கீதை! இரண்டே அடிகளில் கீதையின் சாரம்!

894_Bhagwat_Gita_thumb[13]

மஹாபாரத வழிகாட்டி

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Research Article: Written by ச. நாகராஜன்

Date: 15th September 2015

Post No: 2159

Time uploaded in London :–காலை 7-59

(Thanks  for the pictures) 

 

 

.நாகராஜன்

 

 

வியாசரும் வில்லியும்

ஒரு லட்சம் ஸ்லோகங்கள் அடங்கிய வியாசர் அருளிய மஹாபாரதத்தைத் தமிழில் பாக்களாகத் தர எண்ணினார் வில்லிப்புத்தூரார்.

“குறும்பி அளவாக் காதைக் குடைந்து தோண்டி எட்டினமட்டு அறுப்பதற்கோ வில்லி இல்லை” என்று பின்னால் ஒரு புலவர் பாடும் அளவு புலமை இல்லாதவர்கள் பாடத் துணிந்தால் அவர்களின் காதைக் குடைந்து தோண்டி தண்டிக்கும் அளவு புலமை பெற்றவர் வில்லிப்புத்தூரார்.

வியாசர் பாடிய 18 பர்வங்களில் 10 பர்வங்களை மட்டுமே சுமார் 4350 பாக்களில் தன் காவியத்தில் பாடியுள்ளார். தர்மர் முடிசூட்டியதுடன் வில்லி பாரதம் முடிவடைகிறது.

700 ஸ்லோகங்கள் கொண்டது பகவத் கீதை. வில்லிபுத்தூரார் தனது பாரதத்தில் பகவத்கீதையை ஆறே ஆறு பாடல்களில் தந்துள்ளார்.

பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

மாயை என்று ஒருத்தி தன்பால் மனம் எனும் மைந்தன் தோன்றி,          

தூய நல் அறிவன் தன்னைத் தோற்றம் இன்றாக்கி வைத்தான்           

தாயொடு தந்தை, மக்கள் தாரம், என்று இவர் பால் வைத்த                        

நேயமும் அவன் தனாலே நிகழ்ந்தது ஓர் நினைவு கண்டாய்!

மாயை என்னும் ஒருத்தியிடம் மனம் என்னும் மகன் தோன்றினான். பரிசுத்தமான ஞானம் என்பவனை வெளிப்படாமல் ஆகி வைத்தான். தாய், தந்தை, மக்கள், மனைவி ஆகியோர்  மீதான பாசமும் அந்த மனம் என்பவனின் எண்ணத்தாலே  தான் நிகழ்ந்தது!

குயின்ற ஐம் பொறிவாய் நின்று, குறித்த ஐம்பொருளும் தானே                

அயின்று, முக்குணங்களோடும், அறுவகைப் படைகளோடும்,           

பயின்று, அரசாளும் அந்த மனம் எனும் பகைவன் ஆங்குத்             

துயின்ற போது, ஒளித்து நின்ற தோன்றலும் தோன்றும் கண்டாய்!

உடம்பில் பொருந்தியுள்ள மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து இந்திரியங்களும் ஊறு சுவை. ஒளி. வாசனை, ஓசை என்னும் ஐந்து புலன்களையும் தானே அனுபவித்து, சத்வம், ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களோடும் காமம், க்ரோதம், லோபம், மோகம், மதம், மாற்சர்யம் என்னும் ஆறு வகை சேனைகளோடு பழகி அரசாட்சி செய்யும் மனம் என்னும் பகைவன் தூங்கிய போது,  (அவனால்) தோற்றமில்லாதவனாய் செய்யப்பட்ட அந்த நல்லறிவன் வெளிப்படுவான்.

gita stamp

அந்த நல் அறிவன் தன்னை அறிந்தவர் அறிஞர் ஆவார்,                     

தந்தையால் வகுக்கப்பட்ட சராசரப் பொருள்கள் தோறும்                         

வந்து, அவன், தீம்பால் நெய்போல் உயிர்க்கு உயிர் ஆகி, வாழும்               

பந்தமது உணர்ந்து, நேரே பார்க்குங்கால், பகை யார்? நண்பு ஆர்?

அந்த நல் அறிவன் தன்னை அறிந்தவர்களே அறிஞர் ஆவார். அந்தப் (பரம்பொருள் என்னும்) தந்தையால் வகுக்கப்பட்ட சஞ்சரிப்பதும் சஞ்சாரியாதனவும் ஆகிய எல்லாப் பொருள்களிலும் பசுவின் பாலில் உள்ளே உறைந்திருக்கும் நெய் போல, உயிர்க்கு உயிர் ஆகி, ஜீவாத்மாக்களின் உள்ளே பரமாத்மாவாக உறைந்து வாழும், (இந்த) சம்பந்தத்தை உணர்ந்து நேரே பார்க்கும் போது பகைவன் யார்? நண்பன் யார்? எவருமில்லை!

உம்பரும், முனிவர் தாமும், யாவரும், உணரா ஒன்றை                 

இம்பர், இன்று, உனக்கு நானே இசைவுற உணர்த்தா நின்றேன்,                           

ஐம் பெரும் பூதத்தானும் அமைந்தன உடலம், யார்க்கும்;                        

நம்பனும் ஒருவன்; உள்ளே ஞானியாய் நடத்துகின்றான்!

 

 

தேவர்களும், முனிவர்களும், மற்றும் எல்லோரும் உணராத ஒன்றை, இந்த இடத்தில், இப்போது, உனக்கு நான் பொருந்தும் படி உணர்த்துகின்றேன். எல்லாப் பிராணிகளுக்கும் ஐம்பெரும் பூதங்களால் அமைந்தது உடல். அவற்றினுள்ளே ஞானியாய் இருந்து (ஒப்பற்ற கடவுளாய்) ஒருவன் தானே அனைத்துத் தொழில்களையும் செய்து நடத்துகின்றான்.

வில்லி ப்ஹரதம்

என்னை நீ புகலக் கேண்மோ! எங்கும் ஆய், யாவும் ஆகி                     

மன்னிய பொருளும் யானே; மறைக்கு எலாம் முடிவும் யானே;               

உன்னை யான் பிறிவது இல்லை; ஒரு முறை பிறந்து மேல் நாள் –                     

நல் நிலா எறிக்கும் பூணாய்! – நரனும் நாரணனும் ஆனோம்

 

‘நல்ல சந்திரகாந்தியை ஒத்த ஒளியை வீசும் ஆபரணங்களை அணிந்துள்ள அர்ஜுனா! என்னை யார் என (உனக்கு உணர்த்துமாறு) நான் சொல்வதைக் கேள்! எல்லாப் பொருள்களிலும் பொருந்தி எல்லாப் பொருள்களுமாய் அழியாது நிலை பெற்ற பரம்பொருளும் நானே! வேதங்களுக்கு எல்லாம் முடிவான பொருளும் நானே! உன்னை என்றும் நான் பிறிந்தவன் அல்ல; முன்னொரு சமயம் நரனும் நாராயணனுமாக நீயும் நானும் அவதரித்தோம்!

பின் ஒரு பிறப்பின் யாமே இராம லக்குமப் பேர் பெற்றோம்;             

இந் நெடும் பிறப்பில், நீயும் யானுமாய் ஈண்டு நின்றோம்;

நின்னிடை, மயங்கும் இந்த நேயமும் ஒழிக!” என்று,                                     

 தன் நிலை அவற்குக் காட்டி, தத்துவம் தெளிவித்தானே.

பின்பு ஒரு அவதாரத்தில் நாமே இராமன், இலக்குவனாக அவதரித்தோம். இந்த நீண்ட அவதாரத்தில் நீ அர்ஜுனனாகவும் நான் கண்ணனாகவும் இங்கு இருக்கிறோம். உன்னிடமுள்ள திகைப்பையும் உறவினர், நண்பர் என்ற இந்த அபிமானத்தையும் நீக்குக’ என்று தன் உண்மையான விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டித் தத்துவத்தை அவம் மனம் தெளிவுறும்படி அருளினான்.

ஆஹா! என்ன அருமையான பாடல்கள்! எத்தனை எளிமையாக கீதை ஆறே பாடல்களில் எளிய தமிழில் பொருளாழத்துடனும் சொல் சிக்கனத்துடனும் சூத்திரப் பாங்குடனும் விளக்கப்பட்டுள்ளது.

இதைப் படிப்போர்கள் முழு வில்லி பாரதத்தையும் படிக்க உத்வேகம் பெறுவார்கள் என்பதில் ஐயமுண்டோ!

இந்த விளக்கத்தைப் படித்த பின்னர் மகாகவி பாரதியாரிடம் வருவோம்.

அவசர யுகம் அல்லவா! இரண்டே அடிகளில் அவன் தெள்ளத் தெளிவாக கீதையில் கண்ணன் போதித்ததை இப்படிச் சுருக்கமாகக் கூறி விட்டான்:

rath yatra

பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான்;                                  

பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான்

மாம் அனுஸமர (என்னை நினை)

கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன! (கர்மம் புரிவதற்கே உனக்கு அதிகாரம் உள்ளது; அதில் வரும் பயனில் எண்ணம் வையாதே – ஒரு பொழுதும்!)

***********